அனுராக் காஷ்யப்புக்கு டப்பிங் பேசிய இயக்குநர்!
‘இமைக்கா நொடிகள்’ பார்த்தவர்கள் நயன்தாராவுக்கு அடுத்து பாராட்டுவது பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் நடிப்பை. வியப்பது அவரது தமிழ் உச்சரிப்பை! இத்தனைக்கும் படத்தில் அவர் கொடூரமான வில்லன். ஆனாலும் ரசிகர்களை தன் பக்கம் காந்தமாக அனுராக் காஷ்யப் இழுத்ததற்கு வாய்ஸ் மாடுலேஷனும் ஒரு காரணம்.‘இந்த’ தமிழ்க் குரலுக்கு சொந்தக்காரர் இயக்குநர் மகிழ்திருமேனி.
‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ படங்கள் வழியே கவனிக்க வைத்தவர். இப்போது அருண் விஜய்யை வைத்து ‘தடம்’ படத்தை எழுதி இயக்கி முடித்திருக்கிறார்.‘‘‘என் முகத்துக்கு ஏற்ற குரலா தமிழ் மக்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியிருக்கீங்க’னு அனுராக் பாராட்டினப்ப வானத்துல மிதக்கிற மாதிரி இருந்தது! அவரை சந்திச்சதில்ல. என்னைப் பாராட்டி டுவிட் போட்டதும் அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். ‘எப்ப தமிழகம் வந்தாலும் உங்களை சந்திக்கறேன்... நீங்களும் மும்பை வர்றப்ப எங்க வீட்டுக்கு வாங்க’னு சொன்னார்!’’ நெகிழும் மகிழ்திருமேனி, டப்பிங் பேசியது சுவாரஸ்யமான கதை.‘‘என் குரல் நிறையப் பேருக்கு பிடிக்கும். நிறைய தயாரிப்பாளர்களும், நண்பர்களும் அவங்க படங்களுக்கு டப்பிங் பேச கூப்பிட்டிருக்காங்க. அப்பல்லாம் டைரக்ஷன்ல மட்டும் கவனம் செலுத்துவோம்னு இருந்துட்டேன்.
‘இமைக்கா நொடிகள்’ அஜய்ஞானமுத்து தன் உதவியாளர்கள் மூலம், அனுராக்குக்கு பேச முடியுமானு கேட்டார். எஸ்கேப் ஆக நினைச்சேன். ஆனா, அவரது ‘டிமான்டி காலனி’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அதனாலயே மறுக்க முடியாம முயற்சி செஞ்சு பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன். முதன்முதல்ல டீசருக்குதான் பேசினேன். அங்கிருந்த எல்லாரும் பாராட்டினாங்க. அதுக்கு அப்புறம்தான் முழுப் படத்துக்கும் பேசினேன்.
இப்ப என் குரல், மாடுலேஷன் எல்லாமே ரசிகர்களுக்குப் பிடிச்சிருக்குனா அதுக்கு அஜய்ஞானமுத்துதான் காரணம். எப்படி பேசணும், குரல் ஏற்ற இறக்கங்கள் எல்லாம் எப்படி இருக்கணும்னு இன்ச் பை இன்ச்சா கத்துக்கொடுத்து பண்ண வச்சார். இயக்குநர் அஜய்யின் முகமும், பப்ளி உடலும் ஒரு குழந்தைத்தனமான லுக்ல இருக்கும். அவரைப் பார்த்து நமக்கே சிரிப்பு வரும்.
ஆனா, அவர் டயலாக் சொல்லிக் கொடுக்கிறப்ப வில்லத்தனமான வசனங்களை அப்படி உள்வாங்கி பேசிக் காட்டுவார். அந்த முரணை ரசிச்சேன். அவருக்குள்ள ஒரு நல்ல நடிகன் ஒளிஞ்சிருக்கார். ஒரு விஷயம்-அவ்வளவு சுலபத்துல அவர் திருப்தியடைய மாட்டார். சரியா வர்றவரை விடமாட்டார். அவருக்கு நல்ல டீம் அமைஞ்சிருக்கு. அவரது இணை இயக்குநர் பாலு, அசிஸ்டென்ட்ஸ் இன்னாசி, பிரகாஷ், சவுண்ட் என்ஜினீயர்னு எல்லாருக்குமே ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கறேன்...’’ புன்னகைக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.
-மை.பாரதிராஜா
|