குழந்தைகளுக்கான நவீன ஆடைகள் பாதுகாப்பானதா?



இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்துறைகளில் ஒன்று குழந்தைகளுக்கான டெக்ஸ்டைல் துறை. நாட்டின் பொருளாதாரத்தை  நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் இத்துறையில் கடந்த வருடம் மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் புரண்டிருக்கிறது!பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிரடியாகக் களமிறங்கி குழந்தைகளுக்கான நவீன ஆடைகளைத் தயாரித்து ஆஃபரில் அள்ளித்  தருகின்றன. கவர்ச்சியான வடிவமைப்பில், மலிவான விலையில் இத்துணிகள் கிடைப்பதால் மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கிச்  செல்கின்றனர்.

இந்நிலையில், ‘‘நவீன ஆடைகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதல்ல. அந்த ஆடைகளைப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அணிவிப்பது பெரும்  வன்முறை!’’ என கறாராக ஆரம்பித்தார் அருண்குமார்.‘‘குழந்தைகளுக்கான நவீன ஆடைகள் பெரும்பாலும் பாலியஸ்டர், நைலானால்  தயாரிக்கப்பட்ட பின்னலாடைகள். அதைக் கவனிக்காமல் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து வாங்குகிறோம். சூரிய வெளிச்சத்தைக் கூட  சரியாக உள்வாங்கிக் கொள்ளாத அந்த ஆடைகள் குழந்தைகளின் மென்மையான தேகத்துக்கும், அதன் இயல்புக்கும், தென்னிந்திய  தட்பவெப்ப சூழலுக்கும் உகந்தவை அல்ல. நம் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது கைத்தறி ஆடைகள்தான்...’’ என்கிற அருண்,  ‘அம்பரம்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி குழந்தைகளுக்கான கைத்தறி ஆடைகளைத் தயாரித்து ஆன்லைனில் விற்றுவருகிறார்.

‘‘பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் மதுரையில். சென்னையில் கொஞ்ச நாள் வெப் டிசைனரா இருந்தேன். கம்ப்யூட்டர் வேலையில்  முழுமையா ஈடுபட முடியலை.  இயற்கை சார்ந்து உடல் உழைப்போட ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அப்ப ‘குக்கூ’ அமைப்போட  தொடர்பு கிடைத்தது. குழந்தைகளைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு கிட்டேன். அந்தப் பயணத்தில் விழுந்த விதைதான்  குழந்தைகளுக்கான கைத்தறி ஆடைகள்...’’ என்கிற அருண் கைத்தறி ஆடையை நோக்கி தன் பயணம் திரும்பியதற்குத் தூண்டுதலாக  இருந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி வீட்டுல இருந்த பழைய தலையணை கிழிஞ்சிடுச்சு. அதைப் பிதுக்கி விளையாடினப்ப பஞ்சுக்கு பதிலா  நிறைய துணிகள் பிட்டு பிட்டா வெளியேறிச்சு. அது என்னன்னு பார்த்தா 28 வருஷங்களுக்கு முன்னாடி நானும் என் தங்கையும் அணிந்த  கைத்தறி ஆடைகள்!அத்தனை வருஷங்கள் ஆகியும் அந்தத் துணிகள் மென்மையா, பளபளப்பா புதுசு போல இருந்தது. சுத்தமான காட்டன்ல  நெய்திருக்காங்க. அதுல இருந்த எம்ப்ராய்டரி வேலையெல்லாம் அம்மா செஞ்சது. அதன் வண்ணங்கள் கூட மெலிதா, இனிமையா இருந்தது.  கடைல அது மாதிரி பார்க்கவே முடியாது.

மனசுக்குள் ரொம்ப நாட்களுக்கு இது ஓடிக்கிட்டே இருந்தது. தூங்கவே விடலை. நமக்குக் கிடைத்தது இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு  கிடைக்கலையேனு யோசிச்சேன். வேலையை உதறிட்டு களத்துல இறங்கிட்டேன். இந்த முயற்சிக்கு ஃபேஷன் டிசைனரான என் தங்கை  பொன்மணி உறுதுணையாவும், வழிகாட்டுதலாகவும் இருக்காங்க...’’ என்ற அருண், சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.‘‘ஆரம்பத்துல  சென்னி மலை கைத்தறி நெசவாளர்கள்கிட்ட இருந்து துணிகளை வாங்கி தங்கையுடன் சேர்ந்து வீட்டுலயே குழந்தைகளுக்கான சட்டை,  ட்ரவுசரைத் தைத்தோம். அதுக்காக நானும் டெய்லரிங் கத்துக்கிட்டேன். பிறந்தது முதல் ஒரு வயதுக்குள்ளான குழந்தைகளுக்கான  உடைகளை முதல்ல வெள்ளை நிறத்தில் தயார் செய்து நண்பர்கள், தெரிந்தவர்கள்

குழந்தைகளுக்கு மலிவு விலைல கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ். உற்சாகத்தோடு முகநூல் வழியா தேவைப்பட்டவங்களுக்கு அனுப்பி  வைச்சோம். இப்ப துணி தைக்க தனியா ஆட்கள் இருக்காங்க. வெளிலயும் துணி தைக்க ஆர்டர் தர்றோம். நகரத்துல இருக்கிற சில  கடைகள் இப்ப எங்ககிட்ட இருந்து வாங்கி விக்கிறாங்க. நவீன ஆடைகள்ல இருக்கிற ஜிப், எலாஸ்டிக், பட்டன் எல்லாம் குழந்தைகளோட  உடம்பை காயப்படுத்தும். அது மாதிரி எதுவும் எங்க உடைகள்ல இல்ல.

சொல்லப்போனா உடம்புல ஆடை இருக்கிற உணர்வே  குழந்தைகளுக்கு இல்லாத அளவுக்கு இயல்பா இருப்பாங்க. உடல் சூட்டை அதிகரிக்காது. குளிர்காலத்துல வெதுவெதுப்பாவும் கோடைல  குளிர்ச்சியாவும் இருக்கும். ஆடைல இருக்கிற துளை வழியா காற்றும் வெப்பமும் நல்லா ஊடுருவும். இப்ப ஐந்து வயது வரை உள்ள  குழந்தைகளுக்கு பல வண்ணங்கள்ல ஆடைகளை தயார் செய்யறோம். சீக்கிரத்துல இது விற்பனைக்கு வரும். இந்தத் தொழில்ல நிறைய  பேர் இறங்கணும். அப்பதான் எல்லா குழந்தைகளின் தேவையும் பூர்த்தியாகும்...’’ என்கிறார் அருண்.   

-த.சக்திவேல்