அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்



86. ஸுரேசாய நமஹ (Sureshaaya namaha)

பிரம்மதேவர் திருமாலை நேரில் காண விழைந்து, கடும் தவம் புரிந்தார். பல்லாண்டு காலம் கடந்தும் திருமால் காட்சி கொடுக்கவில்லை. “திருமாலைக் காண என்ன வழி?” என்று தவிக்கலானார். அப்போது “நான் உனக்கு நிச்சயம் காட்சி தருவேன்!” என்று அசரீரி ஒலித்தது. அது திருமாலின் குரல் என்று பிரம்மா புரிந்து கொண்டார். “எப்போது நான் உன்னைத் தரிசிக்க முடியும்?” என்று கேட்டார். அதற்கு அசரீரியாகவே ஒரு சம்பவத்தைச் சொல்லி திருமால் பதிலளித்தார்: நேபாளத்தில் உள்ள சாளக்கிராம க்ஷேத்ரத்தில், ஒரு குருகுலத்தில் மந்தன் என்ற அந்தணச் சிறுவன் வேதம் பயின்று வந்தான்.

அவன் தன் குருவையும் வேதத்தையும் மதிக்காமல் அவமானப்படுத்திக் கொண்டே இருந்தான். ஒருநாள் மிகவும் கோபம் கொண்ட அவனது குரு, “நீ வேதம் படிக்கத் தகுதியற்றவன், வெளியே போ!” என்றார். குருகுலத்தை விட்டு வெளியேறிய மந்தன், தனது தவறுக்கு வருந்தினான். அதற்குப் பிராயச்சித்தம் தேடும் விதமாகப் பெருமாள் கோயில்களில் புல் செதுக்குதல், தூய்மைப் படுத்துதல் உள்ளிட்ட தொண்டுகளைச் செய்துவந்தான். அதன் விளைவாக அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயருடன் விந்திய மலைப்பகுதியில் பிறந்தான். விந்திய மலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் தவம் புரிந்தான்.

ஒருநாள் வானில் தென்திசையிலிருந்து பேரொளி ஒன்று தெரிவதைக் கண்டான். அதைப் பின் தொடர்ந்தபோது, அது தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிநாதப் பெருமாளிடமிருந்து வருவதைக் கண்டு, அவ்வூரை அடைந்து, அந்தப் பெருமாளை வழிபட்டான். ஆனால், அவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் தாழ்ந்த குலத்தில் பிறந்த அவன் கோவிலுக்குள் வருவதை எதிர்த்தனர். அதனால் தாந்தன், தாமிரபரணியின் வடக்குக் கரையில் தனியாக ஒரு கோவிலை அமைத்து அங்கே ஆதிநாதனை வழிபட்டான். (இன்றும் அவ்வூர் அப்பன் கோவில் என்று வழங்கப்படுகிறது.)

இதற்கிடையில், தாந்தனை வெறுத்த அந்தணர்கள் அனைவருக்கும் பார்வை பறிபோனது. தங்கள் தவறை உணர்ந்து அவர்கள் தாந்தனிடம் வந்து மன்னிப்பு கோரினார்கள். அப்போது ஆதிநாததேவியோடு ஆதிநாதப்பெருமாள் காட்சி தந்து, பார்வை இழந்தோர்க்கு மீண்டும் பார்வை தந்துவிட்டு, தாந்தனை வைகுந்தத்துக்கு அழைத்துச் சென்றார். அன்று முதல் அவ்வூர் ‘தாந்த க்ஷேத்ரம்’ என்றழைக்கப்பட்டது. விந்திய மலையடிவாரத்தில் தாந்தன் தவம் புரிந்த ஆலமரத்தடியில் ஒரு வேடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்தான். அந்தப் புண்ணியத்தின் விளைவாக சங்கன் என்ற முனிவராக அடுத்த பிறவியில் பிறந்தான்.

சங்க முனிவர் முக்தியடைய விரும்பிக் கடுந்தவம் புரிந்தார். அவரைச் சந்தித்த நாரதர், “வேடனாக இருந்த நீ, தாந்தன் தவம் புரிந்த இடத்தில் அமரும் பாக்கியம் பெற்று அதனால் இப்போது முனிவனானாய். அந்த தாந்தன் திருமாலை வழிபட்ட தாந்த க்ஷேத்ரத்துக்குச் சென்று திருமாலை வழிபட்டால் விரைவில் முக்தியும் கிட்டும்!” என்றார். சங்க முனிவர் சங்கு வடிவம் எடுத்துக்கொண்டு தாமிரபரணி நதியை அடைந்து, அந்நதிக்கரையிலுள்ள ஆதிநாதனை ஆயிரம் முறை பிரதட்சிணம் செய்து முக்தி பெற்றார். சங்கமுனி முக்தி பெற்றதால் தாந்த க்ஷேத்ரம் ‘திருச்சங்கணித்துறை’ என்ற பெயரும் பெற்றது.

இவ்வாறு பிரம்மாவிடம் கூறிய திருமால், “தாந்த க்ஷேத்ரமாகிய திருச்சங்கணித்துறைக்குப் போய் நீயும் தவம் புரிந்தால், தாந்தனுக்கும், சங்கமுனிவருக்கும் காட்சி தந்தது போல உனக்கும் காட்சி தருவேன்!” என்றார் திருமால். அவ்வாறே பிரம்மாவும் அவ்வூரை அடைந்து தவம் புரிந்து அங்கே ஆதிநாதன் வடிவில் திருமாலைக் கண்குளிர தரிசித்தார். திருமால் பிரம்மாவுக்குக் ‘குரு’வாக இருந்து வழிகாட்டித் தவம் புரியச் சொன்னமையால், அவ்வூர் ‘குருகூர்’ என்று அழைக்கப்பட்டது. அந்தத் திருக்குருகூரில் நம்மாழ்வார் அவதரித்தமையால் ‘ஆழ்வார் திருநகரி’ என்ற பெயரும் பெற்றது.

தவம் புரிந்த பிரம்மாவுக்குக் குருவாக இருந்து திருமால் வழிகாட்டினார். இவ்வாறு தேவர்களைப் படைத்ததோடு, அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கி அவர்களின் உஜ்ஜீவனத்துக்கு உதவுவதால் ‘ஸுரேச:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘ஸுர:’ என்றால் தேவர் என்று பொருள். ‘ஈச:’ என்றால் படைத்து வளர்ப்பவன் என்று பொருள். ‘சுரேச’னாகத் திருமால் விளங்குவதைத் திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வார் மிக அழகாக, “ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர்படைத்தான் குன்றம் போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே”என்று திருவாய்மொழியில் பாடியுள்ளார்.

‘ஸுரேசஹ’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 86வது திருநாமம். “ஸுரேசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களை எப்போதும் திருமால் ஆட்சி செய்வார். (குறிப்பு: ‘ஸுரேசஹ’ என்ற திருநாமத்தில் உள்ள ‘ச’ என்னும் எழுத்து ‘श’ என்ற வடமொழி எழுத்தின் உச்சரிப்பில் வந்துள்ளது. அது ஸ, ஷ இரண்டுக்கும் இடைப்பட்ட ஒலி. கசடு, பிசகு உள்ளிட்ட வார்த்தைகளில் ‘ச’ வை உச்சரிப்பது போல, ஸுரேச: வில் உள்ள ‘ச’ வை உச்சரிக்க வேண்டும்.)

87. சரணாய நமஹ (Sharanaaya namaha)


திருவாரூருக்கு அருகே அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணமங்கை. அங்கே தர்ச புஷ்கரிணிக் கரையில் அபிஷேகவல்லித் தாயாருடன் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பெருமாளைப் பெரும்புறக்கடல் என்று பெயரிட்டு அழைத்துள்ளார். அவ்வூரில் திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு திருமால் அடியார் வாழ்ந்து வந்தார். அவர் நாதமுனிகளின் சீடர். பக்தவத்சலப் பெருமாளின் பரம பக்தர். எப்படிப்பட்ட பக்தர்?

தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியது தன் பொறுப்பு என்ற எண்ணத்தையும், கவலையையும் விட்டு, பக்தவத்சலப் பெருமாளின் சொத்தான தம்மைக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுடையது என்று தெளிந்து, அந்தப் பெருமாளின் கோயிலிலேயே தங்கிவிட்டார். தன்னுடைய ஜீவனுத்துக்குத் தேவையான வியாபாரம் உள்ளிட்ட அனைத்துச் செயல்களையும் கைவிட்டார். இறைவனின் பிரசாதத்தை மட்டும் உண்டு, வாழ்வைக் கழித்து இறுதியில் அவன் திருவடிகளை அடைந்தார். அவர் கோயிலில் வாழ்ந்த காலத்தில் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்த வாசகம் இது:

“தர்சப் பொய்கைக் கரையின் நாதனே! பக்தவத்சலனே!
நீ ஒரு யானையைக் காத்தாய்!
ஒரு யானையைக் கொன்றாய்!
ஒரு குரங்கைக் காத்தாய்!
ஒரு குரங்கைக் கொன்றாய்!
ஓர் அத்தானைக் காத்தாய்!
ஓர் அத்தானைக் கொன்றாய்!
ஓர் அரக்கனைக் காத்தாய்!
ஓர் அரக்கனைக் கொன்றாய்!
ஓர் அசுரனைக் காத்தாய்!
ஓர் அசுரனைக் கொன்றாய்!
உன்னைத் தஞ்சமடைந்த அடியேனையும் காத்தருள வேணும்!”

இதன் தாத்பர்யம் யாதெனில், எம்பெருமான் கஜேந்திரன் என்ற யானையைக் காத்தான். குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றான். சுக்ரீவன் என்ற குரங்கைக் காத்தான். வாலி என்ற குரங்கைக் கொன்றான். அர்ஜுனன் என்ற அத்தை மகனைக் காத்தான். சிசுபாலன் என்ற அத்தை மகனைக் கொன்றான். விபீஷணன் என்ற அரக்கனைக் காத்தான். ராவணன் என்ற அரக்கனைக் கொன்றான். பிரகலாதன் என்ற அசுரனைக் காத்தான். ஹிரண்யன் என்ற அசுரனைக் கொன்றான். இதிலிருந்தே பிறந்த குலத்தைக் கொண்டு யாரையும் அவன் தண்டிப்பதோ காப்பதோ இல்லை என்பது புரிகிறதல்லவா?

தீமை செய்பவர்கள் எக்குலத்தவராக இருந்தாலும், தன் அத்தை மகனாகவே இருந்தாலும் அவர்களைக் கொல்கிறான். தஞ்சமடைந்தவர்கள் குரங்காகவோ, அரக்கனாகவோ இருந்தாலும் காக்கிறான். இப்படித் தஞ்சம் அடைந்தவர்கள் யாராக இருப்பினும், வேறுபாடோ ஏற்றத்தாழ்வோ பாராமல் அவர்களை ரக்ஷித்தே தீர வேண்டுமென்ற உறுதியுடன் இருப்பதால், அனைவருக்கும் புகலிடமான திருமால் ‘சரணம்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 87வது திருநாமம்.“சரணாய நமஹ” என்று தினமும் சொல்லிப் பெரும்புறக்கடலான பக்தவத்சலின் திருவடிகளைச் சரண்புகுந்து அவன்
அருளைப் பெறுவோம்.

88. சர்மணே நமஹ (Sharmaney namaha)


பிரம்மாவின் மகனாகப் பிறந்தவர் பிருகு மகரிஷி. வருண பகவான் பிருகுவின் தேஜஸால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அதனால், “நான் உன்னை என் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். “உங்கள் விருப்பம் அதுவாயின் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் எனக்கு நீங்கள் ஏதாவது சன்மானம் தந்து விட்டு என்னைத் தத்தெடுத்துக் கொள்ளுங்கள்!” என்றார் பிருகு. “இறைவனைப் பற்றிய விஞ்ஞானமாகிய பிரம்ம வித்யையை நான் அறிவேன். அதை உனக்கு உபதேசிக்கிறேன்!” என்றார் வருணன்.

பிருகுவும் சம்மதிக்கவே, அவரைத் தத்தெடுத்துக் கொண்டு, பின் பிரம்மவித்யையையும் அவருக்கு உபதேசித்தார் வருணன். “மகனே! இறைவன் யார் தெரியுமா?” என்று கேட்டார் வருணன். பிருகு சிந்தித்துக் கொண்டே இருந்தார். ஆனால் பதில் சொல்லத் தெரியவில்லை. வருணன், “மகனே! யாரிடமிருந்து உலகனைத்தும் உண்டாகின்றதோ, யாரால் அனைத்தும் நிலைபெற்றிருக்கின்றதோ, இறுதியில் யாரைச் சென்றடைகின்றதோ அவன்தான் இறைவன்! இதை நன்றாகச் சிந்தித்துப் பார்! இறைவனை நீ அறிந்து கொள்வாய்!” என்று கூறினார்.

யோசித்தார் பிருகு. “உணவு இருந்தால்தான் உயிர்கள் வாழமுடியும், சந்ததிகளைப் படைக்க முடியும். உணவு இல்லாவிட்டால் அனைவரும் இறந்து விடுவார்கள். எனவே உணவுதான் இறைவனா?” என்று தந்தையிடம் கேட்டார். “இன்னும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்,’’ என்றார் வருணன். “சிந்திப்பதை நீங்கள் இவ்வளவு வலியுறுத்துகிறீரே! ஒருவேளை சிந்தனையே இறைவனாக இருக்கக் கூடுமோ?” “இன்னும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்’’“பிராண வாயு எனப்படும் உயிர்வளி (oxygen) இருந்தால் தானே அனைவரும் உயிர்வாழ முடியும். அது இல்லாவிட்டால் அனைவரும் அழிந்து விடுவார்களே!

அதனால் பிராணவாயு தான் இறைவனா?” “இன்னும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்!” “சிந்தனைகள் அனைத்தும் மனதில் இருந்துதானே உதிக்கின்றன. ஒருவேளை அந்த மனமே இறைவனாக இருக்கக்கூடுமோ?” “இன்னும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்!” “ஜீவாத்மா உடலில் இருந்தால்தானே உடலால் இயங்க முடியும்? ஜீவாத்மாக்களே இல்லாவிட்டால், வெறும் உடல்களால் எந்தச் செயலையும் செய்ய இயலாதே! எனவே ஜீவாத்மா தான் இறைவன் என்று நினைக்கிறேன்!”  “இன்னும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்!” ஆழ்ந்த சிந்தனையாலும், தந்தையின் அருளாலும்,

“உணவு, சிந்தனை, பிராணவாயு, மனம், ஜீவாத்மாக்கள் இவை அனைத்தையும் கடந்து, ஆனந்தமே வடிவெடுத்தவனாக, சுகரூபமாக, அடையத் தக்க பயன்களிலேயே மிக உயர்ந்தவனாக இருப்பவனே இறைவன் என உணர்கிறேன்!” என்றார் பிருகு. அவனுடைய ஆனந்தத்துக்கு எல்லைகள் இல்லை என்றும், அவனைத் தரிசித்து விட்டால், வேறு எந்த ஆனந்தத்தையும் மனம் நாடாது என்றும் உணர்ந்து கொண்டார். அத்தகைய ஆனந்தமே நிறைந்த இறைவனைத் தனக்கு மருமகனாக அடையவும் விரும்பினார்.

அதை நிறைவேற்ற மகாலட்சுமியே பார்கவி என்ற பெயருடன் பிருகுவுக்கும் கியாதிக்கும் மகளாகத் தோன்ற, திருமால் அவளை மணந்து கொண்டு பிருகுவின் மருமகனானார். திருமாலை நேரில் கண்டு அவரது ஆனந்தத்தை அள்ளிப் பருகினார் பிருகு மகரிஷி. இவ்வாறு எல்லையில்லாத ஆனந்தமே வடிவெடுத்தவராகத் திருமால் விளங்குவதால் ‘சர்ம’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 88வது திருநாமமாக அமைந்துள்ளது. “சர்மணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் ஆனந்தம் பொங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

89. விச்வரேதஸே நமஹ  (Viswaretase namaha)

விளம்பி என்று நாம் வழக்கத்தில் சொல்லும் இந்த ‘விளம்ப’ வருடம், தலைசிறந்த வைணவ ஆச்சாரியரான வேதாந்த தேசிகனின் 751வது அவதார ஆண்டாகும். கடலூருக்கு அருகே உள்ள திருவஹீந்திரபுரம் என்னும் திவ்ய தேசத்தில் தேசிகன் பல வருடங்கள் எழுந்தருளியிருந்தார். அங்கே கோயில் கொண்டிருக்கும் தெய்வநாயகப் பெருமாளைக் குறித்துப் பல துதிகளும் இயற்றினார். ஒருநாள் தெய்வநாயகப் பெருமாளைத் தரிசிக்கச் சென்ற தேசிகன் பெருமாளைப் பார்த்து, “தெய்வநாயகா! நான் ஒரு திருடன், அதுவும் சாதாரணத் திருடன் அல்ல, பெரிய திருடன். எப்படியென்னில், இந்த ஜீவாத்மா உன்னுடைய சொத்து.

உன்னுடைய ஆனந்தத்துக்காகவும், உனக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவை அனைத்து ஜீவாத்மாக்களும். உனக்கே உரியதான ஜீவாத்மாவை ‘அடியேன்’ என்றல்லவோ குறிப்பிட்டிருக்க வேண்டும்! அப்படிச் செய்யாமல், நான் எனக்கே உரியவன் என்ற எண்ணத்தில் நான் என்றல்லவோ கூறிவிட்டேன்! உனக்கே உரித்தான ஒன்றை எனது என்று கூறுவது பெரிய திருட்டுத்தனம் இல்லையா? அது திருட்டுத்தனம் என்பதையும் உணராமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து விட்டேனே. சரி, போகட்டும்! இப்போது உணர்ந்தேன், திருந்தினேன். உன் திருவடிகளே கதி என்று உன்னிடம் வந்து விட்டேன்.

என்னை ஏற்றுக் கொண்டு நீ காத்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார். உடனே தெய்வநாயகப் பெருமாள், “தேசிகரே! உங்கள் கவிதையும், கருத்தும் நன்றாகத்தான் இருக்கின்றன. அதற்காக உங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லையே!” என்றார். தேசிகன் அதற்கு, “இல்லை, நீ ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உன் திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பு ஒன்று நழுவிக் கீழே விழுந்தால், அந்தச் சிலம்பு தானாக உன்னைத் தேடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பாயா? அல்லது நீ அந்தச் சிலம்பைத் தேடிச் செல்வாயா?” என்று கேட்டார்.

“நான்தான் தேடிச் சென்று சிலம்பைக் கண்டு பிடிப்பேன்!” என்றார் இறைவன். “ஏன் இத்தனை நாள் என்னைத் தேடி வரவில்லை என்று அந்தச் சிலம்பிடம் சண்டை இடுவாயா?” என்று கேட்டார் தேசிகன். “அதெப்படி முடியும்? உடையவனான நான்தானே உடைமையைத் தேடிச் செல்ல வேண்டும். உடைமை எப்படி என்னைத் தேடிவரும்?” என்றார் இறைவன். “அதே போலத்தான் அடியேனும் உன்னுடைய உடைமை, உன் சொத்து. நீ ஸ்வாமி, உடையவன். இத்தனை நாள் அடியேன் உன்னைத் தேடி வரவில்லை என்றெண்ணி என்னை நீ ஒதுக்கலாகாது.

உடையவனான நீ உன் உடைமையான அடியேனை ஏற்றருள வேண்டும். அந்தச் சிலம்பை எடுத்து உன் திருவடிகளில் அணிந்து கொள்வதுபோல அடியேனையும் உன் திருவடி நிழலில் இணைத்துக் கொள்ள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் தேசிகன். இவரது வாக்குவன்மையால் வியந்த தெய்வநாயகன் தேசிகனைப் பார்த்துப் புன்னகை பூத்தார். தனக்கும் இறைவனுக்கும் நடைபெற்ற இந்த உரையாடலைத் ‘தேவநாயக பஞ்சாசத்’ என்ற நூலில் ஸ்லோக வடிவில் தேசிகன்
வழங்கியுள்ளார்.

“ஆத்மாபஹார ரஸிகேந மயைவ தத்தம் அந்யைரதார்யம் அதுநா விபுதைகநாத ஸ்வீக்ருத்ய தாரயிதும் அர்ஹஸி மாம் த்வதீயம் சோரோபநீத நிஜநூபுரவத் ஸ்வபாதே”இதில் தேசிகன் கூறியது போல, அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவாகிய திருமாலுடைய உடைமைகள். உடையவரான அவருடைய ஆனந்தத்துக்காகவும், அவருக்குத் தொண்டு செய்வதற்காகவுமே இவை அனைத்தும் ஏற்பட்டவை. விச்வம் என்றால் உலகம். விச்வத்தில் உள்ள அனைத்தும் அவரை உசுப்பிக்கவே ஏற்பட்டபடியால் திருமால் ‘விச்வரேதஸ்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 89வது திருநாமம். “விச்வரேதஸே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திருமாலுக்கு வழுவிலாத் தொண்டு செய்யும் பேறு பெறுவார்கள்.

90. ப்ரஜாபவாய நமஹ (Prajaabhavaaya namaha)

பீமனும் சகதேவனும் உரையாடிக் கொண்டிருக்கையில், சகதேவன், ஒரு சமஸ்கிருதப் பழமொழியைச் சொன்னான்: “பிது: புத்ரப்ரியாத் பரம் நாஸ்தி” “இதற்கென்ன பொருள்?” என்று வினவினான் பீமன். “தந்தை மகனிடம் வைத்திருக்கும் அன்பை விட உயர்ந்தது உலகில் வேறேதும் இல்லை!” என்று பொருள்  என்றான் சகதேவன். “தாய்ப்பாசம் அதை விட உயர்ந்ததில்லையா?” என்று கேட்டான் பீமன். “தாயின் பாசம் மிகவும் உயர்ந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த தெய்வீகமான அன்பில்கூட என் மகன், எனக்கு மட்டுமே சொந்தம் என்ற பாச உரிமை (possessiveness) மற்றும் அன்பின் மிகுதியால் மகனின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் இடமுண்டு.

ஆனால், மகன் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடும் அக்கறையோடும் கூடியது தந்தையின் பாசம்!” என்றான் சகதேவன். மேலும், “பீமா! ஒன்று தெரிந்துகொள்! எந்த மகனும் தன் தந்தையை வெறுக்கவே மாட்டான். ஒருவேளை ஒரு மகன் தன் தந்தையை வெறுக்கிறான் என்றால், அவன் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்க வேண்டும் அல்லது மன நோயாளியாக இருக்க வேண்டும்!” என்றான் சகதேவன். இதைக் கேட்ட பீமன், “அப்படியானால் கம்சன் தன் தந்தையான உக்ரசேனரை வெறுத்து ஒதுக்கிச் சிறையில் கூட வைத்தானே!

அவன் தாழ்வு மனப்பான்மை கொண்டவனா? அல்லது மன நோயாளியா?” என்று கேட்டான். சகதேவன், “இதற்கான விடையைக் கண்ணனிடமே கேட்டுப் பெறுவோம்!” என்றான். இருவரும் கண்ணனை அணுகி இக்கேள்வியை முன் வைத்தார்கள். அதற்குக் கண்ணன், “உக்ரசேனர் கம்சனின் தந்தையே இல்லை. உக்ரசேனரின் மனைவியான பத்மாவதி, தனது அந்தப்புர மாடத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, திரமிடன் என்ற கந்தர்வன் அவ்வழியே வந்தான். பத்மாவதியின் அழகில் மயங்கினான். உக்ரசேனரைப் போல வடிவம் எடுத்து அவளை நெருங்கி அவளுடன் ஆனந்தமாக இருந்தான்.

பின் தன்னுடைய சுயரூபத்துக்கு மாறி, உனக்குப் பலசாலியான ஒரு குழந்தை பிறக்கும் என்றான். வந்தவன் தன் கணவனல்ல, கந்தர்வன் என்று உணர்ந்த பத்மாவதி அவனைத் தாக்க முற்பட்டாள். கோபம் கொண்ட அவன், “நான் உன்னோடு உறவாடும்போதே நான் உன் கணவன் அல்ல என்று நீ புரிந்து கொண்டதை நான் அறிவேன். ஆனால் அப்போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறாயா? உனக்குப் பிறக்கப் போகிற குழந்தை உங்கள் குலத்தையே அழித்து விடும்!” என்று சபித்து விட்டுச் சென்றான். அந்தக் குழந்தைதான் கம்சன். தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை வெளியே சொல்லிக்கொள்ள முடியாமல்,

தன் வேதனைகளை எல்லாம் மனத்தினுள்ளே அடக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தாள் பத்மாவதி. உக்ரசேனர் உட்பட ஊரார் யாருக்கும் கம்சன் கந்தர்வனின் மகன் என்பது தெரியாது. அதனால்தான் கம்சன் தன் மகன் என்று அவர் நம்பிக் கொண்டிருந்தபோதும், உக்ரசேனருக்கு அவன்மேல் இயற்கையான அன்போ அக்கறையோ உண்டாகவில்லை. கம்சனும் அவரை வெறுத்தான்!” என விடையளித்தான். சகதேவனும் பீமனும் தங்கள் அரண்மனைக்குத் திரும்புகையில் பீமன், “எனக்கு மற்றோர் ஐயம் இப்போது எழுந்து விட்டது. கண்ணன் உலகுக்கே தந்தையாக விளங்குகிறான். அந்தக் கண்ணனையே கம்சன் வெறுத்தானே. அது எப்படி சாத்தியம்?” என்றான்.

புன்னகைத்தான் சகதேவன். “பீமா! உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். கம்சன் கண்ணனை வெறுக்கவே இல்லை. கம்சன் தன் படுக்கை அறையில் ஒரு பெட்டி வைத்திருந்தான். அந்தப் பெட்டிக்குள் அழகான கிருஷ்ண விக்கிரகம் ஒன்றை வைத்திருந்தான். எப்போதும் அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டே இருப்பான். இப்படி உள்ளூர அவனுக்குப் பக்தி இருந்தாலும், வெளி உலகில் கண்ணனுக்கு எதிரானவன் என்ற பிம்பத்தைத் தானே கட்டமைத்துக் கொண்டு விட்டதால், தன் பக்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்ணனை வெறுப்பது போல நடித்தானே தவிர, உலகனைத்துக்கும் தந்தையான கண்ணனை யாராலும் எந்நிலையிலும் மனதார வெறுப்பது என்பது முடியவே முடியாது.

கண்ணனை வெளிப்படையாக விரும்புபவர்கள், கண்ணனை உள்ளூர விரும்புபவர்கள் என இருவகையினர் தான் உண்டே தவிரக் கண்ணனை வெறுப்பவர் என உலகில் யாருமே இல்லை!” என்றான் சகதேவன். “கண்ணா! கருமை நிறக்கண்ணா! உன்னைக் காணாத கண் இல்லையே! உன்னை மறுப்பார் இல்லை! கண்டு வெறுப்பார் இல்லை!” என்ற பாடல் வரி தற்காலத்திலும் இந்தத் தத்துவத்தை சினிமாப் பாடலாக ஒலித்ததே! உலகிலுள்ள அனைத்துயிர்களுக்கும் தானே இருப்பிடமாக இருந்து,

தன்னுள் அனைவரையும் தாங்கிக்கொண்டு, ஒரு தந்தை தன் மகனின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வது போல, நம்மையும் முன்னேற்றிப் பக்குவப்படுத்துகிறார் திருமால். நமக்கு ஆதாரமாக இருந்து நம்மைத் தாங்கும் அவரை மனதாற வெறுப்பது என்பது யாராலும் முடியாத ஒன்று. தன் பிரஜைகளுக்கு ஏற்ற இருப்பிடமாகத் திருமால் இருப்பதால் ‘ப்ரஜாபவஹ’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 90வது திருநாமத்தில் வியாசர் திருமாலை அழைக்கிறார். “ப்ரஜாபவாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்