கலெக்டர் பெயரில் நகர்!



ஒரு நெகிழ்ச்சி நிஜம்

தங்களுக்கு நல்லது செய்கிறவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தங்க மனசுக்காரர்கள் தமிழர்கள். இதற்கு மீண்டும் ஒருமுறை சாட்சியாக ஆகியிருக்கிறது நெல்லை மண். தங்களுக்கு வழிப்பாதை அமைத்துக் கொடுத்தார் என்ற காரணத்துக்காக சேரன் மகாதேவி சப் கலெக்டர் விஷ்ணுவின் பெயரையே தங்களின் பகுதிக்கு சூட்டிய நெகிழ்வான சம்பவம் நெல்லை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் கிராமத்தில் அரங்கேறியிருக்கிறது. 

‘‘ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்ல சார்... பதினாலு வருஷமா வழிப்பாதைக்காக போராடிக்கிட்டு இருந்தோம். இப்போதான் எங்களுக்கு விடிவு காலம் கிடைச்சிருக்கு’’ என்கிற வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாபு, மேலும் கண்ணீர் மல்க பேசினார்... ‘‘2002ல தனியார்கிட்ட இருந்து இடம் வாங்கி இருபத்தைஞ்சு பேர் இந்தக் கிராமத்துல வீடு கட்டினோம். அப்போ எங்களுக்கு வழிப்பாதை பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. வேற ஒருத்தர் நிலத்து வழியா வீட்டுக்கு வருவோம், போவோம்.

ஆனா, பஞ்சாயத்து விதிமுறைப்படி வழிப்பாதை இருந்தாதான் மின்சாரமும், குடிநீரும் கிடைக்குமாம்.  இதைச் சொல்லி எங்களுக்கு ரெண்டையுமே மறுத்துட்டாங்க. குழந்தைங்க எல்லாம் படிக்க முடியாம இருட்டுல ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. நாங்க மனு கொடுக்காத இடமே இல்ல. ஆனா, யாருமே எங்கள கண்டுக்கல. அப்போதான் சேரன்மகாதேவிக்கு சப் கலெக்டரா விஷ்ணு சார் வந்தார். எங்க குறைகளைக் காது கொடுத்து கேட்டார். உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள வரவழைச்சு கவனிக்கச் சொன்னார்.

பிறகு அவங்க வந்து, வழிப்பாதைக்கான இடத்தைப் பேசி வாங்கினாங்க. அடுத்த நிமிஷமே, ஆத்து தண்ணீரும், கரன்ட்டும் வந்துடுச்சு. அதனால, எங்களுக்கு உதவின சப் கலெக்டரை நன்றியோடு நினைக்கணும்னு முடிவு பண்ணி, ‘விஷ்ணு நகர்’னு அவர் பெயரையே எங்க ஏரியாவுக்கு வச்சிட்டோம்’’ என நெகிழ்ந்தார். ‘‘என் வேலையைத்தான் செஞ்சிருக்கேன். அந்த மக்களோட பிரச்னை வழிப்பாதை இடமா இருந்துச்சு.

அதை வருவாய்த்துறை மூலம் பேசி சரி பண்ணினோம். அவ்வளவுதான்’’ என்கிறார் சப் கலெக்டர் விஷ்ணு, வெரி சிம்பிளாக! சுதந்திரத்துக்கு முன்பே தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் இருக்கும் கேம்பலாபாத் என்ற கிராமம், சென்னை மாகாண தலைமைச் செயலாளராக இருந்த கேம்பல் பெயரில் உருவான ஒன்றுதான். இன்று அதே பாணியைப் பின்பற்றி இருக்கிறார்கள் வாகைகுளம் கிராம மக்களும்!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ரா.பரமகுமார், தளவாய்