நெகிழ்ச்சி... பரவசம்... சாதனை...golden indians!

கோலாகலமாக நடந்து முடிந்த 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 11,646 தடகள வீரர்கள் பங்கேற்றனர். இத்திருவிழாவில் 40 விதமான போட்டிகள் 465 பிரிவுகளில் நடத்தப்பட்டன. 289 பதக்கங்களுடன் முன்னிலையைப் பெற்றது சீனா. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் 8வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது இந்தியா. இதோ இந்தியாவுக்காக தங்கத்தை தட்டி வந்த தங்க மகன்கள், தங்க மகள்களின் அறிமுகம்.

அமித் பங்கல்

கை யுறை வாங்க பணமில்லாமல், பழைய துணியைக் கையுறை போல அணிந்து குத்துச்சண்டை பயிற்சி பெற்ற அமித் பங்கல், 49 கிலோ எடைப்பிரிவில் தங்கத்தை வென்றார் என்பது வெறும் செய்தி மட்டுமல்ல. அது நம்பிக்கை ஊற்று. குத்துச்சண்டை வீரர் உணவுப் பழக்கத்தில் சரியான டயட்டை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், அரியானாவில் உள்ள ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்த அமித்துக்கு அதற்கும் வசதியில்லை. முறையான பயிற்சி, சரியான உணவு எதுவுமே இல்லாமல் அவர் வீழ்த்தியது ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாயை என்பதுதான் இதில் ஹைலைட்!

இரட்டையர் டென்னிஸ்

ஆண்களுக்கான இரட்டையர் டென்னிஸில் ரோகன் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி தங்கத்தை தட்டி சாதனை படைத்தது. உலகறிந்த வீரர் போபண்ணா. இரட்டையர், கலப்பு இரட்டையரில் நிகரற்றவர். தில்லியில் பிறந்த திவிஜ், ஏழு வயதிலிருந்து டென்னிஸ் மட்டையைப் பிடித்து வருகிறார். ஆசிய விளையாட்டுகளில் இந்த ஜோடி அடிக்கும் முதல் தங்கம் இதுவே. ஆசிய விளையாட்டுகளில் இரட்டையர் டென்னிஸில் இதுவரை இந்தியா நான்கு தங்கத்தை தன்வசப்படுத்தியுள்ளது!

சவுரப் சவுத்ரி


ஆண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கத்தை சுட்டு வந்திருக்கிறார் சவுரப் சவுத்ரி. இறுதிப்போட்டியில் ஜப்பானிய வீரர் டோமோயுகி மட்சுடாவை (வயது 42) வீழ்த்திய இந்த தங்கப் பையனின் வயது ஜஸ்ட் 16! கடந்த வருடம் ஜூனியர்களுக்கான துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்த சவுரப், உத்தரப்பிரதேசத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மூன்று ஆண்டு களுக்கு முன்புதான் சவுரப்பிற்கு துப்பாக்கி சுடுதல் என்ற ஒரு விளையாட்டு இருப்பதே தெரியவந்தது!

தஜிந்தர்பால் சிங்

ஆண்களுக்கான குண்டு எறிதலில் தங்கத்தைப் பறித்து வந்திருக்கிறார் பஞ்சாப் சிங்கமான தஜிந்தர்பால் சிங். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த தஜிந்தருக்கு கிரிக்கெட்டில்தீராத ஆர்வம். ஆனால், தந்தையின் வழிகாட்டுதலால் குண்டு எறிதலுக்கு வந்தவர் அதில் பல சாதனைகளையும் படைத்துவருகிறார். இறுதிப்போட்டியில் தஜிந்தர்சிங் குண்டை எறிந்த தூரம்: 20.75 மீட்டர். இது ஆசிய விளையாட்டுப் போட்டி கள் வரலாற்றில் புதிய சாதனை! மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் தந்தைக்கு கண்ணீர் மல்க அவர் பதக்கத்தை அர்ப்பணித்தது நெகிழ்வு.

அர்பிந்தர் சிங்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டிரிபிள் ஜம்ப்பில் இந்தியர் ஒருவர் தங்கம் வென்று 48 வருடங்களாகின்றன. 1970ல் மொஹிந்தர் சிங் தங்கத்தைக் கைப்பற்றியது வரலாறு. அவருக்குப்பின் யாருமே டிரிபிள் ஜம்ப்பில் பெரிதாக ஜொலிக்கவில்லை. வெண்கலம் வாங்குவதே இந்திய வீரர்களுக்கு பெரும் சவால். அந்தளவுக்கு டிரிபிள் ஜம்ப்பில் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில் 16.77 மீட்டர் நீளம் தாண்டி தங்கத்தை வென்றதோடு வரலாற்றையும் திருத்தி எழுதியிருக்கிறார் அர்பிந்தர் சிங். பஞ்சாபில் பிறந்த இவரது கனவு ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவது!

படகுப் போட்டி

ஆண்களுக்கான துடுப்புப் படகுப் போட்டியில் சவரன் சிங், தட்டு போகனால், ஓம்பிரகாஷ், சுக்மீத் சிங் அடங்கிய நால்வர் அணி தங்கத்தை தட்டி, ஆசிய விளையாட்டுகளில் துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை பதிவு செய்துள்ளது. இதில் பஞ்சாபைச் சேர்ந்த சவரன் சிங்கும், மகாராஷ்டிராவில் பிறந்த தட்டு போகனாலும் ஒற்றையர் படகுப் போட்டியில் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஜ்ரங் புனியா

ஆண்களுக்கான ‘ஃப்ரீஸ்டைல்’ மல்யுத்தத்தில் தங்கம் வென்று, பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் பஜ்ரங் புனியா.
5.5 அடி உயரம், 61 கிலோ எடை... என நெஞ்சை நிமிர்த்தும் இந்த குஸ்தி மன்னன் மோதியதோ 65 கிலோ எடைப்பிரிவில்! அரியானாவில் பிறந்த பஜ்ரங், தந்தையின் ஊக்குவிப்பால் ஏழு வயதிலேயே வயல் வெளிகளில் குஸ்தி போடக் கிளம்பிவிட்டார். இந்தியன் ரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகராகப் பணியாற்றிக்கொண்டே, தினமும் 4 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

4X400


குழுவில் ஒருவர் கொஞ்சம் பிசகினாலும் வெற்றி கைமாறிப்போகும் ஒரு விளையாட்டு பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டம். இதில் 2002லிருந்து இந்தியாவின் கொடிதான் பறக்கிறது. இந்த வருடம் பூவம்மா, சரிதாபென் கெய்க்வாட், ஹிமா தாஸ், விஸ்மாயா நால்வர் அணி தங்கத்தைத் தட்டியதன் மூலம் ஆசிய விளையாட்டுகளில், பெண்களுக்கான 4X400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தங்கத்தை வென்ற நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது!

நீரஜ் சோப்ரா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய வீரர்களுக்குத் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏந்தி வந்தவர் நீரஜ் சோப்ரா. ‘ஜாவலின் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிற நீரஜ், ஈட்டி எறிதலில் தங்கம் வென்று புதிய தேசிய சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார். அவர் எறிந்த தூரம்: 88.06 மீட்டர். கடந்த இரண்டு வருடங்களில் நீரஜ் பங்கேற்ற அத்தனை ஈட்டி எறிதல் போட்டிகளிலும் முதல் இடம். காமன்வெல்த், ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இதில் அடங்கும். இத்தனைக்கும் அவரது வயது 20தான்!

மஞ்சித் சிங்

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற மஞ்சித் சிங்கின் வெற்றிக்குப்பின் பல தியாகங்கள் ஒளிந்துகிடக்கின்றன. தீவிரப் பயிற்சியின் காரணமாக எந்த வேலைக்கும் அவரால் போக இயலவில்லை. பயிற்சிக்களம் அவரது ஊரிலிருந்து வெகுதொலைவில் இருந்ததால் ஒரு வருடமாக வீட்டுக்குக் கூட செல்ல முடியாத நிலை. தவிர, ஐந்து மாதங்களுக்கு முன் பிறந்த மகனைக் கூட நேரில் பார்க்க முடியாத பயிற்சி சூழல். வென்று வந்த பதக்கத்தை மகனுக்கு அர்ப்பணித்திருக்கிறார் மஞ்சித்!

பிரணாப் பர்தன் / ஷிப்நாத் சர்கார்

‘பிரிட்ஜ்’ என்கிற விளையாட்டு இந்த ஆண்டுதான் முதன் முதலாக ஆசிய விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டது. சதுரங்கத்தைப் போல மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு இது. இதில் 60 வயதான பிசினஸ் மேன் பிரணாப் பர்தனும், 56 வயதான ஆசிரியர் ஷிப்நாத் சர்காரும் இணைந்து தங்கத்தை தட்டியதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் ‘பிரிட்ஜ்’ விளையாட்டில் முதல் தங்கத்தை வென்ற நாடு இந்தியா என்பது அழுத்தமாகப் பதிவாகிவிட்டது. பர்தனும், சர்காரும் இருபது வருட நண்பர்கள்!

ரகி சர்னோபட்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை அழுத்தமாக எழுதியிருக்கிறார் ரகி சர்னோபட். கோலாப்பூரில் பிறந்த ரகி, 16 வயதிலிருந்து தினமும் சளைக்காமல் 5 - 6 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார். இப்போது அவரது வயது 27. காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் அடித்த இந்த கோல்டன் கேர்ளுக்குப் பிடித்த விளையாட்டு டென்னிஸ்! உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் தட்டிய முதல் இந்திய வீராங்கனையும் இவரே!

பிரணாப் பர்தன் / ஷிப்நாத் சர்கார்

‘பிரிட்ஜ்’ என்கிற விளையாட்டு இந்த ஆண்டுதான் முதன் முதலாக ஆசிய விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டது. சதுரங்கத்தைப் போல மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு இது. இதில் 60 வயதான பிசினஸ் மேன் பிரணாப் பர்தனும், 56 வயதான ஆசிரியர் ஷிப்நாத் சர்காரும் இணைந்து தங்கத்தை தட்டியதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் ‘பிரிட்ஜ்’ விளையாட்டில் முதல் தங்கத்தை வென்ற நாடு இந்தியா என்பது அழுத்தமாகப் பதிவாகிவிட்டது. பர்தனும், சர்காரும் இருபது வருட நண்பர்கள்!

ஸ்வப்னா பர்மன்

தேயிலைத் தோட்டத் தொழிலாளியான அம்மா, பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி விட்ட ரிக்‌ஷா ஓட்டுநரான அப்பா, காலணிகள் வாங்கக்கூட பணமில்லாத வறுமை, வாட்டியெடுக்கும் முதுகு வலி, போட்டியின் போது கடுமையான பல்வலி என ஸ்வப்னா பர்மன் சந்தித்தது பெரும் சவால். ஆனால், இதையெல்லாம் தாண்டி பெண்களுக்கான ஹெப்டத்லானில் தங்கத்தை தட்டி வந்திருக்கிறது இந்த மேற்கு வங்காளப் புலி! உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100மீ தடை ஓட்டம், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800மீ ஓட்டம் ஆகிய ஏழு விளையாட்டுகளும் ஒன்றிணைந்ததுதான் ‘ஹெப்டத்லான்’!

ஜின்சன் ஜான்சன்

ஆண்களுக்கான 1500 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜின்சன் ஜான்சன், கேரளத்தில் பிறந்தவர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தன் மக்களுக்காக பதக்கத்தை அர்ப்பணித்த ஜான்சனின் தனிச்சிறப்பு, போட்டி தொடங்கிய நொடியிலிருந்து ஒரே சீரான வேகத்துடன் ஓடுவது. சர்வதேச அளவில் இவர் அடித்த முதல் தங்கம் இதுதான். தவிர, 800 மீட்டர் ஓட்டத்தில் 20 மைக்ரோ நொடி இடைவெளியில் மஞ்சித் சிங்கிடம் தங்கத்தைப் பறிகொடுத்து வெள்ளி யைத் தட்டியது ஜான்சன்தான்!

வினேஷ் போகத்

அறுபத்தெட்டு வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி களில் இந்தியாவுக்காக‘தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை’ வினேஷ் போகத்-தான். அரியானாவில் பிறந்த வினேஷ், அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படப் புகழ் கீதா போகத், பபிதா போகத்தின் உறவினர்! தங்கப்பதக்கத்துடன் இந்தியாவில் தரையிறங்கிய தங்க மங்கையை வரவேற்ற அவரது குடும்பம், விமான நிலையத்துக்கு அருகிலேயே வினேஷின் மனதுக்குப் பிடித்த காதலருடன் நிச்சயதார்த்தத்தை நிகழ்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தது ஹைலைட்!

தொகுப்பு: த.சக்திவேல்