மீண்டும் ஆம்பள சோடா



-ப்ரியா

பச்சை நிற பாட்டில். அகலமான கீழ்ப் பகுதி. குறுகிய கழுத்து. அடைத்துக் கொண்டிருக்கும் கோலிக் குண்டை கட்டை விரலால் உள்ளே அழுத்தினால்... ‘உஸ்ஸ்...’ என்ற சத்தம். கோலிக்குண்டு பாட்டிலுடன் உறவு கொள்ளும்போது... ‘கிளிங் கிளிங்...’ சப்தஸ்வரங்களும் ஒலிக்கும்! கோலி சோடா.

ஒருகாலத்தில் பெட்டிக் கடைகளில் கோலோச்சிய குளிர்பானம். இன்று இதை கிராமங்களில் கூட அதிகம் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் அந்த கோலி சோடாவை நவீன யுகத்துக்கு ஏற்ப ‘ராக்கெட் சோடா’ என்ற பெயரில் சென்னை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் ஷாலினி முத்துக்குமார்.

‘‘சொந்த ஊர் மதுரை. படிச்சது, சுற்றியது எல்லாம் சென்னையில்தான். ஆக, நான் பக்கா சென்னை பொண்ணு. அப்பா சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்தார். நானும் எச்ஆர் துறைக்கான படிப்பை படித்துவிட்டு, ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். பிறகு கல்யாணம், குடும்பம், குழந்தை என பொறுப்பு அதிகமானதால் வேலையை விட்டுவிட்டேன்.

குழந்தைகள் வளர்ந்ததும் எனக்கான நேரம் நிறைய இருந்தது. அதை எப்படி பயன்படுத்துவது? யோசனையுடன் இருந்தபோது ‘மெட்ராஸ் மார்க்கெட்’ என்ற உணவுத் திருவிழா நடப்பதை அறிந்தேன். கணவர் உணவகம் சார்ந்த தொழில் செய்வதால், அத்திருவிழாவில் ஏதாவது புதுமையான உணவுகளை வழங்க திட்டமிட்டேன்.

சிறுவயதில் தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய், பல்லி மிட்டாய், கோலி சோடா, பன்னீர் சோடா... என சாப்பிட்டும் குடித்தும்தான் வளர்ந்தேன். என்னதான் பல புதிய பானங்கள், இனிப்பு வகைகள் வந்தாலும் என் வேர் அதுதான். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அதுதான் பால்ய காலம். அதை ஏன் மீண்டும் கொண்டு வரக் கூடாது?

கோலி சோடா மனதில் விஸ்வரூபம் எடுத்தது. மற்ற உணவுகளை கடையில் வாங்கி வைக்கலாம். ஆனால், கோலி சோடாவை அப்படி வைக்க முடியாது. இந்த உண்மைதான் என் பயணத்துக்கானஆரம்பப்புள்ளி...’’ சிரிக்கும் ஷாலினி முத்துக்குமார், இதன்பிறகுதான் அதை ராக்கெட்டாக மாற்றியிருக்கிறார். ‘‘மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள் என்று தப்புக் கணக்கு போடக்கூடாது.

தரமான முறையில் தயாரிக்கப்படும் சுவையான உணவுகளைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்கள். சென்னை தி.நகரில் சைனீஸ் உணவகம் ஒன்றை என் கணவர் நிர்வகித்து வந்தார். இப்போது சாஃப்ட்வேர் துறையில் இருந்தாலும், அவர் உணவுப் பிரியர். அந்த வகையில் கோலி சோடா பற்றி தெரிந்து கொள்ள அவரே உதவியாக இருந்தார்.

என் கணவர், நான், அவர் நிர்வகித்து வந்த உணவகத்தின் முதன்மை செஃப் மூவரும் கோலிசோடா வேட்டைக்கு கிளம்பினோம். பெரிய கடைகளில் இதனைப் பார்க்க முடியவில்லை. அதனால் பெட்டிக் கடைகளை டார்கெட் செய்தோம். அழுக்குப் படிந்த பாட்டிலில்தான் அவர்கள் சோடாவை கொடுத்தார்கள். அதை அருந்தினால் உடலுக்கு பிரச்னை வருமோ என்று பயந்தேன்.

சோடாவைப் பொறுத்தவரை சர்க்கரை, பன்னீர் எசென்ஸ், பிறகு தண்ணீர். இதைக் கொண்டுதான் தயாரிக்கிறார்கள். பாட்டிலின் அமைப்பைப் பார்த்த அடுத்த நிமிடம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தண்ணீர் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதே நேரம் இதையே தரமாக விற்பனை செய்தால் பிரமாதமாக ஓடும் என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.

உடனே தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்ள தொழிற்சாலைக்கு படை எடுத்தோம். முதல் முறையாக சோடா தயாரிக்கும் முறையைப் பார்த்த போது உற்சாகம் ஏற்பட்டது. தண்ணீர், பன்னீர், சர்க்கரை கொண்டு தயாரிப்பதால் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. குழந்தைகளும் அருந்தலாம். மற்ற பிரபல குளிர்பானங்கள் போல், அதிக ரசாயனம் இதில் கலக்கப்படுவதில்லை.

இதெல்லாமே ப்ளஸ். எனவே நம்பிக்கையுடன் தயாரிப்பு முறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்...’’ என்று சொல்லும் ஷாலினி, டிரையல் அண்ட் எரர் முறையில் பல ஆய்வுகளைச் செய்த பிறகே சுவையை கொண்டு வந்தாராம். ‘‘தயாரிப்பு முறையைக் கற்றுத் தர யாருமே முகம் சுளிக்கவில்லை. மீண்டும் நமது பாரம்பரியமான குளிர்பானம் விற்பனைக்கு வரவேண்டும் என்ற ஆசை அனைவரது மனதிலும் இருந்ததுதான் இதற்குக் காரணம்.

செய்முறையைக் கற்றதும் எங்கள் செஃப் மூலம் அதை என் ஸ்டைலுக்கு மாற்றி அமைத்தேன். ஆரம்பத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும். சில முறை பன்னீர். இப்படி பல முறை முயற்சி செய்த பிறகுதான் சரியான காம்பினேஷனைக் கண்டுபிடித்தோம். ஓகே. பாட்டில்? இதை செய்வது அவ்வளவு சுலபமில்லை. இதில் பாதி கையால்தான் செய்ய வேண்டும். பாட்டிலின் கழுத்துப் பகுதி, அதன் வாயில் உள்ள ரப்பர் பேண்ட், அதன் கழுத்தில் உள்ள சின்ன வளைவு... இவை அனைத்தையும் கையால்தான் இன்றும் செய்து வருகிறார்கள்.

இதை வெயில் காலத்திலும் தயாரிக்க முடியாது. காரணம், அதிக உஷ்ணம் இருந்தால், பாட்டில் வெடிக்கும் அபாயம் உண்டு. ஸோ, மழை, குளிர்காலங்களில்தான் பாட்டில் தயாரிப்பு  வேலை நடக்கும். தவிர மற்ற குளிர்பான பாட்டில் போலவும் இது இருக்காது. கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். அதற்காக சிறப்பு கண்ணாடி பயன்படுத்துகிறார்கள்...’’ என்ற ஷாலினியிடம், ‘அதென்ன ராக்கெட் சோடா’ என்று கேட்டோம்.

‘‘கோலியை உடைக்கும் போது வரும் ‘உஸ்ஸ்ஸ்...’ சப்தம், ராக்கெட் பறப்பது போல் இருக்கிறதல்லவா? தவிர பாட்டிலின் வடிவமைப்பையும் உற்றுப் பாருங்கள். ராக்கெட் போல்தான் காட்சியளிக்கும். அதனால்தான் இந்தப் பெயரைச் சூட்டினோம்...’’ என்றவர் ‘மெட்ராஸ் மார்க்கெட்’ திருவிழாவில் இதை முதன்முதலில் அறிமுகம் செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘வருடா வருடம் சென்னையில் இரண்டு முறை உணவுத் திருவிழா நடைபெறும். சென்னை மார்க்கெட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அங்கு விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அதில் உணவு ஸ்டால் அமைக்க திட்டமிட்டேன். ஸ்டாலின் பெயர் ‘தெருவோரம்’. தேன்மிட்டாய், குச்சி மிட்டாயுடன் கோலி சோடாவும் விற்பனைக்கு வைத்திருந்தேன்.

திருவிழா நடந்த இரு நாட்களும் மற்ற உணவுப் பொருட்களை விட கோலி சோடாவின் விற்பனை அதிகமாக இருந்தது. வந்திருந்த அனைவரும் கேட்டுக் கேட்டு விரும்பி அருந்தினார்கள். காரணம், சுத்தமான நீரில் சுகாதாரமான முறையில் நாங்கள் தயாரித்திருந்ததுதான். அங்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கு நம்பிக்கை அளித்தது. மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தோம்.

ஆரம்பத்தில் காபி ஷாப், ரெஸ்டாரென்டுகளுக்கு மட்டுமே சப்ளை செய்தோம். பெட்டிக் கடைகளில் விற்கப்படும் சோடாவை விட இதன் விலை அதிகம். தரத்தில் நாங்கள் காம்ப்ரமைஸ் செய்யவில்லை. சுத்திகரிக்கப்பட்ட நீரைத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் பாட்டிலை அவ்வளவு எளிதில் கழுவ முடியாது. ஏழு முறை தண்ணீரில் கழுவிய பிறகு காஸ்டிக் சோடாவால் சுத்தம் செய்ய வேண்டும்...’’ என்று சொன்ன ஷாலினியிடம், கோலி சோடா இப்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைப்பதில்லையே என்று கேட்டோம்.

‘‘அதற்குக் காரணம் சென்னையை ஆட்டிப் படைத்து வரும் வெளிநாட்டுக் குளிர் பானங்கள்தான். தங்கள் பானங்களை மட்டுமே விற்க வேண்டும் என்று சின்ன கடைகளை கட்டாயப்படுத்துகிறார்கள். இதற்கென ஒரு தொகையையும் கொடுத்து விடுகிறார்கள். அதனால்தான் அவை அதிகமாகவும், நம் தயாரிப்புகள் கிடைக்காமலும் போகின்றன.

ஜல்லிக்கட்டு பிரச்னைக்குப் பிறகு வெளிநாட்டுக் குளிர்பானங்களின் மோகம் குறைந்து வருகிறது. நம்மூர் குளிர்பானங்கள் மக்கள் மத்தியில் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எங்கள் தயாரிப்புக்கு டிமாண்ட் இருப்பதால் மெல்ல மெல்ல கடைக்காரர்கள் எங்களிடமும் இப்போது குளிர் பானம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், வேலூரில் இருந்தும் ஆரம்பத்தில் பாட்டில்களை வாங்கி வந்தோம்.

இப்போது நாங்களே இதனை தயாரித்து வருகிறோம். இதற்கான தொழிற்சாலையை சென்னை பாடியில் அமைத்திருக்கிறோம். ஒரு நாளைக்கு 2500 பாட்டில் சோடாக்களை தயாரிக்க முடியும். தொடக்கத்தில் பன்னீர் சோடா மட்டுமே தயாரித்தோம். இப்போது சீரகம் மற்றும் எலுமிச்சை சுவையையும் அறிமுகம் செய்துள்ளோம். வருங்காலத்தில் கேன்பெரி, ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி... போன்ற சுவைகளிலும் சோடாவை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறது...’’ என்ற ஷாலினி, பெப்சி கோலா என்று சொல்லப்படும் பாப்சிகல்சும் தயாரித்து வருகிறார்.
 
‘‘பெப்சி கோலா இல்லாத  ஐஸ் தள்ளுவண்டிகள் கிடையாது. ஆரஞ்சு சாற்றை ஒரு பிளாஸ்டிக் டியூப்பில் அடைத்து அதை ஐஸ் கட்டி போல் அமைத்துக் கொடுப்பார்கள். இதில் கோலா, ரஸ்னா... போன்ற ஃபிளேவர்களும் இருக்கும். அதையே கிரீன் ஆப்பிள், மேங்கோ, லிச்சி, ஆரஞ்சு, கிரேப், கிரீன் டீ, புரான்ஸ் போன்ற சுவைகளில் கொடுத்து வருகிறோம்.

கடைகளில் சப்ளை செய்வது தவிர தெரிந்தவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கும் சப்ளை செய்கிறோம்...’’ என்று சொல்லும் ஷாலினி, கோலி சோடாவை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகிறார். கனவு மெய்ப்படட்டும்.    

படங்கள் : கிருஷ்ணமூர்த்தி