நமக்கு நாமே!நியூஸ் வியூஸ்

‘நமக்கு நாமே!’ என்கிற கோஷம் தமிழகத்துக்கு புதிதல்ல.கிராமப்புற மக்கள் தங்களுடைய தேவையை யார் கையையும் நம்பாமல்,  பணமாகவோ உடல் உழைப்பாகவோ தாங்களே நிறைவேற்றிக் கொள்வது.சங்க காலம் தொட்டு தமிழகத்தில் காலம் காலமாக ‘நமக்கே  நாமே’ நடந்து கொண்டுதான் இருந்தது. 1998 - 99 திமுக ஆட்சியில், ஊரக வளர்ச்சித் துறை இதை அரசுத் திட்டமாகவே முன்னெடுத்து,  மக்களோடு அரசாங்கமும் கைகோர்த்து பணிபுரிந்தது. இதன் மூலமாக பல நூறு கிராமங்களில் மக்கள் வறுமையைத் துரத்தியடித்த  அதிசயமும் நம் கண் முன்னே நிகழ்ந்திருக்கிறது.

தமிழகத்தின் சாபக்கேடாக, அடுத்து ஆட்சிக்கு வரும் எதிர்க்கட்சி, முந்தைய ஆட்சியின் சாதனைகளை நடந்த சுவடே இல்லாமல்  முடக்குவது வழக்கம். அம்மாதிரி முடங்கிய அற்புதமான திட்டம் ‘நமக்கு நாமே’.அரசின் ஆதரவு இன்றி சமீபத்தில் திருவாரூர்  மாவட்டத்தில் பத்து கிராம மக்கள் இணைந்து ‘நமக்கு நாமே’ முறையில் பாசன வாய்க்காலைத் தூர்வாரி, தமிழகத்துக்கே  முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் சட்ரஸ் பாமணிஆற்றில் இருந்து பிரியும் நார்த்தா பாசன  வாய்க்கால் பல கிராமங்கள் வாயிலாக 28 கி.மீ. தூரம் பயணித்து கண்ணன் ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் வழியாக 6,630 ஏக்கர்  நிலம் பயனடைகிறது.

இந்த வாய்க்கால் பல்லாண்டு களாக தூர்வாரப் படாததால் இப்பகுதியைச் சேர்ந்தோர் விவசாயத்துக்கு போதுமான நீரின்றி அவதிப்பட்டு  வந்தனர். பலமுறை அதிகாரிகளைச் சந்தித்து மனுக்கள் கொடுத்து கோரியும் எந்தப் பயனுமில்லை.சமீபத்தில் காவிரியில் கரைபுரண்ட  வெள்ளத்தின் பயனை தாங்களும் அடைய வேண்டும் என்கிற நோக்கில் கிராமத்துக்கு 20 பேர் வீதம் 200 பேர் திரண்டு சுமார் 2 லட்சம்  ரூபாய் செலவில் (செலவையும் தங்களுக்குள் பகிர்ந்திருக்கிறார்கள்) தூர்வாரியிருக்கிறார்கள்.தங்களுக்கு செவி கொடுக்காத அரசை  இனியும் நம்பாமல் விவசாயிகள் தங்களுக்குள் குழுக்கள் அமைத்து இதுபோன்ற புனருத்தாரணப் பணிகளைச் செய்துதான் விவசாயத்தைச்  செழிக்கச் செய்ய முடியும், விவசாயிகளை வாழவைக்க முடியும் என்று அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள்.

ஆர்வமுள்ள இந்த விவசாயிகளோடு அரசாங்கமும் கைகோர்த்தால் இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தலாமே என்பதுதான்  நம்முடைய ஆதங்கம்.அத்தகைய ஓர் அற்புதம், ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே இருக்கும் தஜிகிஸ்தான் என்கிற நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.  சுமார் 87 லட்சம் பேர் வசிக்கும் இந்த நாடு, 1991ல் சோவியத் ருஷ்யா கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனிநாடானாது. அதன்பிறகு சுமார்  ஐந்தாண்டுகளுக்கு நடந்த உள்நாட்டுப் போரால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்தது. பணக்காரர்கள்  வறியவர்களானார்கள். வறியவர்கள் வாழ வகையின்றி கூட்டம் கூட்டமாக மாண்டார்கள்.அடிப்படையில் தஜிகிஸ்தான் ஒரு விவசாய நாடு.  அங்கு பத்தில் ஆறு பேருக்கு விவசாயம்தான் தொழில். உள்நாட்டுப் போரின் காரணமாக விவசாயம் சரிவர நடக்காமல் நாடு திவாலாகும்  நிலையில் இருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ஏழ்மையை ஒழிக்கவும் விவசாயிகள்தான் மனசு வைக்க வேண்டும் என்று அரசு அவர்களை  நோக்கி உருக்கமான கோரிக்கை வைத்தது.இதையடுத்து மக்கள் களமிறங்கினார்கள். தூர்த்துப் போன பாசன வாய்க்கால்களைச்  சீரமைப்பதுதான் அவர்களின் முதன்மைப் பணியாக இருந்தது. வறிய நிலையில் இருந்தவர்களை இந்தப் பணிகளில் ஈடுபடுத்தி, நியாயமான  கூலி வழங்க அரசு முன்வந்தது. சுமார் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கான வாய்க்கால்கள் இம்மாதிரி, மக்களாலேயே சீரமைக்கப்பட்டன. இந்தப் பணிகள் ஒழுங்காக நடக்கின்றனவா என்று உள்ளூர் மக்கள் அமைப்புகளே கண்காணித்தன.கடந்த இருபத்தைந்து ஆண்டு  களில் அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்காக நட்பு நாடுகளிடமும், உலகவங்கியிடமும் கடன் வாங்கி கிட்டத்தட்ட  1970களில் சோவியத் ருஷ்யாவால் இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த அளவுக்கான சிறப்பான விவசாயக் கட்டமைப்பை மீள் உருவாக்கம்  செய்து காட்டியிருக்கிறார்கள் தஜிகிஸ்தான் விவசாயிகள்.

நீர் பங்கீட்டுக்காக விவசாயிகள் தங்களுக்குள்ளேயே ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, பங்கீட்டுப் பிரச்சினையை அரசுக்குக் கொண்டு  செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்கிறார்கள்.தஜிகிஸ்தான் மீண்டும் விவசாயப் புரட்சி கண்டு வருகிறது. இன்று அந்நாட்டின் மொத்த  உள்ளூர் உற்பத்தி மதிப்பில் 30% அளவு விவசாயத்தை சார்ந்திருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த சதவிகிதம் அதிகரித்துக்கொண்டு  செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

அரசாங்கம் அங்கே எல்லா மாவட்டங்களிலும் கூட்டுப் பண்ணை முறையை அறிமுகப்படுத்தி  இருப்பதோடு, சுமார் 75,000 ஹெக்டேர் நிலத்தை விவசாயி களுக்கு பகிர்ந்தளித்தும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. கிராமப்புற  ஏழ்மை ஒழிப்புக்கு விவசாயத்தை வளர்ப்பதே சரியான உத்தி என்று தஜிகிஸ்தான் உலகுக்கு நிரூபித்திருக்கிறது.கேட்பதற்கே மகிழ்ச்சியாக  இருக்கிறது அல்லவா?அரசு கையறுநிலையில் இருந்தபோது, தஜிகிஸ்தான் விவசாயிகள் ‘நமக்கு நாமே’ என்று களமிறங்கியதால்தான்  இன்று அந்த நாடு காப்பாற்றப்பட்டிருக்கிறது.இயற்கை தன்னுடைய வளங்களை அள்ளி அள்ளி மக்களுக்கு கொடுக்கத் தயாராகத்தான்  இருக்கிறது. அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம்முடைய சமர்த்து.             l

- யுவகிருஷ்ணா