எச்சரிக்கை...உங்கள் வாட்ஸ்அப்பை யாரோ வாட்ச் செய்கிறார்கள்!



இரவில் தூங்குவதற்கு முன்பும், காலையில் கண் விழித்தவுடனும் பலரும் முதலில்  தேடும் இரண்டு விஷயங்கள்...  ஃபேஸ்புக்கில் நேற்று இரவு நாம் போட்ட பதிவுக்கு ஏதாவது லைக், கமென்ட் வந்திருக்கிறதா? வாட்ஸ்அப்பில் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா? ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் நவீன தலைமுறையினரை தங்களின் பணயக்கைதியாக்கி வைத்திருக்கின்றன. வீ சாட், ஹைக், மெசஞ்சர் என பல குறுஞ்செய்தி ஆப்கள் வெளியாகியும் கூட வாட்ஸ்அப்பின் இடத்தை யாராலும் எட்டக் கூட முடியவில்லை. காரணம், அதன் பிரைவஸி.

அதோடு வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் எதையும் செய்ய அனுமதிப்பதில்லை என அந்த நிறுவனம் கடைப்பிடித்து வந்த அறம்! ஆனால் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய நிமிடத்திலிருந்து அதை சந்தேகக் கண் கொண்டு டெக் உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. அவர்களின் சந்தேகம் நியாயம்தான் என நிரூபிக்கும்விதமாகவே அடுத்தடுத்த நிகழ்வுகள் இருக்கின்றன. வாட்ஸ்அப் அடிக்கடி சில மாற்றங்களைச் செய்து, நம் ஸ்மார்ட் போனில் அந்த வெர்ஷனை அப்டேட் செய்யச் சொல்லிக் கேட்கும்.

இப்போது இப்படி வாட்ஸ்அப் நமது போனின் ‘ப்ரைவசி செட்டிங்’கில் அதுவாகவே ஒரு மாற்றத்தைச் செய்துவிடுகிறது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடும் அளவுக்கு இது முக்கிய சர்ச்சையாகி உள்ளது. வாட்ஸ்அப்பை ஓப்பன் செய்தவுடன் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ஃப்ளாஷ் மெசேஜ் வரும். அதில் ‘Agree’ என்ற பட்டனும் இருக்கும். சிலர் வேலைப்பளுவால் ‘Not Now’ என கொடுத்து விடுகிறார்கள். சிலர் ‘Agree’ என கொடுத்து விடுகிறார்கள்.

உண்மையில் நமது வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை, ஃபேஸ்புக் கணக்குடன் இணைப்பதற்கான முயற்சியே அந்த ஃப்ளாஷ் மெசேஜ். ‘நாங்கள்தான் எங்கள் எண்ணை ஏற்கனவே ஃபேஸ்புக்கில் இணைத்திருக்கிறோமே?’ எனும் உங்கள் மனதின் குரல் கேட்கிறது. ஆனால் ஃபேஸ்புக்கை போன் மூலம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனால் நம்மைப் பற்றிய பல விபரங்களை இன்னும் அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

நம்மைப் பற்றிய விவரங்களை சேகரிக்கத்தான் ஃபேஸ்புக் இந்த உத்தியைக் கையாள்கிறது. அந்த ஃப்ளாஷ் மெசேஜை ஓகே செய்தால், உங்களின் பயன்பாட்டு எண் ஃபேஸ்புக்குடன் இணைந்து விடும். வாட்ஸ் அப்பில் நாம் நண்பர்களுடன் பகிர்கின்ற புகைப்படங்கள்,  மொபைல் எண், மெசேஜ் உட்பட அனைத்தும் ஃபேஸ்புக்கின் டேட்டாவிலும் பதிவாகும். இப்போது பொதுவாக உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் வரும் விளம்பரங்களை விட இன்னும் அதிகமாக தனி நபர்களின் விளம்பரங்கள் வரும்.

மேலும் வாட்ஸ்அப்பில் உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ஃபேஸ்புக் கண்காணித்து, உங்களுக்கு என்ன தேவை என்பதை இனி ஃபேஸ்புக் விளம்பரமாகவும் கொட்ட ஆரம்பித்து விடும். ஏற்கனவே கூகுள் வழியாக நாம் ஒரு ஷாப்பிங் தளத்திற்குள் சென்றுவிட்டு வந்தாலே, நாம் என்ன புராடக்ட்டை பார்த்தோமோ அதுபோன்றவை ஃபேஸ்புக்கில் விளம்பரமாக வந்து விழும். ‘எங்கேஜ்டு’ என ஒரு போஸ்ட் போட்டாலே கல்யாண சேலை முதல் மேக்கப் அயிட்டங்கள் வரை விளம்பரங்களாக வந்துவிழும்.

இனி வாட்ஸ்அப்பும் இணைக்கப்பட்டால் நாளடைவில் உங்கள் ஃபேஸ்புக் மெசஞ்சருக்கோ அல்லது மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ, உங்களுக்கு அழைப்பு விளம்பரமாகவோகூட விளம்பரங்கள் வந்து விழலாம். இதனால் வாட்ஸ்அப் எதிர்காலத்தில் பெரும் தொந்தரவாகக் கூட அமையலாம். இதைத் தடுக்கவே வழக்கு, எதிர்ப்பு!

சரி, வாட்ஸ்அப் இதற்கு என்ன பதில் சொல்கிறது?
உங்களுக்கு வரும் நண்பர்களின் மெசேஜ்களில் ‘End-to-End Encript’ என்பது இனி ஃபேஸ்புக்கிலும் கடைப்பிடிக்கப்படும். மேலும் தனி நபர் விளம்பரதாரர்களுடன் உங்கள் தொடர்புகள் சேர்க்கப்படமாட்டாது என உறுதி கொடுக்கிறார்கள். இதில் எந்த அளவிற்கு நம்பகத் தன்மை இருக்கிறது என்பதுதான் இப்போது நியூயார்க் முதல் இந்தியா வரை தொடுக்கப்பட்ட வழக்குகளின் கேள்வி.

இதை எப்படித் தவிர்க்கலாம்?
உங்களுக்கு வரும் ஃப்ளாஷ் மெசேஜில் ‘Read’ என்னும் நீல நிற வார்த்தை இருக்கும். அதை க்ளிக் செய்தால் வாட்ஸ்அப்பின் ஷேரிங் குறித்த ‘Terms and Conditions’ இருக்கும். அதன் அடித்தளத்தில் உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் மார்க்கை எடுத்து விடலாம். அல்லது புதிதாக அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப்பில் ‘Settings+ Account+ Privacy’ சென்று லிஸ்ட்டின் கடைசியில் இருக்கும் முகநூல் இணைப்பு குறித்த டிக் மார்க்கை நீக்கிவிடலாம். இதை நீங்கள் ஒரு மாத கால அவகாசத்துக்குள் செய்ய வேண்டும் இல்லையேல் உங்கள் வாட்ஸ்அப் நிரந்தரமாக ஃபேஸ்புக்குடன் இணைந்து விடும்.

இப்படி நீக்கி விட்டால் உங்கள் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் போகாது என அர்த்தமல்ல; உங்கள் தகவல்களை குறைவாகப் பயன்படுத்துவார்கள், அவ்வளவுதான்! ‘வாட்ஸ்அப்பை வெறும் அரட்டைக் கச்சேரி நடத்தும் இடமாகப் பார்க்காமல், அதில் விமான டிக்கெட் எடுப்பது, பொருட்கள் வாங்குவது என பரிவர்த்தனை வசதிகளைச் சேர்த்து சம்பாதிக்கவே இந்த முயற்சி’ என்கிறார்கள்.

யார் விமானத்தில் போகிறார்கள் என உளவு பார்த்தால்தானே, அவர்களுக்கு விமான டிக்கெட் விளம்பரங்களைக் காண்பிக்க முடியும்! அதற்குத்தான் இந்த தகவல் ‘திரட்டு’! இந்த மாற்றங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் இதில் பலிகடா ஆவது மக்களின் பிரைவஸிதான்!

‘வாட்ஸ்அப்பை வெறும் அரட்டைக் கச்சேரி நடத்தும் இடமாகப் பார்க்காமல், அதில் விமான டிக்கெட் எடுப்பது, பொருட்கள் வாங்குவது என பரிவர்த்தனை வசதிகளைச் சேர்த்து சம்பாதிக்கவே இந்த முயற்சி!’

- ஷாலினி நியூட்டன்