சேப்பாக்கம் மாளிகை!சேப்பாக்கம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கிரிக்கெட் மைதானமும், சென்னைப் பல்கலைக்கழகமும்தான். ஆனால், இன்றைய சென்னைவாசிகளுக்குக்கூடத் தெரியாத வரலாற்றைச் சொல்லும் ஓர் இடமும் அங்கே இருக்கிறது. அதன் பெயர் சேப்பாக்கம் மாளிகை! ஒருகாலத்தில் ஆற்காடு நவாப்கள் ஆரவாரமாக உலா வந்த மாளிகை. கலச மஹால், ஹுமாயூன் மஹால் என்ற இரண்டு மஹால்களால் பின்னப்பட்ட அழகிய அரண்மனை.  சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் அதிகளவு உருது முஸ்லிம்கள் குடியேற நவாப் வாலாஜா இங்கே வந்ததே காரணம்.

இதனாலேயே அந்தச் சாலைக்கு வாலாஜா ரோடு எனப் பெயர் வந்தது.சரி; எப்போது கட்டப்பட்டது இந்த மாளிகை? அதற்குமுன் நவாப் பற்றி அறிய வேண்டியது அவசியம். ஆங்கிலேயர்கள் வணிகத்துக்காக இந்தியாவுக்குள் வந்தபோது வடக்கில் முகலாய மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில் இருந்தார். இவர்தான் 1612ம் வருடம் சூரத்தில் ஆங்கிலேயர்களுக்கு வணிகம் செய்யும் உரிமையை வழங்கியவர். அப்போது தக்காணப் பகுதிகள் பெரும்பாலும் பீஜப்பூர், கோல்கொண்டா என இரண்டு சுல்தான்கள் கையிலும் விஜயநகரத்திடமும் இருந்தன.

ஆங்கிலேயர்கள் 1639ம் வருடம் மெட்ராஸ் வந்தபோது இங்கே விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பூந்தமல்லி நாயக்கர் இடம் அளித்தார். இதன்பிறகு நடந்த வரலாற்றுப் பக்கங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர்.‘‘1640களில் சுல்தான்கள் இருவரும் சேர்ந்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தனர். இதையடுத்து முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது எல்லைகளை மேலும் விரிவுபடுத்த எண்ணி சுல்தான்களை வீழ்த்தித் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால், தக்காணம் முழுவதும் முகலாய மன்னரான அவுரங்கசீப் வசமானது.

அப்போது சிவாஜி தலைமையில் மராட்டியர்களும் எழுச்சி கண்டு வந்தனர். பின்னர் 1680ல் சிவாஜியின் மறைவுக்குப் பின் செஞ்சி பக்கமாக ஒதுங்கிய மராட்டியப் படைகளை முற்றுகையிட தன் தளபதிகளை அனுப்பி வைத்தார் அவுரங்கசீப். இவர்களே காலப்போக்கில் நவாப்களாக மாறினர். அதாவது ‘நைப்’ என்பது நவாப் ஆனது. நைப் என்றால் அரபு மொழியில் ‘துணை’ என்று அர்த்தம்.

1690ம் வருடம் நவாப் ஆஃப் கர்நாடிக் உருவாக்கப்பட்டது. கர்நாடிக் என்பது தென்னிந்தியாவின் மிகப் பெரிய நிலப்பரப்பு. கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கோரமண்டல் கடற்கரை எனத் தொடங்கி கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. முதல் கர்நாடிக் நவாப்பாக ஸுல்பிகர் அலி கான் நியமிக்கப்பட்டார்.செஞ்சியில் முகலாயப் படைகளின் முற்றுகை ஆறாண்டுகள் வரை நீடித்தது. அந்தப் படைகள் அங்கே தங்கியதால் ஆற்காடு நகரமாகி, பின்னர் நவாப்களின் தலைநகரமானது...’’ என்றார் சுவாரஸ்யமாக!  

பின்னர், 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மன்னர் அவுரங்கசீப் இறந்துவிட, முகலாயப் பேரரசின் வீழ்ச்சி ஆரம்பமானது. ஆட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் அரங்கேற, முகலாயப் பிரதிநிதிகள் நவாப்களாகத் தனித்து சுயமாகச் செயல்படத் தொடங்கினர். 1749ல் ஆட்சிக்கு வந்த முகமது அலி வாலாஜா காலத்திலேயே அது கைகூடியது. வாலாஜா என்பது ஒரு பட்டம்.

போரில் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டு பாண்டிச்சேரியைக் கைப்பற்றியதால் முகலாய அரசர், நவாப் முகமது அலிக்கு இந்தப் பட்டத்தை வழங்கினார். நீண்ட காலம் நவாப்பாக இருந்த வாலாஜா, தனக்கு முந்தைய நவாப்களைப் போல கர்நாடிக் பகுதிகளில் பல்வேறு நற்பணிகளைச் செய்தார். குறிப்பாக, மத வேறுபாடின்றி இந்துக் கோயில்களுக்கும், கிறிஸ்துவ சர்ச்சுகளுக்கும் நிலங்களைத் தானமாகக் கொடுத்தார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தை பெரிதாக விரிவுபடுத்தியதும் இவரே! சரி; ஏன் மெட்ராஸ் வந்தனர்? வாலாஜாவே இந்த இடப்பெயர்வைச் செய்தவர். ஆற்காட்டைச் சுற்றி ஒரு பக்கம் மராட்டியர்களும், இன்னொரு பக்கம் மைசூர் ஹைதர் அலியும் கிலி ஏற்படுத்தி வந்தனர். இதனால், ஆங்கிலேயர்களுடன் நெருக்கம் காட்டிய வாலாஜா பாதுகாப்புக்காக ஆற்காட்டிலிருந்து மெட்ராஸ் வந்து செட்டிலானார்.

ஆனால், சேப்பாக்கம் மாளிகையைக் கட்டியதில் இரண்டு விதமான கருத்துகளை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். ஒன்று, மெட்ராஸில் புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளே வாலாஜா இடம் கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த ஆங்கிலேயர்கள் கோட்டைக்கு அருகே தங்கள் பாதுகாப்பின் கீழ் கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.மற்றொன்று, கோட்டையின் பாதுகாப்பின் கீழ் சேப்பாக்கம் மாளிகையைக் கட்டியிருக்க வாய்ப்பில்லை.

அவ்வாறு செய்திருந்தால் மக்கள் மத்தியில் வாலாஜாவுக்கான செல்வாக்கு குறைந்திருக்கும் என்பது. இதில், வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா தனது ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் முதல் கருத்தை ஆமோதிக்கிறார். ‘‘வாலாஜா சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இடம் கேட்டார். அதற்கு பதில் கோட்டைக்குப் பக்கத்தில் கோட்டையின் பாதுகாப்பிற்குக் கீழ் அரண்மனை கட்டிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இதன் விளைவுதான் கட்டட ஒப்பந்தக்காரராக மாறிய பால் பென்ஃபீல்ட் 1768ல் கட்டிய சேப்பாக்கம் அரண்மனை...’’என்கிறார்.

இதில், ஹுமாயுன் மஹாலின் நடுவில் பெரிய தர்பார் அமைக்கப்பட்டது. கலச மஹால் சிறிய கூம்பு வடிவ இரண்டடுக்குக் கட்டடம். இதுவே நவாப்பின் அதிகாரபூர்வ இல்லம். மாளிகை ஏரியா மட்டும் 117 ஏக்கர். வடக்கில் கூவம் நதிக்கரையில் தொடங்கி தெற்கே பைகிராஃப்ட்ஸ் சாலை வரையும், கிழக்கே கடலும், மேற்கே பெல்ஸ் சாலை வரையும் விரிந்து இருந்தது. இதில் இன்றுள்ள சென்னை பல்கலைக்கழகமும், கிரிக்கெட் ஸ்டேடியமும் அடக்கம்.

தவிர, ‘மரைன் வில்லா’ என்ற கட்டடம் இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகம் இருக்கும் இடத்தில் இருந்தது.‘‘இந்த எண்கோண வடிவக் கட்டடம் கூவம் நதிக்கரை அருகே இருந்ததால் நவாப்கள் குளிக்கும் இடமாக, அதாவது ‘Bathing Pavilion’ ஆக செயல்பட்டுள்ளது...’’ என ‘History of the city of madras’ நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்றுப் பேராசிரியர் சி.எஸ்.னிவாசாச்சாரி. இன்றுள்ள திருவல்லிக்கேணி காவல்நிலையம் அப்போது லங்கர் கானா என்றழைக்கப்பட்டது. பொது உணவுக் கூடம் என்பது இதன் அர்த்தம்.

இதை ஒரு சத்திரமாக நவாப்கள் நடத்தி வந்தனர். இந்தச் சத்திரத்தில் சமையல் கலைஞராக இருந்தவர்கள் பிராமணர்கள். காரணம், அன்று நிலவிய தீண்டாமையால் பிராமணர்கள் சமைக்கும் உணவு மட்டுமே அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது. பிறகு 1794ல் இன்று திருவல்லிக்கேணி மெயின் ரோட்டில் இருக்கும் பெரிய மசூதியைக் கட்டினார் வாலாஜா. அடுத்தாண்டு அவர் மறைந்ததும் அந்த இடத்துக்கு அவரது மகன் குலாம் ஹுசைனி உம்தத்-உல்-உம்ரா வந்தார்.

இவர், திப்புசுல்தானுடன் சேர்ந்து சதி செய்தார் என ஆங்கிலேயர்களால் குற்றம் சாட்டப்பட்டார்.‘‘1801ல் இவர் இறந்தவுடன் இரண்டாம் லார்டு கிளைவ் துருப்புகளை அனுப்பி அரண்மனையை ஆக்கிரமித்தார். பின்னர் நெல்லூரிலிருந்து திருநெல்வேலி வரை இருந்த நவாப்பின் நேரடி ஆட்சி நீக்கப்பட்டது. பெயரளவில் நவாப் பட்டம் இருந்ததே ஒழிய, குலாம் கவுஸ் பகதூர் என்ற கடைசி பட்டத்துக்காரர் 1855ல் இறந்தவுடன் அதுவும் நீக்கப்பட்டு, அரண்மனையை நிரந்தரமாக எடுத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டது...

’’ என்கிறார் எஸ்.முத்தையா இந்தக் கடைசி நவாப் குலாம் முகமது கவுஸ் கானுக்கு நேரடி வாரிசு இல்லாததால் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹௌசி பிரபு கொண்டு வந்த Doctrine of Lapse சட்டத்தின்படி பிரிட்டிஷ் அரசு நவாப் பதவியை ஒழித்து அவரது ராணுவத்தையும் கலைத்துவிட்டது. பிறகு, அவர்கள் சார்ந்த கட்டடங்கள் அனைத்தையும் ஏலத்திற்கு விட்டு, அதை அரசே வாங்கிக் கொண்டது. இந்நிலையில் கடைசி நவாப்பின் சித்தப்பாவான ஆசிம் ஜா, விக்டோரியா மகாராணியிடம் முறையிட, ‘ஆற்காடு இளவரசர்’ என்ற புதிய பட்டத்துடன் நவாப் வாரிசுகள் உருவாகினர். அவர்களுக்கு மானியமும் வழங்கப்பட்டது.

வாலாஜா மாளிகையை அரசே வைத்துக் கொண்டதால் நவாப் குடும்பம் திருவல்லிக்கேணியில் இருந்த ஷாதி மஹாலில் வசித்தது. இதன்பிறகே, 1876ல் பிரிட்டிஷ் வழங்கிய அமீர் மஹாலுக்கு மாறியது. பதினான்கு ஏக்கர் பரப்பு கொண்ட அமீர் மஹால் 1798ல் கட்டப்பட்ட ஒன்று. அன்று இதில் தலைமை நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. இன்று இதில் நவாப்களின் வாரிசுகளாகத் திகழும் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியும், அவரது குடும்பமும் வசித்து வருகின்றனர்.     

வாலாஜா சமாதி

* முகமது அலி வாலாஜாவுக்கு, தான் இறந்ததும் தன்னை முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான மெக்காவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆசை. ஒருவேளை அது முடியாவிட்டால் திருச்சியிலுள்ள நத்தர்வாலி தர்காவில் புதைக்க வேண்டும் என விரும்பினார்.

* இதனால், அவர் இறந்ததும் மெக்காவில் இடம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதுவரை அவரது உடல் நடேசன் சாலையிலுள்ள ஹசரத் தஸ்தாகீர் சாகிப் தர்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

*இரண்டாண்டுகள் கழித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட, வாலாஜாவின் அடுத்த விருப்பப்படி நத்தர்வாலி தர்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
 என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர்.

சேப்பாக்கம் மாளிகை என்ன ஆனது?

* பிரிட்டிஷ் அரசு இந்த மாளிகையை எடுத்துக்கொண்டபிறகு, அதை வருவாய் வாரிய அலுவலகமாகவும், பொதுப் பணித்துறையின் தலைமையகமாகவும் மாற்றியது. 1859ல் கலச மஹால் சிவில் எஞ்சினியரிங் கல்லூரிக்காக வழங்கப்பட்டது.

*கலச மற்றும் ஹுமாயூன் மஹால்களுக்கு இடையே கட்டடக்கலை நிபுணர் ராபர்ட் சிஸ்ஹோல்ம் சதுர கோபுரம் ஒன்றை அமைத்தார். அத்துடன் பல்வேறு கட்டடங்களும் கட்டினார். அதிலொன்றுதான் ஹுமாயூன் மஹாலின் கிழக்குப் பக்கமாக உள்ள இரண்டடுக்கு கட்டடம்.

*இன்று கலச மஹாலில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் செயல்படுகிறது. ஹுமாயூன் மஹால் பராமரிப்பின்றி மோசமான நிலையிலுள்ளது. இதைத் தக்கவைக்க பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்.

- பேராச்சி கண்ணன்
படம்: ஆ.வின்சென்ட் பால, ராஜா