குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்
பழைய பேப்பர் கோ.செங்குட்டுவன்
(பி.எஸ். பப்ளிகேஷன், 20-5 சி, கந்தசாமி லே-அவுட், 2வது தெரு, கன்னியாகுளம் சாலை, விழுப்புரம்-605 602. விலை: ரூ.225/- தொடர்புக்கு 99446 22046)
தேர்ந்த பத்திரிகையாளரின் பங்கு ஒரு போர் வீரன் போன்றது. சூழலுக்குத் தக்கவாறு பணியாற்றுவதும், செய்திகள் சேகரிப்பதும், நல்ல வண்ணம் அந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் சாதாரண வேலையில்லை. அதிலும் வெளியூரில் இருந்து செய்தி சேகரிக்கும் நிருபரின் பணி சுவாரஸ்யங்கள் நிறைந்தது. திடீர் திருப்பங்கள் கொண்டது. இவ்வளவு செய்திகள் உருவான அத்தனை பின்னணிகளையும் துறுதுறு நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் செங்குட்டுவன்.

சதா நுண்ணுணர்வுடன் வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். அவரின் அனுபவங்கள், செய்தியாளர்களுக்கு கற்றுத் தரும் பாடங்களாகிவிடுகின்றன. ஒரே ஓட்டத்தில்  படித்து முடித்துவிடலாம். செய்தி சேகரிப்பின் அத்தனை சூட்சுமங்களும் புரிந்துவிடுகிறது. இதழியல் மாணவர்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்குமான புத்தகம். பெயர்தான் ‘பழைய பேப்பர்’. விஷயங்கள் இன்றைக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியவைதான்.

சிற்றிதழ் Talk
பல எழுத்தாளர்கள், என் கதைகளின் கதாபாத்திரங்கள், நான் அவர்களாகி வாழ்ந்த மனிதர்கள், அன்பு செலுத்தி இழந்தவர்கள்... இவர்களின் ஆவிகள் என்னைத் துரத்துகின்றன. தன்னுள் வாழ்ந்தவர்களின் உரையாடல்களைக் கேட்ட ஒரு புராதன வீடு போல் என்னை உணர்கிறேன்.
- மகாஸ்வேதா தேவி
(‘காலச்சுவடு’ இதழில்...)


சர்வே
16 நிமிடங்களுக்கு ஒரு கொலை, 15 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வல்லுறவு, 6 நிமிடங்களுக்கு ஒரு மனிதக் கடத்தல், 119 நிமிடங்களுக்கு ஒரு வழிப்பறி, 14 நிமிடங்களுக்கு ஒரு கொள்ளை, 448 நிமிடங்களுக்கு ஒரு சாதிக் கலவரம், 60 நிமிடங்களுக்கு ஒரு பெண் மானபங்கம்... இந்தக் கொடுமைகள் ஏதோ காட்டாட்சி நடைபெறும் ஆப்ரிக்காவின் பின்தங்கிய ஒரு நாட்டின் நிலவரம் இல்லை. நம் இந்தியாவில்தான் நிகழ்கின்றன. 2015ம் ஆண்டுக்கான இந்தியாவின் குற்றப் பின்னணியை ஒரு காலண்டர் போல புட்டு வைக்கிறது மத்திய அரசின் ‘க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ’ அமைப்பு.

சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இவை அனைத்தும் புகார் கொடுத்து, வழக்காகப் பதிவான புள்ளிவிவரங்கள் மட்டுமே! புகார் கொடுக்கத் தயங்கிய குற்றங்கள், போலீஸ் புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பிய நிகழ்வுகள் எதுவும் இதில் அடங்காது! இந்தப் புள்ளிவிவரங்களை மாநில வாரியாகவும் வகுத்து வகிடு எடுக்கிறது இந்த அமைப்பு. தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டில் நடந்த 298 கொலைகளுக்குப் பின்னணியாக இருந்தது காதலும், கள்ளக்காதலும்தான் என்பது ஹைலைட். மனிதக் கடத்தல் சம்பந்தமாக சுமார் 577 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது இந்தியாவின் மனிதக் கடத்தலில் சுமார் 8.4 சதவீதம்!

நிகழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ் சினிமா உலகில் கோலேச்சிய ஷீலா, ஜெயசுதா, அம்பிகா, ராதா, ராதிகாவிலிருந்து சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என இன்றைய ஸ்டார்கள் வரை திரண்ட கலர்ஃபுல் கொண்டாட்டம் அது. நடிகையும் இயக்குநருமான ஸ்ரீப்ரியா - ராஜ்குமார் தம்பதியின் 25வது திருமண விழா வெகு சிறப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. ஸ்ரீப்ரியாவுக்கு கோலிவுட் மட்டுமல்ல... தென்னிந்தியாவின் அத்தனை திரையுலகிலும் நட்பு வட்டம் உண்டு. ஸ்ரீப்ரியாவின் நெருங்கிய தோழியான ராதிகா, விழாவிற்கு தனது மகள் ரேயானையும் அழைத்து வந்திருந்தார். ஸ்ரீப்ரியா ரொம்பவே நெகிழ்ந்து, மகிழ்ந்த விழாவாக இருந்ததுதான் இதன் ஹைலைட்.

யு டியூப் லைட்
இப்போது பாலிவுட்டில் ஒரு ஸ்டாரின் பட புரொமோஷனுக்கு இன்னொருவர் வீடியோ போஸ்ட் செய்வது டிரெண்டாகி இருக்கிறது. அக்‌ஷய்குமாரின் ‘ரஸ்டம்’ படத்துக்கு நிறைய பேர் இப்படிச் செய்தார்கள். பதிலுக்கு சோனாக்‌ஷியின் ‘அகிரா’ படத்துக்கு அக்‌ஷய் போஸ்ட் செய்திருக்கும் வீடியோ சுவாரசியம். லக்னோவுக்கு ஷூட்டிங் போயிருக்கும் அக்‌ஷய், அங்கே பாயும் கோமதி நதியின் கரையிலிருந்து இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்.

‘‘பெண்களின் சக்தியை எப்போதும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதுவும் குறிப்பாக ‘அகிரா’வில் சோனாக்‌ஷி சின்ஹா, கிக் பாக்ஸிங்கில் மாஸ்டராகிவிட்டார்’’ என்று அக்‌ஷய் சொல்லும் வீடியோவை 16 லட்சம் பேர் ரசித்திருக்கிறார்கள். 92 ஆயிரம் லைக்ஸ், 2700 ஷேர்ஸ் என செம வைரல் ஆகிவிட்டது இந்த வீடியோ.

டெக் டிக்!
ஜீப்ரானிக்ஸ்  நிறுவனம் இசைப் பிரியர்களை மனதில் வைத்து ப்ளூடூத் ஹெட் செட்டை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெட் செட்டில் துல்லியமாக நாம் விரும்பும்  இசையை, பாடல்களைக் கேட்க முடியும். அயல் நாடுகளில் இருக்கும் நண்பர்களிடம் சாட் செய்யும்போதும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சுமார் முப்பது மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் டி.வி, எஃப்.எம் ரேடியோ, ஸ்மார்ட் போன் போன்றவற்றுடன் இந்தக் கருவியை இணைத்துக்கொள்ள முடியும். இதன் விலை: ரூ.700.