ரத்த பாசத்தால் தடுமாறும் போர்க்குணம்!பகவத் கீதை - 73

நிஷ்காம கர்மா, கர்ம சந்நியாசம் இரண்டிற்குமான பலன் ஒன்றே என்ற கிருஷ்ணனின் கூற்றை ஓர் எளிமையான உதாரணத்துடன் விளக்கலாம். ஒரு நிலைக்கண்ணாடி முன் போய் நிற்கிறோம். நம் பிம்பம் அதில் தெரிகிறது. கண்ணாடியை விட்டு விலகி விட்டோமானால், நம் பிம்பம் தெரிவதில்லை. அதே கண்ணாடியை நாம் உடைத்து நொறுக்கிவிட்டோமானால், இப்போதும் நம் பிம்பம் தெரியாது. இரண்டு செயல்கள்  கண்ணாடியை விட்டு விலகிவிடுவது, கண்ணாடியை உடைத்து விடுவது. இரண்டுமே வெவ்வேறான செயல்கள்தான். அதாவது கர்ம சந்நியாசம் மற்றும் நிஷ்காம கர்மா.

இரண்டிற்குமே ஒரே பலன்தான்  பிம்பம் தெரியாதது! இந்த உண்மையை ஞானிகள் உணர்கிறார்கள். இந்த நோக்கில் பார்க்கத் தெரியாதவர்கள் அஞ்ஞானிகளாகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், பார்க்கத் தெரியாதவராக இருத்தலே சிறப்பு. ஏனென்றால், தவறாகப் பார்ப்பதைவிட, பார்க்காமலேயே இருந்துவிடுவது நல்லதல்லவா? பார்க்காமலேயே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் கண்களைத் திறந்தார்கள் என்றால், ஒருவேளை சரியாகப் பார்க்கும் திறனைப் பெறலாம். ஆனால், எதையும் தவறாகவே பார்ப்பவர்கள் இப்படிச் சரியாகப் பார்க்கும் திறனை முற்றிலும் அடைய முடியாதவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

அதாவது தவறான ஞானம் என்பது அறியாமையைவிட மோசமானது. தத்துவஞானி ஓஷோ கேட்கிறார், ஜனனம், மரணம் இரண்டும் ஒன்றேயாகவா கருதப்படுகின்றன? இல்லை. ஜனனம் என்பது ஆரம்பம், மரணம் என்பது முடிவு. இரண்டும் வெவ்வேறானவைதான். ஆனால் முடிவுக்குப் பின்னால் ஆரம்பமும், ஆரம்பம் முடிவை நோக்கிச் செல்வதும் யதார்த்தமானவை. ஆகாயம், பூமி இரண்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. ஒரு அரைவட்டமாக ஆகாயம் முடியும் இடத்தில் பூமி காணப்படுகிறது. அதேபோல பூமியின் அரைவட்டத்தின் ஆகாயம் ஆரம்பமாகிறது.

அப்படியென்றால் அந்த அரைவட்டத்திற்குப் பிறகு ஆகாயம் இல்லையா, அல்லது பூமிதான் இல்லையா? இரண்டுமே இருக்கின்றன. ஆனால் நம் பார்வையின் எல்லை முடிந்துவிடுகிறது. அதாவது நம் ஞானம் அந்த எல்லைக்கு மேல் விரிவதில்லை! கடவுளைத் தேடிப் போகிறவர்கள் தம்மை உணர்வதில்லை. அவர்களுடைய ஒரே நம்பிக்கை, கடவுள் இருக்கிறார் என்பதுதான். இந்த கட்டத்தில் அவர்கள் ‘தான்’ என்பதை மறந்துவிடுகிறார்கள். அதே உள்நோக்கிப் பயணிப்பவர்களுக்கு ‘தான்’ தான் கடவுள் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை கடவுள் வேறு, தான் வேறு என்ற எண்ணம் எழுவதில்லை.

‘அஹம் ப்ரம்ஹாஸ்மி’ என்பது இவர்களுடைய தத்துவம். இதன்படி பார்த்தால், வெளிநோக்கம் கொண்டவர்கள் நிஷ்காம கர்மயோகம் பூண்டவர்களாக இருக்கிறார்கள்; உள்நோக்கம் கொண்டவர்களுக்கு  கர்ம சந்நியாசம்! இப்படி இரண்டிற்குமான பலன் ஒன்றே என்னும்போது என் விருப்பத்துக்கேற்ப நான் ஏன் நிஷ்காம கர்மத்தையோ, கர்ம சந்நியாசத்தையோ தேர்ந்தெடுத்துக்கொள்ளக் கூடாது என்று அர்ஜுனன் யோசித்திருப்பான் போலிருக்கிறது. அதனை கவனித்த கிருஷ்ணர், உடனே சொல்கிறார்:

‘‘ஸந்யாஸஸ்து மஹாபாஹோ துக்கமாப்துமயோகதஹ
யோகயுக்தோ முனிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி’’ (5:6)

‘‘அர்ஜுனா, நிஷ்காமம் இல்லாமல், புலன்களால் இயற்றப்படும் எந்த கர்மத்திலும், ‘நான்’ என்ற உணர்வைத் தவிர்ப்பது கடினம். அதேசமயம் கர்மயோகத்தை மேற்கொள்ளாமல் கர்ம சந்நியாசத்தைப் பெறுவதும் எளிதான விஷயமல்ல. இப்படி கர்மயோகம் இயற்றும் ஞானியர் பிரம்மத்தை அடைகிறார்கள்.’’ ஒரு மலர் அதன் வாழ்க்கையின் நிறைவான பழம் என்ற பதவிக்கு வரும்வரை, தான் பூத்திருக்கும் மரத்தினிடமிருந்து தேவையான சாரத்தைப் பெறுகிறது. பூ நிலையிலிருந்து காய் நிலைக்கு வரத் தேவையான சத்தை அந்த மரம் அதற்குத் தருகிறது. அதேபோல பழம் என்ற நிலைக்கு வரவும் அந்த சத்து தேவைப்படுகிறது.

ஆனால் அதற்குப் பிறகு? முதிர்ச்சியை அடைந்துவிட்ட பிறகு, அந்தப் பழத்துக்கு மரத்திலிருந்து எந்த சாரமும் தேவைப்படாது. இவ்வாறு முழுமை பெற்றுவிட்ட அதன் அடுத்த கட்டம், அந்த மரத்திடமிருந்து விடைபெற்று உதிர்வதுதான். அதாவது மரத்திலிருந்து சாரம் பெறுவதாகிய அதன் விருப்பம் நிறைவுற்றுவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அது சுவாசித்தது, சாரத்தை ருசித்தது, பெருங்காற்றை சந்தித்தது, பெருமழையையும் ஏற்றது. இதெல்லாம் அதன் கர்மாக்கள்.

அதாவது மரத்துடன் ஒட்டியிருப்பதாகிய விருப்பத்தைச் சார்ந்த கர்மாக்கள். இந்த விருப்பம் மட்டும் இல்லாவிட்டால், அது பூவாக இருக்கும்போதே உதிர்ந்திருக்கும்.
அர்ஜுனனுக்கு, இப்போது கொஞ்சம் தெம்பு வந்துவிட்டது. அதாவது கிருஷ்ணனின் உபதேசத்தை மீற முடியும் என்ற தெம்பு! கர்மத்தைச் செய்பவனும், கர்மத்தை விடுபவனும் ஒரே இடத்தையே அடைகிறார்கள் என்னும்போது, போர் புரிவதாகிய கர்மத்தைத் தான் மட்டும் ஏன் மேற்கொள்ள வேண்டும்? போர் புரியாமல் இருந்து விட்டாலும், அதே இடம்தானே?

ஆனால், எந்த மனிதனாலும் கர்மத்தை விடுவது என்பது சாத்தியமாகாது என்கிறார் கிருஷ்ணன். அதாவது, இயற்றும் கர்மத்திலிருந்து விருப்பம் அகலாதவரையில், கர்மத்தில் நிஷ்காமம் சித்திக்காதவரையில், கர்மத்தை ஒருவராலும் விட முடியாது. விருப்பத்தை விட முடியாதவனால் கர்மத்தையும் விட முடியாது. ஒருவன் ஒரு பொருளைத் திருடிவிட்டான். அந்தத் திருட்டைக் கண்டுபிடித்த காவல் துறையினர், அந்தத் திருடனையும் கண்டுபிடித்து, குற்றம் சாட்டி, அவனுடைய குற்றத்தை நிரூபித்து தண்டனையாக சிறையிலும் அடைத்து விடுகிறார்கள். அந்தத் திருடன் ஏதோ ஒரு விருப்பத்தின் காரணமாகவே திருடினான்.

அவன் தண்டனை பெற்றது எதற்காக என்றால், திருட்டு என்ற கர்மாவைச் செய்தானே அதற்காக அல்ல, சிக்கிக்கொள்ளாமல் திருட இயலாத அவனுடைய அறியாமைக்காக! அதேசமயம், சிறையில் அவனால் திருட முடியாது. ஆனால் திருடவேண்டும் என்ற உள் உந்துதல் அவனிடம் இருக்கும். அவனைத் திருத்துவதற்கு பதிலாக அவனை மேலும் திறமையான திருடனாக மாற்றவே தண்டனை பயன்படுகிறது என்பதுதான் வேடிக்கை! ஆமாம், சிறைச்சாலையில் அவனைவிட அனுபவசாலிகளான பல திருடர்களை அவன் சந்திப்பான். அவர்களுடன் பேசுவான், அவர்களுடன் தன் அனுபவத்தைப் பரிமாறிக்கொள்வான்.

இந்நிலையில் அவனால் திருட்டில் புது உத்திகளைக் கற்றுக்கொள்ள முடியும்  முக்கியமாக காவலரிடம் சிக்கிக்கொள்ளாமல் எப்படி திருடுவது என்று! சிறைச்சாலையால், தண்டனையால் ஒரு திருடனை அந்த ஒழுங்கீன செயலிலிலிருந்து திசை திருப்ப முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. இல்லாவிட்டால், ஒரே திருடன் அடுத்தடுத்துப் பல திருட்டுகளைச் செய்து, அதே மாதிரி தண்டனை வாங்கி, அதே சிறைச்சாலைக்கு அடிக்கடி வந்து போவானா?  இதைத்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், ‘திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’ என்று பாடினார்.

ஏனென்றால் அவனால் இங்கே மாற முடியாவிட்டால், சிறைச்சாலை என்ன, வேறே எங்கே போனாலும் அவனால் மாற முடியாது. அதாவது கர்மத்தைத் துறந்து விடுவது எளிதானதல்ல  விருப்பத்தைத் துறக்காதவரை! இந்த அடிப்படையில் கர்மத் தியாகம் செய்வது சுலபமானது  என்று அர்ஜுனன் நினைக்கிறான். அதாவது தப்பித்தலின் ஒரு வழி. ஆனால் இவ்வாறு அவன் போர்க்களத்தை விட்டு, தன் கர்மாவை விட்டு விலகினானால், துரியோதனனிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்கவேண்டும் என்ற விருப்பமும் விலகிவிடுமா என்ன? அவன் எங்கு சென்றாலும் அந்த விருப்பமும் அவனைத் தொடருமே!

‘தொடர்ந்து போரிட்டிருக்கலாமோ, எதிரிகளை வீழ்த்தியிருக்கலாமோ, வெற்றி பெற்றிருக்கலாமோ, ராஜ்ஜியத்தை மீட்டிருக்கலாமோ…’ என்றெல்லாம் அவனை அந்த விருப்பம் அலைக் கழிக்குமே, அதற்கு அவனால் என்ன பதில் சொல்ல முடியும்? கிருஷ்ணனின் அக்கறையே இதுதான். கர்மாவிலிருந்து விலகுவது என்பது அதன் விருப்பத்திலிருந்து விலகுவதுதான். அர்ஜுனனால் அப்படி விருப்பத்தை விட்டு விலகியிருக்க முடியுமா? ராஜ்ஜியத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது, அதற்காக இந்தப் போரிலும் ஈடுபடக்கூடாது என்பது சாத்தியமா? என்ன செய்வது, அந்தப் பக்கமும் தன் மக்கள், இந்தப் பக்கமும் தன் மக்கள்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொள்ள முடியாத வீம்பினால் இப்போது எதிரெதிரே போர் என்ற கொடிய சம்பவத்துக்கு சாட்சியங்களாக நிற்கிறார்கள். இதனால் பலியாவது எந்தப் பக்கமானாலும், அது தன் மக்களே! சண்டை, போர் என்பதெல்லாம் அர்ஜுனனுக்கு அந்நியமாக இருந்ததில்லை. ஒரு காட்டுப் பன்றிக்காக சிவபெருமானையே எதிர்த்தவன் அவன். அவருடன் மூர்க்கமாகப் போரிட்டவன். இறுதியில் அவன் வீரம் மெச்சப் பெற்று, அவனுக்குப் பாசுபதாஸ்திரம் கிடைத்தது என்றாலும், அவன் போரிட்டது கேவலம், ஒரு பன்றிக்காகத்தான். இதிலிருந்து, போர் உணர்வு அவனுடைய ரத்தத்தோடு ஊறிவிட்ட ஓர் அம்சமாகவே உணர முடியும். ஆனால் இங்கே அவனைத் தடுப்பதோ ரத்த பாசம்!

அதனால்தான் நிஷ்காம கர்மத்தை இயற்ற முடியாத நிலையில் அவன் இருக்கிறான், அர்ஜுனன். பல மார்க்கங்களில் கிருஷ்ணனின் கரம் பற்றி அவனைப் பின்பற்றிச் சென்றிருக்கிறான் அவன். அப்போதெல்லாம் கிருஷ்ணனின் உபதேசம், யோசனைகள் எல்லாம் அவனுக்குப் பிடித்திருந்தன. ‘இவனல்லவோ நம் உற்ற தோழன், ஆசான்’ என்றெல்லாம் மனமகிழ்ந்திருக்கிறான். அதெல்லாம் சந்தோஷமான சூழ்நிலைகள், மகிழ்ச்சி தந்த விளைவுகள், மனதுக்கிசைந்த பலன்கள், ஏமாற்றமாகாமல் கனிந்த எதிர்பார்ப்புகள். இப்போதைய சம்பவம் முற்றிலும் மாறுபாடானது. இவன் வீசும் அம்பு தைத்து, வீழும் எதிர்தரப்பினர்,

‘அர்ஜுனா, அடாத காரியம் செய்துவிட்டாயே,’ என்று புலம்பியபடியே சாய்வர் என்று எதிர்பார்க்கிறானா? அது தன் சொந்தத்துக்கு, உறவுக்கு உரிய மரியாதை செலுத்தாத கீழ்மையைப் பரிகசிக்கும் குரலாக இருந்துவிடுமோ என்று பயப்படுகிறானா? இந்த சந்தர்ப்பத்தில், தனக்குப் பல்வேறு சந்தோஷ சமயங்களில் உற்சாகம் தரும் உற்ற துணையாக இருந்த கிருஷ்ணனை இப்போது தன் சாரதியாக நியமித்துக்கொண்டோமே என்ற வருத்தமும் அவனுக்கு ஏற்படுகிறதோ? ‘‘சரி, உனக்கு விருப்பம் இல்லாவிடில் விட்டுவிடு, வேண்டாம் இந்தப் போர்,’’ என்று சொல்வார் கிருஷ்ணன் என்று ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்துகொண்டிருக்கிறானோ?

அதனால்தான் கிருஷ்ணனின் உபதேசம் அவனுக்கு ஏமாற்றத்தையும், ஏன், வெறுப்பையும்கூட அளிக்கிறதோ! அதனால்தான் தேரிலிருந்து குதித்து ஓடிவிட முயற்சிக்கும் தன்னைப் பற்றி இழுத்து உபதேசம் செய்யும் கிருஷ்ணனின் வார்த்தைகளில் தனக்குச் சாதகமானது எது, அதை சாக்காக வைத்து இந்த இக்கட்டிலிருந்து தான் தப்பிவிட முடியுமோ என்று அவன் கருதுகிறானோ? ஒருவேளை, கிருஷ்ணன், ஞானத்தைப் பற்றியும், ஞானிகளின் மனோநிலையைப் பற்றியும் விவரிக்கும்போது, தான் அந்தத் தகுதியை எட்டக்கூடியவன் அல்ல என்ற எண்ணம் அர்ஜுனன் மனதில் ஆழப் பதிந்துவிட்டதோ, அதைக் களையத்தான் கிருஷ்ணன் முயல்கிறாரோ?

கர்மத்தைச் செய், ஆனால் அதில் விருப்பம் வைக்காதே என்று கிருஷ்ணன் சொல்வதை, இப்போதைக்குப் போர் செய், அதன் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே, அதாவது இந்தப் போரின் பலனாகக் கிடைக்கக்கூடிய ராஜ்யத்தைத் துறந்துவிடு  என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? அது சாத்தியமாகுமா? துக்கமாக இருக்கும்போது தியாகம் செய்யும் மனோநிலை ஏற்படலாம். ஒரு விரக்தியில் அந்த இழப்புக்கு மனம் ஒப்பும். ஆனால் சந்தோஷமாக இருக்கும்போது அதற்குக் காரணமானதைத் தியாகம் செய்ய இயலுமா? அப்படியாவது ஆசை காட்டி, அதாவது இப்போது போர் செய், பலனைத் தியாகம் செய்துவிடு என்று உபதேசிப்பதன் மூலம், இப்போதைய வேலை முடியட்டும் என்று கிருஷ்ணன், அர்ஜுனின் மனதை மாற்ற அல்லது தேற்ற முயற்சிக்கிறார் என்றே கொள்ளலாம்.

(தொடரும்)

- பிரபுசங்கர்