அவதார் டெக்னாலஜியில் அனுஷ்கா!



ருத்ரமாதேவி Exclusive

தெலுங்கில் டாப் மோஸ்ட் டைரக்டர் குணசேகர். அவரின் ‘ஒக்கடு’தான் இங்கே ‘கில்லி’. அனுஷ்கா நடிக்கும் ‘ருத்ரமாதேவி’ அவரின் லேட்டஸ்ட் மெகா ப்ராஜெக்ட். ஆந்திர மீடியாக்களுக்கு அவர் அப்பாயின்ட்மென்ட் அரிதினும் அரிது. இளையராஜா இசைக்கோர்ப்புக்காக சென்னை வந்து, ஏவி.எம்மில் கேஷுவல் லுக் கொடுக்கிறார் மனிதர். ‘‘நமஸ்காரம் காரு’’ சொன்னால், ‘‘வணக்கம்... வாங்க...’’ என இன்ப அதிர்ச்சி தருகிறார் குணசேகர்!‘‘யார் இந்த ருத்ரமாதேவி?’’

‘‘13ம் நூற்றாண்டில் 40 ஆண்டுகள் காகதீயப் பேரரசை அரசாட்சி செய்த அரசிதான் ருத்ரமாதேவி. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘ராஜராஜ சோழன்’ மாதிரி இது ஒரு வரலாற்றுப் படம். இந்தக் காலத்துக்கு ஏத்த பிரமாண்டப் படைப்பு. காகதீயப் பேரரசு என்பது பாடத்திலேயே வரும். காஞ்சி புரத்திலிருந்து இப்போதைய ஒடிஷா வரை பரவியிருந்த சாம்ராஜ்யம். ஆனாலும், ‘ருத்ரமாதேவி’ ஸ்கிரிப்ட்டுக்கு நிறைய ஹோம் வொர்க் தேவைப்பட்டது. டெல்லி மியூசியம் வரை போய்ப் பார்த்துட்டோம்.

சரியான புத்தகம் கூட கிடைக்கலை. கல்வெட்டுத் தகவல்களை எல்லாம் கஷ்டப்பட்டு சேகரிச்சோம். அந்த நூற்றாண்டை கண் முன்னால் கொண்டு வரணும்ங்கறதுக்காக படத்தை 3டில பண்ண முடிவு செய்தேன். அதுக்காக லண்டன்ல ஸ்பெஷல் கோர்ஸ் படிச்சேன். நானும், கேமராமேன் அஜயன் வின்சென்ட்டும் கம்ப்ளீட் ஸ்டீரியோஸ்கோபிக் 3டியில  ஹாலிவுட் டெக்னீஷியன்ஸ வச்சு ஷூட் பண்ணியிருக்கோம். ‘அவதார்’ல பயன்படுத்தின டெக்னாலஜி இது!’’

‘‘தெலுங்கில் பெரிய ஹீரோக்களுக்கு ஹிட் கொடுத்துட்டு, திடீர்னு ஏன் ஹீரோயின் சப்ஜெக்ட்..?’’‘‘ ‘ஒக்கடு’க்கு அப்புறமே தொடங்கி இருக்க வேண்டிய படம் இது. ஆனா, ஹீரோயின் சப்ஜெக்ட்னா அந்த அளவு பிஸினஸ் ஆகாதுன்னு இங்க நினைப்பு இருக்கு. அதனால நானே படத்தைத் தயாரிக்க ஆரம்பிச்சிட்டேன்.

ஹீரோ-ஹீரோயினை விட நான் கதையை பெருசா நம்புறேன். கிராஃபிக்ஸ், 3டி டெக்னாலஜினு பெரிய அளவில் பட்ஜெட் போனதால, இதை இரு மொழிப் படமா பண்ணலாம்னு நினைச்சேன். ராமநாராயணன் சாரோட மகன் முரளிகிட்ட சொன்னேன். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பில் தமிழ்ல தயாரிக்க அவர் சந்தோஷமா முன்வந்தார்!’’

‘‘டிரெய்லர் பிரமாண்டமா இருக்கு... முழுப்படத்திலும் அதை எதிர்பார்க்கலாமா?’’‘‘நிச்சயமா! 3டியில் பாருங்க... மிரட்டலா இருக்கும். அனுஷ்கா, விஜயகுமார், பிரகாஷ்ராஜ், சுமன், ராணா, அல்லு அர்ஜுன், நித்யா மேனன், கேத்தரின் தெரஸான்னு அத்தனை ஆர்ட்டிஸ்ட்களும் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ப்ளஸ். ரெண்டரை வருஷமா ஷூட்டிங் போச்சு. கூப்பிட்ட நேரத்துக்கு வந்து நடிச்சுக் கொடுத்தாங்க. அல்லு அர்ஜுன் இதுல மெயின் கேரக்டர் பண்ணியிருக்கார்.

ராபின் ஹூட் மாதிரி அவரோட கேரக்டர் பேசப்படும். ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி, 16 பிரமாண்ட செட்கள் போட்டுக் கொடுத்தார். இந்தியில் ‘ஜோதா அக்பர்’ல காஸ்ட்யூம் டிசைனரா இருந்த நீட்டா லுல்லா காஸ்ட்யூம்ஸை நீட்டா பண்ணிக் கொடுத்திருக்காங்க. எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத், பீட்டர் ஹெயின் ஸ்டன்ட்ஸ்னு பெரிய டீம் செட் ஆனது எங்களோட பலம்!’’‘‘அனுஷ்கா...’’

‘‘அனுஷ்கா காருவோட உழைப்பு பத்தி சொல்லியாகணும் சார். அவங்ககிட்ட கதையைச் சொன்னப்பவே, ரொம்பவே இன்ஸ்பையர் ஆகிட்டாங்க. அவங்க இதுல மகாராணி மட்டுமல்ல... ஒரு போர் வீராங்கனை என்பதால் ஜிம் போய், ஸ்லிம் ஆகி, கேரக்டருக்கு ஃபிட்டா வந்தாங்க. ஹார்ஸ் ரைடிங், யானை சவாரி, வாள் சண்டைன்னு ரிஸ்க்கான விஷயங்களைக் கத்துக்கிட்டாங்க.

கிரேன் மேல ஏற வைக்கிறது, அந்தரத்தில் ரோப் கட்டி குதிக்க வைக்கறதுன்னு ஒரு ஹீரோ எந்த அளவு ரிஸ்க் எடுப்பாரோ அதை விட அதிக ரிஸ்க் எடுத்திருக்காங்க. க்ளைமேக்ஸ் வாள் சண்டை யின்போது அனுஷ்கா விரல்ல வாள் பட்டு, ஃபிராக்சர் ஆகிடுச்சு. ஆனா, அதையெல்லாம் கண்டுக்காம நடிச்சுக் கொடுத்தாங்க. ஹேட்ஸ் ஆஃப் அனுஷ்கா!’’‘‘‘பாஹுபலி’யிலயும் அனுஷ்காதானே... அதுவும் இதே டைப்தானே?’’

‘‘நோ... நோ... அந்தப் படத்துக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. 800 வருடங்களுக்கு முன் ஒரு வீரமங்கையா வாழ்ந்த கேரக்டர் ‘ருத்ரமாதேவி’. ‘பாஹுபலி’ நாட்டுப்புறக் கதை. இது நடந்த கதை. வரலாறு!’’‘‘இளையராஜா...’’‘‘இளையராஜா சாரே டிரெய்லர் பார்த்துட்டு, ‘இந்த பிரமாண்டத்துக்கு கொஞ்சம் டைம் எடுத்து பண்ணினா கிராண்டா இருக்கும்’னு சொல்லி வொர்க் பண்ணினார். பின்னணியில சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா சேர்க்கறதுக்காக லண்டன் போறோம். ஹாலிவுட் ‘பேட்மேன்’ படத்துக்கு இசையமைச்ச குரூப், ராஜா சாரோட நோட்ஸுக்கு இசையமைக்கப் போகுது. பாடல்களை பா.விஜய் எழுதியிருக்கார். தமிழில் வசனமும் அவர்தான் பண்றார்!’’

‘‘அனுஷ்காவோட நகைகள் இதில் ரொம்ப ஸ்பெஷலாமே?’’‘‘இந்தப் படத்துக்காக 5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை என்.ஏ.சி ஜுவல்லர்ஸ் 13ம் நூற்றாண்டு வகை டிசைன்ஸ் மாதிரியே ஸ்பெஷலா பண்ணியிருந்தாங்க. ‘ஒவ்வொரு பொண்ணுக்குமே இப்படி நகைகள் போட்டுக்க ஆசை இருக்கும்’னு அனுஷ்கா சொன்னாங்க. படம் ரிலீஸுக்குப் பிறகு ‘ருத்ரமாதேவி கலெக்ஷன்ஸ்’னு அது விற்பனைக்கு வருது!’’‘‘நல்லா தமிழ் பேசறீங்களே..?’’

‘‘நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் விசாகப்பட்டினம். ஆனா, ஒரு உதவி இயக்குநரா சென்னையில இருந்துதான் என் கேரியர் ஸ்டார்ட் ஆச்சு. 10 வருஷம் சென்னையில இருந்தேன். அப்போ தெலுங்கு சினிமா வேலைகள் கூட சென்னையிலதான் போயிட்டிருந்தது. தமிழ்ப் படங்களோட தாக்கம் எங்கிட்ட அதிகம் இருக்கும்.

தெலுங்கு இயக்குநர் காந்திகுமார், ராம்கோபால் வர்மா இவங்ககிட்ட வொர்க் பண்ணினேன். என்னோட ‘ஒக்கடு’, தமிழ்ல ‘கில்லி’யானப்ப அதையும் நான்தான் இயக்கி இருக்க வேண்டியது. தெலுங்கில் பிஸியாகிட்டதால முடியாமப் போச்சு. மொத்தத்துக்கும் சேர்த்து ‘ருத்ரமாதேவி’ வருது... பாருங்க!’’

- மை.பாரதிராஜா