குறி



ஒரு கணினி மையத்தில் பயிற்சி பெறும் அமிர்தாவை அங்கு படிக்கிற ஆனந்த் தனக்குச் சொந்தமாக்கத் துடித்தான். அங்கே பயிலும் பிரபுவும் அவளைத் தீவிரமாக நேசித்தான். இவர்கள் ஒருதலைக் காதலில் திரிய, அவளுக்கும் கணினி மைய உரிமையாளன் விஜயனுக்கும் நெருக்கம் கூடியிருந்தது. இதனால் விஜயனை ஆனந்தும் பிரபுவும் வெறுத்தனர். இவனறியாமல் அவனும், அவனறியாமல் இவனும் விஜயனைத் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர்.

விஜயனின் செல்போன் போன்றே ஆனந்த் ஒரு போனை வாங்கி அதில் டைம்பாம் செட் செய்தான். விஜயன் இல்லாத நேரத்தில் அவன் கேபினுக்குள் சென்று மேஜையில் இருந்த அவன் போனை எடுத்துக்கொண்டு, அந்த இடத்தில் இதை வைத்தான். ‘‘குறித்த நேரத்தில் அழைப்பு வந்து விஜயன் அதை அட்டெண்ட் செய்தால் அந்த நொடியே அது வெடிக்கும்... எதிரி ஒழிவான்!’’

ஆனந்தைப் போலவே பிரபுவுக்கும் கிரிமினல் மூளை. அவன் விஜயனின் டூவீலரில் டைம்பாம் பொருத்தினான். ‘இதில் செல்லும்போது அதுவே விஜயனின் இறுதிப் பயணம்...’ வெளியே வந்த ஆனந்த், அங்கு நிறுத்தியிருந்த விஜயனின் டூவீலரைப் பார்த்ததும் சாகப் போகிறவனுக்கு வாகனம் எதற்கு என்று டூப்ளிகேட் சாவி போட்டுத் திறந்து ஏறி அமர்ந்து பறந்தான். உள்ளே சென்ற பிரபு, விஜயனின் மேஜை மேலிருந்த செல்போனைத் திருடிக்கொண்டு கிளம்பினான்.

-தாமு