அனைவரிடமும் நட்பு கொள்பவன் கோபம் கொள்வதில்லை!மகாபாரதம் - 93

‘‘தந்தையே, பீஷ்மரையும், துரோணரையும், கிருபாச்சாரியரையும், அஸ்வத்தாமனையும், சஞ்சயனையும் நம்பி இந்தப் போரை துவங்கவில்லை. நானும் கர்ணனுமே இந்த ரண யக்ஞத்தை விஸ்தாரமாக செய்வோம். யுதிஷ்டிரரை பலி பசுவாகச் செய்வோம். இதில் என் தேரே அக்னி குண்டமாகும். வாளே நெய் ஊற்றும் கரண்டியாகும். கதை துணைக் கரண்டியாகும். இந்த யாகத்தின் மான் தோல்கள் என் கவசங்களாகும். தேரை இழுக்கும் நான்கு குதிரைகளும் நான்கு ஹோதாக்களாகும். பாணங்கள் அக்னியில் போடும் விறகுகளாகும். அதில் கிடைக்கும் என் புகழே ஹவிஸாகும்.’’

துரியோதனன் தன் போரை ஒரு புனிதப் போராக, வேள்வியாக விவரிக்க சபை வாயடைத்துப் போயிற்று. ‘‘நான் வெகு நிச்சயம் இந்தப் போரில் ஜெயித்து என் ராஜ்ஜியத்தின் அரசனாக முடிசூடுவேன். இல்லையெனில் வேறு என்ன நடந்து விடப் போகிறது. நான் இறந்து பாண்டவர்கள் முடிசூடுவார்கள். இரண்டில் ஒன்று நடக்கப்போகிறது. என் வாழ்க்கை, ராஜ்யம், செல்வம் அனைத்தையும் நான் என் இறப்பால் இழக்க முடியும். ஆனால் ஐந்து ஊசி முனை அளவு கூட நிலத்தை நான் பாண்டவர்களுக்கு தர முடியாது. இது உறுதி’’ என்று கர்ஜனை செய்தான்.

சபை துவண்டு ஆசனத்தில் சரிந்து அமர்ந்தது. திருதராஷ்டிரன் உடம்பு நடுங்கினான். ‘‘துரியோதனா, நான் உன்னை துறந்து விட்டேன்’’ என்று உரத்த குரலில் கூறினான். ‘‘உங்கள் அனைவருக்காகவும் துயரப்படுகிறேன். எனக்கு வேறு வழியில்லை. வேட்டையாடுவதில் வல்லமையான புலி ருரு என்ற மான் கூட்டத்தில் நுழைந்து பல மான்களைக் கொன்று போடுவது போல கௌரவப் படை, பாண்டவர்களால் கொல்லப்படப் போகிறது. மனிதர்கள் மட்டுமல்ல, யானைகளும், குதிரைகளும், பெரிய கோவேறு கழுதைகளும் கொல்லப்பட்டு தேர்களும், ஆயுதங்களும் குவியலாக கிடக்கின்ற காட்சியை காண்கிறேன்.

நான் இப்பொழுது சொல்வது நேரில் நடக்கும் பொழுதுதான் நீ அதை பார்க்கும் பொழுதுதான் பாண்டவர்களின் வீரம் உனக்குப் புலப்படும். சஞ்சயா, சஞ்சயா நீ எங்கே இருக்கிறாய்?’’ அந்த குருட்டு அரசன் தடுமாறினான். ‘‘நீ கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் எங்கு சந்தித்தாய்? ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொன்னார்? சொல்ல வேண்டியது எது என்று முன் கூட்டியே தீர்மானித்து எதையும் விடுபடாது சொல்.’’திருதராஷ்டிரன் கேட்டதற்கிணங்க சஞ்சயன் பேசத் துவங்கினார். பேசிப்  பேசித் தான் இவர்கள் பயத்தை அதிகரிக்க முடியும் என்பதால் சஞ்சயன் பேசத் துவங்கினார்.

‘‘வீரம் மிக்க ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் ஒரு பெரிய அந்தப்புர மாடத்தில் இருந்தார்கள். அங்கே போவதற்கு நகுல சகாதேவருக்கோ, பீமருக்கோ, யுதிஷ்டிரருக்கோ அனுமதியில்லை. ஆனால் நான் அனுமதிக்கப்பட்டேன். ஸ்ரீகிருஷ்ணர் நீண்ட ஒற்றை ஆசனத்தில் முதுகுக்கு மெத்தைகள் வைத்து சாய்ந்திருந்தார். அவர் கால்களை நாண் ஏற்றித் தழும்பான விரல்களால் அர்ஜுனன் தடவிக் கொண்டிருந்தான். ஆசனத்தில் இரண்டு பக்கங்களிலும் கால்கள் போட்டு அமர்ந்திருக்க ஒரு பக்கம் திரௌபதியும், மறுபக்கம் சத்யபாமாவும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் இனிமையான பானத்தை பருகியபடி இருந்தார்கள்.

நெற்றியிலும், முதுகிலும் சந்தனம் பூசியிருந்தார்கள். மலர் மாலைகள் தரித்து மிக உல்லாசமான சூழ்நிலையில் இருந்தார்கள். அர்ஜுனன் எனக்கு உட்கார ஆசனம் காட்டினான். நான் அதை கைகளால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு கை கூப்பி வணங்கியபடியே நின்றிருந்தேன். என் பணிவை ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ஜுனன் கண்களால் ஜாடை காட்டினான். ஸ்ரீகிருஷ்ணர் நிதானமாக இனிமையான குரலில் பேச ஆரம்பித்தார். நம் பக்கம் இருக்கின்ற பெரியவர்களையும் உங்களையும் விசாரித்தார். பேசப் பேச கிருஷ்ணருடைய குரல் பயங்கர ரூபத்தில் வெளி வந்தது.

அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமான அர்த்தத்தோடு என் காதில் விழுந்தது. சஞ்சயா, கௌரவர்களை புண்ணிய காரியங்களில் ஈடுபடச் சொல். அந்தணர்களுக்கு தானம் தரச் சொல். வேத விஷயங்களை செவிமடுக்கச் சொல். நல்லவர்களுக்கு செல்வத்தை அள்ளித் தரச் சொல். அவர்களை நேசிக்கிறவர்களுக்கு நல்ல உபகாரம் செய்யச் சொல். பிள்ளைகளிடம் பாசத்தை வர்ஷிக்கச் சொல். ஏனெனில் பாண்டவர்கள் கௌரவர்களை வெல்லத் தயாராக இருக்கிறார்கள். உங்கள் வாழ்வின் முடிவு வந்து விட்டது. இவைகளாவது உங்களை காப்பாற்றப்படட்டும்.

இங்கே என் கோபம் என்ன என்று கேட்கிறாயா சஞ்சயா, திரௌபதியின் வஸ்திரத்தை துச்சாதனன் இழுத்தபோது நான் அஸ்தினாபுரத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தேன். அப்பொழுது திரௌபதி கோவிந்தா கோவிந்தா என்று என்னை துயரத்தோடு அழைத்தாள். அவள் அழைத்த அந்தக் குரல் என்னிடம் இன்னும் இருக்கிறது. அவளை அந்த இக்கட்டிலிருந்து சிறிதும் காயப்படாதவாறு தடுக்கப்படாத கடன் என் உள்ளத்தில் இருக்கிறது. இந்த வேதனை என் உள்ளத்திலிருந்து விலகாது. அர்ஜுனன் என் நண்பன். திரௌபதி அவன் மனைவி. இதற்குப் பிறகும் நான் எப்படி மௌனமாக இருப்பது.

அர்ஜுனனுடையபகை என் பகை. ஆனால் இந்த அர்ஜுனனை ஜெயிக்க முடியுமா. அப்படி ஜெயிக்க முடிந்தவன் இந்த பூமியை கையால் தூக்க முடிந்தவனாக இருப்பான். ஆனால் அப்படிப்பட்ட வீரர்கள் யாரும் என் கண்ணுக்குத் தெரியவில்லை. விராட நகரத்து போரை கௌரவ வீரர்களே புகழ்ந்து புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பகைவரே புகழும் வீரன் அர்ஜுனன். கவலையின்மை, சுறுசுறுப்பு, மனோ தைரியம் ஆகிய நல்குணங்கள் அர்ஜுனனிடம் அதிகமாக இருக்கின்றன. கருமேகம் மழை பெய்வது போல காண்டீபத்திலிருந்து கிளம்புகின்ற பாணங்களுக்கு கௌரவர்களில் பதில் சொல்வாரில்லை. கௌரவர்கள் தோற்பது உறுதி என்று சீற்றத்துடன் சொன்னார்.

’ஸ்ரீகிருஷ்ணரே அவ்விதம் சொல்லி விட்டார் என்று திருதராஷ்டிரன் கலக்கமடைந்தார்.‘‘போர் வேண்டாம் சமாதானத்திற்குப் போ. நீ யாரை உன் பக்கம் இருக்கிறார்கள் என்று நம்புகிறாயோ அவர்கள் மனம் சுணங்கும் வண்ணம் நானும் கர்ணனுமே பாண்டவர்களை ஒழித்து விடுவோம் என்று பேசுகிறாய். தெளிவற்றவனாக இருக்கிறாய். எங்கு என்ன பேசக் கூடாதோ அதை பேசித் தொலைக்கிறாய்’’ என்று சிடுசிடுப்பாக பேசினார். இந்தப் பேச்சால் துரியோதனனுக்கு கடுங் கோபம் ஏற்பட்டது. தன் படையினரையே பிரித்துப் போடுவதை உணர முடிந்தது. ‘‘குந்தியின் புதல்வர்களை வெல்வது நிகழ முடியாததாய் கருதுகிறீர்கள்.

அவர்களுக்கு தேவர்கள் உதவி செய்கிறார்கள் என்று பேசுகிறீர்கள். தேவர்களுக்கு காம குரோத லோப துவேஷ குணங்கள் இல்லை. அவர்கள் சமநிலையில் இருப்பவர்கள். பாண்டவர்களுக்கு மட்டுமே உதவி செய்வேன் என்ற எந்த பிரதிஞ்ஞையும் செய்யவில்லை. தேவர்களால் மிகப் பெரிய தேஜஸ்ஸை பெற்றது பாண்டவர்கள் மட்டும்தானா. என்னையும் அவர்களில் ஒருவனாக சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கும் மந்திர பலம் உண்டு. உடைந்து விழும் மலைச் சிகரங்களையும் நான் என் மந்திர பலத்தால் தூக்கி நிறுத்துவேன். பெரும் கல் மழை புயல் ஏற்பட்டாலும் அதை மந்திர பலத்தால் தடுத்து நிறுத்த முடியும்.

என்னால் ஸ்தம்பிக்கப்பட செய்த நீரின் மேலே தேரும் காலாட்படையும் நடத்த முடியும். எனக்கும் தெய்வ அசுர சக்தி உண்டு. இதை நீங்கள் மனதில் கொள்ளவேயில்லை. என்னுடைய தேசத்தில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இல்லை. அவை மந்திரங்களால் கட்டப்பட்டிருக்கின்றன. என் தேசத்தில் மழை நன்றாகப் பெய்கிறது. அக்னி அளவோடு எரிகிறது. பூமியில் பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன. என் மக்கள் அனைவரும் தர்மத்தில் மூழ்கியிருக்கிறார்கள். பாண்டவர்கள் பக்கம் தேவர்கள் இருக்கிறார்கள் என்கிற உங்கள் அலறல் உண்மையானால் பன்னிரெண்டு வருடம் ஏன் நாய்படாத பாடு பட்டார்கள்.

தேவர்கள் அவர்களுக்கு என்ன உதவி செய்தார்கள். நீங்கள் என்னை மகன் என்றுதான் பார்க்கிறீர்கள். நான் சத்தியசந்தனாக இருக்கிறேன். நான் ஒரு வார்த்தை வாயால் கூறி அது பொய்யானதில்லை. இதனால் மக்கள் என்னை சத்தியவான் என்று சொல்கிறார்கள். நான் பேசுவது தற்புகழ்ச்சியல்ல. என்னுடைய பெருமை உங்கள் கண்களுக்கு, இங்குள்ளோர் கண்களுக்கு முன்னால் இருக்கிறது. அதை இவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். நதிகள் பிரிந்து பிரிந்து கடலில் வந்து கலப்பது போல ஸ்ரீகிருஷ்ணரோடு இந்த பஞ்சபாண்டவர்கள் பல கிளைகளாய்ப் பிரிந்து என்னிடம் சரணடையப் போகிறார்கள்.

என் அறிவு உத்தமமானது. என் தேஜஸ் உன்னதமானது. என் வித்தை மிகப் பெரியது. என் முயற்சி மிகச்சிறந்தது. என் சபையினரை எனக்கு எதிராகத் தூண்டிவிட வேண்டாம். இவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். அதனாலேயே இந்த சபையில் தகுந்த முறையில் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். சஞ்சயன் சொல்வது மட்டுமே உண்மை என்று இங்குள்ளோர் நம்பவில்லை. கேள்வியோடுதான் இருக்கிறார்கள். கேள்வியோடு இருக்க வேண்டிய நீங்கள் அதை புறக்கணித்து விட்டு எனக்கு எதிராக திரும்புகிறீர்கள். எனவே இனி கவனமாகப் பேசுங்கள்.’’

துரியோதனனுடைய இந்த கோபாவேசத்தால் கௌரவ சபை திடுக்கிட்டு நிமிர்ந்தது. உண்மையில் யார் வலிமையுள்ளவர்கள் என்று நல்லவர்களுக்கே அனுமானிப்பது கடினம். துரியோதனன் வீராவேசமாகப் பேசுவது கேட்டு சபை திகைப்பதை பார்த்த கர்ணன் தன் குரலை உயர்த்தினான். ‘‘நான் அந்தணனிடம் சொல்ல பரசுராமரிடம் வில் வித்தை கற்றது உண்மைதான். அதனால் சாபம் பெற்றது வாஸ்தவம்தான். ஆனால் கருணை மிகுந்த அந்த குருநாதரால் எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. அந்த பிரம்மாஸ்திரம் என்னிடமே இருக்கிறது. நான் துரியோதனனிடம் இருக்கிறேன்.

பாண்டவர்களை ஓட ஓட விரட்டுகின்ற சக்தி என்னிடம் இருக்கிறது. பீஷ்மரையும், துரோணரையும், கிருபரையும் துரியோதனன் தன்னை சூழ நிற்க வைத்துக் கொள்ளட்டும். நான் தனி ஒருவனாகவே என் படைகளுடன் முன்னேறி பாண்டவர்களை வதம் செய்வேன். இந்த யுத்தத்தில் பாரம் முழுவதும் என் மீதே இருக்கட்டும். பீஷ்மர் காலை உதைத்து கர்ணனை அதட்டினார்.‘‘என்ன பேச்சு இது. யுத்தத்தின் பாரம் முழுவதும் நீ சுமக்கப் போகிறாயா, அப்படியானால் நீ தோற்றுப் போனால் கௌரவர்கள் தோற்றுப் போனது போல் வருமே, அதை யோசித்தாயா.

வில்லாளிகள் நிறைந்த ஒரு பெரிய சபை முன்பு உன்னை மட்டுமே பேசி பெருமை அடித்துக் கொள்கிறாய். ஸ்ரீகிருஷ்ணருக்கு உதவியாக அர்ஜுனன் காண்டீப வனத்தை எரித்தது மக்களிடையே இன்னும் பேசப்பட்டு வருகிறது. தேவேஸ்வரனான மகேஸ்வரன் உனக்கு சக்தி அளித்திருக்கிறார். அது விஷ்ணுவின் சக்கரத்தால் சின்னாபின்னமாக்கப்படும். பாணாசுரனையும் பௌமாஸுரனையும் வதைத்த ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனை காப்பாற்றுகிறார். வெறுமே தேர் ஓட்டுகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது பிசகு.”கர்ணன் கை தட்டி எழுந்தான்.‘‘இந்த கிழவர் இவ்வளவு பேசிய பிறகு நான் இந்த சபையிலே இருப்பதில் அர்த்தமில்லை.

இந்தக் கிழவர் உயிரோடு இருக்கும் வரை இவர் இருக்கின்ற சபைக்கு வரமாட்டேன். ஏ பீஷ்மரே, நீங்கள் அடங்கி அமைதியான பிறகு என் பிரபாவத்தை  இந்த உலகம் காணும். துரியோதனா, உனக்கு வணக்கம்.’’அவன் விடைபெற்று வெளியே போனான். சபை சலசலத்தது.‘‘துரியோதனா, என்ன வேடிக்கை இது. இந்த நேரத்தில் என்னை எதிர்த்து சபையை விட்டு வெளியே போகிறவன், எப்படி யுத்தத்தின் பெரும் பாரத்தை சுமக்க முடியும். பரசுராமரிடம் பொய் சொல்லி பிரம்மாஸ்திரத்தை பெற்ற போதே இந்த கர்ணனின் கல்வியும், தவமும் அழிந்து விட்டது.’’கர்ணனின் வெளிநடப்பால் துரியோதனன் வருத்தமடைந்தான்.

அடக்கமே முதன்மைக்கு சாதனம். அடக்கம் தேஜஸை பெருக்குகிறது. மனிதர்களை இம்சிக்கக் கூடாது என்று க்ஷத்திரிய ஜாதியை பிரம்மா ஸ்ருஷ்டித்திருக்கிறார். க்ஷத்திரியர்களுடைய முதல் குணம் அடக்கம். அடங்கிய மனிதன் காமம், லோபம், கர்வம், கோபம் உறக்கம், தற்புகழ்ச்சி, மானம், அசூயை, லோபம் ஆகிய குணங்களை நெருங்க விடுவதில்லை. புலனடக்கம் உள்ளவன் கம்பீரமாக இருக்கிறான். அனைவரிடமும் நட்புடன் இருக்க விரும்புபவனுக்கு கோபம் கிளறுவதில்லை. அவன் சமநிலையில் காரியங்களைப் பார்க்கிறான். முன்பு பெரியவர்கள் ஒரு கதை சொல்லுவார்கள்.

ஒரு சமயம் ஒரு காட்டில் பறவைகளைக் கொல்பவன் பெரிதாய் வலை விரித்திருந்தான். தானியங்களை வீசியிருந்தான். பறவைகள் ஒட்டுமொத்தமாய் வந்து தானியங்களை கொத்த முயன்று வலைகளில் சிக்கிக் கொண்டன. மடித்து எடுக்க பூமியிலிருந்து முனையைப் பிடுங்கியதும் அந்தப் பறவைகள் வானத்தில் உயரே பறந்தன. அந்தப் பறவைகள் எங்கெல்லாம் ஓடுகிறதோ அங்கெல்லாம் காலால் நடந்து வேடன் பின்தொடர்ந்தான். அதை ஒரு முனிவர் கண்டு வருத்தமுற்றார். சிறகடித்து மலையோடு பறக்கும் அந்தப் பறவைகளை நடந்து போய் எப்படி பிடிக்கப் போகிறாய். எத்தனை வேதனை உனக்கு.

அதற்கு அந்த வேடன் பதில் சொன்னான். இந்தப் பறவைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு பறக்க முடியாது என்று சபதம் எடுத்து தரையில் வந்து விழும். அப்பொழுது நான் பறந்ததை பறக்காததை பாதிப் பறந்ததை எல்லாம் ஒரே வலையில் சுருட்டி எடுத்து விடுவேன். அறிவற்ற அந்தப் பறவைகள் தங்களுக்குள் சண்டையிட்டு பூமியில் வந்து விழுந்தன. வேடன் அவைகளை கைப்பற்றி விட்டான். இந்தப் பறவைகளைப் போலத்தான் குடும்பத்து மக்கள் செல்வத்திற்காக தங்களுக்குள் சண்டையிடுகிறார்கள். ஒட்டுமொத்தமாய் சீரழிகிறார்கள். ஒருவனை அழிக்க பகைவர்கள் தேவையில்லை.

அவன் குடும்பத்தில் பிணக்குற்றவனே போதும். ஒன்றாக அமர்ந்து உண்ணுதல், தங்களுக்குள் அன்போடு பேசுதல், ஒருவர் மற்றவரின் சுக துக்கத்தை கேட்டல், பரஸ்பர வேலைகளில் அக்கறை கொள்ளுதல் முதலியவை குடும்பத்து நட்பை வளர்க்கும். முன்பொரு சமயம் கந்தமான பர்வதத்தில் முனிவர்கள் மிகப்பெரிய யாகங்களை நடத்தினார்கள். அந்த மலை முழுவதும் ஔஷதங்களின் வாசனை மிகுந்தது. கடக்க முடியாத ஒரு குகையின் விளிம்பில் பெரிய பானை போல தேனடை காணப்பட்டது. அதிலிருந்து தேனை உண்டவர் எவராயினும் சாகாவரம் பெறுவர். வாலிப வரம் பெறுவர் என்று சொல்லப்பட்டது.

அதை அடைய அந்த மலையின் வேடுவர்கள் முயற்சி செய்தார்கள். கடும் விஷமுள்ள பாம்புகள் அந்த தேனடையயைக் காத்து வந்தன. வழிநடையில் படுத்துக் கிடந்தன. தாண்டி வந்த வேடுவர்களை அவைகள் கொத்திக் கொன்றன. வேடுவர் குலமே அழிந்து விட்டது. அவர்களைப் போல் துரியோதனன் அந்த தேனை மட்டுமே பார்க்கிறான். வழியில் ஏற்படும் துன்பங்களும் மரணம் சம்பவிக்கும் என்ற நிலையும் தேன் எடுப்பவனுக்கு புரிவதில்லை. துரியோதனன் தன்னை அரசகுமாரனாக வீரனாக பார்க்கிறான். ஆனால் அர்ஜுனன் யார் என்று ஒரு எடை அவனிடமில்லை. அர்ஜுனனை புறக்கணித்து விட்டு வெற்றி மட்டுமே தனக்கு கிடைக்கும் என்று நினைப்பவனிடம் என்ன பேசுவது.’’

உண்மை நிலையை விதுரர் பேச்சில் உணர்ந்து கொண்ட அந்த கௌரவ சபை திகைத்து பேசாது அமர்ந்திருந்தது. அரசன் யுத்தம் வேண்டுமென்கிறான். அவன் தோழன் தூண்டி விடுகிறான். மந்திரி பிரதானிகள் அச்சமடைகிறார்கள். நல்லவர்கள் ஜெயிக்க இயலாது என்கிறார்கள். ஒரு தேசத்தின் இந்த நிலை எவ்வளவு பாபகரமானது. இது சாதாரண மக்களின் தலையிலும் அல்லவா விடியும். துரியோதனனை நோக்கி திருதராஷ்டிரன் பேசத் துவங்கினார். ‘‘பீஷ்மர் உன் பிதா மகன் உன் நன்மை விரும்புகிறவர். உன் பக்கம் உறுதியாக இருப்பவர். அவரை சகித்துக் கொள்ள கற்றுக் கொள். கர்ணனை அவர் எதிர்ப்பது உன்னை இழிவுபடுத்துவதற்கு அல்ல.

கர்ணனின் யோக்கியதையை உனக்கு சொல்ல முயற்சிக்கிறார். இந்த சபையில் உள்ள அத்தனை பேரும் தர்மவான்கள். உன்னுடைய நன்மையை விரும்புகிறவர்கள். ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் பேசும்பொழுதும் விராட தேசத்தில் உங்களை எதிர்த்து தனி ஒருவனாக அர்ஜுனன் செய்த போரே பாராட்டப்படுகிறது. அர்ஜுனனுடைய வில் வித்தையை விட அவனுடைய பிரகாசமான கோபத்தை நான் காண்கிறேன். பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்வதில் உனக்கு வெட்கம் ஏதும் வேண்டாம். அவர்கள் உனக்கு சகோதரர்கள். அவர்கள் செல்வத்தை அவர்களுக்கு அளித்து  சமாதானம் செய்து கொள்.’’

திருதராஷ்டிரன் சமாதானம் சொல்ல, அதை கண்டு சபை மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பதா. அதைக் கேட்டு சஞ்சயன் எழுந்தார்.‘‘அர்ஜுனன் கடைசியாக சொன்ன வார்த்தைகளை உங்களுக்கு மறுபடியும் சொல்கிறேன். யுதிஷ்டிரருக்கு அவருக்குண்டான ராஜ்ஜியத்தை தராது போனால் என் கூரிய பாணங்களால் கௌரவர்கள் அத்தனை பேரையும் நான் கொன்று குவிப்பேன். அவர்களுடைய எல்லாவித படைகளோடும் அவர்களை அமங்களவமான திசைக்கு அனுப்பி விடுவேன். மன்னா, அர்ஜுனன் இதை மிகக் கோபமாகக் கூறினான். நான் மனதில் அச்சத்தோடு கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் வணங்கி வெளியே வந்து விட்டேன்.’’

வரப்போகும் போரின் குரூரத்தை உணர்ந்த அந்த சபை, இனி பேசுவதற்கு ஒன்றுமேயில்லை என்று உணர்ந்த அந்த சபை மௌனமாக அமர்ந்திருந்தது. மெல்ல மெல்ல பலர் சபையிலிருந்து வெளியேறினார்கள். முக்கியமான பதவியில் இருந்தவர்கள் இனி இங்கு பேசிப் பிரயோஜனமில்லை என்பது போல அமர்ந்திருந்தார்கள். ஆனால் திருதராஷ்டிரன் பேச்சைத் துவங்கினார். ‘‘இந்த இரண்டு பக்கத்து படைகளின் பலத்தைப் பற்றி எனக்கு கூறு. யார் பக்கம் துயரம் அதிகமாக இருக்கும், யார் தோற்கக் கூடும் என்று சொல்’’ என்று வினவினார். போர் வந்து விட்டது இனி அதை தவிர்க்க முடியாது என்று உணர்ந்த விதமாய் பேசினார்.

‘‘இல்லை மன்னா நான் தொடர்ந்து உங்களிடம் பேச முடியாது. தனிமையில் இருக்கின்ற உங்களிடம் இம்மாதிரி விஷயங்களைச் சொன்னால் அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ளாத மனநிலையில் என் பேச்சில் குற்றம் காணுவீர். உங்கள் தந்தையான வியாஸரையும், உங்கள் மகாராணியான காந்தாரியையும் இந்த சபைக்கு வரவழையுங்கள். அவர்கள் உங்கள் குற்றப்பார்வையை உங்களுக்கு எடுத்துக் கூறி தெளிவுபடுத்துவார்கள். அப்பொழுது இது தொடர்பான மேலும் சில விஷயங்களை நான் கூறுவேன்.’’ உறுதியாக சஞ்சயன் இதைச் சொன்னதும், வியாஸரும், காந்தாரியும் அந்த சபைக்கு வந்தார்கள்.

வியாஸர் வெகு எளிதில் நிலைமையை புரிந்து கொண்டார். ‘‘சஞ்சயா, இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் தான் திருதராஷ்டிரன் உன்னிடம் கேள்வி கேட்கிறான். ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனன் விஷயத்தில் நீ பார்த்ததையும், கேட்டதையும் தாண்டி நீ சொல்ல விரும்புவது அனைத்தையும் சொல்.  திருதராஷ்டிரா, பாண்டவர்களைப் பற்றி கௌரவர்களுக்குத் தெரியவில்லை. பொறாமையின் காரணமாக குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் ஸ்ரீகிருஷ்ணரையும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சதுர்புஜரும், சக்ரதாரியுமான அவரை கௌரவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

அவர் போரில் யாரையெல்லாம் கொன்றார் என்பதை சௌகரியமாக மறந்து விட்டு யாதவ குல மன்னன் என்பதாய்ப் பேசுகிறார்கள். அவர் சக்கரத்தின் நடுப்பகுதி மட்டும் மூன்றரை அடி அளவு விஸ்தாரமுடையது. நரகாசுரன், சம்பகாசுரன், கம்சன், சிசுபாலன் போன்ற பலம் பொருந்தியவர்களை விளையாட்டாக அழித்தார். ஸ்ரீகிருஷ்ணருடைய பலம் மிகப் பெரியது. தன் மன சங்கல்பத்தாலேயே இந்த உலகம் முழுவதையும் அவரால் அழிக்க முடியும். எந்தப் பக்கம் சத்தியம், தர்மம், வெட்கம், எளிமை இருக்கிறதோ அந்தப் பக்கம் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறார். எங்கு ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறாரோ அங்குதான் வெற்றி இருக்கிறது.

பாண்டவர்களை வைத்து அதர்ம சொரூபிகளான, முட்டாள்களான உங்கள் புதல்வர்களை, அழிக்க விரும்புகின்றார். உலகத்தின் தர்மத்தை நிலைநாட்டுபவர் அவரே. அவரே உலகத்தின் ஸ்வாமி. அவர் ஒருவரே இங்கு ஆள்பவர். தன்னுடைய மாயையின் பிரபாவத்தால் உலக மக்கள் அனைவரின் மோகத்தை விதம் விதமாக தூண்டுகிறார். எவர் அவரை சரணடைந்தார்களோ அவர்களை மோகிக்கச் செய்வதில்லை.” ஆனால் திருதராஷ்டிரன் கேள்விகளை நிறுத்தவில்லை. எத்தனை விதமாகச் சொன்னாலும் உண்மையை அறியும் அறிவு போதவில்லை.

‘‘எதை வைத்துக் கொண்டு நீ கிருஷ்ணனை ஸ்வாமி என்று சொல்கிறாய். உனக்குத் தெரிந்த விஷயம் ஏன் எனக்குத் தெரியவில்லை?” என்று சிறு பிள்ளையைப் போல் வினவினார். ‘கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறாயே, கடவுளைக் காட்டு, அப்பொழுதுதான் நம்புவேன்’ என்று உலகில் பேசுகிற மனிதர் போல அந்த மன்னன் பேசினான்.‘‘மன்னா, உங்களுக்கு தத்துவ ஞானம் கிடைக்கவில்லை. தத்துவ ஞானம் கிடைக்காத மனிதன் அறியாமை என்ற இருளில் நாசமடைந்தவன். நான் கிருஷ்ணருடைய உண்மையான சொரூபத்தை அறிந்து விட்டதாய் சொல்ல முடியாது. என் ஞான திருஷ்டியாலேயே அவரை அறிகிறேன்.”

- பாலகுமாரன்