வீரமங்கை குயிலி ஒரு கற்பனைப் பாத்திரம்!வரலாற்று ஆவணங்களுடன் விளக்குகிறார் சமூக ஆய்வாளர் குருசாமி மயில்வாகனன்

சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்த அனைத்துப் பிரிவு மக்களின் உணர்வுடன் கலந்துவிட்ட பெயர், குயிலி. ராணி வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர், ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழிக்கத் தன்னையே ஆயுதமாகப் பயன்படுத்திய தற்கொலைப் போராளி... என்று குயிலியைப் பற்றிய வீரக்கதைகள் ஏராளம். இதனால், குயிலிக்கு ஒரு நினைவுத் தூணையே சிவகங்கை அருகே அமைத்திருக்கிறது தமிழக அரசு.

ஆனால், ‘அப்படி ஒரு பெண் சிவகங்கை வரலாற்றில் இருக்க வாய்ப்பில்லை; அது கற்பனைக் கதாபாத்திரம்...’ என்பதைப் பல்வேறு ஆவண ஆதாரங்களுடன் தனது ‘ஒப்பனைகளின் கூத்து’ நூலில் அடுக்குகிறார் குருசாமி மயில்வாகனன்.‘‘கற்பனைகளை வரலாறுன்னு நிறுவும் போக்கை முறியடிக்கணும். கற்பனைப் பாத்திரத்தை வச்சு சாதிகளுக்கிடையே மோதல் வந்துடக் கூடாது. இதுக்காகத்தான் இந்த நூலை எழுதினேன்...’’ நிதானமாகப் பேச ஆரம்பித்தார் குருசாமி மயில்வாகனன்.‘‘1772ல் சிவகங்கையில முத்துவடுகநாதர் ஆட்சி நடந்தது.

அவர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி தரமாட்டேன்னு சொன்னார். அதனால கம்பெனியின் படைத்தளபதி ஜோசப் ஸ்மித் கிழக்கிலிருந்தும் ஆபிரகாம் பான்ஜோர் மேற்கிலிருந்தும் சிவகங்கையை நோக்கிப் படையெடுத்தாங்க. இடைல பேச்சுவார்த்தை நடத்த முத்துவடுகநாதருக்கு ஒரு கடிதம் அனுப்பினார் ஸ்மித். இதை முத்துவடுகநாதர் ஏத்துக்கிட்டார். இந்தத் தகவலை பான்ஜோருக்கும் அனுப்பி வைச்சார் ஸ்மித். ஆனா, பான்ஜோர் காளையார்கோவிலுக்குப் போய் மன்னரையும் இளைய ராணியையும் சுட்டுக் கொன்னுட்டு ஒன்றரை லட்சம் பகோடாக்களை அள்ளிட்டுப் போறார்.

இந்தச் சம்பவத்தை ரெண்டு வருஷங்களுக்குப் பிறகு லண்டனில் இருந்து வரும் ‘தி லண்டன் பாக்கெட்’ மற்றும் ‘தி பிரிட்டிஷ் கிரானிக்கள்’ பத்திரிகைங்க ‘சிவகங்கையில் கம்பெனி ஆட்கள் கொள்ளை அடிச்சிருக்காங்க. பெண்களைக் கொடுமைப்படுத்தி இருக்காங்க’னு கண்டிச்சு எழுதினாங்க. இதனால, கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள்ல சிலர் கோபப்பட்டு பான்ஜோர், ஸ்மித் மீது விசாரணை நடத்தச் சொல்றாங்க.

பூந்தமல்லில விசாரணை நடக்குது. இதுல பான்ஜோர் மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கம்பெனி ஏத்துக்கலை. ஆனா, ஸ்மித்தை குற்றவாளினு சொல்லிடறாங்க. வருத்தமான ஸ்மித் 1775ல இங்கிலாந்துக்குப் போனார். உடல் நலக் குறைவால பான்ஜோரும் ஸ்மித் கூடவே தன் நாட்டுக்குப் போயிட்டார். அதாவது 1775ம் வருடத்துலயே இவங்க ரெண்டு பேரும் இங்கிலாந்துக்குப் போயிட்டாங்க. இதை, ‘Vestiges of Old Madras-Vol III’ நூல்ல கர்னல் லவ் குறிப்பிடறார்.

இதற்கிடைல 1772ல நடந்த போரிலிருந்து தப்பிச்ச ராணி வேலுநாச்சியார், 1780ல மருது சகோதரர்களுடன் சிவகங்கையைப் பிடிக்க படையெடுத்து வர்றாங்க. அப்ப சிவகங்கையை கர்நாடிக் நவாப்பின் மகன் ஆட்சி செய்துட்டு இருந்தார். ராணியின் பலத்தைப் பார்த்தவர், சிவகங்கையை அவங்ககிட்டயே கொடுத்துட்டு வரியை மட்டும் கட்டச் சொல்றார். இதுதான் வரலாறு. 1780ல சிவகங்கைல போரே நடக்கலை.

இன்னொரு ஆதாரத்தையும் முன்வைக்கறேன். திருநெல்வேலி சரித்திரத்தை எழுதின கால்டுவெல் தன் நூல்ல, கர்னல் ஃபுல்லர்ட்டன் வரி வசூலிக்க சிவகங்கை போனப்ப எழுதிய குறிப்பை பதிவு செய்திருக்கார்.‘பத்தாண்டுகளுக்கு முன்பு இதேபோல வந்தோம். அப்போது வரி கொடுத்திருந்தால் போரோ உயிர் இழப்புகளோ நடந்திருக்காது...’ இதுதான் அந்தக் குறிப்பு. மன்னர் கொல்லப்பட்ட சம்பவத்தை இது குறிப்பிடுது.  

ஒருவேளை இப்ப இவங்கல்லாம் சொல்றமாதிரி 1780ல போர் நடந்து சிவகங்கை மீட்கப்பட்டிருந்தா ஃபுல்லர்ட்டன் வரி கேட்டுப் போயிருப்பாரா? குயிலி ‘வரலாறு’ என்ன சொல்லுது? ‘1780ல் பெரிய போர் நடந்ததாகவும், அன்று பான்ஜோரின் ஆயுதக் கிடங்கை அழிக்க குயிலி தன் உடம்பில் தீயிட்டு பாய்ந்ததாக’வும்தானே சொல்லப்படுது..?

ஆனா, உடல்நலம் குன்றி 1775லயே பான்ஜோர் இங்கிலாந்து போயிட்டதா கர்னல் லவ் சொல்றார். 1780ல போர் புரியாம ராணிகிட்ட ஆட்சியை ஒப்படைக்கிறார் நவாப்பின் மகன். இதுதான் நடந்த வரலாறு. ஆவணங்கள் முழுக்க இதைத்தான் சொல்லுது. ஆக, குயிலி தீ பாஞ்சது கட்டுக்கதை. அந்தப் பாத்திரம் ஒரு கற்பனை. 1772க்குப் பிறகு போரே நடக்கலை...’’ என நீண்ட விளக்கம் தந்தவரிடம், ‘எப்போது குயிலி பாத்திரம் உருவானது..?’ எனக் கேட்டோம்.

‘‘எனக்குத் தெரிஞ்சு முதன் முதல்ல குயிலி கதாபாத்திரத்தை எழுத்துல குறிப்பிட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் சார்தான். அவர் 1985ல ‘குயிலி என்னும் கன்னிப்பெண்’ எனக் குறிப்பிடறார். அப்புறம், காளையார்கோவிலைச் சேர்ந்த மு.சேகர், ‘வீரம் விளைஞ்ச மண்’ நூல்ல 1990ல குறிப்பிட்டார்.

இதை வைச்சு வேலுநாச்சியாரின் தோழினு சமஸ்தானக் கல்வெட்டுல 1992ல எழுதினாங்க. 1999ல எழுத்தாளர் ஜீவபாரதி ஒரு பத்திரிகைல வேலுநாச்சியார் கதையைத் தொடரா எழுதினார். அதுல குயிலியை ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணா உருவகப்படுத்தினார். இதுபத்தி இப்ப ஜீவபாரதியின் நண்பர் ஒருவர், ‘குயிலி ஒரு கற்பனைப் பாத்திரம்னு தன்கிட்ட அவர் சொன்னதாகவும், தென்மாவட்டங்கள்ல மறவர் சாதிக்கும், தலித் சாதிகளுக்கும் ஒரு மோதல் இருக்கு.

அதை இலகுவாக்கவே இந்தப் பாத்திரத்தை உருவாக்கியதா’ - ஜீவபாரதி சொன்னதா - சொன்னார். இப்ப, சிவகங்கைல இருக்கிற பட்டியல் சாதியைச் சேர்ந்த எல்லாரும் குயிலி தங்களுக்குத்தான் சொந்தம்னு தனித்தனியா உரிமை கொண்டாடறாங்க. ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் எழுதின நூலுக்கு மறுப்பு தெரிவிச்சு இன்னொரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் நூல் எழுதியிருக்கார்.

இப்ப சுவரொட்டி அச்சிட்டு குருபூஜை கொண்டாடும் அளவுக்கு வந்திருக்காங்க. தவிர, முக்குலத்தோரும் குயிலி தங்களைச் சேர்ந்தவர்னு பேச ஆரம்பிச்சிருக்காங்க. மொத்தத்துல ஒரு கற்பனைப் பாத்திரத்துக்காக சாதி மோதல் ஏற்படும் அளவுக்கு சூழல் அபாயகரமா மாறியிருக்கு. சிவகங்கை வரலாற்றைச் சொன்ன கே.ராஜய்யன், எஸ்.எம்.கமால், சஞ்சீவி மாதிரியான 15க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்கள் நூல்கள்ல குயிலி பத்தி குறிப்பிடலை.

இதுக்குக் காரணம் அவங்களோட சாதிய மனப்பான்மைதான்னு சொல்றாங்க! அன்னிக்கி சட்டசபைல சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனும், செ.கு.தமிழரசனும் கேட்டதால தமிழக அரசு ரூ.25 லட்சம் செலவுல குயிலிக்கு நினைவுத் தூண் எழுப்பியிருக்கு. இதுபத்தி ‘குயிலிக்கு என்ன ஆதாரம்’னு தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேட்டேன். அதுக்கு அரசுத் தரப்புல இருந்து ‘ஆதாரம் எதுவும் இல்லை.

அன்றைய முதல்வர் 110 விதியின் கீழ் பேசியதால் நிதி ஒதுக்கினோம்’னு பதில் வந்தது. இன்னொரு விஷயம், 1990ம் வருட தமிழக பாட நூல்ல ‘1780ல் சிவகங்கையில் போர் நடக்கவில்லை’னு இருந்தது. இப்ப 2018 ஆறாம் வகுப்பு சமச்சீர் தமிழ்ப் பாட நூல்ல போர் நடந்ததாகச் சொல்லி குயிலி வரலாற்றை குறிப்பிட்டிருக்காங்க. இதுக்கு ஆதாரம் கொடுங்கனு பாடநூல் கழகத்துகிட்ட கேட்டிருக்கேன்.

உடனடியா குயிலி பாத்திரம் கற்பனைனு அரசு அறிவிக்கணும். இல்லைனா ஒரு குழுவை அமைச்சு உண்மையைக் கண்டறிந்து மக்கள்கிட்ட சொல்லணும். இல்லைனா கண்டிப்பா எதிர்காலத்துல குயிலி என்கிற கற்பனைக் கதாபாத்திரம் மூலமா சாதி மோதல் தென் மாவட்டங்கள்ல வெடிக்க வாய்ப்பிருக்கு. அதைத் தடுக்கணும்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் குருசாமி மயில்வாகனன்.

-பேராச்சி கண்ணன்