நெல்லை சந்திரவிலாஸ்தான் வாழும் நிலப்பகுதியில் தயாராகும் உணவு விளையும் தானியம், சுரக்கும் தண்ணீர் போன்றவற்றை உண்பதும்; பத்து கிலோ மீட்டருக்குள் விளையும் காய்கறிகளை உணவுக்குப் பயன்படுத்துவதும் உடலுக்கு நல்லது என தங்கள் அனுபவங்களின் வழியே பெரியோர்கள் சொல்வது பருவநிலையைக் கருத்தில் கொண்டு நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இதன்படிதான் திருநெல்வேலி ஜங்ஷன் சாலைக்குமரன் கோயிலருகே இருக்கும் சந்திரவிலாஸ் உணவகம் இயங்குகிறது. நவீன பொருட்களைத் தவிர்த்து உள்ளூர் விளைபொருட்களையே பயன்படுத்துகின்றனர். பழங்காலத்து மேஜை இருக்கைகள். பழமையான பாத்திரங்கள். பக்குவமாக சமைக்கும் முறை. போதாதா? இட்லி, தோசை, பொங்கல், பூரி... என அனைத்தும் பழமை மாறாமல் மணக்கின்றன. குறிப்பாக காப்பி. காப்பிக் கொட்டையை இவர்களே வறுத்துப் பொடி செய்கின்றனர்.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவுக்கு எப்படி தாமிரபரணி நீர் சுவையைக் கூட்டுகிறதோ, அதேபோல சந்திர விலாஸ் ஹோட்டலின் சாம்பார், ரசம், இட்லி, தோசை, மிளகாய் சட்டினி... என அனைத்திலும் தாமிரபரணியின் முத்திரை இருக்கிறது.‘‘எங்க செய்முறையும் தாமிரபரணி நீரும்தான் எங்க சுவைக்கு அடையாளம்...’’ பெருமையாகச் சொல்கிறார் மூன்றாம் தலைமுறையாக இந்த உணவகத்தை நடத்தி வரும் சந்திரசேகர்.“1926ல எங்க தாத்தா வெங்கடாசலம் கருங்குளத்துல இருந்து நெல்லை டவுனுக்கு வந்து உணவகத்தை தொடங்கினாரு.

அப்ப இதுதான் மெயின் ரோடு. திருநெல்வேலிக்கு வேலை நிமித்தமாகவும் வியாபாரத்துக்காகவும் வர்றவங்க இங்க வந்து சாப்பிட்டுப் போவாங்க. அப்ப தரைல பாய் விரிச்சு அமர்ந்துதான் சாப்பிடுவாங்க. காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி, எம்.எஸ்.சுப்புலட்சுமினு பல பிரபலங்கள் இங்க சாப்பிட்டிருக்காங்க. பிரதமர் நேரு நெல்லைக்கு வந்திருந்தப்ப காமராஜர் அவரை இங்க கூட்டிட்டு வந்தார். நேருவுக்கு எங்க சுவை பிடிச்சுப் போச்சு. அதுக்கு அப்புறம் எப்ப தமிழகம் வந்தாலும் இங்க வந்து சாப்பிடுவார்.

சுதந்திரப் போராட்டக் காலத்துல எங்க உணவகம் ஒரு கேந்திரமா செயல்பட்டிருக்கு. சுதந்திரப் போராட்ட வீரர்கள் இங்க வந்து சாப்பிட்டுகிட்டே போராட்டங்கள் பத்தி பேசுவாங்க. ஆரம்பத்துல எந்த உணவுலயும் பூண்டு, வெங்காயம் சேர்க்காம இருந்தோம். அப்பா (சுப்பிரமணி) காலம் வரைக்கும் இதுதான் நடைமுறை. இப்ப மக்கள் விருப்பத்தை ஏற்று சில உணவுகள்ல மட்டும் பூண்டு, வெங்காயம் சேர்க்கறோம்.

ஆனாலும் அமாவாசை, கிருத்திகை மாதிரியான தினங்கள்ல இதை தவிர்த்துடுவோம்...’’ என்று சொல்லும் சந்திரசேகருக்கு மகாகவி பாரதியார் தங்கள் கடையின் வாடிக்கையாளர் என்பதில் அலாதி பெருமை.‘‘அவர் படிச்ச திரவியம் தாயுமானவர் பள்ளி பக்கத்துலதான் இந்த உணவகம் தொடங்கறதுக்கு முன்னாடி எங்க தாத்தா வீட்டிலேயே சமைச்சு வித்துட்டு இருந்தார். பாரதியார் சின்னப் பையனா இருந்தப்ப தாத்தா கையால சாப்பிட்டிருக்கார்...’’

சைவ உணவுக்கு பெயர் போன இந்த உணவகத்தில் வீட்டு முறைப்படி சமைக்கின்றனர். காலை 9 மணிக்கே இங்கு சாப்பாடு கிடைக்கும். கூடவே இட்லி, தோசை, பூரி, பொங்கல், லட்டு, ஜாங்கிரி, ஃபில்டர் காப்பி. இரவிலும் சாப்பாடு, டிபன், ஃபில்டர் காப்பி உண்டு.“தரமான பொருள், ஒரே சமையல் மாஸ்டர். இதெல்லாம்தான் எங்க வெற்றி ரகசியம்...’’ என்கிறார் இளையவரான

- ராஜா.                                    


சந்திர விலாஸ் ரவா தோசை


பச்சரிசி மாவு - 300 கிராம்.
ரவை - 100 கிராம்.
சீரகம், பெருங்காயம் - சிறிதளவு.
மைதா மாவு - 2 சிட்டிகை.
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.
பச்சைமிளகாய் - 1.
மிளகு - ஒரு சிட்டிகை.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.

பக்குவம்:

பச்சரிசி மாவு, ரவை மற்றும் மைதா மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். இந்த மாவுக் கலவையை பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மிளகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இவை தயாரானவுடன் அடிகனமான தோசைக்கல்லை மிதமாக சூடு செய்யவும். பின்னர் சிறிதளவு எண்ணெய்யை தோசைக்கல்லில் தேய்த்து மாவை ஊற்றி, திருப்பிப் போட்டு பொன்னிறமாக எடுத்துப் பரிமாறவும். மைதா மாவை குறைவாக பெயரளவுக்குத்தான் சேர்க்க வேண்டும். அதிகமாகச் சேர்த்தால் தோசை கொழகொழவென்று ஆகிவிடும். சாப்பிட நன்றாக இருக்காது.

தோசையின் கதை

உணவு வரலாற்றாளர் கே.டி.அச்சயா, `தோசை தமிழ் மக்களுக்குத்தான் சொந்தம்; கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு வரலாற்றாசிரியரான பி.தங்கப்பன் நாயரோ, `கர்நாடகாவில் இருக்கும் உடுப்பிதான் இதன் பிறப்பிடம்’ என்கிறார்.

எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் பன்னெடுங்காலமாக தோசை பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பெருமாள் கருட வாகனத்தில் கிராம உலா சென்று திரும்பும்போது இன்னின்னார்க்கு அமுது படைக்க வேண்டும் எனவும், அதற்கு ஆகும் செலவாக, 250 பணமளிக்கப்பட்டது எனவும் அதைக் கொண்டு 35 தோசைகளை, 24 பேருக்குக் கொடுக்க வேண்டும் என்கிறது ஒரு கல்வெட்டு.  

(கல்வெட்டு எண் - 614 / 1919 / கோயில் சாசனங்கள். பகுதி 1 பக். 326)தமிழின் முதல் நிகண்டு எனப்படும் திவாகர நிகண்டு, பூரிகம் நொலையல் கஞ்சம் தோசை பேதப் பெயர்வகை அப்பம் ஆகும் (பக்.38. பல பெயர் பொருட் தொகுதி. சேந்தன் திவாகரம் மூலபாடம், தாண்டவராய முதலியார் பதிப்பு. 1880) அப்பத்தின் வகைகளில் ஒன்றாக தோசையைக் காட்டுகிறது.

- திலீபன் புகழ்
படங்கள்: பரமக்குமார்