உறவெனும் திரைக்கதை



-ஈரோடு கதிர்

விடுதலை பெறும் ரகசியங்கள் மனித சமூகத்தில் நிகழும் விந்தைகளில் ஒன்று, ‘வேண்டாம்’ என்று நினைத்த ஒன்றை உடனே ‘வேண்டும்’ என்பது போல் உணரும் மனமாற்றம். ‘பசி’ என்பது உடலின் தேவைதான். ஆனால் பல நேரங்களில் அது மனது தீர்மானிக்கும் ஒன்று. பசித்திருந்தபோதும் மனதுக்குப் பிடிக்கவில்லையெனில், உணவை உண்ணலாம்; ஆனால் ருசிக்க முடியாது. பசிக்கவேயில்லாத சூழலிலும், “சாப்பாட்டைப் பார்த்தா பசி தன்னால வந்துவிடும்” என உணவைப் பரிமாறியபடியே சிலர் உபசரிப்பார்கள். அதுவரை இல்லாத பசி, தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் உணவைப் பார்த்தவுடன் மெல்ல கிளர்ந்தெழுந்து வருவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.

அன்பும் பசி போலத்தானோ எனத் தோன்றுகிறது. பகிர்வதிலும், கொள்வதிலும், அளவுகளும் எல்லைகளும் தீர்மானிக்க இயலவில்லையெனினும், பகிரவும், கொள்ளவும் எப்போதும் மனம் விழைந்துகொண்டே இருக்கின்றது. எது அன்பு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கம் இருக்கும். இது  சாதா அன்பு, இது தூய அன்பு, இது மாசடைந்த அன்பு என எதன் அடிப்படையில் பிரிக்க முடியுமெனத் தெரியவில்லை. ஆனால் சமூகம் அன்பின் பகிர்வுகளை ஏதோ ஒரு அடிப்படையில் தம் வசதிக்கேற்ப வகைப்படுத்தி விடுகிறது. அந்த வகைகளுக்கு சூழலுக்கேற்ப, காலம் தன்போக்கில் வெவ்வேறு பெயர்களைச் சூட்டி விடுகிறது.

ஹாங்காங் நகரத்தில் 1962ம் ஆண்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் ஒரே நாளில் இரண்டு குடும்பங்கள் குடியேறுகின்றன. பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் எழுத்தாளன் சௌ மோ-வான் மற்றும் கப்பல் நிறுவனமொன்றில் பணியிலிருக்கும் திருமணமான பெண் சூ லி-சென் ஆகியோரின் குடும்பங்கள்.

சௌ மோ-வானின் மனைவிக்கு பெரிய நிறுவனமொன்றில் பணி. எப்போதும் பயணத்தில் இருப்பவள். சூலி-சென்னின் கணவன் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குப் பறந்துகொண்டிருப்பவன். எனவே பெரும்பாலான நேரங்களில் சௌ மற்றும் சென் தத்தம் வீடுகளில் தனித்திருக்க நேர்கிறது. எதிரெதிராய்க் கடக்கையில், சாலைத் திருப்பங்களில் சந்திக்கையில், இரவுகளில் உணவுக் கூடங்களில் பார்க்கையில் இந்த இருவரிடையே  ஒரு மௌன நட்பு பூக்கிறது.

சில செயல்கள், கேள்விப்படல்கள், காட்சிகள் இருவருக்கும் ஏதோவொன்றை உணர்த்துகின்றன. புரிந்தும், புரியாமலும் நகர்கின்றனர். மௌனம் காக்கின்றனர். மௌனம் பார்க்க மெலிதானதாகவும், எளிமையானதாகவும் தெரியலாம். ஆனால் உண்மை அவ்வாறானதல்ல. மௌனம் பெரும்பாலும் புழுங்கும் எரிமலைக்கு நிகரானது. அப்படியான மௌனம் உடையும் தருணம் வருகின்றது.

ஒருநாள் உணவக மேஜையில் எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். சென் வைத்திருக்கும் கைப் பை அழகாக இருக்கிறதென்கிறான் சௌ. தன் கணவன் வெளிநாட்டுப் பயணமொன்றில் வாங்கி வந்ததென்கிறாள் அவள். தன் மனைவிக்குப் பரிசாகத் தர அதேபோல் பை ஒன்று வாங்கி வரச்சொல்ல முடியுமா என வேண்டுகிறான். சௌ அணிந்திருக்கும் ‘டை’ மிக அழகாக இருப்பதாக சென் சொல்கிறாள். வெளிநாட்டுப் பயணமொன்றில் தம் மனைவி வாங்கி வந்ததாக சௌ சொல்ல, அதுவரை அடைகாத்த மௌனத்தின் கதவுகளைத் திறக்கிறாள் சென்.

“என் கணவனிடமும் இதே போல் ‘டை’ இருக்கிறது” என்கிறாள் சென். “என் மனைவியிடமும் இதே போல் ஒரு ‘பை’ இருக்கிறது” என்கிறாள் சௌ. மௌனம் தகர்தல் சில நேரங்களில் ஒரு பிரசவம் போன்று வாதை நிரம்பியது. ஆனால் அதுவொரு விடுதலை, சிக்கலான கேள்விகளுக்கான சரியான பதிலும் கூட. அந்தக் கணம் யாரையும் உறைய வைக்கக்கூடியது. இருவரும் உண்மைக்குள் சிறைப்படுகிறார்கள்; ஆனால் மௌனச் சுமையாய் இருந்த ரகசியத்தை இறக்கி வைத்த நிம்மதி. தங்கள் இணைகளுக்கிடையே எப்படி உறவு துவங்கியிருக்குமென இருவருக்கும் ஒரே நேரத்தில் தோன்றுகிறது, இருவரும் அவர்களாக மாறி அதை ஒத்திகை பார்க்கிறார்கள். 

நட்பு இன்னும் பலப்படுகிறது. நட்பில் கனிவும் இரக்கமும் கூடினால், அந்த அன்பில் விதவிதமான சுவைகள் கூடிவிடுவது எளிது. அப்படிக் கூடுவதற்கான எல்லா மாயங்களையும் கொண்டிருப்பதே அன்பின் பலவீனமும் பலமும். சௌ தான் எழுதப்போகும் தொடர் ஒன்றிற்கு உதவவேண்டுமென சென்னிடம் கேட்கிறான். அப்படியாக ஒரு நாள் அக்கம்பக்கம் யாருமில்லாததால் சௌ வீட்டிற்குள் உதவ வருகின்றவள், திடீரென அக்கம்பக்கத்தினர் வந்துவிட, ஒரு நாள் முழுக்க அங்கு சிறைப்படுகிறாள். தங்கள் இணைகளின் பிறழ் உறவு போல் தங்கள் உறவு அமைந்துவிடக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள்.

அடுத்தடுத்த கதவுகள், இடையே ஒரு சுவர் மட்டுமே! ஆனாலும் அக்கம் பக்கம் தங்கள் நட்பு சந்தேகத்திற்குள்ளாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். தம் இணைகளுக்கிடையேயான பிறழ் உறவு குறித்து தன் கணவனிடம் எப்படிக் கேட்கலாம் என விதவிதமாக சௌ உடன் இணைந்து சென் ஒத்திகை பார்க்கிறாள். உடைந்து போகிறாள். நட்பும் அன்பும் அவர்களிடையே காதலாகக் கனிந்த தருணத்தில், ‘தங்கள் இணைகளுக்கு இடையேயும் இப்படித்தானே காதல் பூத்திருக்க வேண்டும்’ என்பதையும் உணர்கிறார்கள்.

மனிதனின் மிகப் பெரிய சுயநலங்களில் ஒன்று, ‘தம் அன்புதான் புனிதமானது’ என்றும், ‘தாம் நிறுவிய வடிவங்களுக்குள் பொருந்தாத அன்பு எப்போதும் புனிதமடைந்துவிடுவதில்லை’ என்றும் நினைப்பதுதான். ஆனால் தங்களுக்குள் அன்பு கனிந்தது போலவே, தம் இணைகளுக்குள்ளும் கனிந்து காதல் பூத்திருக்கலாம் எனும் புரிதலும், ஏற்றுக்கொள்ளலும் இவர்களிடம் நிகழ்கிறது. பசியில்லாதபோதும் கனிவோடு உணவு பரிமாறினால் பசி கிளர்வது போல, விதவிதமாய்ப் பரிமாறப்படும் அன்பும் கூட அதற்கான அவசியத்தை ஏற்படுத்திவிடுகின்றது.

பணி நிமித்தமாக சிங்கப்பூருக்கு இடம் பெயர முடிவெடுக்கும் சௌ, தன்னோடு சென் சிங்கப்பூருக்கு வந்துவிடவேண்டுமென விரும்புகிறான். வேண்டுகிறான். அவள் உடன்படும் தருணம், காலம் கடந்ததாகிவிடுகிறது. ஓர் ஆண்டு கழித்து ஒரு நாளில், சிங்கப்பூரில் இருக்கும் தன் வீடு சற்று கலைந்து கிடப்பதை சௌ உணர்கிறான். சிகரெட் துண்டு ஒன்றில் அழுத்தமான உதட்டுச்சாயம் இருப்பதைக் காண்கிறான். அலுவலகத்தில் இருப்பவனுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது; எதிர்முனையில் மௌனம் மட்டுமே பேசுகிறது. சென் அங்கு வந்திருப்பதை உணர்கிறான்.

மூன்று ஆண்டுகள் கழித்து தான் முன்பு வசித்த ஹாங்காங் வீட்டிற்கு தன் மகனோடு வந்து தங்கி வாழ்க்கையைத் தொடர்கிறாள் சென். இடையில், வீட்டு உரிமையாளர்கள் மாறுகிறார்கள். அதே வீட்டிற்கு பரிசோடு வரும் சௌ, சென் அங்கிருப்பாளோ என்று ஆசையோடு தேடுகிறான். தான் தங்கியிருந்த வீட்டின் புதிய உரிமையாளரிடம், பக்கத்து வீடு குறித்து விசாரிக்கிறான். சென் வசித்த வீட்டைச் சுட்டி, ‘ஒரு அம்மாவும் குட்டி மகனும் வசிக்கிறார்கள்’ என அந்த நபர் சொல்கிறார்.

சென் தனது மகனோடு தங்கியிருக்கும் அந்த வீட்டின் கதவுகளை, உள்ளே அவள் இருப்பதை அறியாமலேயே சௌ உற்றுப்பார்த்துவிட்டு நகர்கிறான். ஆழப் புதைந்து கிடக்கும் ரகசியங்களிலிருந்து விடுபட, அதை அடர் வனத்தின் மரப்பொந்தொன்றில் பகிர்ந்து விட்டு, அது வெளியில் வராதபடி அடைத்துவிட வேண்டுமென நண்பன் முன்பொருமுறை சொல்லியது நினைவுக்கு வருகிறது. கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் கோவிலில் சிதைந்த சுவரொன்றில் இருக்கும் பொந்தில் தன் ரகசியங்களைப் பகிர்ந்து அதை மூடுகிறான் சௌ.

2000ம் ஆண்டு வெளியான ‘இன் த மூட் ஃபார் லவ்’ சீனப்படம், காதலின் நிகழ்வுகளை விதவிதமாய் யதார்த்தத்தோடு அலசுகிறது. சௌ மற்றும் சென் பாத்திரங்களில் படம் பார்க்கும் எவரும் ஏதோ ஒரு கணத்தில் வாழ்ந்திருக்கக் கூடியவர்களே. ஆண் - பெண் இடையே பகிரப்படும் அன்பு குறித்து எப்போதும் சமூகத்திற்கு ஒரு தனிக் கவனிப்பும், ஆர்வமும் இருக்கவே செய்கிறது.

ஒரு ஆட்டுக்குட்டியின் மேல், பூனைக்குட்டியின் மேல், கவிதையின் மேல், குழந்தையின் மேல், அரசியல்வாதியின் மேல், நடிக-நடிகையர் மேல், மூடநம்பிக்கையின் மேல், முதியவரின் மேல், மலரின் மேல் என எதன் மேலும் அன்பு செலுத்திவிடலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட உறவுகள் தவிர்த்து, ஒரு ஆண் சக பெண் மீதோ, ஒரு பெண் சக ஆண் மீதோ அன்பு செலுத்தினால், அந்த அன்பு ஆய்விற்கும், விவாதத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுவிடும். அன்பும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான்.

இங்கு ரகசியங்கள் இல்லாதோர் யார்? அதிலும் அன்பும், பிரியமும் காதலும் சார்ந்த ரகசியங்கள் இல்லாதோர் யாரும் இருக்கமுடியுமா என்ன? சில நேரங்களில் ரகசியங்கள் பகிரப்பட்டு இறக்கி வைக்கப்படுகின்றன, பல நேரங்களில் ரகசியங்கள் புதைக்கப்படுவதன் மூலம் விடுதலையாக்கப்படுகின்றன.

எது அன்பு என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கம் இருக்கும். இது சாதா அன்பு, இது தூய அன்பு, இது மாசடைந்த அன்பு என எதன் அடிப்படையில் பிரிக்க முடியுமெனத் தெரியவில்லை.

ஆழப் புதைந்து கிடக்கும் ரகசியங்களிலிருந்து விடுபட, அதை அடர் வனத்தின் மரப்பொந்தொன்றில் பகிர்ந்துவிட்டு, அது வெளியில் வராதபடி அடைத்துவிட வேண்டும்!

(இடைவேளை...)
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி