உண்மையான மதிப்பு: ரூ.10,159 MRP: ரூ.1,47,628 - அறுவை சிகிச்சை என்ற பெயரில் நடக்கும் பகற்கொள்ளை



-ச.அன்பரசு

கடந்த மாதம் மக்கள் முன் உரையாற்றினார் இந்திய பிரதமர் மோடி. அப்போது, நம் நாட்டில் நடைபெறும் மருத்துவ சிகிச்சைகளில் 70சதவிகிதம் இறக்குமதி பொருட்களையே பயன்படுத்துவதாகவும், மருத்துவ சிகிச்சையின் கட்டணத்தை கிடுகிடுவென அதிகரித்து மக்களின் சுமையை அதிகரிப்பதாகவும் வேதனைப்பட்டார்.

அவரது அக்கறை உண்மை என்றால், மருத்துவக் கருவிகளின் விலை நிர்ணய மசோதாவை இன்னும் வரைவு நிலையிலேயே அவர் தலைமையிலான அரசு வைத்திருக்கக் கூடாது. அரசின் இப்போக்கினால் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்லும் மக்களிடம் ஏறத்தாழ வழிப்பறிக் கொள்ளையே நடக்கிறது. 

* அநியாய விலை அநீதி!
உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.3% மட்டுமே பொது மருத்துவத்துக்கு பயன்படுத்தும் ஒரே நாடு இந்தியாதான். தலைநகரில் இருக்கும் எய்ம்ஸ் போன்ற அரசு மருத்துவமனைகள் தவிர்த்து  தனியாருக்கு நிகராக செயல்படும் அரசு மருத்துவமனைகள் மிகக்குறைவு. சளி, இருமல் என்றாலே டெஸ்ட், எக்ஸ்‌ரே என செலவுகளைத் தாறுமாறாக இழுத்துவிட்டு பணத்தைப் பிடுங்கும் தனியார் மருத்துவமனைகள் ஆபரேஷன் என்றால் சும்மா இருப்பார்களா?

‘‘மருத்துவமனைகளும், மருந்துகள் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்களும் அசையா சொத்தாகவே மக்களைக் கருது கிறார்கள். இறக்குமதியாகும் கருவிகளுக்கு 2000 மடங்கு அநியாய விலை வைத்துதான் சிகிச்சையையே தொடங்குகிறார்கள். இதய அறுவை சிகிச்சை ஸ்டென்டுகள், எலும்பு மாற்று கருவிகள் ஆகியவற்றின் விலை 300 முதல் 1000 மடங்கு அதிக விலையில் விற்கப்படுவது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான்...’’ என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறுகிறார் பஞ்சாப் மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவரும், நியூயார்க் அறிவியல் கழகத்தின் உறுப்பினருமான ஜி.எஸ்.கிரேவல்.

* நூதன கொள்ளை!
குறைந்த விலையில் தரமான சிகிச்சை என மருத்துவச் சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற இந்தியாவிலா இந்த நிலைமை? கோடியாகக் கொழிக்கும் லாபத்தில் நஷ்டம் வந்தால் மருத்துவமனைகளால் எப்படித் தாங்க முடியும்? ‘‘அரசு விலை நிர்ணய ஆணையம் (NPPA) கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டென்டுகளின் விலையை குறைத்து உத்தரவிட்டிருக்கிறது.

ஆனாலும், தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனைக் கட்டணம், சிகிச்சை என பிற கட்டணங்களை நூதனமாக அதிகரித்து பணம் பிடுங்கி விடுகிறார்கள்...’’ ஆவேசமாகப் பேசும் டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பைரேந்தர் சாங்வான், 2014ம் ஆண்டே ஸ்டென்டுகளின் அதீத விலை குறித்து மத்திய அரசின் குடும்பநலத்துறைக்கு புகார் மனு அளித்தவர்.

பின் உயர்நீதிமன்றத்தில் 2015ம் ஆண்டு சாங்வான் தொடர்ந்த வழக்கின் விளைவாக NPPA அண்மையில் ஸ்டென்டுகளின் விலையை ரூ.7,290 - 29,600 என நிர்ணயித்தது. கார்ப்பரேட் மருத்துவமனைகளின் மாறவே மாறாத அதீத கொள்ளையினால், விலை மலிவான ஸ்டென்டுகள் மூலம் ஏற்கனவே சீன நிறுவனங்கள் 40% சந்தையை கையகப்படுத்தி விட்டன.

* சட்டம் இல்லை! பெருகுது கொள்ளை!
முழங்கால் மாற்று கருவியின் இறக்குமதி விலை 10 ஆயிரத்து 159 ரூபாய் என்றால், அதற்கான சிகிச்சை செலவு 1 லட்சத்து 47 ஆயிரத்து 628 ரூபாய் என 1453% லாபம் வைத்து நோயாளியை சுரண்டுவது நெஞ்சுக்கு நீதியா? இடும்பெலும்பு மாற்றுக்கருவி முதல் ஸ்டென்டுகள் வரை சகலத்தையும் ஆயிரம் சதவிகித லாபத்தில் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் விற்கின்றன.

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகளைக் கொண்ட டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் எலும்புமாற்று அறுவைசிகிச்சையின் மொத்த கட்டணமே ரூ.75 ஆயிரம்தான். இறக்குமதியாகும் பல்வேறு மருத்துவக் கருவிகளை விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் அரசு கொண்டு வராததே இந்த வழிப்பறிக் கொள்ளை லாபத்துக்கு காரணம்.

சிகிச்சை கட்டணம் தொடர்பாக புகார்கள் அம்புகளாய் கிளம்ப, விலை நிர்ணய ஆணையம் உடனே அதில் தலையிட்டு பன்னாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களோடு ஆலோசித்து விலைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த முயன்றது. தொடக்கத்தில் தகவல்களைத் தர உடன்பட்ட நிறுவனங்கள், தங்களின் லாபத்தில் வெட்டு விழும் எனப் புரிந்துகொண்டதும் நழுவிவிட்டன.

அரசு பட்டியலில் இடம்பெறும் கருவிகளை ஆண்டுக்கு 10%க்கும் அதிக விலையில் விற்கமுடியாது என்ற விதிதான் மருந்து நிறுவனங்களின் பதற்றத்துக்குக் காரணம். உலகளவில் 342.39 பில்லியன் டாலர்கள் மதிப்புக் கொண்ட மருத்துவக்கருவிகளுக்கான சந்தையில் இந்தியாவின் பங்கு 1.3%. இதய வால்வுகள், எலும்பு மாற்றுக்கருவிகள் ஆகியவற்றின் விற்பனைச் சந்தை ஏகபோகமாக பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருப்பதும் சிகிச்சை கட்டணங்களின் விண்ணுயர உயர்வுக்குக் காரணம்.

‘‘மேக் இன் இந்தியா என வெளிநாட்டு முதலீடுகளுக்கு கதவு திறந்தும் 90% இறக்குமதி பொருட்களையே இன்னும் நாம் நம்பியிருப்பதை என்னவென்று சொல்ல? இறக்குமதியில் 46% பொருட்கள் நோய் கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், எக்ஸ்‌ரே உள்ளிட்ட பொருட்கள்தான். இதற்கு சரியான விலை நிர்ணயிக்காதபோது விலை நிர்ணய ஆணையத்தின் மீது சந்தேகம் வருவதை எப்படி தவிர்க்க முடியும்?’’ என ஆணித்தரமாகக் கேட்கிறார் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் (PHFI) அமைப்பைச் சேர்ந்தவரான ப்ரீதம் தத்தா.

* பற்றாக்குறை சட்டம்! ஓட்டைகள் ஆயிரம்!
‘‘மருந்து நிறுவனங்களை விட கருவிகளை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் 3 மடங்குக்கும் அதிகம். டாக்டர்களுக்கு லஞ்சம் தந்து 4.75 லட்சம் ஸ்டென்டுகளை விற்று ஓராண்டிற்கு ரூபாய் 3 ஆயிரத்து 500 கோடி சம்பாதிக்கிறார்கள். மருந்துக் கம்பெனிகளுக்கு 30% கமிஷன் தராவிட்டால் மருத்துவக்கருவிகள் எதுவும் அவர்களின் ஷெல்ஃபில் கூட ஏறாது...’’ என நடைமுறைப் பிரச்னைகளை அடுக்குகிறார் மருத்துவத்துறையைச் சேர்ந்த அசோக்குமார் பார்கவா. 

இங்கிலாந்தின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) போன்ற துல்லிய தர நிர்ணய அமைப்பு இந்தியாவில் இன்னும் உருவாக்கப்படவேயில்லை. மத்திய அரசின் குடும்பநலத்துறை 2018ம் ஆண்டு ஜனவரியில் கொண்டு வரவிருக்கும் மருத்துவக்கருவிகள் தொடர்பான சட்டத்தில் இறக்குமதியாகும் மருத்துவக்கருவிகளை கண்காணிக்க முடியாது என்ற வரையறை இருப்பது இதன் மைனஸ் பக்கம்.

‘‘மருந்து நிறுவனங்களிடமிருந்து விலை குறித்த தகவல்களை முழுமையாகப் பெறமுடியாது. தகவல் கிடைத்தாலும் அது மருத்துவ மனைகளுக்கு விற்கும் விலையா, அல்லது மக்களுக்கானதா என்பதை அறிவதும் சிரமம். விலை நிர்ணயத்தை விட நிறுவனங்களை கண்காணிப்பதே எங்களது முக்கிய பணி...’’ என இதற்கு விளக்கம் தருகிறார் குடும்பநலத்துறை அதிகாரி.

இப்போது இறக்குமதியாகும் 78 பொருட்களுக்கு 7.5% வரி விதிக்கப்பட்டாலும் அது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவில்லை. ஏன்? ‘‘பன்னாட்டு நிறுவனங்கள் இறக்குமதி வரியிலிருந்து தப்பிக்க, உள்நாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தி தம் பொருட்களை விற்கும் கடையாக அவற்றை மாற்றிவிடுகின்றன. இப்படி இந்தியாவுக்குக் கிடைத்த முதலீடு மட்டும் 423 மில்லியன் டாலர்கள்...’’ என்கிறார் இந்திய மருத்துவக்கருவிகளின் சங்கத்தைச் சேர்ந்த ராஜீவ்நாத்.

* உலகளவில் சாதனை! உள்நாட்டில் வேதனை!
நம்புங்கள். உலகளவில் மருந்து தயாரிப்பில் இன்று இந்தியா வகிப்பது முதலிடம். அதுமட்டுமல்ல, ஹெச்ஐவி / எய்ட்ஸ் நோய்களுக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு விநியோகிப்பதில் இந்தியாவின் பங்கு 92%. ஆனால், அதேசமயம் 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய மாதிரி ஆய்வில் 72% நகர மக்களுக்கும், 57% கிராம மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள் கிடைப்பதில்லை என்ற தகவல் நிச்சயம் அதிர்ச்சி அளிப்பதாகும்.

மருத்துவரிடம் ப்ரிஸ்கிரிப்ஷன் பெற்று மருந்துகளை வாங்கும் மக்களின் அளவு பிரிக்ஸ் நாடுகளிலேயே அதிகளவாக இந்தியாவில்தான், 72% ஆக உள்ளது. ‘‘அண்மையில் இந்திய அரசு ஜெனரிக் மருந்துகளை அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால், 3000 ரூபாயை மருந்துகளுக்காக செலவழிக்கும் ஒருவர், 1500 ரூபாய்க்கு மருந்துகளை வாங்க முடியும்...’’ என உற்சாகமாகிறார் உரத்துறை அமைச்சர் அனந்த்குமார்.

2017ஆம் ஆண்டு இறுதிக்குள் ஜன் ஆஸாதி என்னும் ஜெனரிக் மருந்துக்கடைகளை ஆண்டுக்கு ரூபாய் 60 கோடி லாப திட்டத்தில் நாடெங்கும் தொடங்க அரசு திட்டமிட்டு வருகிறது. ‘‘ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைப்பது மக்களுக்கு உதவும் என்றாலும் இதில் தரம் என்பது கேள்விக்குறிதான்...’’ என்ற இந்தியா ட்ரக் ஆக்‌ஷன் அமைப்பின் உறுப்பினரான சீனிவாசன் -டாக்டர் ரெட்டி, ரான்பாக்ஸி, சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் ஜெனரிக் மருந்துகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததைத் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவின் 10 ஆயிரம் ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்களில் WHOவின் அங்கீகாரம் பெற்ற தரமான தயாரிப்பாளர்கள் வெறும் 400 பேர்தான். முகத்தில் அறையும் இந்த உண்மை, ஜெனரிக் மருந்துகளின் தயாரிப்பில் இந்தியா, செல்ல வேண்டிய  தூரத்தையே காட்டுகிறது.

சிகிச்சை செலவு!

முழங்கால் மாற்றுக்கருவி விலை - ரூ. 10,159 (இறக்குமதி அமெரிக்கா).
இந்தியாவில் விலை - ரூ. 95,478 முதல் 1,47,628 வரை (939.8% - 1453.2%).

இடுப்பெலும்பு மாற்றுக்கருவி விலை - ரூ.20,000 - 42,000 (அயர்லாந்து).
இந்தியாவில் விலை - ரூ. 60,000 முதல் 1,30,000 வரை (240 - 520%).

ஸ்டென்டுகள் விலை - ரூ. 14,000 - 42,000 (சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், அயர்லாந்து)
இந்தியாவில் விலை - ரூ. 53,000 முதல் 1,30,000 வரை (520%).

டாப் 5 நாடுகள்

* ஜெர்மனி (ஹாம்பர்க்), லெபனான் (பெய்ரூட்), இந்தியா (பெங்களூர்), சிங்கப்பூர், மலேசியா (கோலாலம்பூர்)
* சிறந்த மருத்துவச்சுற்றுலா நாடு 2017 - மலேசியா.
* இந்தியாவின் மருத்துவச்சுற்றுலா மதிப்பு - 3 பில்லியன் டாலர்கள் (2015).
* நோயாளிகளின் எண்ணிக்கை - 2,30,000.
* 2020ல் மருத்துவச்சுற்றுலா மதிப்பு - 8 பில்லியன் டாலர்கள்.

(Medical Travel Quality Alliance/ https://www.mtqua.org IMTJ MEDICAL TRAVEL AWARD WINNERS IN 2017, grantthornton.in Punjab Haryana Delhi (PHD) Chamber of Commerce and Industry தகவல்படி)