ரகசிய விதிகள்



-சுபா

அட்டகாசத் தொடர்


தன் வழக்கறிஞரோடு போன் பேசி முடித்ததும், தீபக் தர்மசேனா சில கணங்கள் யோசித்தார். இப்படியொரு முக்கிய முடிவை எடுக்கும் முன் அவர் கலந்தாலோசிக்க வேண்டிய இன்னொரு நபர் இருந்தார். தீபக் அலுவலக மேஜையின் கடைசி இழுப்பறையைத் திறந்தார். உள்ளேயிருந்த கனமான பைபிள் புத்தகத்தை எடுத்தார். திறந்தார். இரண்டு பக்கங்களுக்கு நடுவில் ஒரு சிம் கார்டு செருகப்பட்டிருந்தது. அதை எடுத்தார். அதே இழுப்பறையில் அட்டைப் பெட்டி பிரிக்கப்படாமல் புதிய அலைபேசி ஒன்று இருந்தது. அதையும் வெளியே எடுத்தார். அந்த அலைபேசியில் இந்த சிம் கார்டைப் பொருத்தினார்.

அந்த சிம்கார்டைப் பயன் படுத்தி அவர் ஒரே ஒருவருடன்தான் பேசுவார். அதுவும் கடந்த ஆறு வருடங்களில் பதினைந்து முறை பேசியிருந்தால் அதிகம். தன்னுடைய தலைவர் என்று தீபக்கால் கருதப்பட்ட அவருடன் நிகழ்ந்த முதல் சந்திப்பு, இப்போதும் அவர் நினைவில் பசுமையாக இருந்தது. அப்போது தீபக் தர்மசேனாவிடம் இரண்டே இரண்டு மீன்பிடிப் படகுகள்தாம் இருந்தன. வடசென்னையின் ராயபுரத்தில் இருந்தது, அவருடைய பழைய வீடு. திருமணமாகி, எட்டே மாதங்களில் அவருடைய மனைவி பழைய காதலனுடன் ஓடிப் போன பின்னர், அவர் ஒரே உறவாக நினைத்து உயிருக்கு மேல் அன்பு வைத்திருந்தது தன் தாய் மேல்.

அந்த அம்மா படிகளில் இறங்கும்போது, தவறாகக் கால் பதித்து, படபடவென்று சரிந்து, மல்லாந்து விழுந்து, பின்மண்டையில் ‘ணங்’ என்று பலமாக அடிபட்டுக் கொண்டார். அம்மாவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார், தீபக் தர்மசேனா. “மண்டையில பலமா அடிபட்டிருக்கு. சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததுல, மூளைல ஒரு இடத்துல ரத்தம் கட்டியிருக்கு. இவங்க நினைவு கொஞ்சம் கலைஞ்சு போகும். மறதி அதிகமா இருக்கும்...” என்று மருத்துவர் சொன்னார்.

கண் திறந்த அம்மா, தீபக்கைப் பார்த்து, “நீ யாரு..?” என்று கேட்டதும், தீபக் தர்மசேனா வாய்விட்டு அழுதார். மர பென்ச்சில் அவர் அமர்ந்து, தன் தலையைக் கைகளில் தாங்கி அழுதுகொண்டிருந்தபோது, அவர் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். ஆதரவாகத் தோளை அணைத்தார். “உங்க அம்மாவை வேற பெரிய ஹாஸ்பிட்டல்ல சேர்த்து வைத்தியம் பார்த்தாதான், கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்கும். இல்லேனா, இருக்கற நினைவுகளும் காணாமப் போயிரும்...”

பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அன்றைய தேதியில் தன்னிடம் பணம் இல்லை என்பதை அவமானத்துடன் தீபக் தர்மசேனா அவரிடம் பகிர்ந்துகொண்டார். “இந்த உலகத்துல பெத்த அம்மாவைவிட எந்தக் காசும் பெரிசில்ல... உங்கம்மாவை அப்பல்லோவுல சேர்த்துருங்க. அவங்கள சரி பண்றதுக்கு ஆகற செலவு என்னோடது...” என்றார் அந்த மனிதர். குரலில் வழியும் அன்பும், கண்களில் பொழியும் கருணையுமாக அவர் ஒரு தெய்வம் போலவே தீபக்கின் பார்வைக்குத் தெரிந்தார்.

“என் பேரு தீபக் தர்மசேனா... உங்க பேரு..?” “குணாளன்...” “எதுக்கு என் மேல இவ்வளவு கரிசனம்..?” “புது நண்பர்களைத் தேடிக்கறது என்னோட பழக்கம்...” தீபக் தர்மசேனாவின் அம்மா, குணாளன் சொன்னது போல அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவருடைய நினைவுகள் முற்றிலுமாகத் திரும்பவில்லையென்றாலும், பெரும் முன்னேற்றம் தெரிந்தது. முக்கியமாக தீபக்கை அடையாளம் கண்டுகொண்டு அவர் கன்னங்களை அம்மா வருடிக் கொடுத்ததும், தீபக் நன்றிப் பெருக்கால் கலங்கிப்போனார்.

குணாளனின் கைகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டார். “உங்களுக்கு நான் எப்படி கைமாறு செய்யப்போறேன்..?” என்று நெகிழ்ச்சியுடன் கேட்டார். “சிம்ப்பிள்..” என்றார் குணாளன். “கடல்லயே தொழில் பண்ணிட்டு இருக்கறவரு நீங்க. உங்க உதவி எனக்குத் தேவை... கேள்விகள் கேக்காம, நான் சொல்ற சில வேலைகளை செஞ்சா போதும்...” அப்படி ஆரம்பித்ததுதான் தலைவருடனான அந்தப் பழக்கம். கடலில் நங்கூரமிட்டு இருக்கும் கப்பலுக்குச் சென்று கடத்தப்பட்ட தங்கம் வாங்கி வர வேண்டும். போதை மருந்து பெற்று வர வேண்டும். கப்பலில் வரும் ஆயுதங்களை ஒளித்து எடுத்து வரவேண்டும். எல்லாமே சட்டத்துக்குப் புறம்பான செயல்கள்.

தீபக்கிடம் இருந்த இரண்டு படகுகள் நான்காயின. எட்டாயின. பதினாறாயின. மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலை துவங்கப்பட்டது. ஏற்றுமதிக்கான உரிமம் பெறப்பட்டது. ‘தீபக் மரைன் ப்ராடக்ட்ஸ்’ இன்று பெருமளவு உயர்ந்துவிட்டது. எல்லாம் அவர் தலைவர் இட்ட பிச்சை. தலைவர் எப்போதாவது சந்திக்க விரும்பினால், பெரும்பாலும் அந்த சந்திப்பு தீபக் தர்மசேனாவின் கடற்கரை மாளிகையில் நிகழும். இடையில் ஒருநாள் கோயிலுக்குப் போவதாகச் சொல்லி வெளியில் போன தீபக்கின் அம்மா, வீட்டுக்குத் திரும்பி வரும் வழியை மறந்து காணாமல் போனார்.

அப்போது தலைவர் குணாளன்தான் முயற்சி செய்து, தன் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி விசாரித்து, அவரை காவலர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிப் போய் வைத்திருக்கும் விவரத்தை சொன்னார். அந்த நிகழ்ச்சி தீபக் தர்மசேனாவை மிகவும் கலங்கடித்துவிட்டது. அன்றிலிருந்து வீட்டோடு ஒரு நர்ஸ் வைத்து, அம்மாவைப்  பார்த்துக்கொண்டிருந்தார், தீபக் தர்மசேனா.

மற்றபடி, குணாளன் கடவுள் போல் கண்ணுக்குத் தெரியாமல் அமர்ந்துகொண்டு ஆட்சி செய்வார். எங்கோ இருந்த இடத்திலிருந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பார். எங்கே, எந்த சிலை திருடப்பட வேண்டும் என்று வரைபடத்தோடு விவரங்கள் அனுப்பி வைப்பார். தீபக் தர்மசேனா அதைக் கச்சிதமாக நிறைவேற்றுவார். ஒரு கட்டத்தில் குணாளனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, ஒரு பிரச்னையை அவர் எப்படிக் கையாள்வார் என்பது வரை தீபக் தர்மசேனாவுக்குப் புரிந்து போனது. அவரே பெரும்பாலான களப்பணிகளைச் செய்து முடித்துவிட்டு, முடிவை மட்டும் குணாளனிடம் பகிர்ந்துகொள்வது வழக்கமாக ஆகிப் போனது.

அரவமணி நல்லூர் கொலைகளுக்குப் பிறகு குணாளன் ஒரு முறைதான் பேசினார். “ரொம்ப கைமீறாமப் பாத்துக்க...” என்று ஒற்றை வாக்கியத்துடன் பொறுப்பை தீபக்கிடமே விட்டார். சோதனை போல், எல்லாமே தீபக் தர்மசேனாவின் கையை மீறிப் போய்க்கொண்டிருந்தன. தீபக் தர்மசேனா போனில் எண்களைப் பதித்துக் காத்திருந்தார். எதிர் முனையில் போன் எடுக்கப்பட்டு, “ம்..!” என்று ஒற்றை எழுத்தே பதிலாக வந்தது.

தீபக் தர்மசேனா தன் நிலையை விளக்கினார். இறுதியில், “என் வக்கீல் இப்போ என்னை ஹாஸ்பிட்டல்ல போய் படுத்துக்கச் சொல்றாரு. என்ன செய்யட்டும்..?” என்று கேட்டார். “நீ எந்த ஆஸ்பத்திரிக்குப் போய்ப் படுத்தாலும், போலீஸ் உன்னைத் தேடி வரும்... இப்ப, போலீஸ்ல சிக்கிக்கற மாதிரி ஆபீஸ்லயோ வீட்டுலயோ வேற ஏதாவது இருக்கா..?” “இல்ல... டாக்குமென்ட்ஸ் எல்லாத்தையும் பேங்க் லாக்கருக்கு மாத்திட்டேன்!”

“அது எந்த பேங்க் லாக்கர்னும் இத்தனை நேரம் போலீஸுக்குத் தெரிஞ்சிருக்கும். கோர்ட்ல உத்தரவு வாங்கினாங்கன்னா, அதையும் அவங்க திறந்து பார்க்க முடியும். நீ தப்பிக்க முடியாத அளவுக்கு சிக்கிட்டேன்னு நினைக்கறேன். ஆனா, தைரியத்தைக் கைவிடாத... ஒருபோதும் உண்மைகளை உளறாத! உன்னை வெளில கொண்டு வர்றதுக்கு நான் முயற்சி பண்றேன். இப்ப பேசி முடிச்சதும், இந்த சிம் கார்டை அழிச்சிரு. எனக்கு போன் செய்யாத. தேவையான சமயத்துல, நானே உனக்கு போன் செய்வேன்...”

எதிர்முனைத் தொடர்பு அறுந்தது. தீபக் தர்மசேனா, குணாளன் சொன்னதை ஒருபோதும் மீறியது இல்லை. அந்த சிம்கார்டை பாத்ரூமுக்கு எடுத்துப் போனார். காகிதத்தில் மடித்தார். லைட்டரால் கொளுத்தினார். பற்றி எரியும் வரை காத்திருந்து, சாம்பலைத் தண்ணீரோடு கரைத்து, சாக்கடைக்கு அனுப்பினார். சிந்தாதிரிப்பேட்டையில், அந்தக் குளிர் அறையை மேற்கொண்டு ஆராய இயலாமல் போனது துரை அரசனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

“சுகுமார், ஸ்டாஃப் யாரையும் போக விடாதீங்க... புதுசா யாரையும் உள்ள அனுமதிக்காதீங்க... நான் தீபக் தர்ம சேனாவோட வீட்டுக்குப் போய், அவரை மீட் பண்றேன்!” “சரி, சார்...” என்றார், சப் இன்ஸ்பெக்டர் சுகுமார். சான் ஃப்ரான்சிஸ்கோ. தன்னை ஏஜென்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட டாம் கார்ட்டருடன் ஆங்கில சீரியல்கள் பற்றி சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தான், விஜய். பத்ரி அவர்களை அசுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“லாஸ் ஏஞ்சல்ஸ் நண்பர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு உன்னை மீண்டும் சந்திக்கிறேன்...” என்று டாம் கார்ட்டர் விடைபெற்றார். “உன் அபார்ட்மென்ட்டுக்குத் திரும்பலாம்...” என்றான், பத்ரி. தீபக் தர்மசேனா நர்ஸை வெளியேறச் சொல்லிவிட்டு, தன் அம்மாவின் அருகில் போய் நின்றார். சாய்ந்தாடும் நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய அம்மா நிமிர்ந்து பார்த்தாள். “அம்மா, கொஞ்ச நாளைக்கு என்னைப் பார்க்க முடியாது. நான் ஹாஸ்பிட்டல்ல இருப்பேன்...” என்று அம்மாவின் கூந்தலை வருடிச் சொன்னார், தீபக்.

அவருடைய அம்மா, பழுத்த விழிகளால் மகனைப் பார்த்தார். அவர் சொன்னது புரியாதவர் போல், அவருடைய கையை வருடிக் கொடுத்தார். “எனக்கு பாத்ரூம் போகணும்...” என்றார் அம்மா. தீபக் தர்மசேனா நர்ஸை அழைத்தார். அவரிடம் அம்மாவை ஒப்படைத்தார். தன் அறைக்குச் சென்று ஓர் இயற்கை ஓவியத்தை நகர்த்தி, பின்னால் இருந்த ரகசிய லாக்கரைத் திறந்தார். உள்ளே கற்றையாக டாலர்களும், யூரோக்களும் இருந்தன. அவற்றை ஒரு டவலில் சுற்றி அங்கேயே வைத்து, லாக்கரைப் பூட்டினார்.

கேட்களுக்கு வெளியே ஹாரன் சத்தம் கேட்டது. திரையை விலக்கி ஜன்னல் வழியே பார்த்தார். இரண்டு அம்பாசிடர் கார்கள். போலீஸ்! தாமதம் செய்ததற்கு தன்னையே நொந்துகொண்டார். இன்டர்காமில் அவசரமாக செக்யூரிட்டியை அழைத்தார். “யார் வந்து கேட்டாலும், நான் வீட்ல இல்லைன்னு சொல்லி வாசல்லயே நிக்க வை... உள்ள விடாத!” என்றார். டிரைவருக்கு போன் செய்தார். “காரை பின்னால தோட்டத்து கேட்டுக்கு எடுத்திட்டு வா...” என்று கட்டளை பிறப்பித்தார்.

செக்யூரிட்டியுடன் இன்ஸ்பெக்டர் துரை அரசன் வாதிட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பரபரவென்று படிகளில் இறங்கி, பின்கதவு திறந்து, தோட்டத்தில் சில அடிகள் ஓடி, காரில் ஏறினார். ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொன்னார். “அங்க விரட்டிட்டுப் போ..!” என்றார். கார் பின் கேட் வழியே வெளியேறியதும், தன் டாக்டர் நண்பருக்கு போன் செய்தார். “விருந்தாளியா வர்றேன். எனக்கு ஏதாவது நோயை யோசிச்சு வை...” என்று சொல்லிவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

விஜய்யின் அபார்ட்மென்ட்டுக்குத் திரும்பியதும், பத்ரி “ஷல் வீ ஹேவ் எ ட்ரிங்க்..?” என்று தன் தோல் பையிலிருந்து ஒரு ஸ்காட்ச் பாட்டிலை எடுத்தான். “நான் அதிகமா குடிக்கறதில்ல. எனக்கு பியர் போதும்... உனக்குக் கம்பெனி குடுக்கறதுக்காக!” என்று சொன்னான், விஜய். ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு கோப்பையில் பியரை ஊற்றி எடுத்து வந்தான். பத்ரி கண்ணாடிக் கோப்பையில் ஐஸ் கட்டிகள் போட்டு, அதில் விஸ்கியை ஊற்றி, சோடா, தண்ணீர் என்று எதுவும் கலக்காமல், வேகம் வேகமாக சரித்துக்கொண்டான்.

“சொல்லு... உன் வேலையைப் பத்தி சொல்லு!” என்றான். விஜய் ஒரு கோப்பை பியரையே ஒரு மணி நேரம் உறிஞ்சிக்கொண்டு, தொலைக்காட்சி கேமராமேன் என்ற விதத்தில் தான் சந்தித்த சில அனுபவங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். பத்ரி அவ்வப்போது சில முட்டாள்தனமான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால், சிறிது நேரத்தில், அவனுடைய கண்கள் நிலையின்றி அலைய ஆரம்பித்தன. விரைவிலேயே போதையின் உச்சத்தைத் தொட்டுவிட்ட மயக்கம் அவன் இமைகளை இழுத்தன.

அவன் சோஃபாவில் அப்படியே சரிந்தபோது, அவன் மடியில் வைத்திருந்த தோல் பையும் கீழே சரிந்தது. அதிலிருந்து ஐ-பேடும், சார்ஜரும், சில காகிதங்களும், செல்போனும் வெளியே நழுவின. கைக்கு அடக்கமாக ஒரு புத்தகமும் நழுவி வெளியே வந்தது. அது, லாஸ் ஏஞ்சல்ஸ் பற்றிய புத்தகம் என்று பார்த்ததும், விஜய்க்கு ஆர்வம் வந்தது. பிரித்தான். புத்தகத்திலிருந்து, குறுக்கில் மடிக்கப்பட்ட ஒரு தாள் நழுவிக் கீழே விழுந்தது. விஜய் குனிந்து அதை எடுத்தான். அந்தத் தாளை இயல்பான ஆர்வத்துடன் பிரித்தான். அதிர்ந்தான்.

அம்மா, கொஞ்ச நாளைக்கு என்னைப் பார்க்க முடியாது. ஹாஸ்பிட்டல்ல இருப்பேன்...

(தொடரும்...)
ஓவியம்: அரஸ்