சாலை டாக்டர்!



-ச.அன்பரசு

ஆண்டு, 2015. நாள், ஜூலை 29. மும்பையின் மழைநாள் அது. ஜோகேஸ்வரி - விக்ரோலி இணைப்புச்சாலையில் திடீரென முளைத்த குடைகளும் அவற்றில் பொழியும் மழையுமாக விர்ர்ர்ரென பலரும் வீட்டுக்கு வாகனங்களில் பாய்ந்து கொண்டிருந்தனர். பாந்துப் பகுதியிலிருந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கான அட்மிஷன் சம்பிரதாயங்களை சுபமாக முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பிரகாஷ் பில்கோர்.

பிரகாஷின் சகோதரர் ராம் வண்டி ஓட்ட பில்லியனில் அமர்ந்தபடி தன்னை நனைக்கும் மழையை ரசித்தபடி பயணித்த பிரகாஷ் பில்கோர், தனக்கு நேரப்போகும் பயங்கரத்தை எப்படி உணர்ந்திருக்க முடியும்? சீரற்ற சாலையிலுள்ள மழைநீர் தேங்கி நின்ற பெரிய பள்ளத்தை பிரகாஷின் சகோதரர் சரியாக கவனிக்காததுதான் அவரின் பெரும் தவறு.

பில்லியனிலிருந்து பறந்து தார்ச்சாலையில் தலைகுப்புற விழுந்த பிரகாஷ், நினைவு திரும்பாமல் கோமாவிலேயே இறந்துபோனார். வண்டியை ஓட்டிய அவரது சகோதரரின் உயிரைக் காப்பாற்றியது அவர் தலையிலிருந்த  ஹெல்மெட்தான். வெறும் பதினாறே வயதான பிள்ளையை நெருப்புக்கு வாரிக்கொடுத்த துயரத்தின் ஈரம் காய்வதற்குள் களத்தில் இறங்கிவிட்டார் தாதாராவ் பில்கோர்.

ஆமாம். களம்தான். அரசு, முனிசிபாலிட்டி என புகார்களை அனுப்பிவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல் தானே களமிறங்கி மும்பையில், தான் வாழும் மரோல் - ஏபிஎம்சி உட்பட பல்வேறு பகுதிகளிலுள்ள 380க்கும் மேற்பட்ட குழிகளை இரு ஆண்டுகளில் சீரமைத்திருக்கிறார் தாதாராவ் பில்கோர். சாலைக்குழிகளைக் கற்களிட்டு நிரப்பும் தாதாராவின் பணி முழுமையான தீர்வல்ல.

என்றாலும் விபத்தை வேடிக்கை பார்த்துவிட்டு கலைந்து செல்லாமல் குழிகளை நிரப்பி விபத்தை தடுப்பதை தன்னளவில் நிறைவாக செய்வது பாராட்டவேண்டிய பணிதானே! ‘‘மக்களுக்கு விபத்து ஏற்பட்டு புகார்களை அனுப்பினால் மட்டுமே அதிகாரிகள் தூக்கம் கலைந்து பணிகளைத் தொடங்குகிறார்கள்.

இவை எல்லாம் நடக்கும் வரை மக்கள் பலியாகிக் கொண்டே இருக்கவேண்டுமா? எனவேதான் அரசைப் பற்றிக் கவலைப்படாமல் என்னாலான முயற்சிகளை செய்யத் தொடங்கினேன்...’’ தீர்க்கமான குரலில் சொல்கிறார் தாதாராவ் பில்கோர். 47 வயது. மரோல் மரோஷி பகுதியில் சிறிய அளவில் காய்கறிக்கடை வைத்திருக்கிறார்.

தனது பகுதியிலுள்ள கட்டுமான இடங்களில் இருந்து மணல், செங்கற்களை எடுத்துக்கொண்டு காய்கறி வாங்கச் செல்லும் வழியிலுள்ள சாலைக் குழிகளை எல்லாம் அடைக்கிறார். ‘‘பெரும்பாலும் இந்த சாலைக் குழிகளால் அவதிப்படுபவர்கள் பைக்கில் செல்பவர்கள்தான். எனவே நான் செய்வதைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தாங்களாகவே வந்து உதவுகிறார்கள்.

காரில் செல்பவர்கள் வேடிக்கை பார்ப்பதுடன் சரி. ஐம்பது டன் அளவுக்கு எடையேற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் கீழிறங்கி உருக்குலைந்து உடைகின்றன. சாக்கடை மூடிகளும் விரிசல் விடுகின்றன. டெலிபோன், குடிநீர் இணைப்புக்காக சாலையைத் தோண்டுபவர்கள் அதனை சரியானபடி மூடுவதில்லை...’’ என தரவுகளை அடுக்கியபடி பேசும் தாதாராவ், வியாபாரத்தை முடித்தவுடன் கிழக்கு அந்தேரி, கோரேகான், மாஹிம் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை குழிகளை சீர் செய்ய விறுவிறுவென கிளம்பிவிடுகிறார்.

2014ம் ஆண்டு நான்கு இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ‘Fill in the potholes’ என்ற அமைப்பில் இணைந்து சேதமான குழிகளைப் பற்றிய தகவல்களை மக்களிடமிருந்து பெற்று தற்போது அவற்றை சீர்படுத்தி வருகிறார். ‘‘பள்ளியில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்று கூறுவார்கள் அல்லவா? சாலையிலும் நாங்கள் அதைத்தான் செய்கிறோம்.

குழிகளைப் பற்றி வாகன ஓட்டிகளை எச்சரிக்க ஸ்டிக்கர்கள், பொம்மைகளை பெரும்பாலான சமயங்களில் மக்களிடமிருந்து பெற்றும், சில சமயங்களில் விலைக்கு வாங்கியும் பயன்படுத்துகிறோம்...’’ தன் பணிகளை உற்சாகமாக விவரிக்கிறார் ‘ஃபில் இன் தி பாட்ஹோல்ஸ்’ அமைப்பின் இயக்குநரான ரூபேஷ் மண்டல்.
 
2015ம் ஆண்டு இக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்திய விழிப்புணர்வுப் பிரசாரத்தால் கிடைத்த ரூ.1.2 லட்சத்தை பயன்படுத்தி ‘Spothole’ என்ற அப்ளிகேஷனை உருவாக்கினர். ‘‘நாங்கள் அரசு நிர்வாகத்துக்கு எதிரானவர்கள் அல்ல. முனிசிபாலிட்டி ஊழியர்களோடு இணைந்து பணியாற்றுவதை விரும்புகிறோம்.

ஆனால், அரசு வரும் வரை சிதைந்துபோன சாலைக்குழிகளை அப்படியே விட்டுவிட மனமில்லை...’’ என தன் அமைப்பிலுள்ள எட்வர்ட், லோகேஷ், சூரஜ் ஆகியோருடன் இணைந்து சொல்கிறார் ரூபேஷ் மண்டல். 2016ம் ஆண்டு பிரிகான் மும்பை முனிசிபாலிட்டி கார்பரேஷனுக்கு சாலைகளை அமைக்க, பராமரிக்கவென அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு தெரியுமா? 2 ஆயிரத்து 886 ஆயிரம் கோடி ரூபாய்!

‘‘மனிதர்களின் இறப்பு என்பது அரசு எந்திரத்தைப் பொறுத்தவரை வெறும் எண்கள்தான். தீர்வு கிடைக்க நீதித்துறையை நாடுவது புத்திசாலித்தனம். எனவே சிதைவுற்ற சாலைகளால் பலியானவர்கள், விபத்தில் காயமடைந்தவர்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம். அதுவே நம்மிடம் மிஞ்சியிருக்கும் அறவழி.

மாநகராட்சி அதிகாரிகள் கடந்து செல்லும் சாலைகள் அனைத்தும் பழுதுபார்க்கப்படவேண்டியது அவசியம்...’’ என்று சொல்லும் தாதாராவ் பில்கோர், தனது மகனின் இறப்பு தொடர்பாக முனிசிபாலிட்டி அதிகாரிகள், தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை இன்னும் நிலுவையிலுள்ளது. ‘‘கைதானவர்கள் அனைவரும் பிணையில் வெளிவந்துவிட்டாலும் நீதி மேல் எனக்கு நம்பிக்கையிருக்கிறது...’’ தளராத நம்பிக்கையோடு சொல்கிறார் இந்த சாலை டாக்டர்!

சாலை மரணங்கள்!

* கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மரணங்கள் (தோராயமாக) - 10 ஆயிரம் (தினசரி 30 இறப்புகள்).
2014ம் ஆண்டு நிகழ்ந்த இறப்புகள் - 11,106.
2015ம் ஆண்டு நிகழ்ந்த இறப்புகள் - 10,876.
* அதிகரிக்கும் விபத்து வளர்ச்சி - 8% (ஒவ்வொரு ஆண்டும்).
* வேகத்தடை, உடைந்த சாலைகளால் ஏற்பட்ட இறப்பு - 1.46 லட்சம் (2015).
* (Transport Research Wing (TRW),Ministry of Road Transport and Highways Report)

விபத்துகளின் அளவு!

* அதிக விபத்து மாநிலங்கள் - தமிழ்நாடு (69,059), கர்நாடகா (44,011), மகாராஷ்டிரா (42,250).
* சாலை இறப்பில் முதலிடம் - உத்தரப்பிரதேசம் (18,407).
* விபத்து மரணங்கள் - பைக் (29%), கார் (12%).
* அதிக பைக் மரணங்கள் - தமிழ்நாடு (3,668), மகாராஷ்டிரா (3,146).
* விபத்துகளால் வருமான இழப்பு - 3%
* நடைபாதை மரணங்கள் - மகாராஷ்டிரா (1,256 - இந்திய அளவில் இது 17%)
* (Accidental Deaths and Suicides in India report, released by the National Crime Records Bureau (NCRB) 2015)