வேலை‘‘என்னங்க! நம்ம ஹரி ஆறு இடங்களுக்கு இன்டர்வியூ போயிட்டு வந்துட்டான். ஒரு இடத்துல இருந்தும் ஒழுங்கான பதில் இல்லை. என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு. பையன் வேற ரொம்ப விரக்தியில இருக்கான்!’’ - கவலையாய்ப் பேசினாள் மேகலா.கணவர் சந்துருவோ இதைக் கேட்டு சற்று பரவசமானார்.‘‘வெக்ஸ் ஆயிட்டானா? வெரிகுட்... வெரிகுட்! சரி... என் ஃபிரெண்டு திலக் வச்சிருக்கும் கம்பெனியில சொல்றேன். சேத்துக்குவான்’’ என்றார் அதற்காகக் காத்திருந்தவர் போல.

‘‘எங்கங்க நீங்க? இதை மொதல்லயே செஞ்சிருந்தா ஆறு இடங்களுக்கு இன்டர்வியூ போயி பையன் ஏமாந்திருக்க மாட்டானில்ல..?’’ - மேகலா கடிந்துகொண்டாள்.‘‘கரெக்ட்தான்! ஆனா, அவனுக்கு வேலை கிடைக்கிறது அவ்வளவு சாதாரணமான காரியமில்லைன்னு தெரிஞ்சிருக்காதே! வேலைக்காக முட்டி மோதணும்... அது கிடைக்காம கவலைப்படணும்... வெக்ஸ் ஆகணும். அப்போதான் வேலை கிடைக்கும்போது அது எவ்வளவு முக்கியம்னு தெரியும்.

ஆபீஸ்ல அலட்சியம், அகங்காரம் இல்லாம வேலை பார்க்க இந்த எண்ணம்தான் உதவும். வெளியே போனா வேலை கிடைக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சாதான்... செய்யற வேலை
கஷ்டமா தெரியாது!’’ - விளக்கம் தந்தபடியே தன் மொபைலில் திலக் நம்பரைத் தட்டினார் சந்துரு.‘‘அதுவும் சரிதான்’’ என்றபடி நகர்ந்தாள் மேகலா!               

வீ.விஷ்ணுகுமார்