கவலை வேண்டாம் ; நமக்குப் பிறகு ஆட்டிசம் குழந்தைகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள்சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் அதிரடித் திட்டம்

‘சிறப்புக் குழந்தையின் பெற்றோரா நீங்கள்? ஒரு நிமிடம்...’  ஃபேஸ்புக்கில் இப்படியொரு விளம்பரம். அதில் ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம்  போன்ற குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒரு சமூகத்தை உருவாக்கும் பெற்றோர்களின் முயற்சி பளீரெனத் தென்பட்டது.‘‘‘CLAPS’ -  இதுதான் எங்க அமைப்பின் பெயர். அதாவது, ‘சிறப்புக் குடிமக்களின் பெற்றோருக்கான சமூக வாழ்க்கை அமைப்பு (Community Living  Association for Parents of Special Citizens)’. இதற்கு நிறுவனர்னு யாரும் கிடையாது. எங்க நோக்கமே 50 பேர் இணைந்து ஒரு பகுதில  இடம் வாங்கி எங்களின் சிறப்புக் குழந்தைகளை அங்கே வளர்க்கறதுதான். அதற்காகவே அந்த விளம்பரம்...’’ என ஓப்பனிங் கொடுக்கிறார்  இளங்கோவன்.

‘‘தனியார் நிறுவனத்துல பொது மேலாளரா இருக்கேன். என் ரெண்டு பசங்களுமே ஆட்டிசம் குறைபாடு உள்ளவங்க. ஆரம்பத்துல ரொம்ப  சிரமப்பட்டோம். எனக்கு 56 வயசு. மனைவி அம்புஜவல்லிக்கு 50. எங்களுக்குள்ள ஒரு கேள்வி எழுந்துச்சு. நமக்குப் பிறகு நம்ம பசங்களை  யாரு பொறுப்புடன் கவனிப்பாங்க..?’’ என்ற அழுத்தமான கேள்வியுடன் அவர் நிறுத்த, அதை ஆமோதித்தார் குருமூர்த்தி.‘‘அவங்களுக்கு மட்டுமல்ல. எங்க எல்லோர் மனசுலயும் இந்தக் கேள்வி இருந்துச்சு. எங்க பசங்க மந்தைவெளில இருக்குற சிறப்புப்  பள்ளியில படிச்சிட்டிருந்தாங்க. அதன்மூலம் நாங்க எல்லோரும் பழக்கமானோம். எங்களுக்குள்ள ஒரு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி அதுல  பேசிட்டு வர்றோம்.

நானும் ஒரு தனியார் நிறுவனத்துல பொது மேலாளரா இருக்கேன். என் ரெண்டு குழந்தைகளுக்கும் ஆட்டிசம் குறைபாடு இருக்கு. இதுல  மகள் வர்ஷாவுக்கு ஆட்டிசம் லெவல் அதிகம். 23 வயசாகுது. தவிர, அவளுக்கு எமோஷனல் சிக்கலும் இருக்கு. ஆனா, எறிபந்து  விளையாட்டுல கெட்டிக்காரி. செயற்கை நகைகள் மற்றும் மாலைகள் செய்வதிலும் கை தேர்ந்தவள். பையன் ஸ்ரீ தருக்கு ஆட்டிசம் லெவல்  குறைவு. ஓரளவு அவனைச் சமாளிக்கலாம். எங்க எல்லோருடைய பசங்களுக்குமே பொதுவெளி அதிகமாக தேவைப்படுது. அதை நான்கு  கல் சுவர் கொடுக்காது. நமக்கே ஒரு ஓபன் ஸ்பேஸைப் பார்த்திட்டா எவ்வளவு குதூகலம் வரும். அதுமாதிரி இவங்களுக்குக் கிடைச்சா  ரொம்ப சந்தோஷமாவும், நம்பிக்கையாவும் இருப்பாங்க. இதுதான் நாங்க சமூகமாக ஒரே இடத்துல வாழ நினைக்கிறதுக்கு முக்கிய  காரணம்...’’ என்றார் தெளிவாக.

‘‘இந்தக் குழந்தைகளோட பெரிய பிரச்னையே மற்றவங்ககிட்ட தொடர்பு கொள்ள முடியாததுதான். தண்ணீர் தேவைங்கிற சின்ன  விஷயத்தைக் கூட சொல்ல முடியாமல், வார்த்தைகள் வராமல் தவிப்பாங்க. ஆனா, நிறைய விஷயங்கள் உள்ள போகும். வரவேண்டிய  நேரத்துல வராது. இதனால, அதிகமா கோபப்படுவாங்க. ஏதாவது ஒண்ணுன்னா ரொம்ப பதட்டமாகிடுவாங்க...’’ என தன் செல்ல மகனைத்  தட்டிக் கொடுத்தபடியே சொன்னார் அலமேலு சிவராமன்.‘‘எனக்கு ஒரே மகன். ரெண்டு வயசுலேயே ஆட்டிசம்னு கண்டு பிடிச்சிட்டோம்.  நல்ல திறமைசாலி. அவனால கம்ப்யூட்டர் கூட இயக்க முடியும். அவனுக்கான சூழல ஏற்படுத்திக் கொடுக்கணும்னு நினைச்சோம். ஒரு  வெளிநாட்டு ஆய்வு ‘இந்தக் குழந்தைங்க இயற்கையோடு இருந்தா நிறைய புரிதல் கிடைக்கும், கோபங்கள் குறையும்...’னு சொல்லுது.  நாங்க வாழப் போற சமூகத்துல அது கிடைக்கும்னு நம்பு றேன்.

ஒவ்வொரு மாசமும் ஒரு வெளியூர் டூர் போயிட்டு வர்றோம். இதனால, எல்லா பெற்றோராலும் எல்லா குழந்தைகளையும் கையாள  முடியுது. அதேமாதிரி ஒவ்வொரு குழந்தையும் நண்பர்களாகிட்டாங்க. ஏற்கனவே ஸ்கூல் பழக்கம் வேற. இப்ப இன்னும் நெருக்கமாகிடுச்சு. என் குழந்தைக்கு யோகா பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, பராமரிப்புச் செலவுனு மாசம் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகுது. ஒரே இடத்துல  எல்லோருக்கும் இந்தப் பயிற்சிகளைக் கொடுக்கும்போது பத்து மடங்கு செலவு குறையும்...’’ என்கிறார் சஞ்சய்ராவ்.அவரைத் தொடரும்  ஹரிகரன், தன் மகன் விஜய்ஷரவனுக்காக வேலையை உதறிவிட்டு சென்னை வந்தவர்.

‘‘ஆரம்பத்துல குவைத்ல வேலை பார்த்தேன். ஆறு மாசத்துல இவனுக்கு ஆட்டிசம்னு தெரிஞ்சிடுச்சு. உடனே சென்னை வந்துட்டோம்.  மனைவி சுகன்யாதான் எல்லாமுமாக இருந்தாங்க. இப்ப நானும் அவங்க கூட இருந்து மகனைக் கவனிச்சிட்டு இருக்கேன். அவன் ரொம்ப  திறமைசாலி. நீச்சல் செமயா அடிப்பான். கூடைப்பந்தும் அருமையா ஆடுவான். ஒரு சமூகமாக நாங்க சேரும்போது குழந்தைங்களோட  ஆக்டிவிட்டி அதிகரிக்கும். பதட்டமும், பயமும் குறையும். இன்னும் சிறப்பா வளருவாங்க...’’ என்றார் உறுதியாக.‘‘என் மகன் கேசவ்க்கு  செரிபிரல் பால்சினு ஒரு குறைபாடு. மனைவி மீனா சிறப்புப் பள்ளியில ஆசிரியரா இருக்காங்க. இப்ப எங்க குழந்தைங்களுக்குள்ள நல்ல  புரிதல் வளர்ந்திருக்கு...’’ என்றார் அனந்த நாராயணா.

நிறைவில், திட்டம் பற்றி பேசினார் இளங்கோவன். ‘‘நமக்கு நாமேங்கிற சிந்தனைதான் இதன் அடிப்படை. திருவள்ளூர்ல இருந்து  ஊத்துக்கோட்டை போற வழியில நெய்வேலினு ஒரு கிராமத்துல எட்டரை ஏக்கர் நிலத்துக்கு அட்வான்ஸ் மட்டும் போட்டிருக்கோம். 30  குடும்பங்கள் வரை உறுதி கொடுத்திருக்காங்க. யாராவது வர்ற ஐடியா இருந்தா எங்களை இந்த பிளாக்ல தொடர்பு கொள்ளலாம்  (www.clapschennai.blogspot.com).இந்தத் திட்டப்படி குழந்தைகளுக்குத் தனி இடம், பெற்றோருக்குத் தனி இடம்னு கட்டப்போறோம்.  ஏன்னா, எங்களுக்குப் பிறகுனு கேட்ட கேள்விக்கான பதில் இதுவே. அவங்க எங்க வீட்டுக்கு வரலாம். போலாம். ஆனா, தனி இடத்துலதான்  இருக்கணும். எங்க கண் முன்னாலயே அவங்க நம்பிக்கையா வாழப் பழகணும்.

அப்புறம், ஐந்து பேருக்கு ஒரு பொறுப்பாளர்னு ஆட்களும் நியமிக்கப் போறோம். அந்தப் பொறுப்பாளர் குழந்தைங்களைப் பெற்றோர்  முன்னிலையில கவனிச்சிப்பார்.அப்பா, அம்மா இறந்திட்டா அவங்க வீட்டை இதே குறைபாடு கொண்ட இன்னொரு குடும்பம் வாங்கிக்கிட்டு  குடியேறலாம். அப்படி வித்து வர்ற பணத்தை அந்த சிறப்புக் குழந்தையின் வாழ்நாள் முழுமைக்கான செலவுக்கு உபயோகப்படுதுற மாதிரி  செஞ்சிட்டிருக்கோம்.
இந்த இடத்துல தொழில்முறைக் கல்வி, பொதுவான சமையல் கூடம், உண்ணுமிடம், நீச்சல்குளம், மருத்துவ அறை,  உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள் எல்லாமே இருக்கும். ஓர் அனுபவம் வாய்ந்த சிறப்புப் பள்ளியின் ஆலோசனைப்படி வழிநடத்த  இருக்கோம். சென்னைலேருந்து 60 கிமீ தூரம்தான். அதனால, சில பெற்றோர் வேலை விஷயமா சென்னைக்கு வந்துட்டுப் போறதுக்கும்  கூட வாய்ப்பு இருக்கு.இந்த சிஸ்டம் இப்படியே தொடர்ந்து போயிட்டே இருக்கும். நான் எப்படி கவனிக்கிறேனோ அதே மாதிரி  இன்னொருத்தர் வந்து செய்வார். குழந்தைகளும் அப்பா, அம்மாவைத் தேடாமல் அவங்களே அவங்கள பார்த்துப்பாங்க. மனிதர்களைத்  தாண்டி சிஸ்டம் செயல்பட ஆரம்பிச்சிடும். அவ்வளவுதான்...’’அழுத்தமாகச் சொல்கிறார் இளங்கோவன்.

- பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்