அற்புத பலன் தரும் அனுகூல விநாயகர்



தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அனுகூலம் செய்பவர் நான்முகன் விநாயகர்.  இவர் அனுகூல விநாயகராகவே கோவில் கொண்டிருக்கிறார், திருச்சி அய்யப்ப நகரில். ஆலயம் வடதிசை நோக்கி அமைந்துள்ளது.  உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். அடுத்துள்ள கருவறையில் அனுகூல விநாயகர் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருட் பாலிக்கிறார். மகா மண்டபத்தின் கீழ் திசையில் நடுநாயகமாய் சிவபெருமான் ஜம்புகேஸ்வரர் என்ற திருநாமத்தில் கொலுவிருக்கிறார். எதிரே, அகிலம் காக்கும் அன்னை, அகிலாண்டேஸ்வரி நின்ற கோலத்தில், புன்னகை தவழ கருணை பொழிகிறாள்.

திருச்சுற்றில் வடக்கில் சண்டிகேஸ்வரர், தென்கிழக்கில் ஆலய தல விருட்சங்களான அரசும், வேம்பும். அதனடியில் ஏராளமான நாகர் சிலைகள்.   கிழக்கு திருச்சுற்றில் பிரம்மாவும் பாலமுருகனும் அருட்பாலிக்க, தென் திசையில் தட்சிணாமூர்த்தியும் மேற்கில் லிங்கோத்பவரும் பேரருள் பெருக்குகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இக்கோயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விதவிதமாய் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து அதை பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன், சிறப்பு அலங்காரத்தில் விநாயகரை ஜொலிக்க வைக்கிறார்கள்.

மார்கழி மாதம் 30 நாட்களும் காலை 5 1/2  மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு, ஆராதனைகள் நடைபெறத் தொடங்கிவிடும். மார்கழி மாத சஷ்டியின்போது விநாயகருக்கு லட்சார்சனையும் 108  சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. தை மாத புனர்பூச நட்சத்திர நாளை ஒவ்வொரு ஆண்டும் அமோகமாகக் கொண்டாடுகிறார்கள். அன்று விநாயகர் சந்நிதி முன்னால் கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும் இயற்றுகிறார்கள். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு மன நிம்மதி கொள்கின்றனர். அன்று திருமண விருந்து போல் இலைபோட்டு பக்தர்களை பந்தியில் அமர்த்தி உணவளிக்கிறார்கள். 

சங்கடஹார சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவதுடன், அன்னதானமும் நடைபெறும். சேக்கிழார் மன்றத்தினரால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படும் இந்த ஆலயத்தின் மேற்கே பெரிய விசாலமான மண்டபம் உள்ளது. இங்கு திருமுறை பாராயணங்கள், அன்னதானம் மற்றும் ஆலய சிறப்பு விழாக்கள் எல்லாம் இங்குதான் மேற்கொள்ளபடுகின்றன. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விநாயகரின் சந்நதி முன் சுமார் 25 பேர் அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது கண்ணுக்கும், காதுக்கும் ஏன் மனதுக்கும் மிக ரம்மியமாக இருக்கும்!

அன்று கேழ்வரகு கூழ், சிவப்பு அரிசி கூழ் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். அனைத்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுமார் 20 பேர் விநாயகர் முன் திருப்புகழ் படிப்பதும் திருமுறை பாராயணம் செய்வதும் வழக்கமாக உள்ளது. இங்குள்ள சிவபெருமானுக்கு அனைத்து விஷேச நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அந்தவகையில் பிரதோஷம் இங்கு பிரதானமான வழிபாடு. அன்று பக்தர்கள், சிவபெருமானுக்கு தாங்கள் கொண்டு வரும் பாலை தாங்களே அபிஷேகம் செய்து மன மகிழ்ச்சி பெறுகிறார்கள்.

அன்று சிவபெருமான் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி பிராகாரத்தில் உலா வருவார். இறைவன்இறைவி பல்லக்கை பக்தர்களே சுமந்து வருகிறார்கள். சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இவற்றில் மூன்றாவது கால பூஜை லிங்கோத்பவருக்கு. கார்த்திகை சோமவாரங்களில் ஜம்புகேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். அன்றும் பக்தர்கள் தாமே பாலபிஷேகம் செய்யலாம். பங்குனி உத்ரம் இங்கு நடைபெறும் இன்னொரு சிறப்பு வழிதரபாடு. அன்று ஜம்புகேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி திருமணம், ஏக தடபுடலாக நிகழ்த்தப்படுகிறது.

பக்தர்கள் ஒவ்வொருவரும் அதனைத் தம் வீட்டுத் திருமணமாகவே கருதி, அவரவருக்கென்று பொறுப்புகளை மேற்கொண்டு கோலாகலமாக நடத்துகிறார்கள். இது திருமுறைத் திருமணம் என்பது கூடுதல் சிறப்பு. நவராத்திரி 10 நாட்களும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். அந்த வைபவத்தின் முதல் நாள், நான்காம் நாள், ஏழாம் நாள் ஆகிய மூன்று நாட்களும் குறிப்பிடத்தக்கவை. அன்று பருவமுற்றாத ஒரு சிறுமியை மண்டபத்தில் அமரச் செய்கின்றனர். அவளுக்குப் புத்தாடை, வளையல், மாலை அணிவித்து ஒரு அம்மனைப் போல் பாவித்து பாதபூஜை செய்கின்றனர்.

சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, அம்மன் வடிவினளாக அந்தச் சிறுமியைக் கருதி, அர்ச்சனை செய்து தீபாராதனை காட்ட, பக்தர்கள் பயபக்தியுடன் அவளை வணங்குகின்றனர். நிறைவாக ஆரத்தி எடுத்து நிகழ்ச்சியை முழுமை செய்கிறார்கள். இந்த மூன்று நாட்களும், மூன்று சிறுமிகளை அமர துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாக பாவித்து ஆராதிக்கும் நேர்த்தி சிலிர்க்கச் செய்கிறது. பங்குனி உத்திரம் அன்று இறைவன்இறைவிக்கு திருக்கல்யாணம் செய்விக்கிறார்கள். அன்று வயதில் மூத்த ஒரு தம்பதியை மேடையில் அமரச் செய்கின்றனர்.

அவர்களுக்கு புத்தாடை தந்து மாலையிட்டு, பக்தர்கள் பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள். அடுத்து ஊஞ்சல் உற்சவம். இது முடிந்ததும் பக்தர்களுக்கு திருமண விருந்து போல் அன்னதானம்! கூடவே ஒவ்வொருவருக்கும் அந்தத் திருமண நிகழ்வின் முத்தாய்ப்பாக தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு கொண்ட தாம்பூல பை தருகின்றனர். பொங்கல் அன்று ஆலயத்தின் முன் புதுப்பானையில் பொங்கலிட்டு படைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இங்குள்ள பால முருகனுக்கு கார்த்திகை, சஷ்டி நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவதுடன் அன்று தினை பொங்கல் நிவேத்தியம் செய்து
பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

தல விருட்சங்களுக்கு அடியில் இருக்கும் நாகர்களுக்கு நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலையை கொண்டு வந்து வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். தல விருட்சங்களையும் நாகர்களையும் பிரதட்சணம் செய்வதால் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடப்பதாகவும், குழந்தைப் பேறு வேண்டுபவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

திங்கள்ட்கிழமையன்று அமாவாசை திதியும் வருமானால், அன்று இந்தத் தலவிருட்சங்களை 108 முறை சுற்றுவதால் பெண்கள் நினைத்த காரியம் நடந்தேறுவது நிஜம் என்பது நம்பிக்கை. காலை 7 முதல் மதியம் 1 மணி வரை, மாலை 5 1/2  முதல் இரவு 8 1/2  வரை ஆலயம் திறந்திருக்கும். கோவிலின் நாயகராக விளங்கும் அனுகூல விநாயகர், தம் மேற்பார்வையில் அனைத்து ஆலய நிகழ்ச்சிகளையும் நடைபெறச் செய்கிறார், அந்தந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அனுகூலம் சித்திக்கச் செய்கிறார் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. திருச்சி மத்திய / சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கே.கே.நகர் பஸ்ஸில் பயணித்து சபரி மில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அருகே உள்ள ராஜாஜி தெருவில் உள்ளது ஆலயம்.

- ஜெயவண்ணன்