நான் பிள்ளைக்குட்டிக்காரன் மன்னா!எங்கேயோ பார்த்த முகம்

சிசர் மனோகர் அவ்வ்வ்வ்....

நெற்றியில் விபூதி, குங்குமம்... ரிங்டோனில், ‘அழகெல்லாம் முருகனே’ - சூலமங்கலம் சகோதரிகள் பாடல்... பக்தி மணக்க வரவேற்கிறார் சிசர் மனோகர். புரொடக்ஷன் சைடிலிருந்து நடிகராக ப்ரமோஷன் ஆனவர்.

‘‘நேத்துதான் ஷாப்பிங் போயிருந்தேன். இதுல எந்த கலர் சட்டை போட்டால், போட்டோவுக்கு நல்லா தெரியும்?’’ என கையில் இருந்த புதுச்சட்டைகளைக் காட்டிவிட்டு ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் கொடுத்து வரவேற்கிறார் சிசர்.

‘‘ஒரிஜினல் பெரு பழனிச்சாமிங்க. புரொடக்ஷன் சீஃப் பழனின்னா, இண்டஸ்ட்ரீயில எல்லாருக்கும் தெரியும். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்துல இளையாத்தங்குடி கிராமம். கூடப் பிறந்தவங்க 7 பேர். ஒரு அக்கா, ஒரு தங்கச்சி... மீதி எல்லாரும் பசங்க. ஆறாம் வகுப்புல 3 வருஷம் ஃபெயில். ‘உனக்கு படிப்பு ஏறாது’ன்னு சொல்லி சென்னைக்குக் கூட்டி வந்த அண்ணன், பாரீஸ் கார்னர்ல ஒரு போட்டோ ஸ்டூடியோவுல வேலைக்கு சேர்த்து விட்டான். அப்படியே ஏரியாவுல நல்லா பழகிட்டேன்.

அந்தப் பழக்கம்தான் முதலீடு. பாரீஸ்ல மொத்தமா துணி வாங்கி அடிமட்டத் தொழிலாளர்களுக்கு விக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல நல்லா போச்சு. ஒரு கட்டத்துல, ‘அப்புறம் தர்றேன்’னு துணி வாங்கினவங்க யாருமே காசு தரல. கடன் தந்த சேட்டு முகத்துல முழிக்க முடியாமப் போச்சு.

ஒரு கதவு மூடினா மறு கதவு திறக்கும்ங்கிற மாதிரி, துணி வாங்கினவங்க கூட சேர்ந்து நானும் அவங்க பண்ற வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். சினிமா புரொடக்ஷன்ல பாத்திரம் கழுவுற வேலையில கொண்டு போய் விட்டுச்சு அது. அங்க இருந்துதான் தொடங்கிச்சு நம்ம வாழ்க்கை!

மெல்ல மெல்ல புரொடக்ஷன் வேலை எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். படிப்படியா இல்ல... இன்ச் இன்ச்சா மேல வந்தேன். புரொடக்ஷன் சீஃப்பா நான் வொர்க் பண்ணின முதல் படம் ‘கன்னி ராசி’. ஒரு காலத்துல அகத்தியன் சார், சேரன் சார் எல்லாரும் என் ரூம் மேட்ஸ். கே.எஸ்.ரவிக்குமார் சாரோட கம்பெனி ஆர்ட்டிஸ்ட்னு என்னைச் சொல்லலாம். ‘லிங்கா’ வரை அவர் இயக்குகிற படங்கள் எல்லாத்திலும் எனக்கு ஒரு ரோல் கிடைச்சிடும்.

அகத்தியன் சாரோட ‘கோகுலத்தில் சீதை’யில நான் புரொடக்ஷன் பார்த்துட்டு இருந்தேன். பிரபுசாலமன் சார் அப்ப அகத்தியனுக்கு அசிஸ்டென்ட். ‘அந்த பொறுக்கி கேரக்டருக்கு நம்ம பழனியே செட் ஆவார். ஆனா நடிப்பாரா?’னு கேட்டார். ‘அவன் ரூம்ல சும்மா பேசும்போதே நடிச்சுக்கிட்டே பேசுவான்’னு அகத்தியன் சார்தான் நம்பிக்கையா என்னை நடிக்க வச்சார். அதுல சிகரெட் குடிச்சிக்கிட்டே வந்ததாலதான் சிசர் மனோகர் ஆனேன்.

பாலசேகரனோட ‘துள்ளித்திரிந்த காலம்’ படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரிச்சப்போ, முதல் முதலா எனக்கு ‘சிசர் மனோகர்’ங்கற பெயர்ல அட்வான்ஸ் கொடுத்தாங்க. ‘ஆடுங்கடா ஆடுங்க... பூமாதேவி வாயத் தொறக்கப் போறா... எல்லாரும் உள்ள போவப் போறீங்க’ன்னு அதுல நான் அடிக்கடி பேசின டயலாக் நல்ல பேர் வாங்கிக் கொடுத்துது.

கமல் சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவரோட ஆறேழு படங்கள் நடிச்சிருப்பேன். ‘தேவர் மகன்’ படத்துக்கு நான் புரொடக்ஷன் வொர்க் பார்த்தப்போ சிவாஜி சாரை கவனிக்கிற பொறுப்பு என்னுது. அதுல இருந்து ‘டேய் பழனி’ன்னு என்னோட பாசமா பழக ஆரம்பிச்சிட்டார் அவர். ராஜ்கிரண் சார் படங்கள்ல எல்லாம் நான்தான் புரொடக்ஷன் சீஃப். அவர் படம்னாலே யூனிட்ல எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க. ஏன்னா, சாப்பாட்டுல அவர் வேறுபாடு பார்க்க மாட்டார். ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ அதுதான் யூனிட்ல எல்லாருக்கும்.

‘என் ராசாவின் மனசிலே’ படத்துல தொடங்கி வடிவேலு சாரோட ஆரம்பத்துல இருந்து டிராவல் பண்றேன். ‘இம்சை அரசன்’ படத்துல வர்ற ‘தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்னா என்ன?’ங்கறது சத்தியமா எனக்கும் தெரியாதுங்க. எங்கே போனாலும் மக்கள் அதைத்தான் கேக்குறாங்க.

‘நான் பிள்ளைக்குட்டிக்காரன் மன்னா’ன்னு நான் நடுங்கறது செம ரீச். விவேக் சாரோடவும் நிறைய படங்கள்ல காமெடி பண்ணியிருக்கேன். ஆனா, இவரோட குரூப், அவரோட குரூப்னு என்னை யாரும் சொன்னது கிடையாது. எல்லோர் கூடவும் வொர்க் பண்ணுவேன். ‘முதல்வன்’ படத்துல நான் பிரச்னை பண்ற பஸ் டிரைவர். ‘பஸ்ஸ மேல ஏத்திருவியோ... என் சாதிக்காரனுவ சும்மா விட்ருவாய்ங்களோ’னு அதுல பேசின வசனம் ரொம்ப உணர்ச்சிகரமா இருந்ததுனு சொன்னாங்க!

எனக்கு அரேஞ்ஜ்டு மேரேஜ்தான். மனைவி பேர் சுமதி. முப்பெரும் தேவியர் மாதிரி, 3 மகள்கள். எல்லாருமே படிச்சிட்டிருக்காங்க. நான் சினிமா துறைக்கு வந்து 33 வருஷம் ஆகப்போகுது. புரொடக்ஷன் மேனேஜரா 25 படங்களுக்கு மேல பண்ணிட்டேன். 240 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். கைவசம் இப்போ 8 படங்கள் இருக்கு. அகத்தியன் சார் மட்டும் என்னை நடிக்க வைக்கலைன்னா, நான் புரொடக்ஷன்ல கவனம் செலுத்தி, இன்னிக்கு ஒரு தயாரிப்பாளரா ஆகியிருப்பேன். காசு, பணம் சேர்ந்து வசதியா வந்திருப்பேன்.

ஆனா என்னை யாருக்குத் தெரிஞ்சிருக்கும்? நடிகனானதால எங்கே போனாலும் என்னை அவங்க வீட்டுல ஒரு ஆளா நினைச்சுப் பழகுறாங்க. கடவுள் இப்படி என்னை வச்சிருக்கறதே சந்தோஷம்தான். பொண்ணுங்களை நல்ல இடங்கள்ல கல்யாணம் முடிச்சுக் கொடுத்த பிறகு, எனக்குள்ள தூங்கிட்டிருக்கும் படைப்பாளி முழிச்சுக்குவான். நான் என் நண்பர்கள்கிட்ட யதார்த்தமா சொன்ன கதை எல்லாம் வேற வேற ஆட்கள் இயக்கினதா வெளிவந்திடுச்சு.

யாரையும் குறை சொல்ல விரும்பல. என்னோட கமிட்மென்ட்ஸ் முடிஞ்சதும், நானும் டைரக்டராவேன். அதான் என் லட்சியம்... கனவு... ஆசை... எல்லாம்!’’ஒரு தயாரிப்பாளரா ஆகியிருப்பேன். காசு, பணம் சேர்ந்து வசதியா வந்திருப்பேன். ஆனா என்னை யாருக்குத் தெரிஞ்சிருக்கும்?

-மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்