கோவில்பட்டியில் கலக்கல் தியேட்டர்ஆயிரம் ரூபாயில் வருஷம் முழுக்க படம் பார்க்கலாம்!

தியேட்டருக்குப் போய்த்தான் படம் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றான பிறகு தியேட்டர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தாயைப் போல முக்கியத்துவம் இழந்து உருக்குலைந்து கிடக்கின்றன. பெரிய ஸ்டார் படங்களுக்குக்கூட நைட் ஷோ பார்க்க நான்கைந்து பேருக்கு மேல் வருவதில்லை. தியேட்டர்கள் பலவும் திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மால்களாகவும் உருமாறிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலிலும் அடமாக தியேட்டரை நடத்தி கூட்டம் சேர்க்க நினைக்கும் சினிமா ஆர்வலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு முயற்சிதான், கோவில்பட்டி சண்முகா தியேட்டர். பத்திரிகைகள் போல, லெண்டிங் லைப்ரரி போல இந்தத் தியேட்டரில் ஆண்டு சந்தா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் சந்தா கட்டிவிட்டால் போதும்... வருடம் முழுக்க நீங்கள் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் இங்கு பார்க்கலாம்!

மூச்சுத் திணறலோடு தவிக்கும் தியேட்டர் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் கவனம் பெறுகிறார் வழக்கறிஞர் ஆனந்த். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட சண்முகா தியேட்டரை மூட விடக் கூடாதென அதற்கு புத்துயிர் தரும் நவீன வியாபார யுக்திகளில் இறங்கியிருப்பவர் இந்த இளைஞர்தான்.

இந்த தியேட்டரின் உரிமையாளர் இதை நடத்த முடியாமல் சிரமப்பட்டபோது பொறுப்பை கையில் எடுத்துக்கொண்ட ஆனந்த், தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்த ஆரம்பித்தார். ஆறு ஆண்டுகள் தந்த அனுபவத்தின் பலனாய் இன்று ஆண்டு சந்தாவில் வந்து நின்றிருக்கிறது இவரின் வியாபார உத்தி!

தங்கள் திட்டம் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார் ஆனந்த். ‘‘இந்த தியேட்டர் ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கறதால எப்பவுமே கொஞ்சம் கூட்டம் குறைவாதான் வரும். அதுவும் இல்லாம இங்க திருட்டு டி.வி.டி புழக்கமும் அதிகம். இதனால புதுப்புது படமா ரிலீஸ் செஞ்சாலும் நஷ்டமானது. ‘கோச்சடையான்’ படம் வந்தபோது திருட்டு டி.வி.டி விற்றவர்களைப் பிடித்துக் கொடுத்து கைது செய்ய வைத்தோம். ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்துவது அத்தனை சுலபம் அல்ல. அது ஒரு மாயச் சுவர். மோதி மோதி நம்ம மண்டைதான் உடையும்.

இதற்கிடையில் தியேட்டரை நவீனமாக்கினோம். ஒலி அமைப்பு, திரை அமைப்பு என எல்லாவற்றையும் அப்டேட் செய்தோம். ஆடியன்ஸை தியேட்டருக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என யோசித்தோம். முதலில் அருகில் இருந்த ஒரு பிரியாணிக் கடையில் பேசி எங்கள் தியேட்டரில் படம் பார்த்த டிக்கெட் கொண்டுவரும் ரசிகர்களுக்கெல்லாம் ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தோம்.

அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். அந்த பிரியாணி கடையும் பிரபலமானது. அந்தக் கடைக்காரர் சந்தோஷப்பட்டார். இதையே கொஞ்சம் பெரிய அளவில் செய்தால் என்ன என்று யோசித்தோம். அப்படி நண்பர்களோடு ஆலோசித்து ஆரம்பித்ததுதான், ஆண்டு சந்தா ஆயிரம் ரூபாய் திட்டம்!’’ ஆனந்தின் கண்களில் சாதித்த சந்தோஷம். திட்டத்தின் நுட்பத்தை குதூகலமாய் விவரிக்கத் தொடங்கினார்.

‘‘ஒரு நபர் ஆயிரம் ரூபாய் கட்டி இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டால் ஒரு ஆண்டு முழுவதும் இந்த தியேட்டரில் வெளியாகும் எல்லா படங்களையும் ஒருமுறை பார்க்கலாம். அவர் பார்க்க விரும்பாத படங்களை அவர் நண்பர்கள் பார்க்க தன் சந்தா அட்டையைக் கொடுத்து அனுப்பலாம். ஒரு வருஷத்துக்கு எப்படியும் 40 படங்களாவது திரையிடுகிறோம். படத்துக்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் டிக்கெட் என்றால் கூட அவர்களுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் லாபம்தான்.

அதுமட்டுமில்லாமல் நகரில் உள்ள நகைக்கடை, சிக்கன் கடை, துணிக்கடை, ஹோட்டல்கள், பேக்கரி, வாட்டர் கேன் என பல பொருட்களில் டிஸ்கவுன்ட் கிடைக்கும் வகையில் 10 கடைகளுடன் டை அப் வைத்துள்ளோம்.

இதன் மூலமாக ஆண்டுக்கு குறைந்தது 5 ஆயிரம் ரூபாயாவது ரசிகர்களுக்கு மிச்சமாகும். இந்த முயற்சி இந்த அளவுக்கு சிறப்பாகப் பேசப்பட காரணம், அந்த பத்து ஸ்பான்சர்கள்தான். சினிமா தியேட்டர்களைக் காப்பாற்றும் முன்முயற்சி இது என்பதைப் புரிந்துகொண்டு என்னோடு கைகோர்த்துள்ளார்கள்...’’ ஆனந்தின் பேச்சில் நன்றி ததும்புகிறது.

‘‘எப்படியும் 10 ஆயிரம் பேராவது திட்டத்தில் சேர்ந்துவிடுவார்கள். தியேட்டருக்கு இப்படி நிரந்தர ரசிகர்கள் கிடைத்துவிட்டால் விநியோகஸ்தர்களிடம் படங்களை நியாயமான விலைக்கு வாங்கி வெளியிட முடியும். தினமும் படம் போடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாக சாலை விழிப்புணர்வு, புவி வெப்பமடைதல், பெண்கள் பாதுகாப்பு, இயற்கையைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல், சுகாதாரம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்களைத் திரையிடவும் முடிவு செய்திருக்கிறேன்.

குடும்பத்தோடு சினிமா பார்க்க ரசிகர்களை வரவைப்பது தான் திட்டத்தின் நோக்கம். இதற்காக குழந்தைகள் விளையாட பிளே ஸ்டேஷன், பூங்கா எல்லாம் கொண்டுவரப் போகிறேன். இப்படி நிறைய திட்டங்கள் இருக்கின்றன. சக தியேட்டர் நண்பர்களின் விமர்சனங்களைத் தாண்டித்தான் இந்த முயற்சிகளை எடுத்து வருகிறேன். அவர்களும் இது போன்ற நவீன யுக்திகளைக் கைக்கொண்டால் தியேட்டர்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முடியும். தொழில் தொய்வில்லாமல் நடக்கும்!’’ என்கிறார் ஆனந்த்.

திருட்டு டிவிடியை ஒழித்து ரசிகர்களைக் குடும்பத்தோடு தியேட்டருக்குக் கொண்டுவரும் இந்த முயற்சி வெற்றியடைந்தால் கோவில்பட்டியின் உயிர் விதை நாடு முழுக்க பரவும்!
ஆயிரம் ரூபாய் கட்டி இந்தத் திட்டத்தில் சேர்ந்துவிட்டால் ஒரு ஆண்டு முழுவதும் இந்த தியேட்டரில் வெளியாகும் எல்லா படங்களையும் ஒருமுறை பார்க்கலாம்.

-எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: எஸ்.பி.பாண்டியன்