நான் திரும்ப வருவேன்னு சொல்லு!



மலேசிய முனிக்கு வாக்கு கொடுத்த ரஜினி

‘அடக்கினா அடங்குற ஆளா நீ’ - அதானே! தமிழ்நாட்டில் ‘கபாலி’ காய்ச்சல் அடங்கினாலும் மலேசியாவில் அடங்காது போலிருக்கிறது. இங்கேதான் ரஜினி நின்னார், உட்கார்ந்தார், என் தோளைத் தட்டினார், கட்டிப் பிடிச்சார் எனச் சொல்லிச் சொல்லி மாய்கிறது கேரித்தீவு. மலேசியாவின் தமிழகம் என்று சொல்லும் அளவுக்கு தமிழர் எண்ணிக்கை கொண்ட மலேய மண்!

‘‘கபாலி முன்னாடி வா... உன்னை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது’’ என அரிவாள் மேல் ஏறி நின்று குறிசொல்வாரே ஒரு சாமியார்... அவர் நிஜத்திலும் கேரித் தீவின் மரியாதைக்குரிய மனிதர். பெயர் சேகர். அங்கே கடலோர கங்கை அம்மன் ஆலயத்துடன் சேர்ந்த முனியப்பசாமி கோயிலில் சேகர்தான் எல்லாமே. பட்டால் கையைக் கிழித்துவிடும் ஷார்ப் அரிவாள் மேல் ஏறி அவர் குறி சொன்னது எதுவும் இதுவரை பொய்த்ததில்லையாம். ‘கபாலி’யில் அந்தக் காட்சியை எடுக்க எந்த செட்டப்பும் செய்யவில்லை.

உண்மையிலேயே சேகரை ஒரு வாரம் விரதமிருக்கச் செய்து, அவருக்கு அருள் வரும்வரை காத்திருந்து எடுத்தார்களாம். ‘‘எனக்கு பூர்வீகம் மன்னார்குடி. இந்தக் கோயில்தான் எனக்கு எல்லாம். ரஜினி இங்கே வந்து இறங்கும்போது நானே போய் வரவேற்பு தந்தேன். எல்லாரையும் நான் தோளைத் தொட்டு அணைச்சு ஆசீர்வதிக்கிறதுதான் வழக்கம். அப்படியேதான் ரஜினியையும் அழைச்சேன். பக்கத்தில் இருந்தவங்க பதறினாங்க. ஆனா, ரஜினி ரொம்பவும் மரியாதையா பழகினார். ஆன்மிகத்து மேல அவருக்கு அவ்வளவு பிரியம்!’’ எனச் சொல்லும்போது சேகர் முகத்தில் அவ்வளவு ஆத்ம திருப்தி.

பக்கத்திலேயே நின்றிருக்கும் அந்தப் பகுதி தோட்டத் தொழிலாளர்களும் இந்த உரையாடலில் கலந்துகொள்கிறார்கள். ‘‘கபாலி படத்துல எங்களை மாதிரி நிஜமான தொழிலாளர்களையேதான் நடிக்க வச்சாங்க. ஒரு ஓரத்துல நின்னாலும் எங்க முகத்தை தியேட்டர்ல பார்க்குறப்ப அப்படி ஒரு சந்தோஷம். ரஜினி எங்ககிட்ட நிறைய பேசினார். எங்க வாழ்க்கைத் தரத்தைக் கேள்விப்பட்டு ரொம்பப் பரிதாபப்பட்டார்!’’ என்கிறார் ராமன். இவரோடு, செல்வம், பெருமாள், மாணிக்கம், அருணாசலம், ராதா என பலரும் ரஜினியுடன் சகஜமாக உட்கார்ந்து கதையடித்திருக்கிறார்கள். பெரும்பாலும் தன் மருமகன் தனுஷைப் பற்றித்தான் சூப்பர் ஸ்டார் அதிகம் விசாரித்தாராம்.

‘‘தனுஷைத் தெரியுமானு கேட்டார். ம்ம்... பார்த்திருக்கோம். உங்களை மாதிரியே கறுப்பா... ஆனா ஒல்லியா இருப்பார்னு சொன்னோம். சிரிச்சார்!’’ என்கிறார் ராமன். அவரைத் தொடர்கிறார் சாமி சேகர்... ‘‘அந்த சாமியாடிக் காட்சி எடுத்து முடிச்சதுமே ரஜினி அசந்துட்டார். ‘How How... எப்டி எப்டி?’னு கேட்டார். அடுத்த நாள் ஆவல் தாங்காம நேர்லயே வந்துட்டார். அரிவாள் மேல அத்தனை நேரம் நின்னிருந்ததுல என் காலில் ஏதும் காயம் இருக்கானு கையால தடவிப் பார்த்தார்.

காயமே இல்லைன்னதும் அப்படியே தொட்டு வணங்கிட்டார். எனக்கே சங்கடமா போச்சு. ‘இவை தெய்வ அருள் பெற்ற பாதங்கள், மண்ணில் படக் கூடாது’னு உடனடியா தன் ஷூவைக் கழற்றிக் கொடுக்க வந்தார். பக்கத்தில் இருந்தவங்க தடுத்தாங்க. நானும் ‘ஷூ போட்டுப் பழக்கம் இல்லை’னு சொல்லிட்டேன். உடனடியா யார்கிட்டயோ சொல்லிவிட்டு ஒரு ஜோடி செருப்பு வாங்கிட்டு வரச் சொல்லி என்கிட்ட கொடுத்துட்டுப் போனார்.

எல்லாரும் அவர்கூட போட்டோ எடுக்க க்யூவில் நிற்கும்போது, அவர் என்கூட போட்டோ எடுக்கணும்னு கேட்டு எடுத்துக்கிட்டார். போட்டோ எடுத்து அவர் பொண்ணு ஐஸ்வர்யாவுக்கு அனுப்பியும் வச்சார். ‘கண்டிப்பா நான் திரும்ப வருவேன்... இந்த பவர்ஃபுல் சாமிக்காக வருவேன்’னு சொல்லிட்டுப் போனார். நிச்சயம் வருவார்!’’ - கடலுக்கு அப்பால் பார்த்தபடியே பேசி முடிக்கிறார் சேகர். சேகர் மட்டுமல்ல... கேரித் தீவின் கடலோடு ஆடிவரும் முனியப்ப சாமியும் அந்தக் கபாலிக்காக காத்திருக்கிறார்!

- மலேசியாவிலிருந்து புதூர் சரவணன்