அமெரிக்க கவர்னர் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை!



அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு புது பக்கத்தை உருவாக்கியுள்ளார் கிறிஸ்டியன் ஹால்குயிஸ்ட். வரும் நவம்பர் 2018ல் அமெரிக்க  வெர்மோன்ட் மாகாண கவர்னர் பதவிக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் பலரும் கவர்னர் பதவிக்குப்  போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் வாக்கெடுப்பில் கிறிஸ்டியன் ஹால்குயிஸ்ட் வெற்றி பெற்று  கவர்னர் பதவிக்கான தேர்தலில் நிற்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இவர் ஒரு திருநங்கை என்பதும், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு  திருநங்கை கவர்னர் பதவிக்கு போட்டி யிடுவது இதுவே முதல்முறை என்பதும் ஹைலைட்.

62 வயதாகும் கிறிஸ்டியன், வெர்மோன்ட் மாகாண எலெக்ட்ரிக் கோ-ஆப்பரேடிவ் அலுவலகத்தில் செயல்திறன் அதிகாரி மற்றும்  பொறியாளராக 15 ஆண்டுகள் பணியாற்றியவர். இயற்பெயர் தேவ். கவர்னர் பதவிக்கான வேலைகள் கருதி சமீபத்தில் வேலையை  ராஜினாமா செய்திருக்கிறார்.1979ல் பேட் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட கிறிஸ்டியனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களில்  ஒருவரான டெரிக் ஹால்குயிஸ்ட், இவரைப் பற்றி ஆவணப் படம் ஒன்றை இயக்கி 2016ல் வெளியிட்டுள்ளார்.

அனைத்து வீடுகளிலும் ஹை ஸ்பீட் இணைய வசதியை உருவாக்கி அதன்மூலம் மக்களின் தேவைகளை அரசு நேரடியாக அறிந்து  கொள்வது, மருத்துவ ரீதியில் வெர்மோன்ட் மாகாணத்தை முன்னேற்றுவது... ஆகியவற்றை தனது முதன்மை குறிக்கோள்களாகத்  தெரிவிக்கும் கிறிஸ்டியன், ‘‘மற்ற பாலினத்தவர்கள் போன்றே என் திறமையை மதித்து அதற்கான அங்கீகாரத்தைப் பெறவே  விரும்புகிறேன்....’’ என்கிறார். பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் புழக்கம்... ஆகியவற்றுக்காக  அதிகம் குரல் கொடுத்தவர் கிறிஸ்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.                           

-ஷாலினி நியூட்டன்