கவிதைக்காரர்கள் வீதி



* வாழ்நாள் முழுவதும்
கொசுக்களோடு போராடியவன்
கொசுக்கடியால் நோயுற்று
செத்தே போனான்.
சுருள்கள், வில்லைகள், திரவங்கள்,
மின்மட்டைகள் என்று
கொசுவுக்கு எதிராக அவன்
பிரயோகித்த ஆயுதங்கள்
முடிவுறாத அவனது போராட்டத்தின்
மௌன சாட்சிகளாக நிற்கின்றன.
அவன் மரணத்தை தொலைக்காட்சியில்
விவாதித்தவன் சொன்னான்,
கொசுக்களுக்குப் பிடிக்காத நிறத்தில்
அவன் சட்டை அணிந்திருந்தால்
கொசு கடித்திருக்காதாம்!

* சீரிய சுழற்சியில்
ஆடைகளை அவிழ்த்து
மாற்றி அணிகிறாள்.
அவள் வெயிலை உடுத்தியபோது
தவித்துப்போனேன்.
காற்றை உடுத்தியபோது
கலைந்துபோனேன்.
மழையை உடுத்தியபோது
மனம் கிறங்கிப்போனேன்
இப்போது அவள்
பனியை உடுத்துகையில்
போர்வைக்குள் பதுங்குகிறேன்
கவிதைக் கனவுகளோடு!

* காதலைச் சொல்வதற்கு
சரியான இடம்
எதுவென்று வினவினான்.
கடற்கரை?
திருமண வீடு?
பூங்கா?
கல்லூரி வாசல்?
பேருந்து நிறுத்தம்?
பலரும் யோசனை சொன்னார்கள்.
காதலைச் சொல்வதற்கு
சரியான இடம்
மனதில்லையோ?

-சேயோன் யாழ்வேந்தன்