திரிசங்கு சொர்க்கம்!



தலைப்புக்கு அர்த்தம் புரிகிறதா?

திரிசங்குவின் கதை தெரியவில்லை என்றால் ‘மதில் மேல் பூனை’ என்றும் மாற்றி வாசித்துக் கொள்ளலாம். இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் ரெண்டுங்கெட்டான்களாக வாழும் நடுத்தர வர்க்கத்தைக் குறிக்கவே இந்தத் தலைப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில் எரிபொருள் விலையேற்றம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. பணக்காரர்களுக்கு காசு இருக்கிறது; சமாளித்துக் கொள்வார்கள். ஏழைகளுக்கு இழக்க இதற்குமேலும் ஏதுமில்லை; கவலைப்பட மாட்டார்கள்.

அதுவுமின்றி நம் ஆட்சியாளர்கள்தான் ஏழ்மையை முற்றிலும் ஒழித்துவிட்டார்களே; நம் நாட்டில் இல்லாத ஏழைகளைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?! உண்மையில் இப்போது கீழ் / நடு / மேல் நடுத்தர வர்க்கத்தினரின் நிலைதான் திரிசங்கு நிலை. அதாவது பூமியிலிருந்து சொர்க்கத்துக்கு தன்னுடைய உடலுடனேயே போக முயற்சித்தானாம் திரிசங்கு என்கிற மன்னன். சொர்க்கத்துக்கான யாத்திரையில் பாதிவழியிலேயே அவனுக்கு விசா கொடுக்காமல் நிறுத்தி விட்டாராம் சொர்க்கத்தின் அதிபர் இந்திரன்.

பூமியை விட்டு வெளியேறி விட்டதால் மீண்டும் பூமிக்கும் திரும்ப முடியவில்லையாம் திரிசங்குவால். அந்தரத்திலேயே இருந்த அவனுக்கு தன் தவ வலிமையால் தனி சொர்க்கத்தை விஸ்வாமித்திரர் உருவாக்கிக் கொடுத்தாராம். இதைத்தான் திரிசங்கு சொர்க்கம் என்கிறது புராணக் கதை. இந்த திரிசங்கு போல் இங்கு மில்லாமல் அங்குமில்லாமல் நடுவில் அல்லாடுகிறது இந்திய நடுத்தர வர்க்கம். ஆனால், இந்த மக்களுக்கு ஒரு சொர்க்கத்தை உருவாக்கித் தர விஸ்வாமித்திரர் இல்லை என்பதுதான் பெரும் சோகம்.

அவ்வப்போது ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் எரிபொருள் விலையேற்றத்துக்கு ஷோல்டரை ஏற்றிக்கொண்டு இவ்வளவு டென்ஷன் ஆகவேண்டுமா என்று யோசிக்கிறீர்களா? அதாகப்பட்டது எரிபொருள் விலையேற்றத்தால் ஒட்டுமொத்தமாகவே இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்கிறது என்றாலும், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பமும் கடுமையாக நசுங்கி வருகிறது.

உதாரணத்துக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் தோராயமாக ஒரு லிட்டருக்கு ரூ.15/- விலையேற்றம் கண்டிருக்கிறது. ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம், தினசரி அலுவல் மற்றும் வார இறுதி பொழுதுபோக்கு ட்ரிப் என்கிற வகையில் சராசரியாக மாதத்துக்கு 2000 கி.மீ. தூரத்துக்கு கார் ஓட்டுகிறது. நகரச் சாலைகளில் தோராயமாக 12 கி.மீ. தூரத்துக்கு ஒரு லிட்டர் எரிபொருள் செலவாகிறது என்று எடுத்துக் கொண்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் எரிபொருள் பட்ஜெட்டுக்கு மட்டுமே ரூ.54,000/- கூடுதலாக செலவாகி இருக்கிறது.

மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் இது 5%க்கும் சற்றே அதிகம் எனும்போது ஆபத்து புரிகிறதா? இது நேரடியாக ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடி. ஒரு சமுதாயமாக ஒட்டுமொத்தமாகவே விலையேற்ற நெருக்கடியை எதிர்கொள்கிறோம். பெட்ரோல் / டீசல் விலையேற்றத்தால் சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள் இயல்பாகவே உயர்கின்றன. இதனால் நம் அடிப்படைத் தேவையான உணவுப் பொருட்கள் விலையும் கணிசமாக உயரும்.

நேரடியாக எரிபொருளுக்கு மட்டுமே மாதம் 5% கூடுதலாக நம் பட்ஜெட்டிலிருந்து செலவழிக்க வேண்டியிருக்கிறது என்றால், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் வாங்கவுமே மறைமுகமாக 5%க்கும் கூடுதலான விலையைத்தான் தனித்தனியாக நாம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த சந்தர்ப்பத்தை தரகர்கள் வேறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கூடுதல் லாபவெறியில் விலையை இஷ்டத்துக்கும் ஏற்றுவார்கள். விளைவு? ஒட்டுமொத்த விலைவாசி உயர்வில் நாம்தான் முழிபிதுங்கிக் கொண்டிருக்கிறோம்.

உயர்ந்துகொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான கொள்கைகளையும் தாக்குதலுக்கு உள்ளாக்கும். விலைவாசி உச்சத்துக்குப் போகும் நிலையில் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய நெருக்கடி ரிசர்வ் வங்கிக்கு ஏற்படுகிறது. இதனால் நிறுவனங்கள் பெறக்கூடிய நிதிவசதிகளில் சிக்கல் ஏற்படும். இதைச் சமாளிக்க நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு தங்கள் இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ள முற்படும். பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, இதர சலுகைகளை வழங்க நிறுவனங்கள் யோசிக்கும்.

‘ஊர்லே கல்யாணம், மாருலே சந்தனம்’ கணக்காக இந்த சுமையும் நடுத்தர வர்க்கம் தலையில்தான் விடியும். நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேறு யாராம்? இவை எல்லாவற்றையும்விட பெரிய இடி ஒன்று இருக்கிறது. விலை உயர்வு காரணமாக இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கும். அதனால் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும். இந்திய ரூபாயின் மதிப்பு, உலகச்சந்தையில் குறையும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் இப்போது வீழ்ந்திருப்பது இதனால்தான். ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால் நமக்கென்ன போச்சு என்று இருந்துவிடாதீர்கள். இறக்கு மதியை நம்பியிருக்கும் உற்பத்தி குறையும் பட்சத்தில், அது தொடர்பான பொருட்களின் விலையேற்றம் கணிசமாக உயரும். மூலப்பொருட்களை இறக்குமதி செய்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இறக்குமதிக்காக டாலரில் பணம் செலுத்த வேண்டும். இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போது, டாலரில் பணம் செலுத்தும் நிறுவனங்கள் தயாரிப்புப் பொருளின் விலையில்தான் அதை அட்ஜஸ்ட் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள்.

தயாரிப்புப் பொருட்களை வாங்குவது வேறு யார்; நடுத்தர வர்க்க இளிச்சவாயர்கள்தானே? ரொம்பக் குழம்பாதீர்கள். கோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா கதைதான். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தலைக்கு மேல் போயாச்சு. இனி சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? கருப்புப் பணத்தைப் பிடிக்கிறோம் என்று நம்மை தெருத்தெருவாக ஏடிஎம் வாசல்களில் பிச்சைக்காரர்கள் மாதிரி வரிசையில் நிற்கவைத்த ஆட்சி யாளர்களைத்தான் நொந்து கொள்ள வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் கழித்து ‘டீ கேன்ஸல்’ கதையாக, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஒட்டுமொத்த பணத்தில் 99%+ பணம் கணக்கில் வந்துவிட்டது என்கிறார்கள். அப்போது அந்த 1%க்கும் குறைவான கருப்புப் பணத்தைப் பிடிக்கத்தான் திடீரென்று 500, 1000 செல்லாது என்று அறிவித்தார்களா? எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டுமோ, அதையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் பிடுங்கியிருப்பதெல்லாம் தேவையில்லாத ஆணிதான். இப்போது ஒட்டுமொத்த சுமையும் மக்களின் தலைமீது.

இதற்கெல்லாம் தீர்வு? ஆனானப்பட்ட பொருளாதார நிபுணர்களே தலையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறார்கள். இதுபோன்ற சிக்கலான சூழல்களில் எப்போதுமே ஏதோ ஒரு கோஷத்தை முன்வைத்து திசை திருப்புவார்கள். இன்றைய சூழலுக்கான அம்மாதிரி கோஷம், ‘எரிபொருள் சிக்கனம், தேவை இக்கணம்!’  
                     

- யுவகிருஷ்ணா