கைகொடுத்த இந்தியர்கள்!



இந்திய அரசு கேரள மாநிலத்துக்கு ரூ.600 கோடி நிவாரணத்தொகையை அளித்துள்ளது. இது குறைந்த தொகை என ஒருபக்கம் சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்நிலையில் பிற மாநில மக்கள் கையிலிருக்கும் தொகையை கேரளாவுக்கு அள்ளி வழங்கி இழப்புகளிலிருந்து காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள். கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.ஆயிரத்து 28 கோடி நிதி கிடைத்துள்ளது.

அம்மாநிலம் மீண்டும் புத்துயிர் பெற்றெழ 4.17 லட்சம் மக்கள் பங்களித்திருப்பது பெருமைக்குரிய செய்தி. வரைவோலை, பணமாக மட்டும் ரூ.835 கோடியும், டிஜிட்டல் பரிமாற்றம் வழியாக 146.52 கோடி ரூபாயும் நிவாரண நிதியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அனுப்பி வைத்துள்ளனர். சேதமதிப்பு ரூ.20 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகம் என்பதால் கேரள அரசு, பல்வேறு நாடுகளுக்கும் தம் அமைச்சர்களை அனுப்பி நிவாரண நிதியைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

டாய்லெட்டுக்காக தீக்குளிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் நக்லாகுலுரியா பகுதியைச் சேர்ந்த ராபிக்கு அண்மையில் பூனம் என்ற பெண்ணுடன் திருமணமானது. ராபியின் வீட்டில் கழிவறை இல்லாதது பூதாகர பிரச்னையாக எழ, பூனம், கழிவறையைக் கட்டினால்தான் புகுந்த வீட்டுக்கு வருவேன் என்று கூறிவிட்டு தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மனைவியைத் திரும்ப அழைத்துவர மாமியார் வீடு சென்றார் ராபி. அங்கு மாமியார் வீட்டினரோடு விவாதம் சூடேற, உடனே சமையலறைக்கு ஓடி மண்ணெண்ணெய்யை தலையில் கவிழ்த்து தீக்குளித்துவிட்டார் ராபி. இப்போது அரசு மருத்துவமனையில் 60 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார் ராபி.  
 
ஆட்டோமேட்டிக் அங்காடி!

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவது சுலபம். ஆனால், 2 கி.மீ நீளத்தில் நிற்கும் க்யூதான் பிரச்னை. இச்சூழலில் கொச்சியில் திறந்துள்ள புதிய ஆட்டோமேட்டிக் கடையில் ஆட்களும் கிடையாது; க்யூவும் கிடையாது என்பது வியக்க வைக்கும் செய்தியல்லவா?! கொச்சியில் ‘வாட் எ சேல்’ என்னும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள கடையில், அதன் ஆப்பிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து நுழைந்தால் போதும். நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்களுக்கான விலை இதில் சேர்ந்துவிடுவதால், பில் கவுண்டர்களில் நிற்க வேண்டியதில்லை.

கேமரா, சென்சார் என அனைத்தும் டெக் சமாச்சாரங்களால் இயங்குபவை என்பதால் கடையில் ஓர் ஆள் கூட இருக்க மாட்டார்கள்; இருபத்துநான்கு மணிநேர சேவையும் உண்டு என அதிரடி செய்திருக்கிறார்கள். டெபிட் அல்லது கிரடிட் கார்டுடன் ஆப் இணைக்கப்பட்டிருப்பதால் பில் தொகை அதிலிருந்து சென்று விடும். விரைவில் இக்கடை தில்லி, பெங்களூரு ஆகிய இடங்களிலும் தொடங்கப்படவிருக்கிறது.

- ரோனி