காலையில் திறவாதோ இந்தக் கோயில்?அருணகிரி உலா - 61

‘சிறிதளவும் வாக்குத் தவறாத மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதாக மதிக்காமல், விலை மாதருடன் மோகித்திருப்பது சரியல்ல’ என்று பாடியுள்ளதால் அருணகிரியார் பொதுமகளிரை விலக்குதல் வேண்டும் என்கிறார் என்பதும், இல்லற மகளிரைப் போற்றுகின்றார் என்பது தெளிவாகின்றன. பாடலின் பொருள் பின்வருமாறு: சிறிதளவும் வாக்குத் தவறாத மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதிக்காமல்,

பொது மாதர்களுடன் வீணாக நேரத்தைச் செலவழிக்கும் ஆள் இவன் என்று பிறர் இகழ, பொன்பொருளைப் பெறவேண்டி பெரும் அசடர்களை ‘நீ பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலே’ என்றெல்லாம் புகழ்ந்து திரிவேனோ? (கூடாது) ஆறுவகை சாஸ்திரங்களையும் கடந்து மனோலயம் அடைந்த பெரியோர்கள் விரும்பித் துதிக்கும் திருவடிகளை உடையவனே!

‘தாத்தரி தாகிடசேக்’ எனும் தாளகதியில் சிறந்த நடனம் செய்கின்ற திருவடிகளை உடைய சிவபிரான் தந்த குமரா! அம்புகளுடன் திரியும் வேடர்களின் மிகுந்த அமுது போன்ற மயிலாகிய வள்ளியின் மணவாளனே!  வேதங்கள் ஒலி செய்யும் சீரான திருவேட்களத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (பார்க்கள மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலானென உழல்வேனோ!) திருவேட்களத்தில் பாடிய மற்றுமொரு பாடல் யோகக் கருத்துக்கள் மிக்கதாக உள்ளது.

‘‘சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச் சிவபாக்கிய நாடக அநுபூதி
சரணக்கழல் காட்டி என் ஆணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குல மீட்டிய தோளொடு முகமாறும்
கதிர் சுற்றுக நோக்கிய பாதமு
மயிலில் புற நோக்கியனாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும்     அடியேனைக்
கனகத்தினு நோக்கினிதாய் அடியவர் முத்தமிழாற் புகவே பர
கதி பெற்றிட நோக்கிய பார்வையு மறவேனோ.’’
 
- இது பாடலின் முற்பகுதி. நான்கு இதழ்களுடன் பூமியின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள மூலாதார கமலம் முதல், முச்சுடர் மண்டலங்கள், ஆறாதாரங்கள், இவையனைத்தும் குளிர்ந்து தழைய சிவப்பேற்றைத் தருவதான அநுபூதி நிலை ஆகிய திருவடியை எனக்குக் காட்டுவாயாக. உனது திருப்பாதம், எனது அகங்காரத்தைத் தொலைத்து ஒழித்த உனது பன்னிரு மலைகள் போன்ற தோள்கள், ஆறுமுகங்கள், ஒளி நிறைந்து ஆன்மாக்களைக் காக்கும் திருவடி இவற்றுடன் மயில் மேல் எழுந்தருளும் நீ கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலம் ஆகியவற்றை அடியார்கள் யான் பாடும் முத்தமிழாற் பாடிக் கதிபெறவும் அடியேன் மேலான நற்கதியைப் பெறவும், பொன்னினும் இனிமையான பார்வையுடனே என்னைக் கடாக்ஷித்துப் பார்த்ததையும் மறவேனே! பாடலின் பிற்பகுதியில்,

‘‘சிதறத் தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதற, கடலர்ப்புறவே அயில் விடுவோனே
சிவபத்தினி, கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா
விதுரற்கும் அராக் கொடியானையும்
விகடத்துறவாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி ஊர்பவன் மருகோனே
வெளி எட்டிசை சூர்ப்பொருதாடிய
கொடிகைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய்த் திருவேட்கள மேவிய பெருமாளே.’’

- என்று பாடுகிறார். பூமி அதிர, நாற்றிசைகளிலுமுள்ள மலைகள் நெரிந்து பொடிபட, பறையின் பேரொலியுடன் வந்த அசுரர்களின் பெரும் முடிகள் சிதறி விழ, கடல் ஒலி செய்ய வேலைச் செலுத்தியவனே! சிவபிரானது பத்தினி, எமனை உதைத்த பாதங்களை உடைய சக்தி, யாவர்க்கும் மூத்தவள், துன்பங்களைப் போக்குபவள், அண்டங்களைச் சிருஷ்டித்தவளாகிய பார்வதியின் குழந்தையே! விதுரனுக்கும், பாம்புக்கொடியைக் கொண்ட துரியோதனனுக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கிய கண்ணபிரான், அர்ச்சுனனுடைய பெரிய தேர்க்குதிரைகளைப் பார்த்தசாரதியாகச் செலுத்தியவன் ஆகிய மாலோன் மருகனே!

வெளியிலே எட்டுத் திசைகளிலும் சூரனாய் நின்று சண்டை செய்து, பின் சேவலாய் மாறிவிட்டவனைக் கொடியாகக் கையில் ஏந்திப் புகழ் பெற்ற வேலவனே! (பரகதி பெற்றிட நோக்கிய பார்வையு மறவேனே!) விளக்கவுரை: பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம் தூது சென்ற கண்ணபிரான், விதுரனுடைய வீட்டில்தான் தங்கினான். துரியோதனன் ராஜசபையில், ‘நீ தாசி மகன்தானே, என் வீட்டில் உண்டாலும் பாண்டவர் மீது அன்பு கொண்டுள்ளாய்; என் வீட்டில் உண்ண மறுத்த கண்ணனுக்கு உணவளித்தாய்’ என்று கூறி விதுரனை இகழ்ந்தான்.

கோபமுற்ற விதுரன் ‘அறமே வெல்லும் நாளை’ என்று கூறித் தனது ஒப்பற்ற வில்லை ஒடித்து எறிந்தான். (கண்ணன் விதுரன் வீட்டில் தங்கிய நோக்கமும் அதுதானே) இதையே அருணகிரியார் ‘விகடத்துறவாக்கிய மாதவன்’ (மனம் வேறுபட்ட உறவை உண்டுபண்ணியவன்) என்று பாடுகிறார். அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கிட்டிய தலமாதலால் அவனைப் பற்றிய குறிப்பையும் வைத்துள்ளார். (விசையற்குயர் தேர்ப்பரி ஊர்பவர்) செகம் இப்படி தோற்றிய பார்வதி: ‘இப்படி  அப்படி’ எனும் சொற்கள் பண்டு ‘இந்த ஒப்பற்ற வகையில், அந்த ஒப்பற்ற வகையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

‘‘இனிது கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும்’’
      (வேடிச்சி காவலன் வகுப்பு)
‘‘ஒரு பொருள் அப்பர்க்கப்படி ஒப்பித்தர்ச்சனை கொண்ட நாதா’’ (திருப்புகழ்)

அர்த்தநாரீஸ்வர கோலத்தில் அம்பிகையின் பக்கமாகிய இடதுகாலால் யமனை மோதியதால் ‘கூற்றினை மோதிய பதசத்தினி’ என்கிறார். (திரிபுர சம்ஹாரத்தில் ‘குவடு குனித்துப் புரஞ்சுடும் சிவனவஞ்சி நீலி’ என்கிறார். (இடதுகையால் வில்லை வளைத்த காரணத்தினால்) முருகனை வணங்கி பிராகார வலம் வரும்பொழுது, வைகாசி விசாக அபிஷேகங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவது கண்டோம். மகாலட்சுமி, பைரவர் மற்றும் நவகிரஹங்களைத் தரிசித்து வெளியே வருகிறோம். திருவேட்களத்திற்கு மிக அருகிலுள்ள திருநெல்வாயிலை நோக்கிப் பயணிக்கிறோம்.

நெல்வாயில் என்று அருணகிரியாரால் அழைக்கப்படும் இத்தலம், தற்போது மக்கள் வழக்கில் சிவபுரி என்றழைக்கப்படுகிறது. இறைவன்உச்சிநாதேஸ்வரர்; இறைவிகனகாம்பிகை. கண்வ மகரிஷி வழிபட்ட தலம். கிழக்கு நோக்கிய கோயில். பலரிடம் வழிகேட்டுக் கோயிலைச் சென்றடைந்தபோது (காலை 10 மணி) கோயில் பூட்டப்பட்டிருந்தது. பிராகாரத்திலும் வெளியிலும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், ‘‘காலைல கோயில் திறக்க மாட்டாங்க, சாயங்காலம் வாங்க’’ என்று ஒரே கோரஸாகக் கூவினார்கள். கோயில் பிராகாரத்தை வலம் வரலாம் என்றெண்ணி உள்ளே சென்றோம். விநாயகர், சுப்பிரமணியர் இருவரையும் வணங்கினோம்.

வலதுபுறம் சனீஸ்வரர், சந்திரன், பைரவர் மற்றும் பஞ்சலிங்கங்களைத் தரிசித்தோம். இடப்புறம் ஞானசம்பந்தர் வீற்றிருக்கிறார். மண்டபத்தின் ஒரு புறம் நவகிரக சந்நதி உள்ளது. கொடிமரம் இல்லை; பலிபீடமும் நந்தியும் உள்ளன. கதவு பூட்டியிருந்ததால் இறைவன், இறைவியைத் தரிசிக்க முடியாமற் போயிற்று. கருவறைக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, ஷண்டிகேசர், துர்க்கை மற்றும் காசி விஸ்வநாதனைத் தரிசிக்கிறோம். தனிச்சந்நதியில் முருகன் மட்டும் குடியிருக்கிறான். வைகாசி விசாக தினத்தன்று எந்த வழிபாடும் இல்லாதிருப்பது கண்டு மனம் வருந்திய வண்ணம், தலத் திருப்புகழைப் பாடுகிறோம்.

‘‘அறிவிலாதவர் ஈனர் பேச்சிரண்டு
பகரு நாவினர் லோபர் தீக்குணங்கள்
அதிக பாதகர் மாதர்மேற் கலன்கள்
புனை ஆதர்
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க்கிரங்கி
அழியு மாலின் நீதி நூற் பயன்கள்
தெரியாத
நெறியிலாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள் செய் பூரியர் ேமாகமாயப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த
தமிழ் கூறி.
நினைவு பாழ்பட வாடி நோக்கிழந்து
வறுமையாகிய தீயின் மேற்கிடந்து
நெளியு நீள் புழுவாயினேற்கிரங்கி
அருள்வாயே!

ஒழுக்கமற்ற வாழ்க்கையை மேற்கொள்ளுவதனால் வறுமை என்கின்ற நெருப்பிலே கிடந்து நெளிகின்ற புழுப்போலத் தவிப்போர்கள் மீது இரக்கம் கொள்ளும்படி வேண்டுகின்ற பாடல் இது. ‘அறிவிலிகள், இழிவானவர்கள், சொன்ன பேச்சை மாற்றுபவர்கள், உலோபிகள், தீய குணங்களால் பாவம் செய்பவர்கள், விலை மாதர்களுக்கு ஆபரணங்கள் அணிவித்து அழகுபார்க்கும் அறிவற்றவர்கள், அசடர்கள்,  வீண்பொழுது போக்குபவர்கள் எல்லாம் காமத்தினால் அழிந்து போகிறார்கள், நீதி நூல்கள் கற்காததினால் நல்ல வழியில் செல்லாதவர்கள்,

வஞ்சகமாகப் பொருட்களைக் கவர்ந்து அவற்றைச் சேகரிப்பவர்கள், உலகாயத இச்சைகளையே மோகிக்கும் மூடர்கள் ஆகியோரிடம் சென்று விலை மதிப்பற்ற தமிழ்ப் பாக்களைப் பாடிக்காட்டி, நினைவு தேய்ந்து, பார்வையும் மங்கி வறுமையாகிய தீயில் விழுந்து நெளியும் புழுப்போன்ற என் மீது இரக்கம் காட்டி அருள்வாயாக! என்று பாடுகிறார். வேலாயுதத்தைச் செலுத்தி சூரனை சங்கரித்ததால் உண்டான மாற்றங்களை, பாடலின் அடுத்த பகுதியில் கூறுகிறார். ‘‘நறுமணங்கொண்ட நீண்ட கூந்தலை உடைய தேவலோக அரம்பையர்கள் தம் காதலர்களுடன் கூடிக் களித்தும், ஏழிசை பாடியும் மகிழ்ந்தனர்;

நடு நிலைமையும், கோபமற்ற தன்மையும் இல்லாதவராய் அழிதொழிலையே செய்த அசுர மகளிர், தம் கணவர்களின் பிரிவாற்றலைத் தாங்க முடியாமல் அழுது மிக வருந்தினர்; ஆழ்கடலுள் விரிந்து பரந்த கிளைகளுடைய மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகும்படி வெட்டிப் பிளந்த கூரிய வேலாயுதனே! கூட்டமாய் எழும் கருமேகங்கள், நிலவு உலவுகின்ற மாடங்கள் வயல்கள் மிக்க திருநெல்வாயில் எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (தீயின் மேற்கிடந்து நெளியும் நீள் புழுவான எனக்கு இரங்குவாயாக)’’ என்ற பொருளில் வரும் பிற்பகுதியைப் பார்ப்போம்.

‘‘நறிய வார் குழல் வான நாட்டரம்பை
மகளிர் காதலர் தோள்கள் வேட்டிணங்கி
நகை கொடேழிசை பாடி மேற்பொலிந்து களிகூர
நடுவிலாத குரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர் மணாளர் தோட்பிரிந்து
நச பொறாதழுதாகமாய்த் தழுங்கி  இடர்கூர
மறியும் ஆழ் கடலூடு போய்க்கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மா இருகூறதாய்த் தடிந்த வடிவேலா
மருவு காள முகில்கள் கூட்டெழுந்து
மதி உலாவிய மாடமேல் படிந்த
வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே.’’

(சுவாமி, சம்பாநெல் வயல்களிடையேயிருந்து பெறப்பெற்றதாக திரு உ.வே.சா. குறிப்பிடுகிறார்.) வைகாசி விசாக நன்னாளிலும் காலையில் எந்த பூஜையும் நடைபெறாது, களையிழந்து கிடக்கும் திருநெல்வாயில் கோயிலை வலம் வந்து இறைவனிடம் மனமார மன்னிப்புக் கேட்டபடி வெளியே வருகிறோம்.

(உலா தொடரும்)

- சித்ரா மூர்த்தி