இதென்ன பேன்ட்?



‘கீதகோவிந்தம்’ தெலுங்குப் படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டாவின் உடையைப் பார்த்த பலருக்கும் எழுந்த வினா இது. நடனக் கலைஞர்கள் பலரும் இந்த பேன்ட் அணிந்து நடனமாடுவதைப் பார்த்திருக்கலாம்.‘‘இதுவா? டர்க்கிஷ் (துருக்கி) பேன்ட் இல்லைனா ஹாரம் பேன்ட்!’’ எனச் சிரித்தபடி விவரிக்கத் தொடங்கினார் ஃபேஷன் டிசைனர் காவ்யா ரெட்டி.

‘‘19ம் நூற்றாண்டுல அல்ஜீரியா, துருக்கி, ஈரான், ஈராக் மாதிரியான மத்திய கிழக்கு நாடுகள்ல இருந்த ட்ரெண்ட் இது. உடல் வளைவைக் காட்டாத, அதேசமயம் உடலை இறுக்கிப் பிடிக்காத எந்த உடையையும் யோசிக்காம அணிவாங்க. அப்படித்தான் பாட்டியாலா பேன்ட், பெல்லி டான்ஸ் வகை பேன்ட்ஸ் அவங்க கிட்ட பிரபலமாச்சு. இதுல பாட்டியாலா கொஞ்சம் டிசைன் மாறி இப்ப ஹாரம் பேன்ட்ஸ் ஆகியிருக்கு. வேஷ்டி பேன்ட் மாதிரினு வைச்சுக்குங்களேன்.

இதுக்கு பெரும் பாலும் காட்டன் அல்லது ஆர்கானிக் மெட்டீரியல்ஸ்தான் பயன்படுத்துவாங்க. போட்டிருக்கறதே தெரியாத அளவுக்கு வசதியா இருக்கும். காற்றோட்டம் ஸ்மூத்தா இருக்கும். அதனாலயே மத்திய கிழக்கு நாடுகள்ல இருந்து அப்படியே மேற்கத்திய நாடுகளுக்கும் இந்த டிரெண்ட் பரவிச்சு. இந்த பேன்ட் கூட டியூப் டாப், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், டெனிம் கோட்னு எந்த ஸ்டைல்லயும் போட்டுக்கலாம். நம்ம ஊர்லடான்ஸர்கள் லூஸான டி-ஷர்ட், ஷார்ட் டாப் கூட ஹாரம் பேன்ட்டை மேட்ச் செய்துக்கறாங்க.

இதுக்குன்னு தனி அளவுகள் கிடையாது. சிலர் கணுக்கால் மட்டும் சரியா பிடிச்சிக்கும் விதமா போட்டுக்குவாங்க. சிலர் முட்டி வரை. ஒருசிலர் சரியா தொடைப்பகுதி வரைக்கும் லூஸா... இதை கேமோ பேன்ட்ஸ்னு சொல்லுவோம்... அணியறாங்க...’’ என்ற காவ்யா யாரெல்லாம் எப்படி அணியலாம் எனப் பகிர்ந்தார்.‘‘இந்த பேன்ட் லூஸான பாட்டம்வேர். அதனால யார் வேணும்னாலும் எப்படியும் மேட்ச் செய்துக்கலாம்.

ஏன், விஜய் தேவரகொண்டா கோட் கூட மேட்ச் செய்த மாதிரி பசங்களும், பெண்களும் சிம்பிள் ஜீன் டாப்ஸ் கூட போட்டுக்கலாம். பப்ளி பெண்கள் அல்லது கிளாமர் என் சாய்ஸ் இல்லைனு சொல்ற பெண்கள், மேல குர்தா, அதன் கூட ஒரு சின்ன ஸ்டோல் பயன்படுத்தி ஆன்டிக் நகைகள் அணிஞ்சா சூப்பரா இருக்கும். இப்ப ஹாரம் பேன்ட், ஜம்ப்சூட்டா மிகப்பெரிய ட்ரெண்டா இருக்கு. ஹாட் சம்மர் கலெக்‌ஷன்ல குழந்தைகளுக்கு இந்த ஹாரம் பேன்ட் பேட்டர்ன் ஜம்ப்சூட்கள் வசதியா இருக்கும்.

இந்த பேன்ட் கூட ஆக்ஸிடைஸ்ட் அல்லது ட்ரைபல் நகைகள் சிறப்பா மேட்ச் ஆகும். சங்கி நகைகளும் ஓகே. ஹை ஹீல், ஸ்டில்லட்டோஸ்னு ஹெவியா இல்லாம ஃப்ளாட் செருப்புகள், மொஜாரி, ஜூட்டி காலணிகள் பர்ஃபெக்ட்டா இருக்கும்!’’ என்கிறார் காவ்யா ரெட்டி.            l

- ஷாலினி நியூட்டன்