குழந்தைகளை குறி வைக்கும் ஜிகா வைரஸ்



டெங்குவை சமாளிக்க முடியாமல் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்க, இதோ சிங்கப்பூர் வரை வந்து நடுநடுங்க வைத்திருக்கிறது ‘ஜிகா’ வைரஸ்!  சிங்கப்பூரை தமிழகத்தின் கொல்லைப்புறமாக நிறையப் பேர் நினைப்பதால், நமக்கு எப்போது ஆபத்து நெருங்கும் எனத் தெரியவில்லை. இந்த வைரஸ் தாக்கினால் சிகிச்சையும் இல்லை. தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் உலக நாடுகள் பயத்தில் அலறுகின்றன. மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் ‘ஜிகா’வைப் பற்றித் தெரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருப்போம்

* ஆப்ரிக்க நாடான ‘உகாண்டா’வில் இருக்கும் காட்டின் பெயர்தான் ஜிகா! இதற்கு உகாண்டா மொழியில் ‘அதீத வளர்ச்சி’ என்று பெயர். இந்த ஜிகா காட்டில் 1947ம் ஆண்டு முதன்முதலாக குரங்குகளைத் தாக்கியபோது இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

* 1952ல் உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களைத் தாக்கிய இந்த வைரஸ், அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கும். கடந்த ஆண்டிலிருந்து ஆப்ரிக்க, ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்க கண்டங்களின் இருபத்தி மூன்று நாடுகளில் 40 லட்சம் பேருக்கு இந்நோய் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

* டெங்கு, சிக்குன் குனியாவைப் போலவே இந்த ஜிகா வைரஸும், ‘ஏடீஸ்’ எனும் பெண் கொசு மூலமே பரவுகிறது. பாத்திரம், உரல், டயர் போன்று வீடுகளில் சும்மா கிடக்கும் பழைய பொருட்களில் தேங்கும் நன்னீரில் வாழும் தன்மையுடையவை இந்தக் கொசுக்கள். இவை பகலில்தான் கடிக்கும்.

* ஆண், பெண் பாலுறவின்போது சம்பந்தப்பட்ட பார்ட்னருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்தால் அவர் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

* டெங்குவைப் போல் அல்லாமல் கொஞ்சம் மிதமாகவே காய்ச்சல் அடிக்கும். ஒரு வாரம் காய்ச்சல் இருந்தாலும் தடுப்பதற்கு எந்த மருந்துகளும் இல்லை என்பதுதான் சோகம். அதிகப்படியான உடல் சோர்வும், கை, கால் வலியும் இருக்கும். கண்கள் சிவந்து காணப்படும். ஓய்வும், பாராசிட்டமால் மாத்திரைகளுமே இப்போதைக்கு நிவாரணி!

* இந்த வைரஸ், கர்ப்பிணி பெண்களைத் தாக்கும்போது உள்ளிருக்கும் கருவையும் தாக்குகிறது. இதனால், பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடனோ, மூளை வளர்ச்சிக் குறைபாட்டுடனோ பிறக்கலாம். பிரேசிலில் மட்டும் இந்நோய் தாக்கத்தால் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்துள்ளன. பெரியவர்களுக்கு அரிதாக தசைபிடிப்பு நோயும் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

* கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதுதான் இதற்கு இப்போதிருக்கும் ஒரே வழி. சுற்றியுள்ள இடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை அகற்றி இருப்பிடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். இரவில் கொசு வலைக்குள் படுத்து உறங்குவது நன்மை அளிக்கும்.

- பேராச்சி கண்ணன்