60 வயது மாநிறம்மறதி நோயால் தொலைந்த அப்பாவைத் தேடும் மகனின் பயணமே ‘60 வயது மாநிறம்’.அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட அப்பாவை அதற்கான பாதுகாப்பு இல்லத்தில் விக்ரம் பிரபு சேர்க்கிறார். அங்கிருந்து கணப்பொழுதில் ‘காணாமல்’ போகிறார் பிரகாஷ் ராஜ். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருக்கிறார் விக்ரம் பிரபு.

அப்பாவைக் கண்டுபிடித்துத் தரவேண்டிய போலீஸோ, தன் பொறுப்பைக் கை கழுவுகிறது. பிறகு, அப்பா பேராசிரியர், பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாடம் போதித்தவர் என்பதால் மீண்டும் விசாரணை சூடுபிடிக்கிறது. பிரகாஷ்ராஜ், ஒரு கொலை செய்துவிட்டு தப்பிக்கும் சமுத்திரக்கனி கூட்டணியில் சிக்குகிறார். இவர்கள் எல்லோரும் குமரவேல் வீட்டில் மறைந்து வாழ்கின்றனர்.

அப்பாவைத் தேடிக் கிளம்பிய விக்ரம்பிரபு அவரைக் கண்டடைந்தாரா என்பதன் ஊடாக உறவின் புரிதலும், அனுபவங்களுமே படம்! மனதின் மென் உணர்வுகளை, பாசிட்டிவ் காமெடி கலந்து தரும் தன் வழக்கமான ரூட்டில் ராதாமோகன்! மிக நுட்பமாக தந்தையின் இடத்தை நடிப்பில் நிறைவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதுவரை பார்த்த எந்த மேனரிசத்தையும் கொண்டு வராமல் மறைத்து, அன்பு ஒன்றையே காட்டும் அவரின் நடிப்பு முனைப்பு அருமை! ‘வெள்ளை நாய், கருப்பு நாய்’ கதை மனப்பூர்வமாக சிந்திக்க வைக்கிறது.

அடர்த்தியும், அழுத்தமுமாக பெர்ஃபார்மன்ஸ் தேவைப்படும் இடத்தில் கம்பீரமாக அமர்கிறார் பிரகாஷ்ராஜ். அப்பாவைத் தொலைத்த மகனின் பரிதவிப்பை முழுவதுமாகக் கொண்டுவருவதில் நியாயம் செய்திருக்கிறார் விக்ரம்பிரபு. அப்பாவை இதுவரை புரிந்துகொண்டதை விட, மற்றவர்கள் அவரைப் பற்றிச் சொல்லும்போது உடைந்து நொறுங்கும்போது நெகிழ்ச்சியில் ஆழ்த்து கிறார்.

ஒரு கொலை செய்துவிட்டு, சந்தர்ப்ப சூழ்நிலையில் குமரவேல் வீட்டில் அடைக்கலமாகி விடும் சமுத்திரக்கனி, நுணுக்கமான உடல்மொழியில் கச்சிதம். அவர் அந்தக் குடும்பத்தில் ஐக்கியமாகி தன்னை உணர்கிற நிமிடங்கள் அற்புதமானவை. ஹோமிலிருக்கும் ஞாபகமறதி நோயாளிகள், அவர்களின் ஃப்ளாஷ்பேக் ஒவ்வொன்றும் மற்றுமொரு சிறுகதைக்கான வாய்ப்பு. விக்ரம் பிரபுவின் மனம் விரும்பும் இந்துஜா அழகுத் தேர்வு. பொறுப்பாகவும், கனிவுடனும் கேரக்டருக்கு வலிமை சேர்க்கிறார்.

வீட்டு உரிமையாளராக குமரவேல் பெரிய ஆறுதல். இவ்வளவு இயல்பான நடிகரை ராதாமோகன் மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? வசனங்களில் விஜி பளீர்! விளாச வேண்டிய இடத்தில் விளாசி, பிற இடங்களிலும் அழுத்தம். பேரமைதி தவழும் இடங்களைத் தனித்து விட்டு மனம் ததும்பும் இடங்களுக்குச் சிறு இசை அளிக்கிறார் இளையராஜா. தேடும் உலகத்தின் புனைவை விவேக் ஆனந்தின்  ஒளிப்பதிவு அச்சு அசலாகக் கொண்டு நிறுத்துகிறது. அவ்வப்போது தலை நீட்டும் நாடகத்தனத்தைத் தவிர்த்திருக்கலாம். மனிதமும், மனசும் நிறைந்திருப்பதால் நெஞ்சில் நிற்கிறது.

- குங்குமம் விமர்சனக்குழு