கதைகளால் சிறக்கும் குழந்தைகள் எதிர்காலம்!



‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... அவருக்கு...’ எனத் தொடங்கும் எத்தனையோ கதைகளைச் சிறு வயதில் தாத்தா, பாட்டியிடம் கேட்டு மகிழ்ந்திருப்போம். ஆனால், இன்றைய தீவுக் குடும்பங்களில் கதைகளும் கேட்கப்படுவதில்லை; சொல்வதற்கு முதியோர்களும் இல்லை. ‘படி... படி...’ எனக் குழந்தைகளின்  பெண்டை நிமிர்த்தும் சமூகத்தில், கதை சொல்லல் கலையைத் தொடர்ந்து மீட்டெடுத்து வருகிறார் பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணி கீதா ராமானுஜம்!

தன்னைப் போன்ற கதைசொல்லிகளை உருவாக்க, ‘கதாலயா’ எனும் நிறுவனத்தை இருபது வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தவர் இவர்.  இப்போது கதைசொல்லிக்கென இந்தியாவில் முதல்முறையாக ‘டிப்ளமோ கோர்ஸ்’ ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ‘கதைகளின் வழியாக குழந்தைகளுக்கு நிறைய விஷயங்களை எளிதாகக் கற்றுத் தரவும், புரிய வைக்கவும் முடியும்’ என உறுதியாக நம்பும் கீதாவிடம் பேசினோம்.
‘‘என் குழந்தைப் பருவம் கதைகளால் நிரம்பினது.

அப்பாகிட்ட ஆங்கிலக் கதைகளையும், அம்மாகிட்ட புராண மற்றும் இதிகாசக் கதைகளையும் ஏராளமா கேட்டு வளர்ந்தேன். அதுதான் இன்னைக்கு என்னை இந்த அளவுக்கு மேம்படுத்தியிருக்கு’’ என உற்சாகமாக ஆரம்பிக்கும் கீதா, குழந்தைகளிடம் கதை சொல்லும் விதமே தனிதான். குரங்கு பற்றிய கதையாக இருந்தால் குரங்கு பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு சொல்கிறார். அவரது குரலிலும், பாவனைகளிலும் ஒரு குரங்கின் தன்மை வெளிப்படுகிறது.

இப்படி கதைகளுக்கு ஏற்றபடி மாறி, குழந்தைகளைச் சிரிக்கவும், சிந்திக்கவும், ரசிக்கவும் வைக்கிறார். ‘‘இப்படித்தான் என் அப்பா, அம்மா எனக்கு நிறைய கதைகள் சொல்வாங்க. அதையே நானும் தொடர்கிறேன்’’ என்கிற கீதா, ‘கதாலயா’ உருவான கதையை விவரிக்கிறார். ‘‘ஆரம்பத்துல, அரவிந்தர் ஸ்கூல்ல சின்னக் குழந்தைகளுக்குக் கிளாஸ் எடுத்தேன். என்னோட வகுப்பே அமர்க்களமா இருக்கும். அங்க வேலை பார்த்திட்டே எம்.ஏ., எம்.எட் எல்லாம் முடிச்சேன்.

அடுத்ததா, கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் ஸ்கூல்ல வரலாற்று ஆசிரியர் வேலை கிடைச்சது. அங்க, நான்காம் வகுப்புல இருந்து பத்தாம் வகுப்பு வரை வகுப்பெடுக்கணும். இங்க என்னோட பாடத்திட்டத்தை நானே உருவாக்குற சுதந்திரம் கிடைச்சது. அதனால போர்கள், நினைவுச் சின்னங்கள்னு பல விஷயங்களைக் கதைகள் மூலமா கொண்டு போனேன். என்னோட கதைகளையும் பாடத்தையும் மரத்து மேல உட்கார்ந்துட்டே குழந்தைங்க கவனிப்பாங்க.

அதுக்கப்புறம் அந்தப் பள்ளியில புதுசா ஆரம்பிச்ச நூலகத்துல என்னை லைப்ரரியனா போட்டாங்க. அங்க புத்தகம் எடுத்துட்டுப் போற குழந்தைகள் மறுநாளே ‘படிச்சிட்டேன்’னு வந்து கொடுப்பாங்க. ஆனா, உண்மையில படிச்சிருக்க மாட்டாங்க. நான் புத்தகத்துல இருந்து கேள்வி கேட்பேன். திணறுவாங்க. அப்போ, நானே அந்தக் கதைகளை சுவாரசியமா சொல்வேன். சீரியஸா கேட்டுட்டு இருக்கிற குழந்தைங்க, ‘அடுத்து என்ன? சீக்கிரம் சொல்லுங்க. பெல் அடிச்சிடுவாங்க’னு அவசரப்படுத்துவாங்க.

புத்தகத்தை அவங்க கையில கொடுத்து, ‘இதுவரை சொன்னது போக மீதியை இந்தப் பக்கத்துல இருந்து படிச்சிட்டு வந்து சொல்லணும்’னு அனுப்பிடுவேன். இப்படி குழந்தைகளுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தினேன். இதை ஒருமுறை பக்கத்துல இருந்த கவனிச்ச ஒரு குழந்தையின் பெற்றோர், பள்ளிக்கு வெளியில ஒரு பயிற்சி நடத்தச் சொல்லிக் கேட்டாங்க. அப்படி நான் நடத்தின பயிற்சி பற்றி செய்தி வந்துச்சு.

இதைப் பார்த்து மதுரையிலிருந்தும், பெங்களூருவுல இருந்தும் பள்ளி தலைமையாசிரியர்கள் ரெண்டு பேர் என்னை அழைச்சாங்க. அவங்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கக் கேட்டாங்க. அப்படித்தான் எனக்கு என் கதை சொல்லல்ல நம்பிக்கை வந்துச்சு. தனியா ஒரு அமைப்பு ஆரம்பிச்சு கதை சொல்லலை வளர்க்கலாமேனு தோணுச்சு. உடனே, பள்ளி டைரக்டர்கிட்ட சொல்லிட்டு வேலையைத் துறந்தேன். என் கூட ரெண்டு டீச்சர் ஃப்ரண்ட்ஸும் சேர்ந்தாங்க. ஆனா, பள்ளி டைரக்டர் எங்க ராஜினாமாக்களை ஏத்துக்கலை.

‘நீங்க பண்ணப் போறது நல்ல விஷயம். ஒருவேளை முடியலைன்னா இங்கேயே வேலைக்கு வந்துடுங்க’னு சொல்லி அனுப்பிச்சார். ஆனா, நாங்க சக்சஸ் ஃபுல்லா கதாலயாவை ஆரம்பிச்சோம்’’ என விறுவிறுப்பைக் கூட்டும் கீதா, சமீபத்தில் பிரேசிலில் நடந்த விழாவில் சிறந்த கதை சொல்லிக்கான விருதினைப் பெற்றுத் திரும்பியுள்ளார்.

‘‘ரொம்ப நாளா கதைகளுக்காக ஒரு கோயில் உருவாக்கணும்னு ஆசை! அதனால, இந்த அமைப்புக்கு ‘கதாலயா’னு பெயர் வச்சோம். ஆசிரியர்கள் நிறைய பேருக்கு இலவசப் பயிற்சி கொடுத்தோம். ஆனா, நிதியில்லாமல் கஷ்டப்பட வேண்டியதாகிடுச்சு. டிரஸ்ட்டா மாத்தினா நிதிக்கு அணுகலாம்னு ‘கதாலயா டிரஸ்டை’ ஆரம்பிச்சோம். இந்த நேரத்துல அமெரிக்காவுல இருக்கிற அசோகா ஃபவுண்டேஷன், தனித்துவமா செயல்படுறவங்களுக்கு விருதும், நிதியுதவியும் கொடுத்தாங்க. எல்லாமே கைகூடி வந்ததால இப்போவரை நல்ல
படியா எங்க பயணம் போயிட்டு இருக்கு.

சென்னை, மும்பை, புனேனு நாலு இடங்கள்ல எங்க சென்டர் இருக்கு. இந்தியா மட்டுமல்ல... உலகம் முழுவதும் இருந்து இங்க பயிற்சி எடுக்க வர்றாங்க. இதுவரை 70 ஆயிரம் பேருக்கு நாங்க பயிற்சி கொடுத்திருக்கோம்’’ என்கிறவரிடம் இந்த டிப்ளமோ கோர்ஸ் தொடங்கக் காரணம் கேட்டோம். ‘‘இன்னும் நிறைய கதைசொல்லிகளை உருவாக்கணும்னுதான் இந்தக் கோர்ஸை ஆரம்பிச்சிருக்கோம். இங்க டிப்ளமோ மட்டுமல்ல... ஆரம்ப நிலை கோர்ஸ், கார்ப்பரேட் கோர்ஸ், குழந்தைகளுக்கான புரோகிராம்னு தனித்தனியா நடத்துறோம்.

இந்தப் படிப்புல நாங்க நிறைய கதைகள் சொல்லித் தருவோம். அதுல முகபாவம், குரல்னு எல்லாத்தையும் எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணணும்ங்கிற விஷயமும் அடங்கும். பொம்மலாட்டம் வழியா கதை சொல்றதும், பயணமாகும் இடங்கள்ல இருக்கிற கதைகளை சேகரிக்கிறதும் இதிலுள்ள முக்கிய அம்சங்கள்’’ என்கிற கீதா, அழுத்தமாக ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார்.

‘‘பொதுவா கதைகள் வழியா வகுப்பெடுக்கும்போது குழந்தைகள்கிட்ட கவனிக்கிற திறனும், பொறுமையும் அதிகரிக்கும். மொத்தமா, அவங்க ஆக்டிவிட்டியையே மாற்றிடலாம். அதனால, குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லி வளர்த்தெடுங்க. ரொம்ப உற்சாகப்படுத்துங்க. நிச்சயம் அவங்க எதிர்காலம் சிறப்பா அமையும்!’’

‘‘குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லி வளர்த்தெடுங்க. ரொம்ப உற்சாகப்படுத்துங்க. நிச்சயம் அவங்க எதிர்காலம் சிறப்பா அமையும்!’’

- பேராச்சி கண்ணன்