கோலமாவு கோகிலா
போதைமருந்து கடத்தும் கும்பலில் சிக்கி, பின் மீளப் பார்க்கும் பெண்ணின் கதை.ஏடிஎம் காவலாளி அப்பா, புற்று நோயால் அவதியுறும்  அம்மா, கல்லூரியில் படிக்கும் தங்கையுடன் இருக்கிற எளிய வாழ்க்கை நயன்தாராவுடையது. அம்மாவின் மருத்துவ செலவுகளுக்காக  நிறையப் பணம் தேவைப்படுகிறது. போதைப் பொருளைக் கைமாற்றும் வேலையில் ஒரு தடவை நிர்ப்பந்தமாக செயல்படப் போக,  மேற்கொண்டும் அதிலேயே சம்பாதிக்க நினைக்கிறார். துரத்தும் போலீஸ், தப்பிக்கும் யதார்த்த கணங்கள், வீட்டுக்கு எதிரில் கடை போட்டு  நயன்தாராவைக் காதலிக்கும் யோகி பாபு.

இப்படிப்பட்ட சூழலில் போதைக் கும்பலிலிருந்து விடுபட நயன்தாரா விரும்புகிறார். அவர் நினைத்தது நடந்ததா என்பதே மீதிக்கதை.நீண்ட பாவாடை சட்டை. முதுகில் மாட்டிய ஷோல்டர் பேக்... என படம் முழுக்க வருகிறார் நயன்தாரா. முகத்தில் அப்பாவித்தனம்  அருமையாகக் கைகூடுகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்துக்கு உழைப்பது சரி. அதற்காக சிரிக்கக்கூட மறுப்பதா? மொத்தப்படமும்  கொண்டு வைக்கும் சுமைக்கு நாம் நயன்தாராவிடம் இன்னும் எதிர்பார்த்தோம். அம்மாவின் நோயறிந்து, இரவில் அவரிடம் ஆறுதல் கூறும்  இடம் அருமை. படம் முழுக்க பயத்தைக் காட்டி, எதிர்காலத்தைக்கண்டு மிரண்டு என தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்.கடையில்  இருந்துகொண்டு யோகி பாபுவும், அந்த சின்னப் பையனும் பேசிக் கொள்வது கவுண்டமணி, செந்திலின் மறு உருவகம். யோகி பாபு ஒரு  கதாநாயகனுக்குரிய நீளத்தில் அவ்வளவாக நம்மைச் சோதிக்கவில்லை என்பது உண்மை.

அம்மாவாக நடிப்பது சரண்யா பொன்வண்ணனுக்கு கைவந்த காரியம். இதிலும் அவ்விதமே. அந்த சின்னத் தங்கச்சி ஜாக்குலின் குறும்பும்,  தொடர் பேச்சுமாக கலகலக்க வைக்கிறார். அன்புவின் ரொமான்ஸ் ஊடாடும் காதல் கொஞ்சம் புதுசு. யோகியும், அன்புவும் சேரும் இடங்களில் காமெடி மேளா. மொட்டை ராஜேந்திரன் இதில் மாறுபட்டு பெருமூச்சு விட வைக்கிறார்.ஆரம்பத்தில் போதைக் கடத்தலுக்கு தயங்கும்  நயன் பின்பு அதிலேயே லயிப்பது, பிறகு குடும்பமே அதில் சந்தோஷமாக ஈடுபடுவது, தவறு செய்யாத இன்னொரு கடத்தல்காரனைச்  சுட்டுவிடச் சொல்லி கட்டாயப்படுத்துவது... என்பதெல்லாம் அவரது கேரக்டரை கேள்விக் குள்ளாக்குகிறது. லாஜிக் பல சமயங்களில்  இடிக்கிறது.

‘கல்யாண வயசு...’ பாடல் ஹிட் மிக்ஸ். பக்கா அனிருத் ஸ்டைல். படமாக்கிய விதமும் ஆரவாரம். சிவகுமார் விஜயனின் கேமரா படத்தின்  ஓட்டத்திற்கு வேண்டிய மட்டும் உழைக்கிறது. அறிமுக இயக்குநர் நெல்சன் விறுவிறு கதையோட்டத்துக்கு உழைத்தாலும், கடைசிவரையில்  நயன்தாராவின் செயலை நியாயப்படுத்துவது இடிக்கிறது.‘வி ஆர் மில்லர்ஸ்’ ஆங்கிலப் படத்தை நகலெடுத்தவர்கள் கொஞ்சம்  திரைக்கதைக்கு மெனக்கெட்டிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

-குங்குமம் விமர்சனக்குழு