கன்னி லக்னத்துக்கு புதனும் சந்திரனும் தரும் யோகங்கள்



ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

கிரகங்கள் தரும் யோகங்கள்


சர்வகலாபிதனான சந்திரனும், நுண்ணிய அறிவைத் தருபவனான புதனும் சேரும்போது அழகான ராட்சசி அங்கு உருவாகிறாள். எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும், அலட்சியமான புன்னகையில் அதைக் கடந்து செல்வார்கள். இவர்கள் எது செய்தாலும் அதில் வசீகரமும் புத்திசாலித்தனமும் சேர்ந்தே இருக்கும். நுட்பங்களை நோக்கிய அழகியல் சார்ந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். ‘போலச் செய்தல்’ என்பதே இவர்களிடம் இருக்காது. எதையும் சுயமாகச் செய்யும் தனித்துவத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கடினமான வேலைகளை விட கவித்துவமான காரியங்களையே செய்வார்கள். ‘புத்தியா... தோற்றமா... எது முக்கியம்?’ என்கிற பட்டிமன்றம் இவர்களுக்குள் நடந்துகொண்டே இருக்கும். எனவே, எங்கு தோற்றம் முக்கியமென்றும், எங்கு புத்தியின் கூர்மை பாயும் என்பதையும் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருப்பார்கள். மேதைமைக்கே உரிய தீட்சண்யமும், அழகானவர்களுக்கு உரிய திருத்தமும் இவர்களிடத்தில் ஒருசேரக் கலந்திருக்கும். புதுப்புது சிந்தனைகளால் கவரப்படுவார்கள். மூட நம்பிக்கைகளை தீர விசாரித்து தவறெனில் உதறுவார்கள். 

உற்சாகமான மனோநிலையை எப்போதும் பெற்றிருப்பார்கள். தங்களைச் சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்பார்கள். சந்திரன் மூத்த சகோதர உறவுகளுக்கு உரித்தானவராக இருப்பதால், அவர்களை தந்தை ஸ்தானத்தில் வைத்துப் போற்றுவார்கள். ‘சந்திரனும் புதனும் சேர்ந்தால் இந்திரன் போல் வாழ்வான்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவை எல்லாமே புதனும் சந்திரனும் இணையும்போது கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்குக் கிடைக்கும் பொதுவான பலன்கள். ராசியில் எந்தெந்த இடங்களில் இவர்கள் இணைந்திருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்... 

லக்னத்திலேயே - அதாவது கன்னியில் புதனோடு லாபாதிபதியான சந்திரன் இணைகிறார். இவர்களின் தோற்றத்தில் வசீகரத்துவம் இருக்கும். எப்போதும் எல்லோரோடும் சிரித்துப் பேசியபடி இருப்பார்கள். எந்த வேலையையும் அதிவேகமாக செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். ‘புத்திசாலித்தனமாக இருந்தால் போதும், எல்லோரையும் வெல்லலாம்’ என்பதே இவர்களின் சித்தாந்தமாகும். எல்லா கோணங்களிலும் யோசிப்பார்கள்.

எது சொன்னாலும் சட்டென்று பற்றிக் கொள்வார்கள். புகழ்பட வாழ்வதே வாழ்க்கை என்பதில் அசையாத நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி வைப்பார்கள். எதையுமே பதிவு செய்வதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். லக்னத்திற்கு இரண்டாம் இடமான துலாம் ராசியில் புதனோடு சந்திரன் அமர்வது யோகமான அம்சம். சுக்கிரனின் இடத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் மிதமிஞ்சிய படைப்பாற்றல் இருக்கும். பேசினால் தேன் சொட்டும். சர்வ சாதாரணமாக வெற்றியை நோக்கி நடை போடுவார்கள். இவர்களுக்கு மழலைப் பேச்சு ஐந்து வயது வரை இருக்கும்.

இவர்கள் எப்போதும் எல்லோர் மத்தியிலும் தங்களை முக்கியமானவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். இவர்கள் படித்த வேலையைக் காட்டிலும் கலைத் துறையில் ஏதேனும் சாதிப்பார்கள். பணத்தோடு விளையாடுவார்கள். கேளாமலேயே எல்லோருக்கும் கொடுத்து உதவி செய்வார்கள். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். எவ்வளவு வருடமானாலும் தனக்கு பால்ய வயதில் பாடங்களைக் கற்றுத் தந்த ஆசிரியர்களைப் பார்த்து வருவார்கள்.

மூன்றாம் இடமான விருச்சிகத்தில் சந்திரனும் புதனும் சேர்ந்து அமர்கிறார்கள். ஆனால், சந்திரன் இங்கு நீசமாகிறார். ‘எதை முதலில் செய்ய வேண்டும், எதைப் பிறகு செய்ய வேண்டும்’ என்று குழம்பித் தவிப்பார்கள். அவசரத்திற்கு இவர்களால் செயலாற்ற முடியாது. நிதானமாகத்தான் மனம் ஒரு வேலையைச் செய்யும். எதற்கும் உடனே பதில் சொல்லத் திணறுவார்கள். ஆனால், ஒரு வேலையில் இறங்கினால் நின்று நிதானமாக ஆழமாகச் செய்வார்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு சுமாராகத்தான் இருக்கும்.

ஆனால், பிரச்னை இல்லாமல் போகும். ‘இன்னும் அவர்களுக்கு உதவலாமே’ என்கிற ஆதங்கம் இருந்தபடி இருக்கும். போக விஷயங்களில் இவர்கள் அளவுக்கு அதிகமாக ஈடுபடக் கூடாது. எல்லா விஷயங்களைப் பற்றியும் அடிப்படையாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். மனோதர்மத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நான்காம் இடமான தனுசு ராசியில் புதனும் சந்திரனும் அமர்வதென்பது கேந்திராதிபதி தோஷமாகும். தாங்கள் படித்ததற்கு சம்மந்தமில்லாமல் வேலையைப் பார்ப்பார்கள்.

சுக ஸ்தானத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்வதால், எங்கேனும் நிம்மதியாக இருக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி வெளியூருக்குச் சென்று விடுவார்கள். தாயாரின் ஆலோசனைகளைக் கேட்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள். எப்போதும் இவர்களைச் சுற்றி பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். தனிப்பட்ட முறையில் தனது மனம் ஈடுபடுகிற வித்தையை - அது சங்கீதமோ, கவிதையோ - மனப்பூர்வமாகச் செய்து ஆத்ம திருப்தி பெறுவார்கள். எப்போதும் சொந்த பந்தங்கள் சூழ இருக்கவே விரும்புவார்கள். கியர் வண்டிகளை இவர்கள் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

ஐந்தாம் இடமான மகரம், பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். இங்கு சந்திரனும் புதனும் அமர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடி இருக்கும். எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். ஆனால், இவர்கள் எங்கிருந்தாலும் சொந்த மண்ணை மறக்க மாட்டார்கள். அழகும் அறிவும் நிரம்பிய வாரிசுகள் அமையும். வாரிசுகளால் இவர்கள் பெருமை பெறுவார்கள். சொந்தத்தில் திருமணம் எனில் கொஞ்சம் யோசிக்கலாம். சிற்பம், ஓவியம், ஆடிட்டிங், வங்கி அதிகாரி என்று சில துறைகளில் தனி முத்திரை பதிப்பார்கள்.

அரசியலில் ஈடுபாடு மிகுந்திருக்கும். அமைச்சர், உயர் அதிகாரி என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசகராக விளங்குவார்கள். ‘உங்கள் தெய்வம் எது?’ என்று கேட்டால் மூதாதையர்களைத்தான் சொல்லுவார்கள். புண்ணிய, பாவங்களில் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பார்கள். எப்போதுமே பரபரப்பாகக் காணப்படுவார்கள். கண்கள் இடமும் வலமும் அலைபாய்ந்தபடி இருக்கும். மறுஜென்மம், ஆவிகள் உலகம் என்று ஆர்வமாக ஆராய்ச்சி செய்வார்கள்.

ஆறாம் இடமான கும்பத்தில் சந்திரனோடு புதன் அமர்வதால் பதற்றமாகவே இருப்பார்கள். ஜலதோஷம், சைனஸ் என்று வாரத்திற்கு நான்கு நாட்கள் அவஸ்தைப்படுவார்கள். ஏதேனும் யாரேனும் சொல்லி விட்டார்கள் எனில் அதையே எண்ணி எண்ணிக் குமைந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும். அவசரப்பட்டு யாரையும் எதுவும் கடுஞ்சொல்லால் பேசாமல் இருப்பது நல்லது. எதிரிகளை இரண்டு சுற்று ஓட விட்டு பிடிக்க வேண்டும். ஏனெனில், புதன் இங்கு ஆறாம் இடமாக மறைவதால் இவர்களின் புத்திசாலித்தனத்தை எதிரிகள் முன்னரே தெரிந்து வைத்திருப்பார்கள்.

கடன் எனில் காத தூரம் ஓடுவார்கள். அவசர காலகட்டத்தில் இவர்கள் தங்களின் புத்தி பலத்தை மட்டும் நம்பாமல், நம்பிக்கையானவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. வழக்கு விஷயங்களில் அவசரப்பட்டு இறங்கக் கூடாது. சாதாரணப் பேச்சுவார்த்தையில் முடிக்க வேண்டியதை வழக்கு வரையில் இழுக்கக் கூடாது. ஏழாம் இடமான மீனத்தில் புதன் நீசமடைகிறது. மேலும், இங்கு சந்திரனோடு சேர்ந்து கேந்திராதிபதி தோஷமாகவும் வருகிறது.

‘நாம் இன்னும் வாழ்க்கைத்துணையை விட புத்திசாலியாக இருக்க வேண்டுமோ’ என்று தாழ்வு மனப்பான்மை இவர்களை வாட்டும். ஆனால், வாழ்க்கைத்துணைவர் அழகும் அறிவும் மிளிர இருப்பார். எனவே, இருவருக்குள் ஈகோ மோதல்கள் வேண்டாம். மிகுந்த அன்யோன்யத்தோடு இருப்பார்கள். இவர்கள் மிகச் சிறந்த சமாதானத்  தூதுவர்களாகவும் விளங்குவார்கள். அன்னிய தேசத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு மத்திம வயதில் சொந்த தேசத்திற்கு திரும்புவார்கள். பங்குதாரர்களோடு சேர்ந்து தொழிலைத் தவிர்ப்பது நல்லது.  

எட்டாம் இடமான மேஷத்தில் புதனும் சந்திரனும் மறைந்தாலும், சந்திரனுக்கு இது உச்ச வீடாகும். எதிர்பாராதபோது திடீரென்று வாழ்க்கை வளம் பெறும். ‘அவ்வளவுதான்’ என்று நம்பிக்கையற்று இருக்கும்போது அட்டகாசமாக ஒரு மாற்றம் ஏற்படும். சாதாரண தொழிலாளியிலிருந்து பெரும் நிறுவனத்திற்கு முதலாளி ஆவார்கள். கொஞ்சம் கண்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் பார்த்துக்கொள்ளவும். தாய்மாமன் வகையில் பிரச்னைகள் வந்து நீங்கும்.

இவர்கள் இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத துறையில் ஈடுபட்டு தங்களின் தனி முத்திரையைப் பதிப்பார்கள். பழைய மரபுக் கலைகளுக்கு புத்துயிர் தருவார்கள். திடீர்ப் பயணங்களை வெறுப்பார்கள். தந்தையைக் குறித்த கவலை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ‘தனக்கு மட்டும் தந்தை சரியானபடி அமைந்திருந்தால் நன்றாக இருக்குமே’ என்று வருந்திய வண்ணம் இருப்பார்கள். வாழ்க்கைத்துணை இவரை ஆளுமை செய்தபடி இருப்பார். இவர்களும் வேறு வழியில்லை என்று இருந்து விடுவார்கள்.

ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் புதனும் சந்திரனும் இணைந்தால், தந்தையார் சேமிக்கத் தெரியாமல் ஏமாளியாக இருப்பார். தந்தையாருக்கு இவர்களின் பால வயதில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்திருக்கும். ‘நமக்கு அதிர்ஷ்டமே இல்லையோ’ என்று அவ்வப்போது நினைத்தபடி இருப்பார்கள். ‘தந்தையாரைப் போல நிச்சயம் இருக்கக் கூடாது. அவரின் நல்ல மனம் வேண்டும்; ஆனால், இளிச்சவாயனாக இருக்கக் கூடாது’ என்று மத்திம வயதில் இவர்கள் முடிவெடுப்பார்கள்.

தந்தையைக் குறிக்கும் இடத்தில் சந்திரன் இருப்பதால் இயல்பிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். தர்மம் தலைகாக்கும் என்பதை பொன்னெழுத்தில் பொறித்து வைத்திருப்பார்கள். யாரேனும் ஒரு ஆன்மிக குரு இவர்களின் வாழ்க்கையினூடாக வந்து வழிகாட்டியபடி இருப்பார்கள். பெரியோர்களின் ஆசிகளை முக்கியம் என்று நினைப்பார்கள். அநாவசியமாக மற்றவர்களின் மனம் புண்படும்படி பேசவே மாட்டார்கள்.

பத்தாம் இடமான மிதுனத்தில் புதனும் சந்திரனும் சேர்க்கை பெற்றிருந்தால் நாடாளுபவர்களின் அருகேயே இருப்பார்கள். பல் மருத்துவர், மனநல ஆலோசகர், இதயநோய் நிபுணர், பொருளாதாரத் துறையில் நிபுணர் என பதவிகளில் பெருமை பெற்றுத் திகழ்வார்கள். எந்தத் துறையில் பணியாற்றினாலும் எழுத்துத் துறையிலும் ஈடுபடுவார்கள். அரசாங்கத்தில் மாபெரும் பதவிகள் வகிப்பார்கள். வருமான வரிகள் சார்ந்த துறைகளில் முக்கிய பங்காற்றுவார்கள்.

பதினோராம் இடமான கடகத்தில் சந்திரனும் புதனும் அமர்ந்தால் மூத்த சகோதர, சகோதரிகள் இவர்களால் மிகுந்த நன்மை பெறுவார்கள். ‘அண்ணன் இருக்க பயமேன்’ என்றிருப்பார்கள். எல்லா விஷயங்களையுமே மூத்த சகோதரர்களை கேட்டுவிட்டுத்தான் செய்வார்கள். இதுவே பாதக ஸ்தானமாக இருப்பதால், உடன்பிறந்தவர்கள் நம்மை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்று நினைக்கவும் செய்வார்கள். பன்னிரண்டாம் இடமான சிம்மத்தில் புதனோடு சந்திரன் மறையும்போது யாரிடம் என்ன பேச வேண்டும் என்கிற விவேகத்தை அறிந்துகொள்ள வேண்டும். தீவிரமான ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள்.

அவசர காலத்தில் யாரும் உதவுவதற்கு இல்லையே என்று வருத்தப்பட நேரிடும். சிலர் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவார்கள். இந்த அமைப்பும் கூட மிகுந்த மன எழுச்சியையும். படைப்பாற்றலையும் கொடுக்கக் கூடியதுதான். ஆனாலும், சில இடங்களில் சந்திரனும், புதனும் நீசமாகும்போது எதிர்மறைப் பலன்கள் கிடைக்கின்றன.

இதைத் தவிர்க்க சென்னை - அம்பத்தூரை அடுத்துள்ள திருமுல்லைவாயில் பச்சையம்மனை தரிசித்துவிட்டு வாருங்கள். சர்ப்பக் குடையின் கீழ் கங்கையம்மனுக்கும், வேங்கையம்மனுக்கும் நடுவில் பச்சைமாதேவி பேரழகும், கம்பீரமும், என்றும் மாறாத புன்முறுவலும் கொண்ட தோற்றத்தோடு வீற்றிருக்கிறாள். பச்சையம்மனின் முகம் கனிந்திருக்கிறது. சமயபுரத்தாள் போல பேரழகியாக விளங்குகிறாள். இடப்பாதம் மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு பேரரசியாக பச்சையம்மன் ஒளிர்கிறாள்.

(கிரகங்கள் சுழலும்...)
ஓவியம்: மணியம் செல்வன்