அழியாத கோலங்கள்



கலைவாணர் பற்றி நினைத்ததும் அடுத்து எனக்கு நினைவுக்கு வருவது ‘என் இனிய தமிழ் மக்களின்’ பாரதிராஜாதான். அவருடைய முதல் படமான ‘16 வயதினிலே’ வெளியானபோது தொடர்ந்து மூன்று மாதங்கள் இடைவிடாது மழை பெய்தது.

இந்த ஒரு இயக்குனரின் படத்தைத்தான் சென்னை மக்கள் அடைமழையிலும் குடை பிடித்துக்கொண்டு ஹவுஸ்ஃபுல்லாக மிட்லண்டு சினிமாவில் ஓடும்படி செய்தார்கள். இன்று அதற்குப் பெயர் ‘தியேட்டர் ஜெயப்ரதா’. சென்னை திருவல்லிக்கேணி பேகம் சாஹிப் தெருவில் இருக்கிறது. அதன் இன்றைய உரிமையாளர் முன்னாள் பிரபல நடிகை ஜெயப்ரதா; பின்னாளில் அரசியலில் நுழைந்து மக்களவை உறுப்பினராக இருந்து, அரசியல் தொண்டராக தொடர்கிறார் இவர்.

அது கத்திச்சண்டை, குத்துச்சண்டைக்கு மத்தியில் படங்கள் ஓடிய காலம். எம்ஜிஆர் - சிவாஜி ரசிகர்களுக்கு இடையே நடந்த போட்டியில் அதுவரை முப்பெரும் நடிகர்களில் ஒருவராக இருந்த காதல் மன்னன் ஜெமினி கணேசனைக்கூட ஓரங்கட்டி விட்டார்கள்.

நடிகர் ஜெய்சங்கர் குட்டி எம்.ஜி.ஆர் என்றும், சிவகுமார் குட்டி சிவாஜியாகவும், நடிகர் ரவிச்சந்திரன் குட்டி காதல் மன்னனாகவும் அதன் பின்னால் நிற்பவர்கள் வால் நட்சத்திரங்களாகவும் கருதப்பட்டார்கள். மற்றவர்களை எல்லாம் கிரகண காலத்தில் சொல்வார்களே... அது போல் ‘பக்க சூலைகள்’ என்று சொல்லலாம். சூரிய - சந்திர கிரகண காலங்களில் மாந்திரீக நிவாரணம் தேடுவார்கள்.

இதற்கெல்லாம் மத்தியில் பலவித எழுத்தாளர்களிடையே ஒரே ஒரு ஜெயகாந்தன் தோன்றியது போல் பாரதிராஜா என்ற இந்த அரிய படைப்பாளி தோன்றினார். முதல் காட்சியில் ‘அம்மா நான் பாஸாயிட்டேன்...’ என்று தன் விடைத்தாள்களை தானே திருத்தி தனக்குத்தானே நூறு மதிப்பெண்கள் கொடுத்த மாணவன் போல், படத்தையும் 175 நாட்கள் ஓடச் செய்த தமிழ் சினிமாவின் மாவீரன் பாரதிராஜா.

அந்தப் படம் ஆரம்பிக்கும் முன்பு, கமல் என்னை ஸ்டுடியோவுக்கு வருமாறு அழைப்பு விடுக்க, நான் நேரே ஏவி.எம் ஸ்டுடியோவுக்குச் சென்றேன். மலையாள சினிமா உலகில் நாயகனாக உயர்ந்த கமல், தமிழில் திறமையை மட்டும் மூலதனமாகக் கொண்டு பக்கபல நடிகனாக நாள் ஒன்றுக்கு மூன்று திரைப்படங்களில் தூக்கமின்றி உழைத்த நேரம் அது...

 என்னை பாரதிராஜாவுக்கு அறிமுகப்படுத்தி, ‘‘இவருக்கு அடுத்த மாதம் தொடர்ந்து 15 நாட்கள் எப்படியாவது கால்ஷீட் கொடுத்தாக வேண்டும்’’ என்று ஒரு கட்டாய உத்தரவிட, அதை ‘அன்றே செய்தேன்... அதுவும் நன்றே செய்தேன்’. இன்றும் எனக்குத் தவிர்க்க முடியாத ஒரு பெருமை அது!

ஒரு முறை வெளிப்புறப் படப்பிடிப்பில் தயாரிப்பு நிர்வாகியின் தவறால், படச் சுருள் வந்து சேரவில்லை. ஃபைனான்சியர் மட்டும் கொடுத்த பணத்துக்கு வேலை நடக்கிறதா என்று பார்க்க படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். இதனால் இயக்குனரும் கதாநாயகனும் ஒரு தந்திரம் செய்து, காலி கேமராவை ஓட்டி நிலைமையை சமாளித்ததாக அரசல் புரசலாக தகவல்! கோடம்பாக்கத்தில்தான் ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் சாதனையாளர்கள் கூட்டமே உண்டே!

எனக்கு ஏற்கனவே ஒரு கெட்ட பெயர். ‘கதாநாயகன் கால்ஷீட் வாங்க ஒரு வக்கீலிடம் கதை சொல்லி அந்த வக்கீலுக்குப் பிடித்தால்தான் படம் எடுக்கலாம். இது தமிழ் சினிமாவுக்கு வந்த கேடு’ என்ற அங்கலாய்ப்பு அது; என் காதுக்கு வந்தது. அந்த நேரத்தில் இந்த ‘பதினாறு வயதினிலே’ பட ஸ்டில்களில் கமலிடம் வெற்றிலை பாக்கு வழிந்தது.

நான் பாரதிராஜாவிடம் எரிந்து விழுந்தேன்! ‘‘என்னய்யா இது? என் தம்பி ‘லேடி கில்லர்’ என்று பெயர் வாங்கி, பெண்களெல்லாம் மயங்குகிறார்கள் என்று ஊரெல்லாம் பேசறாங்க. நீங்க அவன் பேரைக் கெடுக்கவா படம் எடுக்குறீங்க?’’ என்று கத்தினேன். பாரதிராஜா பொறுமையாகச் சிரித்துக்கொண்டே, ‘‘ஒரு நல்ல படம் எடுக்கிறோம்... பின்னாடிதான் உங்களுக்குப் புரியும்” என்றார்.

படத்தின் முதல் பிரதி வந்ததும் எங்கள் குடும்பத்துக்கு ஒரு தனிக் காட்சி ஏற்பாடு செய்தார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை முதல் காட்சி பார்த்தபோது ஒரு முறை கண்ணீர் வந்தது... அது ஆனந்தக் கண்ணீர். அதற்குப் பின் எனக்குக் கண்ணீர் வந்தது பாரதிராஜாவின் இந்தப் படத்தில்தான். இந்த சமயம் நெஞ்சைப் பிழிந்த கண்ணீர். மறுநாளே இயக்குனர் கே.பாலசந்தருக்கு காட்சி ஏற்பாடு செய்தோம்.

நானும் அந்தக் காட்சிக்குச் சென்றேன். படம் முடிந்ததும் சிகரம் பாரதியின் கையைக் குலுக்கிவிட்டு ஒன்றும் பேசாமல் போய்விட்டது. பாரதிக்கு கண்ணீர் வராததுதான் குறை!
பாரதிராஜாவை வீட்டுக்கு அழைத்து வந்து, பாலசந்தருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் கூறிய சொற்கள் என்னால் இன்றும் மறக்க முடியாதவை. ‘‘எங்கேயிருந்து முளைச்சான்டா இந்தப் பையன்? நானும் ஒரு டைரக்டர்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கப்பா!’’ மறக்க முடியாத ஒரு திறமைசாலி இன்னொரு திறமைசாலியைப் பாராட்ட இதற்கு மேல் ஒரு கவிதை படைக்க முடியாது!

பாரதிராஜாவின் திறமை பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. அவருடைய மனிதாபிமானம் அவருடைய படைப்புகளை விட சிறப்பானது. அவருடன் என்.எம்.பி.சி நிறுவனத்தில் வேலை செய்த ஜெயராமன் ஒருமுறை என் வீட்டுக்கு வந்திருந்தார்.  அன்று பாரதி ராஜா எங்கள் வீட்டில் ஷூட்டிங் நடத்த வருவதாக இருந்தது. ‘‘உன்னுடைய பழைய நண்பன் என்று பெயரைச் சொல்லி கூப்பிட்டு விடாதே! இன்றைக்கு அவர் இந்தியாவிலேயே சிறந்த டைரக்டர். பார்த்து நடந்து கொள்’’ என்று ஜெயராமனை எச்சரித்து வைத்தேன்.

பாரதிராஜா காரில் வந்து இறங்கி ஸ்டைலாக நடந்து வந்து, ‘‘குட் மார்னிங் சாரு அண்ணா!’’ என்றவர், திடீரென்று என் பின்னால் நின்றவரைப் பார்த்ததும் ‘‘அடே ஜெயராமா, நீயா?’’ என்று பாய்ந்து கட்டிக்கொண்டார். ஜெயராமனும், ‘‘அடே சின்னச்சாமி!’’ என்று கட்டிக்கொண்டார். சிறந்த டைரக்டர் என்பதை விடவும் மேலே ஒரு படி, சிறந்த மனிதன்.

கவிதைக்கு ஒரு தினம்

நடுங்கும் குளிரில்
நினைவில்
ஒரு தாள் கிழித்து
உனக்காக
ஒரு கவிதை எழுதுகிறேன்
ஒவ்வொரு சொல்லும்
என்னை எரித்து
குளிர்காய்ந்து
கொண்டிருக்கிறது
(உன் மீதமர்ந்த பறவை - பழநிபாரதி, விலை: ரூ.60/-, குமரன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600017. பேச: 044-24312559.)

''எங்கேயிருந்து முளைச்சான்டா இந்தப் பையன்? நானும் ஒரு டைரக்டர்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கப்பா!’’

(நீளும்...)