COFFEE TABLEஐபோன் - நியூ வெர்ஷன்

‘ஆப்பிள்’ நிறுவனம் எவ்வளவுதான் ரகசியமாக வைத்திருந்தாலும் விஷயம் எப்படியோ வெளியே கசிந்துவிட்டது. ஆம்; வருகிற  செப்டம்பரில் மொபைல் ஷோரூம்களை அலங்கரிக்கப்போகிறது புதிய மாடல் ஐபோன். ‘OLED’ டிஸ்பிளே, ஆப்பிள் பென்சில் சப்போர்ட்,  ஃபேஸ் ஐடி சப்போர்ட், 256 இன்பில்ட் ஸ்டோரேஜ் போன்ற வசதிகளுடன் இதுவரை இல்லாத புதிய டெக்னாலஜிகளுடன் இந்த போனை  வடிவமைத்திருக்கிறது ‘ஆப்பிள்’. விலை ரூ.49,000 - ரூ.70,100.

ஆரோக்கியத்தில் முதலிடம்


‘‘இந்தியாவில் ‘வாழ்வதற்கு சுமுகமான நகரங்’களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நகரமும் இடம் பெறவில்லை...’’ என்கிறது  மத்திய அரசின் வீடு மற்றும் நகர அமைப்பு அமைச்சகத்தின் ஆய்வு.புனே, மும்பை, திருப்பதி, சண்டிகர், தானே, ராய்ப்பூர், இந்தூர்,  விஜயவாடா, போபால் முதலிய நகரங்கள் இந்தப் பட்டியலில் முக்கிய இடங்களைப் பிடித்திருக்கின்றன. ஆனால், ஆரோக்கியத்தில்  திருச்சியும், தண்ணீர் கிடைப்பதில் ஈரோடும், அடையாளம் மற்றும் கலாசாரத்தைப் பேணுவதில் மதுரையும் முதல் இடத்தைப்  பெற்றிருப்பது தமிழகத்துக்குப் பெருமை.நிர்வாகம், பொது இடங்களைப் பேணுதல், போக்குவரத்து, கழிவு களை அப்புறப்படுத்துவது  போன்றவற்றில் பெங்களூர், புது தில்லி, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் முதலிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன.

ருத்ர தாண்டவம்


கேரளாவில் பருவமழை ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அரசும், மக்களும் துரிதமாகச் செய்துகொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் நாம்  அறிந்ததுதான். இப்போது கேரளாவின் மலைப்பகுதிகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இயற்கையின் கொந்தளிப்புகளை கன மழையில்  நனைந்தபடியே வீடியோவாக்கி இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் கண்ணூரைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் ஒருவர். அந்த வீடியோவைப்  பார்த்தவர்கள் எல்லோரும் பயத்தில் உறைந்துபோயிருக்கின்றனர்.

அலியா 3D

இன்ஸ்டாவில் 24 லட்சம் ஃபாலோயர்களுடன் வலம் வருகிறார் பாலிவுட் பார்பி அலியா பட். நட்புக்கு முக்கியத்துவமளித்து ஹோம்லியாக  புகைப்படங்களைப் பதிவிடுவது அலியாவின் ஸ்பெஷல். அவ்வப்போது வித்தியாசமாக ஏதாவது செய்வது அவரது வாடிக்கை. சமீபத்தில்  ‘3D’யில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட, 12 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

வேகம்... விவேகம்


இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் யூடியூப் சேனல், ‘Mr.Fast 2018’. இதில் வேகமும் விவேகமுமாக செயல்படும் மனிதர்களைப்  பற்றிய வீடியோக்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கான்செப்ட்டில் ஜொலிக்கின்றன. இந்த மாதம் உயரமான கம்பத்தில் விறுவிறுவென  ஏறி இறங்குபவர்கள், மின்னல் வேகத்தில் மீன் நறுக்குபவர்கள், இளநீர் வெட்டுபவர்கள்... என தொழிலாளர்களின் சாகசங்கள், ‘Fast  Workers 2018 | Perfect LEVEL MASTER’ என்ற தலைப்பில் வெளியாக... 34 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். 
                     
- குங்குமம் டீம்