மனம் கவர்ந்த மசலி!



ஊருக்குள் வந்து நாசம் விளைவிக்கும் வன விலங்குகள் பற்றிய செய்திகளுக்கு மத்தியில், தண்டவாளத்தில் அடிபட்டு இறக்கும் யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் சென்டிமென்ட் சமூகம் நாம். அப்படி இப்போது ஒரு புலியின் மரணத்துக்காக தேசமே கலங்கியிருக்கிறது. ‘ராந்தாம்பூர் ராணி’ என பெருமையாக அழைக்கப்படும் மச்லி என்ற அந்தப் பெண் புலிக்கு பெரும் போலீஸ் படை மரியாதை செலுத்த, இறுதி அஞ்சலி நடைபெற்றது. உலகின் 50 சதவீத புலிகள் இந்தியாவில்தான் வாழ்கின்றன. 2226 புலிகள். இதில் வேறு யாருக்கும் இல்லாத சிறப்புகள் மச்லிக்கு உண்டு.

சிறப்பு தபால் தலை, தனி ஃபேஸ்புக் பக்கம், ட்விட்டரில் லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள், டாகுமென்டரி படங்கள் ஆகியவற்றைத் தாண்டி, உலகிலேயே அதிகம் பேரால் புகைப்படம் எடுக்கப்பட்ட புலி இதுதான்! ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 160 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ராந்தாம்பூர் புலிகள் சரணாலயத்தில் கடந்த 97ம் ஆண்டு பிறந்தவள் மச்லி. அதன் முகத்தில் இருக்கும் கோடுகள் மீன் போல இருந்ததால் ‘மச்லி’ என செல்லப்பெயர் வைத்தார்கள்.

பொதுவாக காடுகளில் வசிக்கும் புலிகள், மனித நடமாட்டத்தை விரும்பாது. வனத்துறையினர், சுற்றுலாப் பயணிகள் வந்தால், மறைவாக எங்காவது புதருக்குப் பின்னால் போய்விடும். ஆனால் மச்லி அப்படி இல்லை. ஜீப் வரும் ஓசை கேட்டாலும், கம்பீரமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு தன் இடத்திலேயே இருக்கும். பெரும்பாலும் ராந்தாம்பூர் ஏரியை ஒட்டிய வனத்திலேயே சுற்றியபடி இருக்கும் மச்லியை அடிக்கடி அங்கு பார்க்கலாம். காடுகளில் இயல்பாகத் திரியும் புலிகளைப் பார்க்க விரும்பும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ‘எப்போது ராந்தாம்பூர் போனாலும் மச்லியைப் பார்க்கலாம்’ என நம்பிக்கையோடு வருவதற்கு இது காரணமாக அமைந்தது. இதனால் அந்த புலிகள் சரணாலயத்துக்குக் கோடிகளில் வருமானம் கொட்டத் தொடங்கியது.

இந்தியக் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, வேட்டை மட்டுமே காரணம் இல்லை! புலிகள் இனப்பெருக்கம் செய்வதும் கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. மச்லி இந்த விஷயத்தில் நமக்கு பெரும் கொடை! 11 குட்டிகளை ஈன்றிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் சரிஸ்கா சரணாலயத்தில் புலிகளே இல்லாமல் போய்விட, மச்லியின் குட்டிகள் சில இப்போது அங்கு சென்றிருக்கின்றன.

மச்லியின் வீரம் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு பெரும் வறட்சி நிலவிய காலத்தில் வேட்டை விலங்குகளுக்கு இரை தேடுவது பெரும் பிரச்னையானது. ராந்தாம்பூர் ஏரியில் இருந்த 14 அடி நீள முதலை ஒன்று, மச்லியின் குட்டிகளை விழுங்க வந்தது. குட்டிகளை பத்திரமாக தூரத்தில் கூட்டிப் போய் விட்டுவிட்டு திரும்பிய மச்லி, அந்த முதலையோடு ஒன்றரை மணி நேரம் சண்டை போட்டு அதனைக் கொன்றது. இயற்கை ஆர்வலர்கள் எடுத்த இந்த வீடியோ, சர்வதேச அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஒன்று! இந்த சண்டையில் மச்லி தனது இரண்டு பற்களை இழந்தது.

பொதுவாக புலிகள் காடுகளில் தங்களுக்கென ஒரு எல்லை நிர்ணயித்துக்கொள்பவை. இந்த எல்லைக்குள் வேறு புலிகள் எதுவும் வர அனுமதிக்காது. ராந்தாம்பூர் சரணாலயத்தில் மிகப்பெரிய பகுதியை தனது பகுதியாக வைத்துக்கொண்டு திரிந்தது மச்லி. ஒருமுறை ஒரு ஆண் புலி இந்த எல்லைக்கோடு தாண்டி ராந்தாம்பூர் ஏரிக்குள் வந்தபோது ஆக்ரோஷமாக விரட்டியது மச்லி.

காடுகளில் புலிகள் அதிகபட்சமாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும். தங்களது முடிவு தெரியும்போது காட்டின் உள்ளடங்கிய பகுதிக்குச் சென்று, சாப்பிடாமல் அப்படியே படுத்துக் கிடந்து உயிரை விட்டு விடும் இவை. மச்லி இந்த இயற்கை நியதியைத் தாண்டி 20 வயது வரை வாழ்ந்தது அதிசயம்.

ஆனால் முதுமையின் சுவடுகள் அதை வாட்டி எடுத்தன. ஒரு கட்டத்தில் அதன் குட்டியான சுந்தரி என்ற பெண் புலி, மச்லியுடன் சண்டை போட்டு இதன் ஏரியாவில் பெரும்பகுதியைப் பிடுங்கிக்கொண்டது. இளமைத் துடிப்பும் வலிமையுமாக இருந்த சுந்தரியுடனான மோதலில் மச்லி ஒதுங்கிப் போக நேர்ந்தது. வேட்டை விலங்குகளுக்கு உடல் வலுவே பிரதானம். முதலையுடன் போட்ட சண்டையில் இரண்டு பற்களை இழந்த மச்லிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே மிச்சமிருந்த பற்களும் விழுந்துவிட்டன. கேட்டராக்ட் பிரச்னையால் இடது கண்ணும் பார்க்க முடியவில்லை.

பற்கள்தான் வேட்டைக்கு பிரதானம். மச்லி சமாளித்து தன் நகங்களால் வேட்டையாடி இரை பிடித்தது. வனத்துறையினர் வேறு வழியின்றி மச்லிக்கு உதவுவதற்காக, அது திரியும் பகுதியில் ஆடு, மாடு என எதையாவது கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள். மச்லி வந்து ‘வேட்டையாடி’ அதைக் கொன்று தின்னும்.

கடந்த ஆண்டும் ஒருமுறை உடம்பு சரியில்லாமல் அது படுத்தபோது, இறைச்சியில் மருந்து கலந்து கொடுத்து காப்பாற்றினார்கள். இம் முறையும் அப்படி முயற்சி செய்தார்கள். ஆனால் ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்து, கடந்த வியாழக்கிழமை தன் பயணத்தை முடித்துக்கொண்டது மச்லி.

- அகஸ்டஸ்