கொலை என்பது வெறும் கொலை அல்ல!



-ஜெயராணி

நேற்று தூத்துக்குடியின் பிரான்சினா... அதற்கு முந்தின நாள் கரூரில் சோனாலி... ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் நான்கு பேர் ஒருதலைக்காதல் பிரச்னையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒருதலைக் காதல் மட்டுமல்ல... கௌரவக் கொலை, வரதட்சணைக் கொடுமைகள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், சாதிரீதியான வன்முறைகள் என எல்லாக் குற்றமும் கடந்த காலங்களைவிட எப்போதுமே அதிகரித்தே காணப்படுகின்றன.

பெண்களுக்கெதிரான வன்முறை மட்டுமல்ல... குழந்தைகள், தலித் மக்கள், மதச் சிறுபான்மையினர், பாலின சிறுபான்மையினர் என யாரெல்லாம் சமூக, பண்பாட்டுரீதியாக கீழானவர்களோ அவர்களுக்கெதிரான வன்முறைகள் நாள்தோறும் நடந்தேறுகின்றன. குற்றங்கள் புரிவதை வாழ்க்கைமுறையாகக் கொண்ட, பண்பாட்டு ரீதியாக அதை சரியென்று நம்புகின்ற ஒரு சமூகத்தில், சாதி/மத/பாலின ரீதியாக நடக்கும் ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னரும் அதை நியாயப்படுத்தும் செருக்கை சுமக்கிற நாட்டில், நாம் இதற்கெல்லாம் அதிர்ச்சியுடன் எதிர்வினையாற்றுவது வேடிக்கையானது.

‘ஒரு பெண் தன் காதலை நிராகரித்தால் அவளைக் கொல்லலாம்’ என்று நினைப்பது ஆண்களிடம் மட்டுமே காணக் கூடிய தனித்துவமான ஆதிக்க மனப்பிறழ்வா? நிச்சயமாக இல்லை. தன் மகள் சாதி மாறிக் காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ, தமது கௌரவத்துக்கு இழுக்காகிவிடுமெனக் கருதி அவளை விஷம் வைத்தோ, அடித்தோ கொலை செய்யத் துணியும் பெற்றோர், அதே ஆதிக்க மனப்பிறழ்வைக் கொண்டிருக்கின்றனர்.

சாதிய விதிமுறைகளை மீற எத்தனிக்கும்போது தலித்களின் வாயில் மலத்தைத் திணிக்கும் ஆதிக்க சாதியினர், அதே ஆதிக்க மனப்பிறழ்வைச் சுமக்கின்றனர். தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் பண்பாட்டு உணவான மாட்டிறைச்சியை அவர்கள் உண்பதை சகித்துக்கொள்ள முடியாமல் தாக்குதலில் இறங்கும் இந்துத்துவவாதிகள், அதே ஆதிக்க மனப்பிறழ்வை பங்கு போடுகின்றனர். தலித் பெண்கள் தம் சமூக ஆண்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுவதைப் பார்த்து ரசிக்கும் ஆதிக்க சாதி பெண்கள், அதே ஆதிக்க மனப்பிறழ்வை தமக்குள் உறுதி செய்கின்றனர்.

இதில் எந்தவொன்று நடக்கும்போதும் நாம் எதிர்க்கிறோம். ஊடகங்கள் அவற்றைப் பரபரப்பாக்கி நம்மைப் பேச வைக்கின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில் இங்கு பெரும்பான்மைச் சமூகம் மேற்சொன்ன குற்றங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. விவாதிக்கும் ஊடகங்களைத் தாண்டி, விவாதம் செய்யும் அறிவுச் சமூகத்தைக் கடந்து, இந்தக் குற்றங்கள் பொது சமூகத்தின் மத்தியில் எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இதுபோன்ற சாதி, மத, பாலினரீதியான குற்றங்களுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாத பொது மக்களின் அமைதி, ஏதோவொரு வகையில் அவர்கள் இக்குற்றங்களுக்கு ஆதரவாக இருப்பதையே உறுதி செய்கிறது. குற்றங்கள் அனைத்தும் பொதுமக்களின் பேராதரவைக் கொண்டிருக்கையில் அவை எவ்வாறு கட்டுப்படுத்தப்படும்? ஸ்வாதியைத் தொடர்ந்து அதே போன்ற காரணங்களுக்காக கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் நவீனா, சோனாலி, பிரான்சினா மற்றும் தாக்குதலுக்கு உள்ளான மோனிகா ஆகியோர் விஷயத்தில் நாம் விவாதிக்க பல கூறுகள் இருக்கின்றன. மூன்று விஷயங்களை அவற்றில் முதன்மைப்படுத்தலாம்.

முதலாவதாக, தம் மகள்களுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கேட்டு இவர்களின் பெற்றோர்கள் ஏன் போராடவில்லை? தவறான சிகிச்சை அளித்ததால் நிகழ்ந்த மருத்துவக் கொலைகளுக்குக்கூட உறவினர்கள் கூடி பிணத்தை வாங்க மறுத்து போராட்டம் செய்வது அடிக்கடி நடக்கிறது. ஆனால் இதுபோன்ற காதல் விவகாரக் கொலைகளில் அப்படியான ஒன்று நடப்பதே இல்லையே, ஏன்? இவை எல்லாமே உண்மையாகவே ‘ஒருதலைக் காதல்’ பிரச்னையால் நிகழ்ந்த கொலைகள்தானா என்ற கேள்வி இதன் பின்னணியில்தான் எழுகிறது.

இப்படி சந்தேகம் எழுவதற்கான நியாயங்கள் இல்லாமல் இல்லை. ஸ்வாதி கொலைக்கு உண்மையான காரணம் என்ன என இன்றளவிலும் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன. அதே போல நவீனா கொலையிலும் அவரைக் கொன்றதாகச் சொல்லப்படும் செந்தில் ஒரு கை, ஒரு கால் இல்லாதவர். அவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, இரண்டு கை கால்களும் நன்றாக இருக்கும் நவீனாவை அவரது வீட்டிற்குள் வைத்து எரியும் நெருப்போடு கட்டியணைத்துக் கொலை செய்தார் என்பதும் நம்பத் தகுதியற்ற தகவலாக இருக்கிறது.

உதயகுமாருடன் செல்போனில் பேசி வந்த சோனாலி ஏன் அதை நிறுத்தினார்? அது அவரது தனிப்பட்ட முடிவு மட்டும்தானா? ஆசிரியை பிரான்சினாவுக்கு ஓராண்டு காலமாக வரம்பு மீறிய தொல்லை கொடுத்த கீகன் ஜோஸ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இந்தக் கேள்விகள் நிராகரிக்கக்கூடியவை அல்ல. பெற்றோரின் சாதி, மதம், பொருளாதாரம் தொடர்பான கௌரவத் தலையீடுகள் இவற்றில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த பங்கும் ஆற்றவில்லையா என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும்.

இரண்டாவதாக, இந்தக் கொலைகளை, அந்தப் பெண்களைக் காதலித்த ஆண்களே செய்திருக்கின்றனர். ஒரு பெண்ணின் நிராகரிப்பை அவமானகரமானதாகக் கருதுவதும் வன்மத்தோடு அணுகுவதும் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடுதான். ‘ஒரு பெண்ணுக்கு ஆணின் விருப்பத்தை மறுதலிக்கும் உரிமை இல்லை’ என்ற பழைய அதிகாரம் இத்தனை முன்னேறிய காலத்திலும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம், வளர்ப்பு முறையில் உள்ள கோளாறு.

இந்திய குடும்ப அமைப்பு ஆண்-பெண் சமத்துவத்தை குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பண்பை இன்றளவிலும்கூட வளர்த்துக்கொள்ளவில்லை. மகள்களுக்கு கல்வி கொடுத்து, உரிமைகளை வழங்கி, சுதந்திர உணர்வை ஊட்டும் பெற்றோர், மகன்களுக்கு அடக்கத்தை, கற்பித்து, அதிகாரத்தைத் துறக்கச் செய்து, சமத்துவத்தை போதிக்க வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை. சுதந்திர உணர்வு கொண்ட பெண்களும், சமத்துவ உணர்வற்ற ஆண்களும் ஒரு சமூகத்தில் சேர்ந்திருக்கும்போது என்ன பிரச்னையெல்லாம் நடக்குமோ அவைதான் நடந்து கொண்டிருக்கின்றன.

‘தான் காதலித்துவிட்டாலே போதும், அவளும் காதலிக்க வேண்டும்’... ‘தன்னைக் காதலித்துவிட்டாலே போதும், எந்த சூழலிலும் அதிலிருந்து விலகக் கூடாது’ என்ற இரண்டுமே வாழ்க்கைக்கு உதவாத அதிகாரக் கருத்தியல்களே. விருப்பத்தை நிராகரிப்பதும், சரிவராத ஓர் உறவிலிருந்து விலகிப் போக நினைப்பதும் அடிப்படை மனித உரிமைகளாகின்றன. அந்த உரிமைகள் ஆணைப் போலவே பெண்ணுக்கும் உண்டு. பெண்ணைப் போலவே ஆணுக்கும் உண்டு.

சமத்துவத்தை மையப்படுத்தும் அறக் கல்வியை குடும்பங்களும் போதிப்பதில்லை, கல்வி நிலையங்களும் கற்பிப்பதில்லை எனும்போது ஆண்கள் நிகழ்த்தும் பாலின வன்முறைகள் எப்படி அழியும்? இளைஞர்களைப் பெரிதும் ஈர்க்கும் ஹீரோயிஸ திரைப்படங்கள் வலுக்கட்டாயக் காதலை ஆண்மையாக சித்தரிக்கும் அவலங்கள் நீடித்துக்கொண்டே இருக்க... சமூகத்தில் மட்டும் அவை நடக்காதா என்ன? 
   
மூன்றாவதாக, ஊடகங்களின் பொறுப்புணர்வு. பிரஸ் கவுன்சிலின் ஊடக விதிமுறைகளின்படி குற்றச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவமளித்து தத்ரூபமாக ரிப்போர்ட் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஊடகங்கள் எப்போதெல்லாம் கொடூரமாக ஒரு குற்றம் நிகழுமெனக் காத்திருந்து, பார்வையாளர்களுக்கு அவற்றை பரபரப்பான விருந்தாக்குகின்றன. ‘குற்றச் செய்திகள் சமூக உளவியலைக் கடுமையாக பாதிப்பதோடு, அதே போன்ற குற்றங்கள் பெருக வாய்ப்பளிக்கின்றன’ என்பதாலேயே ஊடக அறம் குற்றங்களை ரிப்போர்ட் செய்யத் தடை விதிக்கிறது.

ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து தெலங்கானாவில் ஒரு நிகழ்வும் தமிழகத்தில் ஒன்றும் அடுத்தடுத்து நடந்தன. சோனாலி கொலை, செய்தியானவுடன் தொடர்ந்து மூன்று சம்பவங்கள். ஸ்வாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்டது போலவே, இந்தக் குற்றங்களிலும் குற்றவாளிகள்(!) தற்கொலை செய்திருக்கின்றனர்; அல்லது முயன்றிருக்கின்றனர். குற்றச் செய்திகளை தத்ரூபமாக ரிப்போர்ட் செய்வதன் மூலம் நிகழக்கூடிய அதிகபட்ச பலன் இதுதான்.

அது அதே போன்ற சிக்கலில் இருக்கும் வேறொரு நபருக்கு மோசமான தீர்வை முன்மொழிகிறது. ஒரு பெண்ணை ஒருவன் காதலித்தான், அந்தப் பெண் அவனை எப்படியெல்லாம் நிராகரித்தாள், அதனால் அவன் எப்படி கோபமுற்றான், அந்தக் கோபத்தில் அந்தப் பெண்ணை எப்படி கொலை செய்தான், அதற்கு என்ன ஆயுதம் பயன்படுத்தினான், எங்கேயெல்லாம் வெட்டினான்... இப்படி ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் சமூக ஆரோக்கியத்தை சீர்கெடுக்கும் சக்தி வாய்ந்தவை.

நிகழ்வுகளை ஆராய்வதை விடவும், அதே போன்றதொரு குற்றத்தை அடுத்து நடக்கவிடாமல் தடுப்பதற்கான கல்வியை சமூகத்திற்கு அளிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆனால் இந்த பொறுப்புணர்வை புறந்தள்ளிவிட்டு, சீரியல்கள் அல்லது திரைப்படக் காட்சியைப் போல அவை குற்றங்களை அணுகுகின்றன. அதன் விளைவுகளைத்தான் நாம் அனுபவிக்கிறோம்.

ஒரு கொலை என்பது வெறும் ஒரு கொலை மட்டுமல்ல. ஒரு வன்முறைச் சம்பவத்தை ஏதோவொரு அசாதாரண நிகழ்வென சுருக்க முடியாது. அதுவொரு சமூகச் சீர்கேடு; சமூக ஆரோக்கியத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை; பொது அமைதிக்கு எதிரான சவால். நமக்குப் பக்கத்தில் நடக்கும் வன்முறைகளை நாம் வேடிக்கை பார்த்தால், நாளை நம் மீது நடத்தப்படும் வன்முறைகள் இச்சமூகத்தால் வேடிக்கை பார்க்கப்படும்.

எல்லா விதமான வன்முறைகளையும் குற்றங்களையும் களையெடுக்கும் ஆர்வம் கொண்ட சமூகத்தில் மட்டுமே நிம்மதியும் அமைதியும் உறுதி செய்யப்படுகிறது. சாதி, மத, பாலின ரீதியான ஆதிக்க உணர்வால் குற்றங்களை தொடர்ந்து நியாயப்படுத்தும்... அதைப் பெருமிதத்துடன் கொண்டாடி ஊக்குவிக்கும் மனப்பிறழ்வு கொண்ட சமூகத்திற்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இல்லவே இல்லை.   

நமக்கு பக்கத்தில் நடக்கும் வன்முறைகளை நாம் வேடிக்கை பார்த்தால், நாளை நம் மீது நடத்தப்படும் வன்முறைகள் இச்சமூகத்தால் வேடிக்கை பார்க்கப்படும்.

‘ஒரு பெண்ணுக்கு ஆணின் விருப்பத்தை மறுதலிக்கும் உரிமை இல்லை’ என்ற பழைய அதிகாரம் இத்தனை முன்னேறிய காலத்திலும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.