உறவெனும் திரைக்கதை



ஈரோடு கதிர்

நம் வழியாக நமக்காக வந்தவர்கள்

மனிதர்களின் மிக நுண்ணியதான பிள்ளைப் பருவ காலம் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒன்று. அப்பருவத்தில் உணர்வதும், உணர்த்தப்படுவதும் பிள்ளைகளின் குணத்தை, எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதாக அமைகின்றன. பார்க்கக் கூடாததை பார்க்க நேரும்... கேட்கக் கூடாததை கேட்க நேரும்... அனுபவிக்கத் தகாததை அனுபவிக்க நேரும் பிள்ளைகள், மனதளவில் மிகப்பெரிய தாக்கங்களைச் சுமக்கின்றனர்.

அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் சில செயல்கள் வாழ்நாளுக்கான தழும்பாகவும் படிந்திருப்பதுண்டு. குடும்பம் தொடங்கி போர்க்களங்கள் வரை எல்லா இடங்களிலும் மிக எளிய தாக்குதல் இலக்காகவும்,  பலியாடாகவும் ஆவது குழந்தைகள்தான். வறிய நாடுகளில் இளம்தலைமுறையை வீழ்த்த ஒரு நுகர்பொருளாக புகுத்தப்படும் போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இலக்குகளும்கூட சிறுவயதுப் பிள்ளைகள்தான். தொலைக்காட்சிகளில் அதிகப்படியாக கவர்ந்திழுப்பதும், ஆதிக்கம் செலுத்துவதும், ஈர்ப்பு தருவதுமாக இருப்பவையும்கூட குழந்தைகளுக்கான விளம்பரங்கள்தான்.

பிள்ளைப் பருவம் தனக்கென சில பல ரகசியங்களை உள்ளடக்கியது. அந்த ரகசியங்கள் அவர்களுடையதாக இருக்கலாம்; அல்லது அவர்களைச் சார்ந்தவர்களுடையதாக இருக்கலாம். பாதத்தில் ஒரு துளி தண்ணீர் படாமல்கூட ஒரு மனிதன் கடலைக் கடந்துவிடலாம், ஆனால் ரகசியங்களும், பூடகங்களும் சுமக்காமல் ஒருவர் பதின் வயதைக் கடந்துவிட முடியாது. அந்த ரகசியங்களின் தாக்கம் வாழ்நாள் முழுமைக்கும் வேறுவேறு வடிவங்களில் உடனிருப்பவை.

பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவனாய் விடுதியில் தங்கிப் படிக்கும் கோகுலுக்கு படிப்பின் மேல் கடுமையாக வெறுப்பு ஏற்பட்ட ஒரு பின்னிரவுப் பொழுதில் அந்த உரையாடலைத் துவங்கினான். ‘‘யாருக்கும் தெரியாத ஊருக்குச் சென்று கூலி வேலை செய்தோ, யாசகம் கேட்டோ பிழைப்பு நடத்தினாலும் சரி... இனியும் என்னால் கல்லூரியில், விடுதியில் காலம் தள்ளமுடியாது’’ என்றான்.

அறிவுரை ஏதும் சொல்லவில்லை. அவன் சொல்வதையெல்லாம் முழுக்கக் கேட்டு, சிறு கேள்விகளைப் போட்டேன். பால்யம் துவங்கி, இன்று வரையில் தான் விரும்பாதது மட்டுமே தனக்கு வழங்கப்பட்டதையும், திணிக்கப்பட்டதையும் கோர்வையாகச் சொல்லத் துவங்கினான். வசதிக்கும் சொத்துக்கும் குறையொன்றுமில்லை.

நினைவு தெரிந்த நாள் முதலே அப்பா, அம்மா இடையே அடிக்கடி மூளும் சண்டைகளைத் தாளாமல், பாட்டி வீட்டில் பால்யத்தின் பாதி நாட்களைக் கழித்துச் சமாளிக்க வேண்டியிருந்தது. குடும்பத்தின் மானம், மரியாதை என உறவுகள் தொடர்ந்து சமாதானப்படுத்தியதால் மட்டுமே அப்பாவுக்கும் அம்மாவிற்கும் உறவு முறியாமல் இருந்ததை கோகுல் உணர்ந்திருந்தான்.

அப்பாவின் ரகசிய உறவுகள் குறித்து அம்மா விதவிதமாய் தினசரி புகார் வாசித்து சண்டை போட்டுத் தீர்ப்பாள். அப்பா இல்லாத சமயங்களிலும் வந்துபோகும் தூரத்து உறவினர் ஒருவரிடம் அம்மா வித்தியாசமான முகபாவனைகளோடு, அதீத சிரிப்போடு, வழியும் வெட்கத்தோடு அதிகம் பேசுவதை ஆரம்பத்தில் சந்தேகிக்காத கோகுல், அதை வேறொரு கோணத்தில் உணர்ந்தபோது அம்மா மீதும் பிடிப்பற்றுப் போனது.

ஒரே மகனை தான் விரும்பிய வண்ணம் வளைத்து, வளர்த்து விடுவதில் மிக உறுதியாக இருந்தார் அப்பா. அவனை பதினான்கு வருட பள்ளிக் கல்வியில் எட்டு முறை இடம் மாற்றினார். எந்தப் பள்ளியும் தன் பள்ளியென உரிமை கொண்டாட முடியாமல் போன கோகுல், ஒருபோதும் சக மாணவர்களோடு நட்பு பாவித்ததில்லை. அடுத்து எந்தப் பள்ளியோ என்ற ‘திக்திக்’ உணர்வே படிப்பில் நாட்டம் தரவில்லை.

பனிரெண்டாம் வகுப்பில் சராசரியாக மட்டுமே படித்தவனை பெரும் நிதியளித்து தன் விருப்பத்திற்கேற்ப பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டார். ‘‘காலேஜ் முடிச்சு டிகிரியோடுதான் வீட்டுக்கு வரணும். அப்படியில்லைன்னா வீட்டுக்கே வந்துடாதே” என்பது அவர் முடிவாக அறிவுறுத்தப்பட்டது.

முதலாம் ஆண்டு நிறைவிலேயே, தான் இந்த படிப்புக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்பதைச் சொல்லி கோகுல் கதறினான். ஆனால் அவன் குரல், தந்தை புரிந்துகொள்ளும் மொழியில் அமையவில்லை. இரண்டு பாடங்கள் தவிர்த்து அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தான். தன் தந்தையின் கனவு எட்டாத ஒன்றெனத் தீர்மானித்தபோது, தான் தணித்திருப்பது, நண்பர்களற்றிருப்பது புரிந்தது. யாரோடும் நட்பு பாராட்ட முடியவில்லை. முயன்றாலும் அலைவரிசை ஒத்துப்போகவே இல்லை. ஆனால் மற்ற மாணவர்கள் அவர்களுக்குள் நட்பாய் கூடிக் கும்மாளமிடுவது மனரீதியாக அவனுக்கு மிகவும் காயமேற்படுத்துகிறது.

அம்மா குறித்தும், அப்பா குறித்தும் பேசுகையில் மனதில் துளியும் மரியாதையோ, பிரியமோ, ஈரமோ இருப்பதாய்த் தோன்றவில்லை. தொடர்ந்து என்னோடு உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். காலம் மாற்றும் என நம்பிக்கையோடு நானும் தொடர்கிறேன். மேஸன் ஆறு வயதாக இருக்கும்போது நமக்கு அறிமுகமாகிறான். அப்பாவை விவாகரத்து செய்துவிட்டு தணித்திருக்கும் அம்மா ஒலிவியா, அக்கா சமந்தா  ஆகியோருடன் வாழ்கிறான். மேற்கல்வி, அதன் மூலம் வேலைவாய்ப்பு என அம்மா இடம்பெயர, நட்புகளைப் பிரிய நேருமென மேஸன் அதை எதிர்க்கிறான்.

ஒரு கல்லூரியில் படிக்க ஒலிவியா இணைகிறாள். அங்கிருக்கும் பேராசிரியரோடு பழகி, அவரைத் திருமணம் செய்துகொள்கிறாள். பேராசிரியரின் இரு பிள்ளைகளோடு மேஸன், சமந்தா இணைந்து ஆறு பேர் கொண்ட குடும்பமாகிறார்கள். ஒலிவியா கல்லூரிப் பணியில் இணைகிறாள். அம்மாவின் கணவன் நான்கு குழந்தைகளையும் சமமாக நடத்தினாலும், சரியாக நடத்தவில்லை. மேஸனின் வளர்ந்த கூந்தலை வலுக்கட்டாயமாக வெட்டும் தருணத்தில், அவனுக்குள் சொல்ல முடியா வெறுப்பு வழிகிறது. நட்புகள் இல்லாத, தனக்குப் பிடிக்காத கல்விக்கூடத்திற்குச் செல்ல மேஸன் முரண்டு பிடிக்கிறான்.

மேஸனுக்கும், சமந்தாவுக்கும் உண்மையான தந்தையான மேஸன் சீனியர், வார இறுதிகளில் அவர்களை வெளியில் அழைத்துச் செல்கிறான். ‘பாய் ஃப்ரெண்ட்’ வைத்திருக்கும் மகளுக்கு புரிந்துகொள்ளும் அளவிற்கு, ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கர்ப்பத்தடுப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டியது வரை பகிர்ந்துகொள்கிறான். மகனோடு மிகுந்த ப்ரியம் பாராட்டுகிறான்.

காலமும், நாட்டின் பொருளாதார மாற்றமும் ஒலிவியா குடும்பத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. பேராசிரியருக்கு வேலை போகிறது. குடி கூடுகிறது. ஒலிவியாவை அடித்துத் துவைக்கிறான். பிள்ளைகளைக் மிகக்கடுமையாக நடத்துகிறான். அங்கிருந்து விலகி தோழியின் வீட்டில் அடைக்கலம் புகும் ஒலிவியா, மாணவர்களுக்கு மிகப்பிடித்த பேராசிரியையாகத் திகழ்கிறாள். தன்னிடம் படிக்கும் ஒரு முன்னாள் போர் வீரனைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளோடு குடியேறுகிறாள். அவன் மேஸனிடம் கடுமையாக நடந்துகொள்கிறான்.

அந்த உறவும் ஒரு கட்டத்தில் முறிகிறது. மேஸனுக்கு பெண் தோழி கிடைக்கிறாள். இருவரும் நெருங்குகிறார்கள். அதுவும் முறிகிறது. பதினெட்டாவது வயதில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கிறான் மேஸன். சமந்தாவும், மேஸனும் இல்லாமல் தான் தனித்திருக்கப் போவதை நினைத்து ஒலிவியா கலங்குகிறாள். 2014ம் ஆண்டு வெளியான ‘பாய்ஹுட்’ திரைப்படம், மேஸன் மற்றும் சமந்தாவின் பிள்ளைப்பருவம் குறித்து மட்டும் பேசவில்லை. ஒலிவியா வாழ்வதற்கான போராட்டங்களை, மேஸன் சீனியரின் பாசத்தை, எளிதான திருமணங்கள் மற்றும் முறிவுகளை, அமெரிக்காவின் மாற்றங்களை என எல்லாவற்றையும் பேசுகிறது.

‘பாய்ஹுட்’ படத்தின் மிகச்சிறப்பான அம்சம், 2002ம் ஆண்டு மேஸன் ஆறு வயதாக இருக்கும்போது துவங்கப்பட்டு 2013 வரை ஒவ்வொரு ஆண்டும் அவ்வப்போது என 39 படப்பிடிப்புகளைக் கொண்டு, அனைத்துப் பாத்திரங்களையும் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வைத்து எடுக்கப்பட்ட படம். 12 ஆண்டு கால மாற்றங்களை ஒப்பனையின்றிக் காட்டும் படம் என்பதால், கூடுதலாக அந்தப் பாத்திரங்களோடு வாழ்ந்துவிடுகிறோம் நாமும்.

கோகுல் மற்றும் மேஸனின் பிள்ளைப் பருவத்தை  ‘இது இவ்விதம் அமைந்தது’, ‘இது இப்படியானது’ எனச் சொல்ல, விளக்க, வரையறுக்க நமக்கு சில சொற்களோ, சில வரிகளோ போதுமானதாக இருக்கின்றது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட பருவம் என்பது ஆண்டுகளையும், மாதங்களையும், வாரங்களையும், நாட்களையும், பகலையும் இரவையும், பல மணி நேரங்களையும், பல நூறு தருணங்களையும் கொண்ட  மிக நீண்டதொரு பயணம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள சில சொற்களோ, வரிகளோ போதாது. பிள்ளைப் பருவ வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களிலும் அவர்களுக்கு வழங்கப்படுவது முடிந்தவரையில் அவர்களுக்கு பொருந்தக் கூடியதாக இருப்பது நம் கையில்தான் இருக்கிறது.

பிள்ளைகளுக்காக உழைத்து ஓடாய்த் தேய்கிறோம் எனச் சொல்லும் பெற்றோர்களும்கூட, தம் பிள்ளைகளின் மனதில் கீறல்கள் ஏதும் ஏற்படுத்தாமல் அவர்களை பத்திரமாக வைத்திருந்துவிட முடிகிறது. நம் வாழ்வு வேறு, நம் பிள்ளைகளின் வாழ்வு வேறுதான். அவர்கள் நம்மால் வந்தவர்கள் என்பதைவிட நம் வழியாக, நமக்காக வந்தவர்கள். பிறக்கும் தருணத்திலிருந்து, அவர்கள் அவர்களுக்காக வாழப்போகும் காலத்திற்குள்ளாக அவர்களை சரியாக நடத்துவது நம்முடைய குறைந்தபட்சக் கடமையன்றோ!?

அறிந்தும்அறியாமலும், புரிந்தும் புரியாமலும் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் சில செயல்கள் வாழ்நாளுக்கான தழும்பாகவும் படிந்திருப்பதுண்டு.

நம் வாழ்வு வேறு, நம் பிள்ளைகளின் வாழ்வு வேறுதான். அவர்கள் நம்மால் வந்தவர்கள் என்பதைவிட நம் வழியாக, நமக்காக வந்தவர்கள்.

(இடைவேளை...)

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி