கோலிவுட் டும் டும் டும்



கோலிவுட்டில் இது கல்யாண சீஸன்... ஆனால் பிரமாண்ட வரவேற்புகள் அதில் மிக்ஸிங் (ஒரு ஃப்ளோவுல வந்திடுச்சு பாஸ்) ஸாரி... மிஸ்ஸிங்! இல்லற வாழ்வில் என்ட்ரி ஆகும் கலர்ஃபுல் டும்டும்டும் ஜோடிகளின் வீட்டு ஃபங்ஷன்கள் இதோ!

விக்ரம் கே. குமார் - ஸ்ரீநிதி வெங்கடேசன்
தமிழில் ‘யாவரும் நலம்’, ‘24’ படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் சவுண்ட் எஞ்சினியராக பணியாற்றியவர் ஸ்ரீநிதி. சூர்யா நடித்த ‘24’ படத்தின் இசைக் கோர்ப்பு பணியில் இவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அந்தப் படத்திற்கு நடுவில் நட்பு மலர்ந்து, காதலாகி திருமணம் வரை ஜெயித்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வெகு சிம்பிளாக நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது. விக்ரம்குமாருக்கு நெருக்கமான நண்பர்களான ஏ.ஆர்.ரஹ்மானும், சூர்யாவும் வந்திருந்து வாழ்த்தியது விழாவின் ஹைலைட்.

சுஜிபாலா - பிரனேஷ்
ஹீரோயினாக சில படங்கள், பிறகு டான்ஸராக நிறைய படங்கள் என கலக்கியவர் சுஜிபாலா. இவரது திருமணம் நாகர்கோவிலில் கிறிஸ்வத முறைப்படி நடந்தது. மணமகன் பிரனேஷ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர். ‘‘என்னோட சொந்த ஊர் நாகர்கோவில். பிரனேஷின் பூர்வீகம் ஊட்டி. கத்தாரில் உள்ள ஸ்டார் ஹோட்டல்ல வொர்க் பண்றார் பிரனேஷ்’’ என்கிறார் சுஜிபாலா.

ராஜுமுருகன் - ஹேமா சின்ஹா
‘குக்கூ’ ராஜுமுருகன் ‘ஜோக்கர்’ படம் வெளியான சில நாட்களில் தனது திருமணம் பற்றி மறைமுகமாக மனம் திறந்திருந்தார். அவரும், ஒரு காலத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஹேமா சின்ஹாவும் காதலித்து வந்தனர். இவ்விருவரின் திருமணம் பெசன்ட் நகரில் உள்ள அறுபடைவீடு முருகன் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ராஜுமுருகனின் திரையுலக, இலக்கிய வட்டார நெருக்கமான நண்பர்கள் மட்டுமே  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

- மை.பாரதிராஜா