குறை



‘‘அப்பா! நீங்க முதியோர் இல்லத்துக்குப் போக வேண்டாம்ப்பா’’ என கெஞ்சினான் ராகவன். ‘‘இங்க உங்களுக்கு என்ன குறை? நாங்க உங்களை நல்லபடியாத்தானே பார்த்துக்குறோம். அப்புறம் ஏன் தினமும் தூங்கி எழுந்டதும் ‘முதியோர் இல்லத்தில் போய் தங்கிக்குறேன்’னு பிடிவாதம் பிடிக்குறீங்க. பாக்குறவங்க ஒரு மாதிரி நினைப்பாங்கப்பா, கேள்விப்பட்டா எங்களை தப்பா பேசுவாங்கப்பா’’ படபடப்பாய் சொன்னாள் மருமகள் கிரிஜா.

மகனையும் மருமகனையும் பார்த்துச் சிரித்தார் சுந்தரம். ‘‘நான் அப்படிச் செய்யறதுக்கு காரணம் இருக்குப்பா! எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொல்லிட்டிருக்க முடியாது. வயசு வித்தியாசம் இருக்குதில்லே. எதுனாலும் குத்தம் குறை இருந்தா என் வயசுக்காரங்க என்கிட்டதான் சொல்லுவாங்க. ஆயிரம்தான் இருந்தாலும் நீ வயசுப் பையன்.

சில விஷயங்களைப் பேச, பகிர்ந்துக்க அவங்களுக்கு தயக்கமா இருக்கும். அதான் காலையில் தினமும் போய் அவங்களோட இருந்து பழகி சகஜமாக்கி, அவங்க குறைகளைக் கேட்டு சரி பண்ணிட்டு வர்றேன்!’’ முதியோர் இல்ல நிர்வாகியான தன் மகனிடம் சொல்லிவிட்டு முதியோர் இல்லம் நோக்கி நடந்தார் சுந்தரம்.

-வீ.சுரேஷ்