ஜி.வி.பிரகாஷ் நடித்த முதல் குடும்ப படம்



-நா.கதிர்வேலன்

‘‘‘செம்மை’ என்று சொல்வதுதான் ‘செம’. இது நிஜமா என் நண்பன் கல்யாணத்தில் நடந்த கலாட்டா. விறுவிறுன்னு நடந்த சம்பவம். அதையே எங்க டைரக்டர் பாண்டிராஜ்சார்கிட்டே சொல்லிக்கிட்டு இருந்தேன். ‘டேய் வள்ளி, இதில் ஒரு கதை இருக்கிறதை பார்க்கலையா’னு சொன்னார்.

அப்புறம் முன்னும் பின்னும் சில அம்சங்கள் சேர்த்து கலகலன்னு ஒரு கதையா கொண்டு வந்திட்டோம். ஹீரோவுக்கு மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்கணும். இல்லாட்டி ஆறு வருஷத்திற்கு கல்யாணங்கிற விஷயமே நடக்காதுன்னு ஒரு அமைப்பு இருக்கு. சந்தோஷமா போற கதை. ஆட்டம், பாட்டம், ஊர்த்திருவிழா மாதிரி கலகலப்பா இருக்கும்.

மிடில் கிளாஸ், சென்டிமென்ட், எமோஷனல், குடும்பப்படம்னு ‘செம’ ஜாலியா போகும்...’’ நேரடியாகப் பேசுகிறார் இயக்குநர் வள்ளிகாந்த். பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

எப்படியிருக்கும் ‘செம’?
ஹீரோவும், அவர் நண்பர் யோகிபாபுவும் மைக்கில் பேசிட்டு சின்ன வண்டியில் காய்கறி விக்கிறவங்க. அதுவே சிக்கலாகி விடுகிறது. ஒரு கல்யாணத்தை பார்த்து வைச்சு முடிப்போம்னா, அதிலும் அவ்வளவு பிரச்னைகள். அவ்வளவுதான், கல்யாணம் செட்டாகிடும்னு பார்த்தால் அடுத்தடுத்து சுவையான சம்பவங்கள். கடைசியில் ஜி.வி. கல்யாணம் நடந்ததான்னு போகிற சின்னஞ்சிறு கதைதான். ஆனால், உங்களை இரண்டு மணி நேரத்திற்கு உள்ளே உட்காரவைச்சு சந்தோஷமாக அனுப்பி வைக்கிற படம். ஜி.வி.யும், யோகிபாபுவும் வர்ற காட்சியெல்லாம் அப்படியொரு சிரிப்பு.

சினிமாவுக்கு ரொம்பவும் விரும்பி வந்து சேர்ந்தவன் நான். அண்ணா யுனிவர்சிடியில் படிச்சிட்டு, பெரிய வேலைக்கெல்லாம் இடம் இருந்தது. எதையும் மனசில் வைக்காமல் சினிமான்னு வந்திட்டேன். வாழ்க்கையின் நீட்சிதான் சினிமான்னு புரிஞ்சு வந்திருக்கேன். பலவித வாழ்க்கைகளை வாழ்ந்து பார்ப்பதற்கான இடமாகத்தான் சினிமாவைப் பார்க்கிறேன்.

சினிமாவில் இன்னமும் சென்டிமென்ட்டுக்குத்தான் பெரிய இடமிருக்கு. சினிமாவில் ஸ்டைல், படம் எடுக்கிற விதம் மாறியிருக்கு. ஆனால், உணர்வுகள் மாறவேயில்லை. சினிமாவின் புரிந்துகொள்ள முடியாத எளிமையாக இதைப் பார்க்கிறேன். அப்படிப் பார்த்தால் இது வெகு சாதாரணமானவர்களுக்கான எளிமையான படம். மக்களுக்கு குடைச்சல் கொடுக்காமல் சந்தோஷமாக இரண்டு மணி நேரத்தை செலவழிக்க வழியமைச்சுக் கொடுத்திருக்கேன்.

இன்னிக்கு விஜய்சேதுபதிக்கு அடுத்தபடியாக பிஸி ஹீரோ ஜி.வி. ஆச்சே... எப்படி இருக்கார்?
இதுல பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி வருவார். அவருக்கு பில்டப் பாட்டு கிடையாது. டபுள் மீனிங் டயலாக் கிடையாது. கவர்ச்சி கிடையாது. அதாவது ஜி.வி.பிரகாஷ் நடிச்ச முதல் குடும்பப் படம். சொன்னா சொன்ன நேரத்திற்கு வருவார். காலையில் 5 மணிக்கு ஷாட் வச்சாலும் வந்து நிற்பார்.

‘ஏன்யா, காலையிலேயே வரச்சொல்லி படுத்துறாய்’னு ஜாலியாக கேட்பார். ‘எனக்கு முதல் படம் ப்ரோ’னு சொல்வேன். ‘யோவ், எனக்கு இது ஐந்தாவது படம்யா’னு அவர் சொல்வார். ‘ஜி.வி. வந்தாச்சா, நான் வர்றேன்’னு யோகிபாபு சொல்லுவார். வந்தாச்சுன்னு சொல்லிடுவேன். பார்த்தால் இரண்டு பேரும் சேர்ந்தே வருவாங்க. ஸ்பாட்டில் ஜாலியாக இருக்கும். அது படத்தில் அப்படியே தெரியுது. நாம் இருந்துகிட்டு இருக்கிற இந்த வாழ்க்கைக்கு வெளியே இருந்து எதையும் எடுத்துக்கிட்டு வரலை. நாம் கேட்டுக் கேட்டு உணர்ந்த விஷயங்களை ஜாலியாக சொல்லியிருக்கேன்.

புரடியூசர் ரவிச்சந்திரன் மகன் ஜனா, இதில் வில்லன் ரோல் பண்றார். இப்ப வில்லன் எல்லோருமே ஹீரோ மாதிரியே இருக்கிறாங்க. அதுதான் ஃபேஷன். அப்படியே அவரும் இருக்கார். ‘செம’ ஹீரோக்கான கதை கிடையாது. கதைக்கான ஹீரோதான் ஜி.வி. அதை அழகா புரிந்துகொண்டார்.

அர்த்தனாங்கிற பொண்ணுதான் ஹீரோயின். ‘காமெடி ஜானரில் வர்ற படம். இந்த கேரக்டர் இப்படித்தான் இருக்கும், இந்த வகையில்தான் நீங்க ரெடியாகணும்’னு நாலைந்து தமிழ்ப்பட சிடிக்களை கொடுத்தேன். கேரளாவிலிருந்து வரும்போது தமிழோடும், சொன்னதைப் புரிந்து கொண்ட உணர்வோடும் வந்தாங்க. ரொம்ப நாளாக தேவயானி டைப்பில ஒருத்தரையும் பார்க்கலை இல்லையா, இப்பப் பாருங்க.

பாடல்கள் எப்படி வந்திருக்கு..?
எனக்கு ஜி.வி.பிரகாஷ் ஓர் ஆச்சர்யம். விடாத ஷூட்டிங் முடிந்ததும் அவர் போற இடம் வீடு இல்லை. ரிக்கார்டிங் ரூம். எந்நேரமும் அவர் மனது இசைக்கு ரெடியாக இருக்கும். சாதாரணமாக யாருக்கும் ஓய்வெடுக்கத்தான் தோணும். ஒருத்தரோட படம் பண்றதுக்கு ரெடியாயிட்டா ‘உங்கமேலே எனக்கு எக்கச்சக்க நம்பிக்கை இருக்கு. சந்தோஷமா செய்ங்க.

என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க’னு சொல்வார். அதுவும் அறிமுக இயக்குநர்களுக்கு ஜி.வி. ஒரு வரப்பிரசாதம். இதிலும் அழகாப் பாடல்கள். ‘உருட்டுக் கண்ணாலே’ங்கிற பாடல் அதகளம் பண்ணிகிட்டு இருக்கு. ‘சண்டாளி’, ‘நெஞ்சே நெஞ்சே’னுபாடல்களும் செம வைரல்.

படம் பார்த்திட்டு உங்க குரு பாண்டிராஜ் என்ன சொன்னார்?
எனக்கு அவர் தகப்பன் மாதிரி. இந்த ஸ்கிரிப்ட்டை வைச்சுக்கிட்டு ெராம்ப நாள் அலைஞ்சிருக்கேன். ஒரு நாள் ஏதோ ஒரு அலைச்சலில் சோர்ந்து போயிருந்தேன். ‘ஏண்டா வாடிப்போயிருக்கே. சரி விடு. நாமே எடுத்துப் பண்ணலாம். உனக்கு ஜி.வி. ஓ.கே.வா’னு அவரே பாதை போட்டுக் கொடுத்தார். இத்தனை வருஷம் அலைச்சல், வேதனை எல்லாம்  20 நாளில் மாறிப்போச்சு. அழகான நாட்கள் வர ஆரம்பித்துவிட்டது. புரடியூசர்கள் பாண்டிராஜ், ரவிச்சந்திரனை நன்றிங்கிற ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு மறந்துவிட முடியாது.