இந்தியா இவ்ளோ பெரிய தில்லாலங்கடியா?லீக் சுற்று முடிந்து கால் இறுதி யில் மோதப் போகும் அணிகள் கைகள் பரபரக்க காத்திருக்கின்றன. இனி எல்லாமே ‘வாழ்வா... சாவா..?’ ஆட்டங்கள்தான். தலைகள் உருள... கோப்பை ரணகளமாகப் போகிறது.

டோனி அண்ட் கோ இப்படி தொடர்ச்சியாக பத்து வெற்றிகளைப் பதிவு செய்து சாதனை படைக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவோ கணிக்கவோ முடியாததில் ஆச்சரியம் இல்லை. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அதைத் தொடர்ந்து நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியிலும் நமது அணி உதை வாங்கிய விதம் அப்படி!

இன்னும் கூட இந்தியா அவ்ளோ பெரிய தில்லாலங்கடி டீம் என்பதை நம்ப முடியவில்லை. கடந்த உலகக் கோப்பையில் கடைசியாகப் பெற்ற நான்கு வெற்றிகளோடு சேர்த்து, நடப்பு தொடரின் லீக் சுற்றில் எல்லா அணிகளையும் விழுங்கி ஏப்பம் விட்டது உலக அதிசயம்தான். கபில்தேவ், கங்குலி சாதனைகளையெல்லாம் தகர்த்து தன்னிகரில்லா இந்திய கேப்டனாக வரலாறு படைத்திருக்கிறார் டோனி.

‘ஆஃப் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை!’, ‘உள்ளூர் பிட்ச்சில் ஆடுவதற்கு மட்டுமே லாயக்கு...’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட தவான் இப்படி அட்டகாச ஃபார்முக்கு வந்தது; ஆஸி. டெஸ்ட் தொடரில் ஒரு முறை கூட 20 விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்திய பவுலர்கள், உலகக் கோப்பையில் ஆட்டத்துக்கு ஆட்டம் எதிரணியை ஆல் அவுட் செய்வது;

சுத்த வேஸ்ட் என்று ஓரங்கட்டப்பட்ட ஸ்பின்னர் அஷ்வின், விக்கெட் வேட்டையில் காட்டும் தீவிரம்; ஒட்டுமொத்த வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டம்... என்று ஆச்சரியக் குறிகள் அணிவகுக்கின்றன. பந்து வீச்சாளர்களின் ஒத்துழைப்பில் கேப்டன் டோனியின் உற்சாகம் சிறகடிக்கிறது... தனது பவுலர்களுக்கு இந்தியில் ஆலோசனை வழங்கி எதிரணி பேட்ஸ்மேன்களை டபாய்த்ததைக் கூட மீடியாவிடம் நகைச்சுவையோடு பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு! 

அதே சமயம், இதுவரை காட்டிய பாய்ச்சல் எல்லாம் இனி கணக்கில் வராது என்பதையும் இந்திய வீரர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாக் அவுட் சுற்றில் இன்னும் வலுவான எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இங்கிலாந்து அணியை வீழ்த்தி, முதல்முறையாக கால் இறுதிக்கு முன்னேறி இருக்கும் வங்கதேசத்தையும் அலட்சியப்படுத்துவதற்கில்லை. அபாரமாகப் பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்த ருபெல் உசேன் மீது தான் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நடிகை நஸ்னின் அக்தர் ஹேப்பி அறிவித்துள்ளார்.

(தன்னைக் காதலித்து, திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக அவர் போட்ட வழக்கால், உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவதுகூட சந்தேகம் என்ற நிலையில் இருந்தார் ருபெல்!) தங்கள் அணியின் முன்னேற்றத்தால் அந்நாட்டு ரசிகர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதற்கான சாம்பிள் இது.

கோப்பையைத் தட்டிச் செல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவை கணித்தாலும், இலங்கை அணியின் திடீர் எழுச்சி எல்லா கணக்கையும் குழப்பி மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்க வைத்துவிட்டது. தில்ஷன், சங்கக்கரா இப்படியா வெளுத்து வாங்குவார்கள்? ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடர்ச்சியாக நான்கு சதம் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் சங்கா.

‘இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு இப்படி அநியாயத்துக்கு அடித்து நொறுக்குவது என்ன நியாயம்?’ என்று எதிரணிகள் அங்கலாய்க்கின்றன. ‘ஓய்வு முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மண்டியிட்டு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கெஞ்சுகிறார் இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ். இதுவரை பெரிதாக அமர்க்களம் செய்யாத ஜெயவர்தனே நாக் அவுட் பன்ச் கொடுப்பதற்காகவே காத்திருக்கிறாரோ என்னவோ!

ரன் குவிப்பில் சங்கக்கரா, டி வில்லியர்ஸ், தில்ஷன், தவான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விக்கெட் வேட்டையில் ஸ்காட்லாந்தின் ஜோஷ் டேவி முந்திரிக் கொட்டையாய் மூக்கை நீட்டினாலும், அந்த அணி லீக் சுற்றோடு வெளியேறுவதால் நியூசிலாந்தின் போல்ட், சௌதீ முன்னேறும் வாய்ப்பு அதிகம். கெவின் பீட்டர்சனின் சாபம்தான் இங்கிலாந்து அணியை லீக் சுற்றோடு மூட்டை கட்ட வைத்துவிட்டது என்கிறார்கள் அந்நாட்டு ரசிகர்கள்.

அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஏற்படுத்திய சலசலப்பு அளவுக்குக் கூட தங்கள் அணி எதையும் செய்யாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றம். ஆனாலும், வீரர்களோ, அந்நாட்டு கிரிக்கெட் வாரியமோ இதுபற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியம்தான். நமது அணி இப்படி தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்யவே பயங்கரமாக இருக்கிறது. நல்லவேளை! வெற்றிகரமாக அரைக் கிணறு தாண்டிவிட்டார்கள். இன்னும் மூன்று வெற்றி மட்டுமே தேவை, கோப்பையை யாருக்கும் கொடுக்காமல் திரும்பக் கொண்டு வர!

ஆனால், மற்ற அணிகள் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கும் மூடில் இல்லை. நியூசிலாந்தின் கேர் ஃப்ரீ ஆட்டம்; வாட்சனை 6வது இடத்தில் களமிறக்கி ஆழம் பார்க்கும் ஆஸ்திரேலியா; ‘எங்கள் அணிதான் எல்லா வகையிலும் சூப்பர்’ என்று கொக்கரிக்கும் டி வில்லியர்ஸின் தன்னம்பிக்கை என்று இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்கக் காத்திருக்கும் விஷயங்கள் ஏராளம்.ஒரு மாதம், 42 லீக் ஆட்டம் முடிந்து கோப்பையில் அடுத்த ரவுண்டுக்கு எட்டு அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

இனி விழுந்தால் எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற இக்கட்டான நிலையில், தொடங்குகிறது மரணப் போராட்டம்! இங்கிலாந்து வீரர்களோ, கிரிக்கெட் வாரியமோ தோல்வி பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நமது அணி இப்படி தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்யவே பயங்கரமாக இருக்கிறது.

ஷங்கர் பார்த்தசாரதி