மழை சகி... ரட்சகி... ராட்சஷி...



எர்ணாகுளத்திலிருந்து நாகபிரகாஷ்

இந்த வருடம் நல்ல மழை. ஓணக்காலம் வரை பெய்கிற இடவப்பாதி மழை. இம்மாத தொடக்கத்தில் கேரளத்தின் வயநாட்டில் நிலைமை  சற்றே மோசமாக இருப்பதாகத் தகவல் வந்தது. தொடர்ந்து பாலக்காட்டில் அதிக மழை பதிவாவதாக பத்தாம் தேதி வாக்கில் செய்தி.  உடன் பணிபுரியும் சிலரின் பூர்வீக வீடுகள் தாழ்வான பகுதிகளில் இருப்பதால் நீர் புகுந்தது என்று புகைப்படம் காட்டினார்கள். ஆனாலும்  மக்களுக்கு அதிக பாதிப்பு இல்லை என்றார்கள். அணைக்கட்டுகளில் நீர் நிரம்பிய பின்னரும் மேலும் வந்தவாறு இருந்ததால்  ஒவ்வொன்றாக சற்றே திறக்க ஆரம்பித்தார்கள். ஆறுகள் ஓடும் பகுதிகள் எல்லாம் நீரோட்டம் அதிகமானது. இடுக்கி மாவட்டம் தொடங்கி  எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா, அங்கமாலி, மற்றும் சில பகுதிகள், திருச்சூரின் சாலக்குடி வரைக்கும் ஆறுகள் ஓடும் பகுதிகளில் நீர்  கரையை மீறியது. மழை சற்றும் குறையவில்லை.

எப்போதும் காயல்கள் இயற்கையான மழைநீர் வடிகால்களாகச் செயல்படுவதால் அவை உள்ள பகுதிகளில் நீர் அதிகமானது. வெகு சில  இடங்களில் மட்டுமே அதனால் பிரச்னை இல்லை. ஆழப்புழா இதனால் மட்டுமே பெரும் பிரச்னையை சந்திக்கத் தொடங்கியது. அங்கு  தொடங்கி பம்பை ஓடும் மாவட்டங்களான பத்தனம்திட்டாவின் பெரும்பகுதி மற்றும் கோட்டயத்தின் சில பகுதிகள்வரை  பாதிப்புக்குள்ளாகியது. பத்தாம் தேதிக்கு மேலாக வயநாட்டில் பிரச்னை எவ்வளவு பெரியது என்று உறைக்கத் தொடங்கியது. கொஞ்சம்  கொஞ்சமாக மற்ற பகுதிகளின் பிரச்னையும் கவனத்துக்கு வரத் தொடங்கின. கேரளத்தின் இடுக்கி போன்ற பகுதிகளில் வீடுகள்  ஆங்காங்கே சிறு குன்றுகளின் மீது அமைந்திருக்கும். வயநாடு மலைப்பிரதேசம். இங்கு சமதளங்களில் ஊர்களும், வீடுகளும் அமைந்திருப்பதால் நீர் தேங்குவதற்கு ஏதுவானது. எல்லா இடங்களிலும் சாலைகள் மண் சரிவுகளாலும், நீர் நிரம்பியதாலும்  அவ்வப்போது துண்டிக்கப்பட்டன.

இதற்குள்ளாகவே முதலமைச்சர் நிவாரண நிதிக்கான கோரிக்கைகள் மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. நலன் நாடும்  எண்ணம் தவிர வேறு அரசியல் நோக்கு தவிர்த்து அரசு அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்றியது. எல்லா இடங்களிலும் முகாம்கள்  அமைக்கப்பட்டிருந்தன. ஆபத்தான பகுதிகளில் குடியிருக்கும் குடும்பங்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். தேவையான பொருட்களின்  பட்டியல் இணைய வெளியில் பகிரப்பட்டதுடன் பரவலாக அவற்றை வாங்கிச் சேர்க்கும் முயற்சிகளும் தொடங்கின. சில  தினங்களுக்குள்ளாகவே வதந்திகளையும், போலிச் செய்திகளையும் அடையாளம் கண்டு ஆர்வலர்களாகவே புறந்தள்ளினர்.ஆகஸ்ட் பதின்மூன்றாம் தேதி கோழிக்கோடு மற்றும் சில மாவட்டங்களில் மழை அதிகமானது. மக்கள் சிக்கிக் கொண்டார்கள்.

எர்ணாகுளத்தில் மழை குறைவு என்றாலும் பெரியாறு ஓடும் பகுதிகளில் எவ்வித நீரோட்டக் குறைவும் ஏற்படவில்லை. இப்படியே  பதினைந்தாம் தேதி வரை தொடரும்போது பாலக்காடு வரை சென்று திரும்பும் அவசியம் எனக்கு வந்தது. மூன்று மணி நேரத்தில் ஆலுவா,  திருச்சூர் வழியாக பாலக்காட்டிற்குள் நுழைந்துவிட்டேன்.திருச்சூரில் குதிரன் என்கிற இடத்தில் மட்டும் சேலம்- கொச்சி தேசிய  நெடுஞ்சாலை பயன்பாட்டில் இல்லாமல் பழைய சாலையிலும் அவ்வப்போது மண் சரிந்து துண்டிக்கப்பட்டதால் ஒரு மணிநேரமானது.  ஆனால், அதே வழியாக மாலை திரும்பும்போது இரண்டு மணிநேரத்துக்கும் மேலானது. ஊர்களை இணைக்கும் சாலைகள், நிலச்சரிவாலும்  பாறைகள் உருள்வதாலும் துண்டிக்கப்பட்டிருக்க, பாலங்களை மூழ்கடித்து நீர் சிற்றாறுகளில் ஓடத் தொடங்கியிருந்தது. உள்ளூர் ஆட்கள்  தாமாகவே சாலைகளில் நின்று போக்குவரத்தை மாற்றிவிடவும், விதிகளை மீறுவோரை எச்சரிக்கை செய்வதுமாக இருந்தனர்.

போலீசார் எல்லா இடங்களிலும் இருக்கச் சாத்தியமில்லாமல் முக்கிய சாலைகளில் இருக்க அங்கும் உள்ளூர் ஆட்களே உதவிக்கு  நின்றார்கள்.  இரவு திருச்சூரிலிருந்து பேருந்தில் ஏறி ஆலுவாவை நெருங்கும்போதே இருட்டிலும் நிலைமை புரிந்தது. பேருந்தின்  படிக்கட்டுக்கும் மேலாக தண்ணீர். சாலையின் இருபக்கமும் சேலைகள் விரித்துக் கட்டப்பட்டிருந்தன. கூர்ந்து பார்த்தபோது ஆலுவா  பாலத்தின் மேல் பேருந்து செல்வது புரிந்தது.இதற்கு முன்பு கீழிருந்தது பெரியாறு. நடைபாதைக்கான தடுப்பும் மூழ்கி மேல் கட்டப்பட்டிருந்த  சேலையால் மட்டுமே பாலத்தில் இடித்துவிடாமல் பேருந்தை ஓட்டினார்கள். அன்றிரவே பேருந்து சேவைகளை நிறுத்திவிட்டார்கள்.  எப்படியோ எர்ணாகுளத்தின் இடப்பள்ளியில் சென்று இறங்கினால் அங்கும் மழைநீர் முழங்கால் வரை ஓடியது. அன்றிரவே  இடப்பள்ளியிலும், கொச்சி கோட்டை பகுதிகளிலும் வீடுகளுக்குள் நீர் புகுந்தன.

இதே நாளில் வெள்ள நிவாரணம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கும் keralarescue.inஇணையதளம் முழுவீச்சில் செயல்படத்  தொடங்கியது. அதை உருவாக்கியது எங்கள் நிறுவனத்தில் இன்டெர்னாக இருக்கும் மாணவர் பிஸ்வாஸ். அதுவே IEEE ஆய்வு  நிறுவனத்தின் கேரள பிரிவும், கேரள அரசும் இணைந்து கொள்ள ஒரு மிகச் சிறந்த முயற்சியாக மாறியது.  இதே நாள் தொடங்கி  முகாம்களின் எண்ணிக்கை அதிகமாகி பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல மடங்கானது. விமான சேவை, ரயில்கள், மற்றும்  பேருந்துகள் என அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டன.

இந்த நேரத்தில் பல நூறு இளைஞர்களின் பங்களிப்பு அளவிடற்கரியது. ஆண், பெண் பேதமின்றி பாதுகாப்பான இடத்திலிருக்கும் வீடுகளை  விட்டுவிட்டு முகாம்களிலும், மீட்புப் பணிகளிலும் பகலிரவு பாராது கண் விழித்து வேலைகளை கவனித்தார்கள். பல இடங்களில்  பொருட்களைக் குவித்து பிரித்து அடுக்குவதும், தேவையான இடங்களுக்கு சரிபார்த்து அனுப்புவதுமாக செயல்பட்ட ஆர்வலர்களும் மிகுதி. மீட்புப் பணிகளில் உதவுவதற்காக வெளி மாநிலங்களிலிருந்தும் தகவல் சேகரிப்பு, அரசுக்கு உதவி என்று கேரள மாநிலத்தவர்  செயல்பட்டதுடன் அங்கிருக்கிற ஆர்வலர்களையும் சேர்த்துக் கொண்டார்கள். நிறுவனப் பணியில் இருப்பவர்கள் முயற்சியால் கூகுள்  மேப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கேரளத்திற்கு உதவும் வகையிலான சேவைகளைத் தொடங்கியது.

ஆலுவாவைப் பொறுத்தவரை முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்த நகரத்துக்கு மெட்ரோ ரயில் ஒரு மிகச்சிறந்த உதவி. சற்றே மழை  குறைந்ததும் இலவச சேவையை அறிவித்து பாதுகாப்பான வேகத்தில் ரயில்களை நிர்வாகம் ஓட்டத் தொடங்கியது. ஆலுவாவின்  மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் பாதுகாப்பாக இருப்பதால் திறந்திருந்தன. பதினெட்டாம் தேதிவரை அங்கே கையிருப்பு இருக்கிற  பழங்களும் காய்கறிகளும் பல இடங்களுக்குமாக முடிந்தவரை வாங்கி அனுப்பப்பட்டன.எங்கும் நீர் தேங்குவதில்லை. இன்று வரை மழை  பெய்யப் பெய்ய நீர் வடிந்து சென்றபடி இருக்கிறது. நீர் வழிகளில் எவ்வித ஆக்கிரமிப்புகளும் இல்லை. ஆனால், மழைதான் விட்டபாடில்லை. பதினெட்டாம் தேதி சற்றே குறைந்த மழை, பத்தொன்பதாம் தேதி இன்னும் சற்று குறைந்து வெயில் எட்டிப் பார்த்தது. இன்னும் இரண்டு தினங்கள் மழை சாத்தியம் என்று வானிலை அறிக்கை சொல்கிறது. இன்னும் இருந்தாலுமே வடிகிற அளவுக்கு  குறைவான மழை பெய்தால் சீக்கிரமே வீடுகள் மீண்டுவிடும். இப்போதே சில இடங்களில் நீர் புகுந்த வீடுகளை அணுக முடிகிறது.  ஆனாலும் அரசாங்கம் இப்போது யாரும் திரும்ப வேண்டாம் என்று சொல்கிறது.

ஏனெனில் இப்போது நோய்த்தொற்றுகளை எதிர்கொள்ளும் செயல்பாட்டில் அரசும், தன்னார்வலர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.  அதிகாரபூர்வமாக டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போன்றவை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வயிற்றுப்போக்கு மற்றும் இன்ன பிறவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நீர் வழி, காற்று வழி  என பரவிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் பிற அனைவருக்குமான மருத்துவ உதவிக்கு தேவை இருக்கிறது. முடிந்தவரை தீவிரமான  நிலையில் இருப்பவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்குமாக மருத்துவமனைகளில் உள்ள இடங்கள் தரப்பட்டிருக்கின்றன. அல்லாதவர்களை  அதிகாரபூர்வ முகாம்களிலேயே தனியே வைத்திருந்து கவனித்துக் கொள்கிறார்கள்.

இன்னும் குடிநீருக்கான, உணவுக்கான தேவை இருக்கிறது. அடுத்தடுத்த கட்டங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரைக்கும்  வெவ்வேறு வகையான தேவைகள் இருக்கும். அவற்றை அறிந்து நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.அரசு மீட்புப் பணிகளில் சிக்கியிருக்கிறது. நீர் வடிவதற்கான சாத்தியங்கள் உள்ள மாவட்டங்களில் நிலைமை இன்னும் சில வாரங்களில்  சீராகிவிடும் என்றாலும் பெரும்பாலான இடங்களில் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் முற்றிலுமாக இழந்திருக்கிறார்கள். இயல்பு  வாழ்க்கை என்பது வயநாடு போன்ற இடங்களில் திரும்ப மாதங்களுக்கு மேலாகலாம். இந்த இழப்பிலிருந்து மீளவே முடியாத நிலையில்  ஏழ்மை பெரும்பாலான மக்களை பாதிக்கப்போகிறது.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகளில் பணிபுரிகிற மலையாளிகளின் முயற்சிகளால் அந்நாடுகள் கேரளத்துக்கு உதவும்  முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. அதே நேரம் எவ்வளவு பணம் உண்மையிலேயே தேவைப்படுபவர்களை சென்று சேரும் என்கிற பயமும்  இருக்கிறது. ஏனெனில், பணம், பொருள் கொடுப்பதைத் தவிர வேறு எதையுமே, செய்ய முடியாத தூரத்தில் இருக்கின்றன மற்ற  மாநிலங்களும் வேறு நாடுகளும். அருகிலிருக்கிற நம்மால் செய்யக்கூடிய உதவிகள் சிறிய அளவில் என்றாலும் மிகவும் பயனுள்ளதாக  அமையக்கூடும். அவற்றில் சரியான இடங்களுக்கு தேவைப்படும் பொருட்களைக் கொண்டு சேர்ப்பது உட்பட பல அடங்கும். அண்டை  மாநிலம் மட்டுமேயல்ல கேரளம். தமிழ் கலாசாரத்தின் ஒரு வெளிப்பாடு என்கிற வகையில் அவர்கள் நம் உறவுகள். இந்திய அரசையும்  வேறு எவரையும் விட தமிழகமே முன்னால் நிற்க வேண்டும். நிற்கும் என்றே கேரளம் எதிர்பார்க்கிறது.