மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீ அரவிந்த அன்னை

நீ தனிமையில் இருப்பதாகச் சொல்கிறாய். ஆனால், பிரபு உன்னுடன் இருக்கிறார். நிச்சயமாக இது மிகப்பெரிய ஆறுதல்!- ஸ்ரீஅன்னைபாரத நாட்டுப் பெண்களுக்கென சில சிறப்பு இயல்புகள் உண்டு. பாரதப் பெண்மணிகள் கணவனின் உன்னதமான செயல்களில் ஓசையில்லாமல் பங்காற்றிக் கொண்டிருப்பார்கள்.

அவர்களின் தியாகம் உயர்ந்த கோபுரத்தைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரக் கற்களைப் போல உலகுக்குத் தெரியாது. இன்றும் இந்நிலை நீடிக்கிறது என்பது உண்மை. பாரதத்தின் குடும்ப அமைப்புக்கு அஸ்திவாரமே அந்த தியாக உணர்வுதான்.

ஸ்ரீஅரவிந்தர் தன் மனைவி மிருணாளினிக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியைக் காணும் முன்பு சில விஷயங்களை அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சாரதா தேவியைத் திருமணம் செய்துகொண்டார்.இளைஞரான ராமகிருஷ் ணருக்கு சதா அன்னை பவதாரிணியின் நினைவுதான். தியானத்திலேயே திளைக்கிறார். கணவனின் தீவிர தெய்வீகத் தேடல்களைப் புரிந்துகொண்ட சாரதை, அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

சொந்த பந்தங்கள் திருமணம் முடித்த தம்பதிகளிடம் உடனே எதிர்பார்க்கும் நல்ல செய்தி, ‘குழந்தை எப்போது’ என்பதுதானே!சாரதா தேவியும் இந்தக் கேள்விகளை எதிர்கொண்டார்.மெல்லிய புன்னகையை பதிலாக்கினார்.சதா சர்வ காலமும் காளியைக் காணும் தீவிரத்திலேயே இருக்கும் கணவனை லௌகீக சாகரத்தில் இழுக்க சாரதைக்கு விருப்பமில்லை.
ஒருநாள் சாரதையிடம் ராமகிருஷ்ணர் பேசுகிறார்.

‘‘சாரதை... உன்னை அம்மா என்று கூப்பிட ஒரு குழந்தை மட்டும் போதுமா? இல்லை இந்த உலகமே ‘அம்மா... அம்மா...’ என உன்னை திகட்டத் திகட்ட கூப்பிட வேண்டுமா? எதை நீ விரும்புகிறாய்?’’ என....அன்றைக்கு மாத்திரம், ‘‘என்னை  அம்மா என்றழைக்க ஒரு குழந்தை மட்டும் இருந்தால் போதும்’’ என்று சாரதை சொல்லி இருந்தால்... ராமகிருஷ்ணரின் கதி?

பகவான் ராமகிருஷ்ணர் நமக்குக் கிடைத்திருக்காமல் போகக் கூட வாய்ப்பு இருக்கிறது. இன்று உலகம் முழுக்க உள்ள ராமகிருஷ்ண பக்தர்கள் எல்லாம் சாரதாதேவியாரை ‘‘அம்மா... அம்மா...’’ என மெய்சிலிர்க்க அழைத்து மகிழ்கிறார்கள். குருமகராஜ் என ராமகிருஷ்ணரை ஆராதிக்கிறார்கள். உண்மையில் பகவான் ராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்க்கைக்குப் பின்னால் இருப்பது சாரதையின் தியாக வாழ்க்கை அல்லவா?

‘காட்டுக்குப் போ’ என கட்டளை வந்தவுடன் கணவனுடன் கானகம் ஏகினாளே ஜானகி. ஏன்?இது பாரதப் பெண்மணிகளின் மரபில் இருக்கும் பண்பு. இந்தியாவின் லட்சியப் பெண்மணி களில் அனைவருக்கும் உதாரணமாக இருப்பவள் சீதைதான்.அரவிந்தரின் மனைவி மிருணாளினியும் இப்படிப்பட்ட இடத்தில்தான் இப்போது இருக்கிறார். நன்றாகப் படித்த மாப்பிள்ளை. வெளிநாட்டிற்கு எல்லாம் சென்று படித்துள்ளார் என தாலி கட்டிக்கொண்டு வந்தவருக்கு தன் செயல்திட்டங்கள் குறித்தெல்லாம் அரவிந்தர் பேசும் கடிதம். தொடருங்கள்...

‘பண்டை ஞானிகள் இவ்வாறு முடிவு செய்தார்கள். பெண்குலம் கடைப்பிடிக்க வேண்டிய மந்திரம், ‘கணவனே பரம குரு’ என்பதுதான். மனைவி கணவனின் சகதர்மிணி; அவனுடைய தர்மத்தில் பங்கு பெறுகிறவள். அவன் தன்னுடைய சுவதர்மமாக ஏற்றுக்கொண்டுள்ள காரியத்தில் அவள் பக்கத்துணையாக நின்று ஆலோசனைகள் கூறி உற்சாக மூட்டிக் கைகொடுக்க வேண்டும். அவனைத் தனது தெய்வமாகக் கொண்டு, அவன் மகிழ்வதில் மகிழ்ந்து, அவன் துக்கத்தைத் தன் துக்கமாகக் கொள்ளவேண்டும்.

ஒரு பணியைத் தேர்ந்தெடுப்பது ஆண் மகனின் வேலை. ஆணுக்கு உற்சாகமூட்டித் துணை நிற்பது பெண்ணின் கடமை. இப்பொழுது நீ தீர்மானிக்க வேண்டியது இதுதான்... நீ இந்து மதம் காட்டும் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாயா? உனது முற்பிறவிகளில் செய்த தீய வினைகளின் பயனாய் ஒரு பைத்தியக்காரனுக்கு மனைவி ஆகியிருக்கிறாய். நம்முடைய தலைவிதியுடன் ஓர் உடன்பாட்டிற்கு வந்துவிடுவது நல்லது.

ஆனால், அந்த உடன்பாடு எப்படி இருக்கப் போகிறது?மற்றவர்களின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் நீயும் உன் கணவனைப் பைத்தியக்காரன் என ஒதுக்கிவிடப் போகிறாயா? பைத்தியக்காரன் தன்னுடைய பைத்தியப் போக்கில்தான் போய்க் கொண்டிருப்பான். உன்னால் அவனைப் பிடித்து நிறுத்த முடியாது. அவனுக்கு உன்னைவிட பலம் அதிகம். அப்படியானால், நீ ஒன்றும் செய்யாமல் மூலையில் இருந்துகொண்டு அழப் போகிறாயா? அல்லது அவனுடன் சேர்ந்து நடை போடப் போகிறாயா?

கணவன் குருடனாக இருந்ததால் நன்றாக இருந்த தனது கண்கள் மீது துணியைக் கட்டிக்கொண்டு தானும் குருடியாக நடந்துகொண்ட ராணியைப் போலப் பைத்தியக்காரக் கணவனுக்கு ஜோடியான பைத்தியக்கார மனைவி ஆகப்போகிறாயா? நீ என்னதான் பிரம்ம சமாஜப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் நீ இந்துக் குடும்பத்துப் பெண்தான். இந்து மூதாதையரின் ரத்தம் உனது நாடிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே, இரண்டாவது சொன்ன வழியைத்தான் தேர்ந்தெடுப்பாய் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

என்னைப் பிடித்துள்ள பைத்தியங்கள் மூன்று. முதலாவது பைத்தியம் - கடவுள் எனக்குக் கொடுத்துள்ள திறமைகள், மேதைமை, கல்வி, புலமை, செல்வம் எல்லாம் அவனுடைமைகளே என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னையும் குடும்பத்தையும் பராமரிப்பதற்கு இன்றியமையாத அளவிற்கு மட்டுமே எனது சொந்தக் காரியத்திற்காக நான் இவற்றைச் செலவிடலாம். மீதியைக் கடவுளுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

எல்லாவற்றையும் எனது சுகபோகத்திற்காகச் செலவு செய்தேனானால் நான் ஒரு திருடன். கடவுளிடமிருந்து செல்வத்தைப் பெற்று அதை அவருக்குத் திருப்பிக் கொடுக்காதவன் திருடனாவான் என இந்து மதம் சொல்கிறது. இதுவரை நான் ரூபாயில் இரண்டு அணாவைக் கடவுளுக்குக் கொடுத்துவிட்டு மீதிப் பதினான்கு அணாவை எனது சொந்தச் சுகத்திற்காகச் செலவு செய்து வந்திருக்கிறேன். இவ்வாறு உலக இன்பங்களில் மூழ்கிய நான், கடவுளுக்குச் சரியான கணக்குக் கொடுக்கவில்லை. இப்படி எனது வாழ்நாளில் பாதி வீணாகப் போயிற்று.

விலங்குகூடத் தன் வயிற்றையும் தனது குடும்பத்தின் வயிற்றையும் நிரப்புவதிலும் குடும்பத்தின் சந்தோஷத்திற்காக உழைப்பதிலும் திருப்தி அடைகிறது.இதுவரை நான் ஒரு விலங்கைப் போலவும் ஒரு திருடனைப் போலவும் நடந்து வந்திருக்கிறேன் என்பதை நான் உணர்ந்துவிட்டேன். அதற்காகக் கழிவிரக்கம் கொள்கிறேன். என்மீது எனக்கு அருவருப்பு உண்டாகிறது. இனியும் அவ்வாறு வாழமாட்டேன். இந்தப் பாவ வாழ்க்கையைக் கட்டோடு விட்டுவிட்டேன்.

கடவுளுக்குக் கொடுத்தல் என்றால் என்ன? நல்ல காரியங்களுக்காகச் செலவழித்தல். உஷாவுக்கும் சரோஜினிக்கும் நான் பணம் கொடுத்ததை எண்ணி வருந்தவில்லை. பிறருக்கு உதவுவது புனிதமான கடமை; அடைக்கலமாக வருகிறவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது அதை விடவும் புனிதமான கடமை. ஆனால், தனது சகோதர, சகோதரிகளுக்கு மட்டும் கொடுப்பதால், கடவுளுக்குக் காட்ட வேண்டிய கணக்குச் சரியாகி விடாது. இத்துயர் மிகுந்த காலத்தில் நாடு முழுவதுமே அடைக்கலம் வேண்டி எனது வாசலில் வந்துள்ளது.

இந்நாட்டில் எனக்கு முப்பது கோடிச் சகோதர, சகோதரிகள் இருக்கின்றனர். அவர்களுள் பலர் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மையினோர் துன்பத்திலும், துயரத்திலும் சித்திரவதைப்பட்டு எப்படியோ உயிரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவவேண்டும்.நீ என்ன சொல்கிறாய்? என்னுடன் வந்து இந்த விஷயத்தில் என் லட்சியத்தில் பங்கேற்பாயா?

அன்னையின் அற்புதம்

அன்னை தந்த வெற்றி!

“என் அம்மா வழி சொந்தங்களில் பலர் ஐ.ஏ.எஸ் படித்தவர்கள். அப்பா வழியில் ஐ.பி.எஸ். அதனால் குடும்பமே படிப்பு மேல் ஆர்வத்தோடு இருந்தது. நானும் நன்றாகப் படித்தேன். தலைமைச் செயலகத்தில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். நிறைவான வாழ்க்கை. அப்போது பத்திரிகையில் கர்மயோகி என்பவர் ஸ்ரீஅன்னையைப் பற்றி எழுதியதைப் படித்தேன். அதன் பிறகு அன்னை மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டானது. கர்மயோகி ஏற்பாடு செய்திருந்த தியான வகுப்பில் கலந்துகொண்டேன். அன்னையின் தரிசனம் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு எல்லாமே அன்னைதான் என முடிவு செய்தேன்.

கனடாவில் இருந்து கேரி ஜேக்கப்ஸ் என்பவர் கர்மயோகியை தரிசிக்க வந்தார். கிளென்டாமன் என்பவர் மூளைத் திறன் குறித்து ஆய்வு செய்து எழுதியிருந்த13 தொகுதி புத்தகத்தை அவர் கொண்டு வந்திருந்தார்.

கர்மயோகி அதை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே ஒரு தாயால் அந்தக் குழந்தைக்கு போதிக்க முடியும் என்பது அதில் விவரிக்கப்பட்டிருந்தது. அது பற்றி படிக்க அமெரிக்காவில் ஒரு வருட கோர்ஸ் இருந்தது. சுமார் 30 லட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். நான் அமெரிக்கா செல்ல எல்லா ஏற்பாடுகளையும் கர்மயோகி செய்தார். இந்தியக் குழந்தைகளை சூப்பர் குழந்தைகளாக்க வேண்டும் என்பது லட்சியம். நான் அரசு வேலையில் இருப்பதைக் காரணம் காட்டி அமெரிக்கத் தூதரகம் விசா தர மறுத்தது.

அன்னை என்னை இந்தப் பணியை விட வேண்டும் என உணர்த்தினார். உடனே வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆராய்ச்சியில் இறங்கினேன். சுயமாக ஆராய்ச்சி செய்து புதுவையில் கிராமப்புற குழந்தைகள் மத்தியில் அதை செயல்படுத்திப் பார்த்தேன். நல்ல ரிசல்ட் கிடைத்தது. அரசாங்கம் பாராட்டி திட்டத்தை விரிவுபடுத்த உதவியது. பிறகு, சென்னை வந்து கர்மயோகியின் ஆசியோடு கருவிலேயே கல்வி தரும் பணியை இன்றும் செய்துவருகிறேன்.

என் எல்லா வெற்றிகளுக்குப் பின்னாலும் ஸ்ரீஅன்னை இருக்கிறார். இதுவே என் பலம். இப்போது சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கிறேன். இங்கு திருவள்ளுவர் தெருவில் கிருஷ்ணா சாகர் அடுக்ககத்தில் இருக்கும் அன்னை தியான மையத்திற்கு வரும் அன்பர்களுக்கு அன்னையின் அருள் கிடைக்க வழிகாட்டுகிறேன். அன்னையின் சேவையே என் வாழ்வு!’’ என நெகிழ்கிறார் ரேவதி சங்கரன்.

வரம் தரும் மலர்

தைரியம் தரும்  எருக்கம் பூ!

இது தேர்வு நேரம். மாணவர்களின் விழிப்புணர்ச்சியும் அச்சமின்மையுமே வெற்றி தரும். இவை இரண்டையும் பெற கனகாம்பரம் பூவையும் எருக்கம்பூவையும் அன்னைக்கு சமர்ப்பித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் கவனம் அதிகமாகும். தைரியம் பிறக்கும். இது வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும்!

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்
ஓவியம்: மணியம் செல்வன்