ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர்-17

கரிகாலனின் பார்வை பதிந்த திக்கை சிவகாமியும் கவனித்தாள். பெரியவரின் இடுப்பில் வாள் இருந்தது. அந்த வாள் சற்று முன்னர் சுரங்கத்தில் அவர்கள் பார்த்த நாக விஷம் தோய்ந்த வாட்களில் ஒன்று என்பதை ஊகிக்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அந்த வாட்களில் இரண்டை தன் கைகளில் ஏந்தி சாளுக்கிய வீரர்களை நிர்மூலமாக்கியது அவள்தானே..? அதன் அமைப்பும் பிடிப்பும் அவள் அறியாததா என்ன..?

அந்தப் பெரியவர் யாராக இருக்கும் என்ற வினா நாடி நரம்பெல்லாம் பரவியது. சுரங்கத்துக்கு எதிர்த் திசையில் புரவியில் வந்த பெரியவருக்கு எப்படி அந்த வாள் கிடைத்தது..? எனில் அங்கிருந்த ஹிரண்ய வர்மரும், சிறை வைக்கப்பட்ட சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் என்ன ஆனார்கள்..? ஆயுதங்களை புலவர் தண்டி அனுப்பிய ஆட்கள் எடுத்துக் கொண்டார்களா அல்லது சாளுக்கியர்களின் வசமே அவை போய்ச் சேர்ந்ததா..? இந்தப் பெரியவர் பல்லவர்களின் நண்பரா அல்லது எதிரியா..?

அனைத்துக்குமான விடைகள் அப்பெரியவரிடம்தான் இருக்கின்றன. அவரை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்க அதிக கணங்கள் தேவைப்படாது. கரிகாலன் அதை கவனித்துக் கொள்வான்.ஆனால், அதற்கு முன் புரவியை குணப்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி உஷ்ணம் அதன் உடலெங்கும் ஊடுருவியிருக்கிறது. காலதாமதம் நிச்சயம் அதன் உயிரை மாய்க்கும். சொந்த உணர்ச்சி களுக்கு எந்தவொரு அசுவ சாஸ்திரியும் இடம்கொடுக்கக் கூடாது. முழு கவனமும் புரவிகளிடத்தில்தான் குவிய வேண்டும்.

ஏனெனில் அசுவங்கள் என்பவை தனித்த உயிரினமல்ல; அவை அசுவ சாஸ்திரி களின் உயிர். இதைக் காப்பாற்றுவதுதான் இத்தருணத்தில் அவளது முழுமுதல் வேலை. முடிவுக்கு வந்த சிவகாமி எவ்வித உணர்ச்சியும் இன்றி புரவியின் பக்கம் திரும்பினாள். தன் எஜமானரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாத அப்புரவி, அவளுக்கு வசப்பட்டிருக்கிறது. எனில், தன்னை அது நம்புகிறது என்று அர்த்தம்.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் அலைபாயும் மனதுடன் அதற்கு சிகிச்சை அளிக்கக்கூடாது. புரவிகளின் கெட்டிக்காரத்தனத்துக்கு அளவேயில்லை. யாருக்குக் கட்டுப்பட்டு அது நிற்கிறதோ அவரது எண்ண ஓட்டத்தைத் துல்லியமாக அறியும் சக்தி அவற்றுக்கு உண்டு. வசப்பட்டவர்களின் உள்ள உணர்ச்சிக்கு ஏற்ப தன் இயல்பையும் உணர்வையும் மாற்றிக் கொள்ளும். சத்திரியப் புரவியான இது, இந்தக் கல்யாண குணங்களைக் கொண்டது.

எனவே நம் மனம் அலைபாய்ந்தால் அது இப்புரவியின் உடலிலும் எதிரொலிக்கும்; அதன் உடல்நலத்தையும் பாதிக்கும். பெரியவர் குறித்து எழுந்த வினாக்களை காற்றில் கரைத்து விட்டு அந்த மாநிறப் புரவியின் நெற்றி யில் அன்போடு முத்தமிட்டாள். அதன் செவிகளைத் தடவினாள். கால்களைப் பிடித்துவிட்டாள். குருதியில் பாய்ந்திருக்கும் உஷ்ணத்தின் தன்மையால் அக்குதிரை திமிறியது. பொறுக்க முடியாமல் முன்னங்கால்களை உயர்த்தியது.

அதனையும் அறியாமல், அதன் சித்தத்தையும் மீறி அவளை வீழ்த்த முற்பட்டது. புரிந்துகொண்ட சிவகாமி, உயர்த்திய அதன் குளம்புகளைத் தன்னிரு கரங்களிலும் ஏந்தினாள். தொடு உணர்ச்சியின் வழியே அதற்குச் செய்தி சொன்னாள். முயன்று கட்டுப்பட்டு தன் மூர்க்கத்தை அது தளர்த்திக் கொண்டது. அதன் கண்களில் இருந்து வழிந்த உஷ்ண நீரை தன் உள்ளங்கையால் துடைத்தாள்.‘‘கரிகாலரே..!’’ திரும்பிப் பார்க்காமல் குரல் கொடுத்தாள்.

‘உடனடியாக கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம், அபினி, பசும் பால், நீர் வேண்டும். அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று இவற்றை வாங்கி வாருங்கள். புரவிக்கு உடனடியாக மருந்து தயாரித்துக் கொடுத்தாக வேண்டும்...’’அவளுக்குப் பின்புறமிருந்து எந்த பதிலும் வரவில்லை.‘‘நான் சொன்னது காதில் விழுந்ததா..?’’‘‘அவசியமில்லை...’’பதில் சொன்னது கரிகாலன் அல்ல.
சிவகாமிக்கு அவன் குரல் நன்றாகத் தெரியும். தள்ளி நின்றும் கேட்டிருக்கிறாள். நெருக்கமாக செவியோரம் அவன்கிசுகிசுத்ததையும் அனுபவித்திருக்கிறாள்.

 எனில், பெரியவரே தன்னுடன் உரையாட முற்படுகிறார். ஏன் கரிகாலன் அமைதியாக இருக்கிறான்?விடை தேட முற்பட்ட எண்ணத்தை குழி தோண்டிப் புதைத்தாள். புரவிதான் இப்போது முக்கியம். ‘‘ஏன் பெரியவரே..?’’ திரும்பாமல் பேச்சைத் தொடர்ந்தாள்.‘‘அருகில் எந்தக் கிராமமும் இல்லை...’’‘‘பரவாயில்லை. தொலைவில் இருந்தாலும் அவர் வாங்கி வரட்டும். மருந்து இப்போது அவசியம் தேவை. இல்லை யெனில் புரவி சுருண்டுவிடும்...’’‘‘அப்படி எதுவும் நிகழாது...’’‘‘இல்லை பெரியவரே... புரவியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது...’’‘‘தெரியும் மகளே..!’’ என்றபடி அந்தப் பெரியவர் அவள் அருகில் வந்தார்.

சிவகாமி அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்வையைத் தாழ்த்தியவண்ணம் புரவியின் முகத்தோடு ஒன்றியிருந்த அவள் விழிகளில் அவரது வாளின் நுனி தென்பட்டது. நாக விஷம் தோய்ந்த வாள்! அமைதியாக இருந்தாள். பெரியவரே பேச்சைத் தொடர்ந்தார். ‘‘புரவியை கவனித்ததை வைத்தே நீ ஒரு அசுவ சாஸ்திரி என்பதைப் புரிந்துகொண்டேன்! நிச்சயம் உன் கணிப்பு தவறாக இருக்காது. உன் முகக்குறிகள் புரவியின் அவஸ்தைகளைப் பிரதிபலிக்கின்றன. நிச்சயம் இக்குதிரைக்கு சிகிச்சை அவசியம். ஆனால், நீ கேட்ட மருந்துகளை கரிகாலன்... அதுதானே அவன் பெயர்? அப்படித்தானே அழைத்தாய்... கொண்டு வர பல காத தூரங்கள் பயணப்பட வேண்டும்.

அதுவரை புரவி தாங்காது...’’‘‘சற்று நேரத்துக்கு என்னால் இதை சமாளிக்க வைக்க முடியும் பெரியவரே... மருந்து வந்தாக வேண்டும்...’’‘‘அவை என்னிடம் இருக்கின்றன!’’ சட்டென்று பதில் சொன்ன பெரியவர், தன் இடுப்பு முடிச்சை அவிழ்த்தார். அவள் கேட்ட மருந்துகளை எடுத்துக் காட்டினார். ‘‘புறப்படும்போதே தேவைப்படும் என பத்திரப்படுத்தினேன். என்ன... அழகான அசுவ சாஸ்திரியை சந்திக்க நேரிடும் என்பதைத்தான் ஊகித்தும் பார்க்கவில்லை..!’’

தன் கண்முன் அவர் நீட்டிய வஸ்திர முடிச்சைப் பார்த்தாள். சந்தேகங்கள் அலை அலையாக எழுந்தன. பெரியவர் யார் என்ற வினா விஸ்வரூபம் எடுத்தது. புரவியின் கனைப்பு அவளை நடப்புக்குக் கொண்டு வந்தது. சட்டென தன் முன் நீட்டப்பட்ட வஸ்திரத்தைப் பிடுங்கி அதன் முடிச்சை அவிழ்த்தாள். ஒரு ஜோடி கால்கள் அவள் அருகில் வந்தன. அவை கரிகாலனுக்குச் சொந்தமானவை என்பதை விரல்களின் நீளத்திலிருந்து உணர்ந்தாள். அவன் பார்வையை எதிர்கொள்ள வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கினாள். கூடாது.

புரவியின் கண்களைவிட்டு, தன் பார்வையை விலக்கக் கூடாது. எல்லாவற்றையும்விட இப்போது புரவிக்கு அவசியம் இந்தப் பார்வை அரவணைப்புதான். இமைக்காமல் குதிரையின் கருவிழிகளைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கரிகாலனின் வலக்கரம் உயர்ந்து தன் தோளை அணைத்தபோது இனம் புரியாத பரவசமும் நிம்மதியும் அவள் உடலெங்கும் பரவியது. ‘நானிருக்கிறேன்... எதற்கும் கவலைப்படாதே...’ என்று அவன் அறிவித்த செய்தி, பெரும் பலத்தை அவளுக்குக் கொடுத்தது. அச்செய்தியை பார்வை வழியே புரவிக்கும் கடத்தினாள்.

தன் வலக்கரத்தால் மருந்துகளை கரிகாலன் எடுத்துக்கொண்டான். கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம் ஆகியவற்றை கற்களால் பொடி செய்து அவளிடம் கொடுத்தான். அதை அபினியுடன் கலந்து உருண்டையாக்கி, புரவியின் வாயருகே கொண்டு சென்றாள். மறுகையால் அதன் தலையை அவள் கோதிவிட்டாள். குதிரை தன் வாயைத் திறந்தது. லாவகமாக தன் கையிலிருந்த உருண்டையை உள்ளே செலுத்தினாள்.

புரவிக்குப் புரையேறியது. பெரியவர் நீர்க் குடுவையை நீட்டினார். கொஞ்சமாக நீரைக் குடித்து அது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. இதற்குள் சுள்ளிகளை அடுக்கி சிக்கிமுக்கிக் கற்களால் அதை கரிகாலன் பற்றவைத்திருந்தான். பாலுடன் சுரைக்காய் குடுவையை பெரியவர் கொடுத்தார்! எல்லாவற்றையும் வைத்திருக்கிறார்! அனைத்துக்கும் தயாராக வந்திருக்கிறார்! சந்தேகத்தின் அளவு அதிகரித்தது. சுரைக்காய் தீப்பற்றி எரியாமல் பக்குவமான சூட்டில் பசும் பாலை தண்ணீர் கலந்து கரிகாலன் சுட வைத்தான்.

வஸ்திர முடிச்சில் இருந்த படிகாரத்தை பொடி செய்து பாலில் அதைத் தூவினான். எழுந்த வாடையை புரவி நன்றாக சுவாசிக்கும்படி சிவகாமி செய்தாள். பின்னர் பெரியவரின் வஸ்திர நுனியை நன்றாக விரித்து அதில் தூசிகள் இல்லாதபடி உதறிவிட்டு படிகாரம், நீர் கலந்த பாலில் முக்கி எடுத்துப் பிழிந்தாள். சூடு குறைந்ததும் அந்த வஸ்திரத்தால் புரவியின் கண்களைச் சுற்றிலும் துடைத்தாள். பன்னிரண்டு முறை இதுபோல் செய்த பிறகு அந்த அசுவம் தன் தலையைச் சிலுப்பியது.

அதன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு சிவகாமி நிமிர்ந்தாள். பெரியவரை நேருக்கு நேர் சந்தித்தாள். ‘‘இனி பயமில்லை. சற்று ஓய்வு எடுத்ததும் புரவியின் மீது நீங்கள் ஏறிக்கொண்டு எங்கு செல்லவேண்டுமோ அங்கு செல்லலாம். இன்னும் மூன்று நாட்களுக்கு காலையும் மாலையும் புரவிக்கு காய்ச்சிய படிகாரப் பாலின் ஒத்தடம் தரப்பட வேண்டும். இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...’’

‘‘எதனால் அப்படி நினைக்கிறாய்..?’’ புன்னகையுடன் அப்பெரியவர் கேட்டார்.‘‘கையோடு மருந்துகளுடன் நீங்கள் பயணம் செய்வதை வைத்து!’’
‘‘அதாவது என்னையும் அசுவ சாஸ்திரியாகக் கருதுகிறாய். அப்படித்தானே?’’சிவகாமி பதிலேதும் சொல்லவில்லை.‘‘ஓரளவு அது சரிதான். ஆனால், உன் அளவுக்கு நான் கைதேர்ந்த அசுவ சாஸ்திரி அல்ல. கண்டிப்பாக நீ சொன்னபடி புரவிக்கு ஒத்தடம் அளிக்கிறேன்!’’ தலையைத் தாழ்த்தியபடி அப்பெரியவர் சொன்னார்.

தன்னை அவர் கிண்டல் செய்வது சிவகாமிக்குப் புரிந்தது. முகத்தைத் திருப்பி கரிகாலனைப் பார்த்தாள். அவன் அந்தப் பெரியவரை அணு அணுவாக ஆராய்ந்துகொண்டிருந்தான். மார்பில் இரு கைகளையும் கட்டியிருந்தார். கால்களை லேசாக அகற்றியிருந்தார். ஆஜானுபாகுவான உருவம். நிமிர்ந்திருந்ததால் அவரது தலையின் சுருண்ட பின்புறக் குழல்கள் அவர் கழுத்தை மறைத்து தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தன. கேசத்திலும் தென்பட்ட வீரம், கரிகாலனை யோசிக்க வைத்தது.

அளவோடு சிறுத்த இடுப்பும் அதற்கு மேலும் கீழும் உறுதியுடன் இருந்த உடற்கூறுகளும் இடைவிடாத யோகப் பயிற்சிக்குச் சான்று கூறின. கால்கள் ஏதோ இரும்பால் செய்யப்பட்டதைப் போல் இருந்த தோரணை அவரது திடத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது. அவர் தன்னைப் போலவே அதிக சதைப் பிடிப்பு இல்லாதவர். எனவே, பலத்தில் தனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரல்ல என்பதை கரிகாலன் உணர்ந்தான்.

அதுதான் அவனுக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. தலைக்குழல்களும் மார்பு வரை புரண்ட தாடியும் வெண்மையாக இருந்தன. ஆனால், உடலோ மத்திம வயதுக்கு அவர் சொந்தக்காரர் என்பதை எடுத்துக் காட்டியது. வேடம் தரித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஏற்கனவே அவர் இடுப்பி லிருந்த வாளின் வரலாறு வேறு ஐயத்தைக் கிளப்பியிருக்கிறது... ‘‘யார் நீங்கள்..?’’ நிதானமாகக் கரிகாலன் தன் விசாரணையைத் தொடங்கினான்.

‘‘உங்கள் குழுவைச் சேர்ந்தவன்...’’ பெரியவரின் பதிலிலும் அதே அமைதி.‘‘எங்கள் குழுவா..?’’‘‘ஆம். பல்லவ இளவல் ராஜசிம்மனுக்கு விசுவாசமாக இருக்கும் ரகசியக் குழு!’’ அழுத்தமாகச் சொன்ன அப்பெரியவர், ‘‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ...’’ என்ற சமிக்ஞைச் சொல்லை மீண்டும் உச்சரித்தார். அதுதான், தான் செய்த தவறு என்பது பிறகுதான் அப்பெரியவருக்குப் புரிந்தது. ஏனெனில் ‘உங்களைச் சேர்ந்தவன்’ என்பதற்காக அவர் உச்சரித்த சொல்லே அவரது சுயரூபத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது!
(தொடரும்)

- கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்