திருட்டு வி.சி.டிக்கு நன்றி!



உறியடி இயக்குநர் விரக்தி Talk

வணிகமும் தொழில்நுட்பமும் கூடிப் பெற்ற குழந்தையான சினிமாவில் ‘நல்ல படைப்புகள்’ உள்ளபடியே அபூர்வம். அப்படியொன்று வரும்போது அள்ளி அணைத்து உச்சி முகர முடியாமல் போவது ஆகப் பெரும் சோகம். அதுதான் நடந்திருக்கிறது ‘உறியடி’ படத்துக்கு. பார்த்தவர்கள் எல்லாம் ‘ஆஹா... அடடா!’ என்றார்கள். விமர்சகர்களே விசிலடித்தார்கள். ஆனாலும் பெரிய படங்களின் நெருக்கடியில் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது ‘உறியடி’. அறிமுக இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளராக இந்தப் படத்தை உருவாக்கிய விஜயகுமாருக்கு இது வாழ்நாள் கனவாக இருந்தது. துக்கம், துரோகம், ஆதங்கம் என உணர்ச்சிகளின் உலை கொதிக்கிறது அவரிடம் பேசினால்!

‘‘எனக்கு பூர்வீகமே சென்னைதான். நடுத்தரக் குடும்பம்தான். மெட்டல் எஞ்சினியரிங் படிச்சிட்டு சாஃப்ட்வேர் வேலை பார்த்தேன். அமெரிக்கா வரை உயர்பதவிக்குப் போனேன். கலை ஆர்வம்... திரும்பி வந்துட்டேன். யார்கிட்டேயும் உதவி இயக்குநரா இருந்து அனுபவம் சேகரிக்கலை. ரெண்டு குறும்படம் எடுத்து சினிமா கத்துக்கிட்டேன். சமூகத்துக்காக படம் எடுக்கணும்னு தோணிச்சு. அடுத்தவங்க காசுல ரிஸ்க் எடுக்க மனசு வரலை. அதனால நானே தயாரிப்பாளர் ஆனேன்.

சொந்த ஊர் சென்னைதான் என்றாலும், நான் காலேஜ் படிச்சது சேலத்தில். அது 1999... சாதிச் சங்கங்கள் பலவும் கட்சிகளா மாறிட்டு இருந்த நேரம். அப்போ நிறைய கலவரங்களைக் கண்கூடா பார்த்தேன். சாதிச் சங்கங்கள் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்திக்கறதை கவனிச்சேன். அதைத்தான் ‘உறியடி’யில் அடிநாதமா வச்சேன். முதல் படம், அதுவும் சாதி அரசியல் பேசும் கதை. யாரும் நடிக்க முன்வர மாட்டாங்கன்னுதான் நானே நடிச்சிட்டேன். இசையமைப்பாளர் பாதியிலேயே விட்டுட்டுப் போயிட்டார்.

அதனால பின்னணி இசையும் நானே பண்ண வேண்டியதாப் போச்சு!’’ என்கிற விஜயகுமாருக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. ‘‘வேலை பார்த்து சேர்த்து வச்ச பணம் போதலை. என்னோட  சொத்து எல்லாத்தையும் வித்துதான் படமெடுத்தேன். ஷூட்டிங் ஆரம்பிச்சதில் இருந்தே பிரச்னைதான். ஹீரோயின் கிடைக்கலை. சினிமாவுல பெரிய பின்புலம் இல்லாததால் ஷூட்டிங் நடத்துற இடத்துல எல்லாரும் பணம் பறிக்கத்தான் பார்த்தாங்க.

லோக்கல் அரசியல் பார்ட்டி பணம் கேட்டு பல தடவை பிரச்னை பண்ணியிருக்கார். போட்ட பட்ஜெட் தாண்டி பல மடங்கு எகிறிடுச்சு செலவு. சண்டைக் காட்சி எல்லாம் ரியலாவே பதிவு செஞ்சோம். எல்லாருமே அடிபட்டு எப்பவும் காயத்தோடவே இருப்போம். இதுக்காக ஒரு மருத்துவமனையோட அக்ரிமென்ட் போட்டு புக் பண்ணி ட்ரீட்மென்ட் எடுத்தோம்.

2013லயே படத்தோட ஷூட்டிங்கை முடிச்சிட்டேன். ஆனா, போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு பணம் இல்லை. ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. தற்கொலை எண்ணமெல்லாம் வந்தது. ‘இறைவி’யில எஸ்.ஜே சூர்யா கேரக்டர் பார்த்திருப்பீங்கல்ல... அப்படித்தான் இருந்தேன். என் அம்மாதான் ‘இப்படியே விட்டா இவன் பைத்தியமாகிடுவான்’னு வீட்டை வித்து பணம் தந்தாங்க. அதை வச்சு எடிட்டிங், ரீரெக்கார்டிங் எல்லாம் செய்ய ஆரம்பிச்ச நேரத்துல, சென்னை வெள்ளம் தன் பங்குக்கு என்னைத் துவைச்சு எடுத்தது. எல்லாத்தையும் தாண்டி படத்தை பர்ஃபெக்டா முடிச்சேன்.

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி மூலமா எனக்கு நலன் குமாரசாமி பழக்கம். அவருக்கு படத்தைப் போட்டுக் காட்டினேன். ரொம்பவே பாராட்டினார். நலனோட நண்பர் சமீர்தான் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணினார். எல்லாருமே நண்பர்கள். அதனால நான் எதையும் முன்கூட்டியே பேசிக்கலை. சமீர் கொஞ்சம் அக்கறை எடுத்து விளம்பரம் செய்திருந்தா படம் ஓடியிருக்கும். மொத்தமே 64 காட்சிகள்தான் ‘உறியடி’ ஓடிச்சு.

ரசிகர்களை நான் குறை சொல்ல மாட்டேன். நல்ல படத்தைப் பார்க்க அவங்க தயாரா இருக்காங்க. ஆனா அவங்க பார்க்க விரும்பற நேரத்துல தியேட்டர்ல படம் இல்லையே! என்ன செய்யறது? இப்ப கூட ‘உறியடி’ படத்தைத் தினசரி எண்பதாயிரம் பேருக்கு மேல இணையதளத்துல தேடிப் பாக்குறாங்க. திருட்டு வி.சி.டிதான் என்னோட படத்தை மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்த்திருக்கு. அந்த வகையில இணையதளத்துக்கும் திருட்டு வி.சி.டிக்கும்தான் நன்றி சொல்லணும்!’’

‘‘படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள்... அதுவும் கல்லூரி மாணவர்களை வைத்து?’’
‘‘நிஜத்தில் நடக்குற வன்முறையைவிட குறைவாதான் காட்டியிருக்கேன் பாஸ். அரசியல் இல்லாம இங்கே எதுவுமே இல்லை. கல்லூரி மாணவர்களை வச்சிதான் இங்கே பல அரசியல் கட்சிகளே வளர்ந்துச்சு. தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் மட்டும் பெரிய சக்திகள் இல்ல. சிறிய சாதிக் கட்சிகளும் பெரிய சக்தியா பல இடங்களில் செயல்படுறாங்க.

அவங்களுக்கு அடிப்படை சின்னச் சின்ன கலவரங்களும் கொலைகளும்தான். அதை கல்லூரி மாணவர்களை வச்சு சாதிக்கிறாங்க. ‘உறியடி’ படம் மூலமா இதுவரை என் கைக்கு ஒத்தை ரூபாய் கூட வருமானம் வரலை. இந்த நிலைமையிலும் சொல்றேன்... ‘உறியடி’ படத்தில் சொல்லப்பட்டது எல்லாம் நூத்துக்கு நூறு உண்மை. உண்மைக்கு மரியாதை இருக்குற இந்தச் சமூகத்தில் என் படைப்புக்கும் அது கிடைக்கும்னு நான் உறுதியா நம்புறேன்!’’

சிகர்களை நான் குறை சொல்ல மாட்டேன்.  நல்ல படத்தைப் பார்க்க அவங்க தயாரா இருக்காங்க. ஆனா அவங்க பார்க்க விரும்பற  நேரத்துல தியேட்டர்ல படம் இல்லையே!

- புகழ்.திலீபன்
படங்கள்: புதூர் சரவணன்